அந்த நாலுமணிநேரம்

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

ராமசந்திரன் உஷா


அக்டோபர் மாத துபாய் வெய்யில் சுகமாய் இருந்தது. அவள் நடக்கத் தொடங்கினாள். ரம்ஜான் மாதம் நோம்பு ஆரம்பித்தால் அவள் வேலை செய்யும் அரபி வீட்டில் வேலை பெண்டு கழட்டி விடும். அவள் எஜமானனுக்கு தற்போது இரண்டு மனைவிகள். முதல் மனைவி தலாக் செய்துவிட்டு போகும் போது அவன் பங்கிற்கு இரண்டு குழ்ந்தைகளைக் கொடுத்துவிட்டுச் சென்றாள். அடுத்த மனைவிக்கு ஐந்து பிள்ளைகள். இது போதாது என்று இரண்டு வருடத்திற்கு முன்பு, அவன் ஒரு ஹைதராபாத் பெண்ணைக் கல்யாணம் செய்துக்கொண்டு மேலும் இரண்டு பிள்ளைகள்.

இப்படி வீடு நிறைய பிள்ளைகள் ஆனதால் அவள் பாடுதிண்டாட்டமாய் போய்விட்டது.

வீட்டுவேலை, சமையல், சுற்று வேலைகள் போததற்கு பிள்ளைகளுக்கும் அவளே பொறுப்பு.

அரபி எஜமானியாவது, எரிச்சலில் ஏதாவது கத்தினால் பேசாமல் இருப்பாள். ஆனால் புதியதாய் வந்த ஹைதராபாத்பெண் எமன். அவளைப் பற்றி தன் கணவனிடம் எப்போதும் ஏதாவது புகார் சொல்லும்.

அவள் எஜமானனுக்கு பிள்ளைகள் அதிகமான அளவு வரவு அதிகமாகவில்லை. அதனால் அவர் அவளுக்கு விசா புதுப்பிக்க, இரண்டு வருஷத்திற்கு ஒரு முறை ஊருக்கு சென்று வர தரும் விமானபயண சீட்டிற்கான தொகை போன்றவற்றை நிறுத்திவிட்டார். என்ன செய்வது என்று அறியாமல் அவள் திகைத்தப்போது எஜமானியே, காலையில் வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு, மாலைவரை வெளியே வேலைப் பார்த்து நாலு காசு சம்பாதிக்க வழி சொல்லிக்கொடுத்தாள்.

இது சட்டப்படி தவறு என்றாலும் அவளுக்கு வேறு வழி இல்லாமல் போனது.

காலை, நேரத்தில் எழுந்து சமையலை முடித்துவிட்டு பாத்திரங்களைக் கழுவிவிட்டு அவள் ஏழுமணிக்கு கிளம்பிவிடுவாள். எட்டுமணியில் இருந்து மதியம் இரண்டு மணிவரை ஒரு டாக்டர் வீட்டில் வேலை. டாக்டரம்மா அவளை உள்ளே வைத்துப் பூட்டி விட்டுப் போய்விடுவாள்.

அவளோ வேகவேகமாய் வேலை செய்வதில் கெட்டிக்காரி. வேலையையும் முடித்து ஒரு தூக்கமும் போட்டு, டாக்டரம்மா இரண்டு மணிக்கு வரும் போது முகம் கழுவி தயாராய் இருப்பாள்.

டாக்டரம்மா திரும்ப வந்ததும் பக்கத்தில் மூன்று வீடுகளில் வெளிவேலைகளை மட்டும் முடித்துவிட்டு வரும்வழியில் இருக்கும் பூங்காவில் அவள் ஊர்கார பெண்களை சந்தித்து சிறிது வம்பளந்துவிட்டு மாலை சரியாய் ஆறுமணிக்கு மீண்டும் வீட்டில் நுழைந்தால் அவளுக்கு வேலை முடிய இரவு பதினொன்று ஆகிவிடும்.

இந்த ஏற்பாடு சரியாய்தான் இருந்தது. நாலு காசும் சேர்ந்தது. ஆனால் ரம்ஜான் நோம்பின் போது மாத்திரம் அவள் வேலை பளுவை தாங்காமல் திண்டாடினாள். இரவு முழுவதும் சமையல், பாத்திரம் கழுவுவதிலேயே போனது. நடுவில் ஒருமணிநேரம்தான் தூங்க நேரம் கிடைக்கும்.

இதில் அவர்கள் வீட்டில் விருந்தினர் வந்தாலோ கேட்க வேண்டாம்.

ஒரே வாரத்தில்தூக்கமும், ஓய்வும் இல்லாமல் களைத்துப்போனாள்.

இப்படியே நெஞ்சு வெடித்து இறந்து போய்விடுவோமோ என்று அவளுக்குப் பயம் ஏற்பட்டது. தன்னை விட்டுவிட்டு தன் சேமிப்பை மட்டும் எடுத்துக்கொண்டு ஓடிப்போனக் கணவனை நினத்துக் கண் கலங்கியது அவளுக்கு.

