அன்புடனும், நன்றியுடனும் லூஸிபருக்காக

This entry is part [part not set] of 37 in the series 20030309_Issue

மண்ணாந்தை


‘இருள் படர்ந்த ஆடித்தளத்தில் மெல்ல தெளிந்து உதயமாகின்றன காரிருளின் தொன்மங்கள். ‘ :கார்ல் உங்

பிரபஞ்ச வெளியில்
பல ஒளி வருடங்களுக்கப்பால்
எங்கோ
அல்லது
ஆழ் மனத்தின்
அடியாழங்களுக்குள்
எங்கோ
புதைந்திருக்கும்
ஓர் வெளியிலிருந்து,
மேக மண்டலங்களூடே
இப்பூவுலகில்
இறங்கும் அவன்

ப்ரொமீதியஸ்

ஒலிம்பஸ் மலையில்
தேவ நெருப்பினை
தன் மானுடத்திற்கு பகிர்ந்திட
சீறிடும் ராட்சத மிருகங்களையும்
ஜீயஸ் மகா தெய்வத்தின்
சினத்தையும் எதிர்கொண்டு

அடைந்த
ஒளிசிந்தும் நெருப்பினை ஏந்தி
கீழிறங்கும் அவன்
லூஸிபர்

முதல்மானுடத்தின் பெண்மையில்
கிளர்ந்தெழுந்த
முதல் கேள்வியாய்
அறிவின் கனி தேடி சுவைக்கும்
ஆதிப் பெரும் கேள்வி எழுப்பியவன்

கிழிக்கப்பட்ட அவன்
வயிற்றிலிருந்து
ஈரலை பருந்துகள் தினமும்
குதறித் தின்றலையும்
மறுநாளே வளரும் அவன் ஈரல்
மீண்டும் வந்து குதறும் பருந்துகள்
மலை உச்சியில் சங்கிலிகளால்
பிணைக்கப்பட்ட ப்ரொமீதியஸ்

மண்ணில் தன் வயற்றால் என்றும்
ஊர்ந்தலையும்
தீமையென என்றென்றும் வெறுக்கப்படும்
சாபங்களிலும் வெறுப்பிலும் அச்சத்திலும்
மட்டுமே உணரப்படும்
தீமையின்
சர்ப்பமாக லூஸிபர்

ஆயினும்…

ஒலிம்பஸில் தெய்வம்
பொறாமையுடன் காத்த நெருப்பும்,
சுவர்க்கத் தோட்டத்தில்
பரமண்டல பிதாவால்
விலக்கப்பட்ட கனியும்
என்றென்றும் மானுடத்தில்
மீண்டும் மீண்டும் அடையப்படும்

பிரபஞ்ச இரகசியங்களை
அறிய எழும்
ஒவ்வொரு வினாக்களின் இறுதியிலும்
ஆதிப் பெரும் கேள்வியின்
தொல்நினைவாக
சர்ப்பக் குறியீடு

வேதனைகளின் நடுவில்
சிரிக்கிறான்
ப்ரொமீதியஸ்
லூஸிபர்

அவமானத்தால் முகங்களை
மறைக்கின்றனர்
பொறாமை உடைய பரமண்டல
பரம பிதாக்களும்
அவர்களுடைய
வாக்களிக்கப்பட்ட மீட்பர்களான
ஏக புத்திரர்களும்
இறக்கப்படும் வேதங்களை
அளிக்கும் இறுதி திருத்தூதர்களும்

***
மண்ணாந்தை

Series Navigation