அந்த நான்கு பேருக்கும் நன்றி!

This entry is part [part not set] of 42 in the series 20060324_Issue

மலர் மன்னன்


அறியாமையைவிட அரைகுறை அறிவு ஆபத்தானது. ஆங்கிலம் தெரியாதது வசதிக்குல்றைவுதானே தவிர, அது ஒரு குறைபாடு அல்ல. ஆங்கிலம் அறியாதவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்கள் அல்ல; ஆங்கிலம் அறிந்தவர்கள் எல்லாம் புத்திசாலிகளும் அல்ல. ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் மூடன் மூடன்தான், ஆங்கிலம் தெரியாவிடினும் அறிவாளி அறிவாளிதான். ஆங்கிலத்தை அரைகுறையாகப் புரிந்துகொண்டு, விஷயம் தெரிந்துவிட்டதாக நினைத்துக்கொள்வதால்தான் சங்கடம் வருகிறது. மேலும் ஒரு விஷயம் பற்றி எதுவும் தெரியாவிடினும் எல்லாம் தெரிந்ததுபோல் பேசத் தொடங்குவதாலும் சங்கட முண்டாகிவிடுகிறது. சான்றோர் சபையில் மூடனும் மவுனம் காப்பதால் சான்றோனாகி விடலாம். வீணாக வாயைக் கொடுத்துப் பெயரை கெடுத்துக் கொள்வானேன் ?

எதற்கு இவ்வளவும் சொல்கிறேன் என்றால், அரைகுறை அறிவும், அரைகுறை ஆங்கில ஞானமும் இருந்தால் முன்பு சொன்னது தவறாகிப் போனது என்று அடிக்கடி வருத்தம் தெரிவிக்க வேண்டியிருக்கும். அதுவும் சங்கடம்தான். இவ்வாறான சங்கடங்களை நாம் தவிர்த்துக் கொள்வதன் மூலம் கேட்பவர்களுக்கு ஏற்படுகிற சங்கடங்களையும் நம்மால் தவிர்த்து உதவமுடியும். அடிக்கடி தவறுக்கு வருத்தம் தெரிவிக்க நேர்வதால், நம் தரப்பு கேட்கப்படாமலும், படிக்கப்படாமலும் போகிற இழப்பும் ஏற்பட்டுவிடலாம். இதனையும் நாம் கவனத்தில் கொள்வது புத்திசாலித்தனம்.

சில நாட்களுக்கு முன் நான்கு இளைஞர்கள் முன் அனுமதிபெற்று என் வீட்டிற்கு வந்து என்னைச் சந்தித்தார்கள். கதிர்வேலு, நராயணன், செந்தில், ராஜ்குமார். எல்லாருமே 25-26 லிருந்து 32-33 வயதுக்குள் இருப்பவர்கள். நன்கு படித்து நல்ல வேலைகளில் அமர்ந்து, நம்பிக்கையுடன் வாழ்க்கையைத் தொடங்கியிருப்பவர்கள். தங்களுடைய சந்தோஷத்தால் செல்லுமிடமெல்லம் சந்தோஷத்தைப் பரப்புகிறவர்கள். இவர்கள் அனைவருமே திண்ணையில் நான் எழுதத் தொடங்கியபின் எனக்கு மின்னஞ்சல்கள் அனுப்பி அதன்மூலம் அறிமுகமானவர்கள். சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் வசித்தபோதிலும், கல்லூரி, அலுவலகம் ஆகிய முகாந்திரங்களால் நண்பர்களாகி, முன்னதாகப் பேசிவைத்துக்கொண்டு வந்திருந்தார்கள். இவர்கள் ஆர்வ மிகுதியால் தொலைபேசியிலும் என்னுடன் அவ்வப்போது பேசத் தொடங்கியிருந்தனர்.

திண்ணையில் மீண்டும் நான் எழுத வேண்டும் என்று நேரில் வற்புறுத்தினாலாவது எழுதமுன் வருவேன் என்கிற நம்பிக்கையில் வந்திருப்பதாக அவர்கள் கூறினார்கள். அந்தச் சமயத்தில் நான் அதற்கு இணங்கும் மனநிலையில் இல்லை. நான் எழுத மறுப்பதன் மூலம் எனது சமூகப் பொறுப்பிலிருந்து நான் நழுவுகிறேன் என்று கோபப்பட்டார்கள்.

