அன்பின் வழியது உலகம் – ( வழிப்போக்கன் கண்ட வானம் – பாவண்ணனின் கட்டுரைத் தொகுதி அறிமுகம் )

This entry is part [part not set] of 36 in the series 20060818_Issue

ஜெயஸ்ரீ


இலக்கிய உலகில் பல முக்கியப் படைப்பாளிகள் தம் படைப்புகளோடும் பணிகளோடும் நின்றுவிடும் தருணத்தில் தம் சொந்தப் படைப்பாக்க முயற்சிகளிலும் மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் ஈடுபடுவதோடு பல அரிய முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்களைப் படித்து அவற்றை நம் மொழியின் புதிய வாசகர்களும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடன் விரிவான அறிமுகக்கட்டுரைகளை எழுதும் முயற்சிகளிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார் பாவண்ணன். இவ்வகையில் அவ்வப்போது அச்சிதழ்களிலும் இணைய இதழ்களிலும் கவிதைத்தொகுதிகள், சிறுகதைத்தொகுதிகள், நாவல்கள், கட்டுரைநு¡ல்கள் ஆகியவற்றையொட்டி அவர் எழுதிய முப்பது கட்டுரைகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன.

“ஒரு படைப்பை எப்படி அணுகுவது என்கிற கேள்விக்கான விடையில் ஓரளவாவது தெளிவுள்ளவர்களாக இளம் வாசகர்கள் இருப்பது நல்லது. இப்பயிற்சி பள்ளிகளிலும் கல்லு¡ரிகளிலும் கிட்டுகிற வாய்ப்புகள் மிகக்குறைவாகவே உள்ள நிலையில் முத்த வாசகர்களின் அனுபவப் பகிர்வுகளையே இளம் வாசகர்கள் நம்பி நாடி வரவேண்டியிருக்கிறது. கேட்டுத் தெரிந்துகொள்வதில் எவ்விதப் பிழையுமில்லை. சொல்லிச் செல்வதில் மூத்தவர்களுக்கு எவ்வித இழப்புமில்லை. உண்மையில் இதை ஒரு கடமையாகவே மூத்த வாசகர்கள் செய்வது நல்லது என்று தோன்றுகிறது.”

விக்ரமாதித்யனின் ‘கவிதை ரசனை’ என்னும் புத்தகத்தைப்பற்றிய அறிமுகக்கட்டுரையின் முன்னுரையில் பாவண்ணன் சொல்லியிருக்கும் இந்த வரிகள் இளம் வாசகர்களின் மேலுள்ள அவரது அக்கறையைக் காட்டுகிறது.

அன்பும் பரிவும் விட்டுக்கொடுத்தலும் மானுட குலத்தை வாழவைக்க முடியும் என்ற பாவண்ணனின் நம்பிக்கை தொடர்ந்து அவருடைய படைப்புகளில் வெளிப்படுவதைக் காணலாம். அவர் விரும்பிப் படிக்கும் எத்தகையவையாக இருக்கும் என்பதற்கு இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள் சான்றாக உள்ளன. பெரும்பாலும் மன இயக்கங்களைப் படம்பிடிக்கிற படைப்புகள் அவரை எளிதில் கவர்ந்துவிடுகின்றன என்று தோன்றுகிறது. மன ஆழத்தைத் தொட்டு மீளும் விஷயங்களும் திறந்து நுழையமுடியாத குகையாக இந்த மனம் ஏன் இருக்கிறது என்ற கேள்விகளும் போட்டி, பொறாமை, தன்னலம், அலட்சியம் போன்ற உணர்வுகளால் தூண்டப்பட்டு மானுடமே ஏன் இப்படி அவலநிலையில் நிற்கிறது என்ற கேள்விகளும் அறநெறி சார்ந்து வாழ நினைத்தாலும் வாழமுடியாத நிலைகள் ஏன் உருவாகின்றன என்னும் சங்கடங்களும் சாதி, மதம், பணம், புகழ் ஆகியவற்றின் பிடிகளில் அகப்பட்டு மீளமுடியாமல் தவிக்கும் மனிதர்களைப்பற்றிய துக்கமும் இப்படிப்பட்ட சூழல்கள் எல்லாம் இன்னும் எத்தனைக் காலத்துக்கு இந்த உலகத்தை வாட்டியெடுக்கும் என்கிற தவிப்பும் கேள்விகளுமாக நீளும் படைப்புகளை அவர் தேடித்தேடிப் படிப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. வாசகர்களை அன்பாலான உலகத்துக்கு அழைத்துச் செல்லும் முயற்சிகளாகவே பாவண்ணனுடைய கட்டுரைகள் தோற்றமளிக்கின்றன.

