அன்னை சாவித்திரியின் திருத்தாள் தடம் ஒற்றி

This entry is part [part not set] of 35 in the series 20061102_Issue

புதுவை ஞானம்


_______________________________________
அறியப்பட வேண்டியதோர் உண்மை இருக்கிறது
ஆற்றப்பட வேண்டியதோர் பணியும் கூட.

ஆழ்ந்த அமைதியினூடே
ஆற்றப்படுகிறது அப்பணி.

அறிஞர்கள் பேசிக்கொண்டும்
தூங்கிக்கொண்டும் இருக்கையிலேயே
ஓங்கி வளருகிறான் இறைவன் .

தற்செயலான நிகழ்வுகள் எனும்
செங்கற்கள் கொண்டு
கட்டமைக்கப் பட்டதல்ல
இவ்வுலகம் .

ஒருகுருட்டுக் கடவுள் அல்ல
ஊழ்வினையின் சிற்பி .!

வாழ்வெனும் வரைபடத்தை வரைந்தது
ஓர் உணர்வுநிலைச் சக்தி !.

உயர்ந்தோங்கிய அம்மாளிகையின்
ஒவ்வொரு வளைவுக்கும் கோட்டுக்கும்
ஒரு உட்பொருள் உண்டு !.

பெயர் உடைய, பெயர் அற்ற,
எண்ணில் அடங்கா
கொத்தர்களால் உருவாக்கப்பட்ட
அதற்குள் காணப்படாத சக்திக்கு
ஏவல் செய்கின்றன காணப்படாத கைகள்
அவளும் ஒருத்தியாகும்
அந்த மகத்தான கொத்தர்களுள் !

சாவையும் விதியையும் நொந்து கொள்ளும்
அநித்தியமானவனே ! குற்றம் சொல்லாதே
நீயே வரவழைத்துக் கொண்ட
யாதொரு தீவினையையும் !

துன்பமிகு இந்த உலகினை சொந்த வீடாகத்
தேர்ந்து கொண்டது நீயே தான் !
வந்திருக்கும் வேதனைகளை
விதைத்தவனும் நீயே தான் !

நமக்கு வெளியே நிகழும்
நிகழ்வுகளின் வித்து
இருக்கிறது நமக்குள்ளேயே !

அரை குறைதான் உந்தனது
பலமென்பதாலும் – கடவுளின் முழுமை
அல்ல என்பதனாலும் –
கிரகணம் பிடித்திருக்கிறது – உந்தனது
சின்னத்தனத்தால் !.
மறந்து பொகிறது உந்தன் உணர்வு நிலை
தெய்வீகமாய் இருப்பதற்கு !

உந்தனது சதை வீக்கத்தின்
ஒளிமறைவுப் பிரதேசத்தில்
அது நடக்கும் போதும்
உலகின் பிரம்மாண்டமான தீண்டலை
உன்னால் தாங்க முடியாத போதும்
வாய் விட்டு அழுது அரற்றி
வலிக்கிறதேயெனக் கதறுகிறாய் நீ !

அநித்தியமான உந்தன் இதயத்தின்
ஆழ்ந்த எதிர்ப்பை – வாழும்
பாறைத் தாமசத்தைத் – தகர்த்து எறிவதற்காய்
அவன் பிரயோகிக்கும் சம்மட்டி அடிதான்
வலி என்பது !

தேவைக்கும் அழுகைக்கும் இதயங்கள்
நெருக்கப்படா விட்டால் …………………
ஆழ்ந்து கிடக்கும் சுகமான திருப்தியில்
உந்தனது ஆன்மா !

தாண்டவே எண்ணாது
மனித யத்தனத்தை .
அடியெடுத்து வைக்காது
உயரத்தில் ஆதவனை நோக்கி
எந்தக் காலத்திலுமே !

நெஞ்சத்தில் கடவுளைப்
பத்திரமாக வைத்தவர் மட்டும்
குன்றென உயர்ந்து
நம்பிக்கையோடு நில்லாநின்றனர்
மகிழ்வின் உச்சத்தில் !

எதற்காக வலி பிறந்ததோ
அதற்கான அனைத்தும்
செய்யப்படும் !

வீரார்ந்த ஆன்மாவின்
போர்க்களம் தான் பூமி !