““சரி, நீங்கள் எழுதாவிட்டாம்லும் வந்திருக்கிற எங்களுக்காவது விளக்கம் அளியுங்கள். அதை நாங்கள் ஒரு பேட்டியைப் போல் தயாரித்து திண்ணைக்கு அனுப்புகிறோம். எங்களிடம் தமிழில் அனுப்பும் வசதி இல்லை. உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தே அந்தப் பேட்டியை அனுப்ப அனுமதியுங்கள். மற்றவர்களுக்கும் அது பயன்படட்டும்” என்று வற்புறுத்தினார்கள். வந்த நோக்கம் நிறைவேறாமல் இடத்தைவிட்டு நகரமட்டார்கள்போல் தெரிந்தது.

தமிழ் நாட்டின் பெரும்பாலான இளைஞர்கள் வணிக ரீதியான திரைப்படம், நடிகர் நடிகையர், கருணநிதி ஜயலலிதா என்கிற இருமுனைகளைத் தாண்டாத நடப்பு அரசியல், வதந்தி வாராந்தரிகள் ஆகியவற்றில் தங்கள் பொழுதை விரையம் செய்துவருவதாக எனக்கு இருந்துவந்த தவறான எண்ணத்தை அகற்றுவதற்காகவே வந்ததுபோல் அந்த நால்வரும் வந்தார்கள். அதற்காக அவர்களுக்கு நன்றி.

எனக்கு எதிர்மறைச் சிந்தனையோ, அவநம்பிக்கையோ இல்லையெனினும், அவ்வப்போது சில நிலைமைகளைப் பார்க்கிற பொழுது சோர்வு ஏற்பட்டுவிடுவதுண்டு. இவ்வாறான சோர்வு இனி எனக்கு வராதவாறு ஊக்குவித்தமைக்காக அந்த நால்வருக்கு நன்றி.

தம் வசமுள்ள தகவல்கள் சரிதாமா, தாம் படித்ததைச் சரியாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறோமா என்றெல்லாம் சுய மதிப்பீடு செய்துகெள்ளாமலேயே எனது பதிவுகளுக்கு எதிர்வினை செய்ததால் வந்த வினை என்னவென்றால், நான்கு இளைஞர்கள் தங்கள் ஓய்வு நாளை உல்லாசமாகக் கழிப்பதற்கு மாறாக ஒரு முதியவன் எதிரில் உட்கார்ந்து முடிந்துபோன விஷயங்கள் பற்றிக் கேள்விகள் கேட்பதில் பொழுதைக் கழிக்கும்படியாகிப் போனது. ஆர்வம் மிக்க இளைஞர்களுடன் உரையாடுதல் பயன்மிக்கதும் உற்சாகம் தருவதும்தான் என்றாலும் அன்றைக்கென்று நான் செய்யத் திட்டமிட்டிருந்த சில பணிகளை மேற்கொள்ளவியலாது போனதில் எனக்கும் சிறிது தடங்கல்தான்.

அவர்கள் என்னிடம் கேட்ட விளக்கங்களைக் கேள்விபதில்களாக இல்லாமல் அவசியமான தகவல்களை மட்டும் தொகுத்துத் தருவதுதான் பயன்தருவதாக இருக்கும். ஏனெனில் எதிர்வினைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுள் மிகப் பெரும்பாலானவை தவறான தகவல்களின் அடிப்படையில் பெறப்பட்டவையாகவும், பழிசுமத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு மனம்போன போக்கில் எழுதிவைக்கப்பட்டவையாகவுமே உள்ளன. தக்க ஆதாரங்களுடன் இவற்றைப் பிழையானவை என்று நிறுவிவிடமுடியும் என்றாலும் இது அதிக நேரம் செலவிட்டு, அதிகப் பக்கங்களையும் விரையம் செய்து, படிக்கிறவர்களுக்கும் அலுப்பூட்டி விடுவதாக இருக்கும். ஆகையால் முக்கியமாக இளைய தலைமுறை தெளிவு பெறவேண்டிய விஷயங்களை மட்டும் தெரிவிக்கக் கருதுகிறேன். மேலும், மலர் மன்னனை நேர்காணல், அதுவும் மலர்மன்னன் கணினி வாயிலாகவே என்பதும் மிகவும் அபத்தமாகப் பட்டது.