அவர் ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிற படைப்புகளில் மிகச்சிறப்பாக அமைந்துள்ள பகுதிகளையே வாசகர்களுக்கு எடுத்துரைக்கிறார். ‘சரிவுகளைக் கணக்கிடுவதைவிட வெற்றிகளை முன்னிலைப்படுத்துவதும் அவற்றின் வாசிப்பு அனுபவத்தை அசைபோடுவதுமே முக்கியமானதாகத் தோன்றுகிறது’ என்று பாவண்ணனே ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
தமிழ் மணவாளனின் ‘அதற்குத் தக’ என்னும் கவிதைத்தொகுப்பைப்பற்றி சொல்லும்போது ‘இசை நாற்காலி’ என்னும் கவிதை தனக்குள் எழுப்பும் எண்ணங்களை வெளிப்படுத்துகையில் மிகவும் ஆனந்தமாக ஆரம்பித்த ஒரு விளையாட்டு இறுதியில் இரு ஆட்டக்காரர்களும் ஒரு நாற்காலியும் எஞ்சி நிற்கும் சூழலில் வெறியாக மாறிவிடுவதை நினைத்து வருத்தப்படுகிறார். இந்த வரிகளைப் படிக்கும்போதே வாழ்க்கை, பதவி, வியாபாரம் என வெவ்வேறு தளங்களில் இந்த வெறியின் வெளிப்பாட்டைப் பொருத்திப் பார்த்து அது வழங்கக்கூடிய பொருளை விரிவாக்கிக்கொள்ள இயல்கிறது.

அதே நேரத்தில், பாவண்ணனை மகிழ்ச்சியுறச் செய்யும் விஷயங்கள் வெளி ரங்கராஜனுடைய ‘இடிபாடுகளுக்கிடையில்’ கட்டுரைத் தொகுப்புபற்றிய கட்டுரையில் காணலாம்.

“விளையாட்டின் உலகங்கள் கட்டுரையில் இரு குறிப்புகள் பாவண்ணனைக் கவர்கின்றன.
ஒரு கால்பந்தாட்டப் போட்டியின்போது வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கிற பெனால்டி கார்னர் வாய்ப்புகளைத் தவறவிட்ட வருத்தத்தில் ஒரு அணியின் கேப்டன் தளர்ந்து நின்றிருக்கும்போது எதிர்அணியின் கேப்டன் மனம் தளரவேண்டாம் என அவனைத் தேற்றுகிறான்.”

“பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததும் அணியின் கேப்டன் இன்சமாம் முகத்தில் படிந்திருந்த அமைதி வசீகரமாக இருந்தது. ”

இக்குறிப்புகளின் வழியாக அவர் தம் வாசகர்களை அழைத்துச் செல்லும் இடம் மிகவும் மகிழ்ச்சிக்குரியது. விளையாட்டில் திளைப்பே ஆட்டக்காரருக்கு ஆனந்தம் தருகிறது. கலைத்துறை சார்ந்த எந்த விஷயமானாலும் வாழ்க்கையானாலும் இந்தத் திளைப்பே மானுட வாழ்வின் ஆனந்தம் என்று பாவண்ணன் குறிப்பிடும்போது இலக்கியத்தின் மூலம் என்ன பெற முடியும் என்று கேட்கின்ற வாசகர்களுக்கு இலக்கியம் என்ன தரும் என்று சுட்டிக் காட்டுவதுபோல இருக்கிறது.