எவ்வளவுதான் மனித மனம் தன் சதையை
வருத்தினாலும் குதறினாலும் – அதன்
விருப்பத்தைத் திராகரித்து நிற்கிறது
ஆன்மபலம் மையமாக !

விதியினை வெற்றி கொள்ளும் “தான்” தான்
“ அமைதி ” என்பதை நினைவில் கொள் .
இறுதியில் காண்பாய்
ஆனந்தத்தின் பாதையை !

ஒரு காவல் சக்தி இருக்கிறது
காக்கும் கரங்களும் கூட !
அமைதியான அக்கண்களின்
அருட்பார்வையில் – தெய்வீகமாகும்
மானுடக் கோலம் !

ஓ . . . . மானுடா !
உந்தன் பாதையில் உன்னை
சந்திக்கும் சம்பவங்கள்
இன்பத்தாலும் துன்பத்தாலும்
உடலையும் ஆன்மாவையும்
ஆட்டிப் படைத்திடினும்
விதியல்ல அவை தொட்டுத் தடவி
விலகிச் சென்று விடும் அவை !
மரணமும் கூட வெட்டி விடாது
உந்தன் ஆன்மீகப் பயணத்தை
நீயே தேர்ந்தெடுக்கும் இலக்குதான்
உந்தனது விதி !

வாழ்வின் மோசமான வீழ்ச்சியிலிருந்தெழுந்து
உடலின் சித்திரவதையினின்றும்
மரணத்தினின்றும் மீண்டு
தோல்வியைப் புறங்கண்டு
வலியதாய் எழுகிறது உந்தன் ஆன்மா !
ஒவ்வொரு வீழ்ச்சியிலும்
விரிந்து வளர்கிறது
கடவுளை ஒத்த அதன் சிறகு !

அலட்சியமும்,வேதனையும், மகிழ்ச்சியும்
வழியில் நாட்டியமாடுபவனின் பீடம்
கடவுளின் கொடையான உடலை
உன்னிடமிருந்து மறைக்கும்
ஒரு மூவகை மாறு வேடம்
ஆன்மாவின் பலம் உன்னை
ஒன்று சேர்க்கும் ஆண்டவனிடம்
துன்பம் மாறும் இன்பமாக .
அநாதியின் மோனத்தில் ஆழம்
முழுமையின் உச்சத்தில் இன்பம் !

ஒன்றுமற்றது என வருந்தாதே
அதுவே மெய்யல்ல
மேலாண்மையின் வெறுமைக்கு
சம்மதம் கொள் -உன்னிடம் உள்ள
அனைத்தும் சேரும்
அதன் முழுமையுடன் !

ஒரு பார்வையாளன்
அனைத்தையும் உருவாக்குமவன்
இருக்கிறான் உள்ளே !
குமுறுகிறது குழந்தமையின் மேன்மை
உந்தன் காலத்துக்கு .
ஒளிந்திருக்கிறது இயற்கையின் உயிரணுக்களில்
அனைத்துமானவனின் அற்புத சக்தி !

வித்துக்குள் மரம் போல் காத்திருக்கிறது
மனிதனுள் உலகின் அனைத்து சாத்தியங்களும் !

அவர்களது உயிரின் தலைவனாய் இருக்கும் உண்மை !
ஆன்மா வெளிப்படும் வீடாகும் அனைத்து பூமியும் !
பூமியின் சட்டமாகும் ஓர் தெய்வீக இசைவு !
மீண்டும் வடிவமைக்கும்
அவன் வாழ்க்கையின் போக்கினை
அழகும் மகிழ்ச்சியும் !

கண் திறந்து நமது ஆன்மா
கடவுளின் அன்பைப் பற்றிடின்
நம் இதயத்தைச் சூழும் அதன்
எல்லையற்ற சோதி !
மறு வார்ப்பாகும் நமது இருப்பு
கடவுளின் பிம்பமாய்
தெய்வீக வாழ்வாகும்
மண்ணகத்து வாழ்வு !

இயற்கை வாழும் கடவுளின்
இரகசியத்தை மலர வைத்து
ஆன்மா கையேற்கும்
மானுட நாடகத்தை
தெய்வீக வாழ்வாகும்
இம்மண்ணுலக வாழ்வு !

(மகான் அரவிந்தரின் அமர காவியமான
சாவித்திரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங்கில
வரிகளின் தமிழாக்கம். )


புதுவை ஞானம்

j.p.pandit @ gmail.com

Series Navigation