களைப்புடன் மெதுவாய் நடந்து டாக்டர் வீட்டை அடைந்தாள். கதவைத் தட்டினால் யாரும் திறக்கவில்லை. பேசாமல் அங்கிருந்த மாடிப்படியில் அமர்ந்தாள்.

அப்போது அங்குவந்த பிளாட் காவலாளி முதல்நாளிரவு டாக்டரம்மாவின் தந்தைக்கு உடம்பு மிகவும் முடியாமல் போனதாய் செய்தி வந்ததால் அவர்கள் புறப்பட்டுப் போனதாகவும், இனி அவள் சனிக்கிழமை வந்தால் போதும் என்றும் சொன்னான்.

இப்போது மணி ஏழரைதான் இருக்கும். இரண்டு மணிவரை என்ன செய்வது. வீட்டுக்குப் போனால் அந்த ஹைதராபாத் பெண் ஏதாவது வேலை வைக்கும். உடம்பு தூக்கத்திற்கு ஏங்கியது. எங்காவது நான்கு மணிநேரம் படுத்து தூங்கினால்! நினைப்பே அவளுக்குஉற்சாகம் அளித்தது.

திரும்ப நடக்க ஆரம்பித்தாள். பூங்கா மரநிழலில் இரண்டொருவர் சுகமாய் தூங்கிக்

கொண்டிருந்தனர். காற்று சிலுசிலுவென்று வீசியது. நாமும் ஒரு ஓரமாய் படுக்கலாமா

என்று உடல் கெஞ்சியது. யாராவது பார்த்து, போலீஸ்க்கு சொன்னால் வேண்டாத

பிரச்சனை, என்ன செய்வது என்று யோசிக்கும்போது பக்கத்தில் அவள் ஊர்பையன்

வேலைப் பார்க்கும் கடை ஞாபகம் வந்தது.

கடையின் பின்புறம் எப்படியும் இடம் இருக்கும். அங்கே போய் படுத்தால் என்ன ?

இவளோ சரியாய் சாப்பாடு இல்லாமல் ஓயாமல் வேலை செய்து செய்து சுக்குமாதிரி சுண்டி நாற்பது வயதிலேயே கிழவி ஆகி போனவள். அப்படி யாராவது பார்த்தாலும் தவறாய் நினைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை பிறந்தது அவளுக்கு.

கடையில் யாரும் இருக்கக்கூடாது என்று பிராத்தித்துக்கொண்டே கடையை அடைந்தாள்.

நல்லவேளையாய் கடையில் அந்த பையன் மட்டும் இருந்தான். அவளை வாயெல்லாம் பல்லாய் வரவேற்றான். தனக்கு பெண் குழந்தைப் பிறந்திருக்கிறது என்று போட்டோ காட்டினான். தன் குடும்பம், தான் கட்டிய வீடு என்று விடாமல் வளவள வென்றுப் பேசிக்கொண்டே இருந்தான்.

எப்படி கேட்பது என்று தயங்கிக்கொண்டிருந்தவள் கடைசியில் வாயைவிட்டுக் கேட்டு

விட்டாள். அவனும் அதற்கு சம்மதித்து அவளை கடையின் பின்புறம் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றான். அவனை சரியாய் இரண்டு மணிக்கு எழுப்பச் சொல்லிவிட்டு படுத்தவள், சில நிமிடங்களில் ஆழ்ந்த உறக்கத்தில் ழூழ்கினாள்.

நல்ல தூக்கத்தில் இருந்தவளுக்கு தன் மீது விழுந்த பாரத்தில் அறைகுறை விழிப்பு ஏற்பட்டது. முகத்தின் மேல் கடைக்காரப் பையனின் முகம். நடந்துக்கொண்டிருப்பதை அறிவு உணர்த்தினாலும், அந்த நேரம் அவளுக்கு தூக்கமே பிரதானமாய் போனது.

நேரமாயிற்று என்று கடைக்காரன் உலுக்கியதில் அவள் கண் விழித்தாள். கலைந்துக்கிடந்த ஆடைகள் அவளுக்கு எல்லாவற்றையும் உணர்த்தின. அவற்றை சரியாக்கிக்கொண்டுவெளியே வந்தாள். கல்லாவில் அவன் உட்கார்ந்திருந்தான்.

அவளை நிமிர்ந்து பார்க்காமல் அசடுவழிய சிரித்தான். ஒரு பெரிய சாக்கலேட் பட்டையை நீட்டினான். அவள் அதை வாங்காமல் நீட்டும் கைக்கு கீழே கிடந்த அவன் குழந்தையின் போட்டோவையே உற்றுப் பார்த்தாள். பிறகு ஒரு வார்த்தைக் கூட பேசாமல் வெளியே இறங்கினாள்.

எதிர் வெய்யில் முகத்தில் சுளீர் என்று அடித்தது. அவள் மீண்டும் நடக்க ஆரம்பித்தாள்.

Ramachandranusha@rediffmai.com

Series Navigation

ராமசந்திரன் உஷா

ராமசந்திரன் உஷா