வாழ்க்கையில் திளைத்து ஆனந்தப்படும்போதுதான் எதையுமே இயல்பாக எடுத்துக்கொள்ள முடியும். பாவண்ணனுக்கு இந்தத் திளைப்பு உவப்பான விஷயமென்பதால்தான் ம.இலெ. தங்கப்பாவின் கவிதைகளின் கவிதை வரிகள் உடனடியாகப் பிடித்துவிடுகின்றன. தபால்காரருக்காகக் காத்திருக்கும் வேளையில் காத்திருத்தலின் எந்தவிதமான அலுப்புமின்றி தன்னைச் சுற்றியுள்ளவற்றை ரசிப்பதை முன்வைக்கும் கவிதை பாவண்ணனை வெகுவாகக் கவர்ந்துவிடுகிறது. அதேபோல ‘புகைவண்டி வரவில்லை’ என்ற கவிதையில் தான் உறங்கிவிட்ட நேரத்தில் புகைவண்டி சென்றுவிட்டதை எவ்விதப் பதற்றமும் இல்லாமல் ஏற்றுக்கொள்வதையும் ரசிக்கிறார். பரிவின் சுவடுகள் இல்லாமல் வாழ்வும் இல்லை. இலக்கியமும் இல்லை என்பது பாவண்ணன் கருத்து. பரிவின் சுவடுகள் பதியும் கவிதைவரிகளும் அவரை உடனடியாக ஈர்த்துவிடுகின்றன. கரிகாலனின் கவிதைகளில் பூனையையும் தங்களுடன் படுக்கவைத்துக்கொள்ளும் ‘இல்லம்’ கவிதை பிடித்துவிடுகிறது.
மாறாக, பாவண்ணனைப் பதறவைக்கும் வரிகள் சுகுமாரனின் மொழிபெயர்ப்புக்கவிதைகள் அடங்கிய தொகுப்பில் காணப்படுகின்றன. ராக்வெல் ஜோதோரெஸ்கியின் ‘புதிதாகப் பிறந்த குழந்தை’ கவிதையில் ‘தூங்கு குழந்தாய், கடவுள் இல்லாத உலகில் தூங்கு’ என்று இடம்பெறும் வரிகள் அதிர்ச்சிடையவைக்கின்றன. கடவுள் என்பது மேன்மையான சக்தியென்றால், அச்சக்தி குழந்தைக்கு வேண்டாமா? அன்பு, பாசம், கருணை என்ற குணங்கள் கடவுள் என்றால் அவை அந்தக் குழந்தைக்கு வேண்டாமா? ஏன் இந்தத் தாய் இப்படி கோரிக்கையை எழுப்புகிறாள்? குழந்தை எதிர்கொள்ளவேண்டிய உலகம் இவ்வளவு கடினமானதா என்று பதற்றமுறுகிறார். வாசக மனமும் அந்த வரிகளின் அவசியமென்ன என்று எண்ண ஆரம்பித்துவிடுகிறது.

நம்பிக்கையை வெளிப்படுத்தும் படைப்புகளும் பாவண்ணனைக் கவர்ந்திருப்பதைக் காணமுடிகிறது. சுகந்தி சுப்ரமணியனின் கவிதைத் தொகுப்பிலிருந்து ‘ஆறு எங்கே போகிறது?’ கவிதையை முன்வைத்து எழுதியிருக்கும் குறிப்புகளும் கிருஷாங்கினி தொகுத்த பறத்தல் அதன் சுதந்திரம் தொகுப்பில் திரிசடையின் ‘நேற்றைய கனவு’ கவிதையைப்பற்றிய ஆய்வுவரிகளும் பெருமாள் முருகனின் ‘சந்தன சோப்பு’ கதையைப்பற்றி அவருடைய குறிப்புகளும் இந்த எண்ணத்துக்கு வலிமை சேர்க்கின்றன.

அமரந்தா தொகுத்திருக்கும் திருவை காவூர் பிச்சையின் பன்மொழிக்கதைத் தொகுப்பில் பாவண்ணனைக் கவர்ந்திழுக்கும் மன ஆழத்தைத் தொட்டு மீளும் கதைகள் வாசகர்களையும் உடனடியாகக் கவர்ந்துவிடுகின்றன. கர்ருர் நீலகண்டப் பிள்ளையின் ‘மரப்பொம்மைகள்’ ‘சாஞ்சாலோ’ கதைகளை முன்வைத்து பாவண்ணன் எழுதிச்செல்லும் எண்ணங்கள் வாசகர்களையும் ஈர்க்கின்றன.

அன்புக்காக அன்பு செலுத்துவது என்பது மானுடர்களால் முடியவே முடியாத காரியமாக அமைந்துவிடுவது மிகப்பெரிய துரதிருஷ்டம் என்று வருத்தமுறுகிறார் பாவண்ணன். ஜாக் லண்டனின் கானகத்தின் குரலை முன்வைத்து மொழியப்படும் இவ்வருத்தக்குறிப்பு ( கானகத்தின் குரல் மண்ணுலகில் பெருகிப்போன தன்னலக் குரலின் எதிரொலி) அவருடைய வருத்தத்தின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது. நாவலைத் தேடிப் படிக்கும் ஆர்வம் உடனடியாக இளம் வாசர்களின் மனத்தில் எழுந்துவிடுகிறது.

இத்தொகுப்பின் வழியாக ஒரு படைப்பு எப்படி அணுகப்படவேண்டும் என்ற பயிற்சியை வாசகன் பெறமுடிவதோடு ஒரு படைப்பு ஏன் தன்னைக் கவரவில்லை என்று சொல்வதற்கும்கூட ஒரு வாசகன் பயிற்சிபெறமுடியும். பாவண்ணனின் கட்டுரைகளைத் தொடர்ந்து படிக்கும் வாசகர்களால் இதை எளிதில் உணர்ந்துகொள்ளமுடியும். ஜி.கல்யாணராவின் ‘தீண்டாத வசந்தம்’ நாவலை முன்வைத்து எழுதப்பட்டுள்ள கட்டுரையை ஒட்டி இக்கருத்தை உருவாக்கிக்கொள்ள முடிகிறது.

ஒரு கவிதையோ கதையோ நாவலோ எந்த முடிவையும் நிறுவிக் காட்ட முயற்சி செய்வதில்லை. அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வெவ்வேறு கோணங்களில் பொருள்தரக்கூடியது. இதனைப் புத்தகத்தின் முன்னுரையிலேயே குறிப்பிடும் பாவண்ணன், அப்படி ஒரு சிந்தனைத்தூண்டலை வாசகர்களிடமும் ஏற்படுத்தியிருக்கிறார் என்பது மிகையான கூற்றாகாது. தொகுப்பில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய மற்றுமொரு விஷயம், கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என எதைப்பற்றிய கட்டுரையானாலும் சங்கப்பாடல்களுடன் ஒப்பிடப்பட்டுவிடுகிறது பாவண்ணனின் மனம். இது தொகுப்பில் ரசிக்கத்தக்க அம்சமாக உள்ளது. ‘வழிப்போக்கன் கண்ட வானம்’ என்ற இந்தத் தொகுப்பு இளம் வாசகர்களுக்கு படைப்புகளையும் புத்தகங்களையும் தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கு ஒரு கையேடாக விளங்குகிறது. வாழ்க்கையின் சாரம் அன்பில்தான் உள்ளது என்பதைப் பகிர்ந்துகொள்வதாகவும் உள்ளது.

(வழிப்போக்கன் கண்ட வானம், பாவண்ணன், கட்டுரைத்தொகுதி. அகரம் பதிப்பகம், மனை எண்,1, நிர்மலா நகர், தஞ்சாவூர்-613 007.)

Series Navigation

ஜெயஸ்ரீ

ஜெயஸ்ரீ