பாரதியாரின் மகள் தங்கம்மா ஏறத் தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன், தங்கள் குல தெய்வ விஷயம் குறித்து எழுதியிருக்கிறார். அப்படி எழுதும்போது தமது பிள்ளைப் பிராயத்தில் இந்த விவரம் தமக்குத் தெரியவந்ததாகக் கூறுகிறார். இப்போது நடப்பது தங்கம்மா பாரதியின் நூற்றாண்டு. ஆக, சுமார் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட செய்திதான் சுடலை மாடன் பாரதியாருக்குத் தாய்வழியில் குல தெய்வம் என்பது. அக்கால கட்டத்தில் இப்போதுள்ளது போன்ற பிராமணர் பிராமணர் அல்லாதார் என்ற அடிப்படையிலான பிரிவினை வேர்பிடித்திருக்கவில்லை. வ.உ. சிதம்பரம் பிள்ளை , சுப்பிரமணிய பாரதி இடயே மாமா, மாப்பிள்ளை என்று உறவுமுறை சொல்லி அழைத்து மகிழும் பழக்கம் இருந்த காலம். ஆகவே மாடனைக் குலதெய்வம் என்று வலிந்து சொல்லவேண்டிய அவசியம் அன்று பிராமணருக்கு இல்லை (பாரதியாரை வ.உ.சி. பெரியார், பெரியார் என்று பலமுறை குறிப்பிட்டுள்ளார். நான் கூடச் சில கூட்டங்களில் பேசுகையில் தற்காலத் தமிழர்களுக்குப் பெரியார் என ஒருவர் இருக்கக் கூடுமானால் அவர் பாரதியாராகத்தான் இருக்க முடியும் எனப் பேசியதுண்டு ).

பாரதியாரின் குலதெய்வ விவரம் பற்றி நான் பதிவு செய்திருந்ததைப் படித்துவிட்டுச் சில பிராமண இளைஞர்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தனர், தங்கள் குல தெய்வம் கருப்பண்ணசாமி, முனீஸ்வரன் என்றெல்லாம். எனவே இனியாகிலும் இதனை ஒரு விவகாரம்போல் பேசி ஏற்கனவே பிளவுண்டு கிடக்கும் ஹிந்து சமூகத்தை மேலும் பிளவு படுத்த முற்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இன்னல்கள் மிகுந்த சிறைவாசம் அனுபவித்துவிட்டு வெளியே வந்த வ.உ.சி., தியாக சீலர்களை கவனிக்காது அலட்சியம் செய்த காங்கிரசாரின் போக்கால் மனம் நொந்து சென்னை பெரம்பூரில் மளிகைக் கடை வைத்துக் காலங் கழிக்கும் நிலைக்கு ஆளானார். மூத்த மகன் ஆறுமுகத்திற்குப் போலீஸ் உத்தியோகம் கிடைக்க சிபாரிசு செய்யுமாறு ஈ.வே.ரா.வுக்குக் கடிதம் எழுதினார். ஜஸ்டிஸ் கட்சியின் சில கூட்டங்களில் அவர் பேசியதாகவும் குறிப்புகள் உள்ளன.

பிராமணர் அல்லாத வ.உ.சி. போலவே பிராமணரான சுப்பிரமணிய சிவா என்கிற தியாகியும் புறக்கணிக்கப்பட்டு மனமுடைந்து இறந்தவர்தான். ஆகையால் இதிலும் பிராமணர் பிராமணர் அல்லாதார் பிளவினைப் புகுத்திவிட வேண்டாம் என வேண்டுகிறேன். இந்த பிராமணர் பிராமணர் அல்லாதார் பிரக்ஞை அறவே அழிந்தாலன்றி ஹிந்து சமூகத்திற்கு விமோசனம் இல்லை. இதைப் புரிந்து வைத்திருப்பதால்தான் ஹிந்து சமூகம் நிரந்தரமாகப் பிளவுபட்டுக் கிடக்க வேண்டும் என விரும்புபவர்கள் இந்த விஷயத்திற்கு உயிர் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

பல தலைமுறைகளாக திராவிடர் கழகப் பிரசாரங்களைக் கேட்டுக் கேட்டுப் பழக்க தோஷங் காரணமாக பிராமணரல்லாதார் பிராமணரைத் தூற்றிப் பேசினாலும் அதற்காக பிராமணரும் பதில் தூற்றுதலில் இறங்கி ஹிந்து சமூகப் பிளவுக்குத் தாமும் காரணமாகிவிட வேண்டாம் என வேண்டுகிறேன்.

திராவிட இயக்கத்தைச் சேர்ந்த மிகப் பெரும்பாலானவர்கள் ஹிந்துக்கள்தாம். ஹிந்துக்களாய்ப் பிறப்பதில் இது ஒரு சங்கடம். வேறு மதத்திற்கு மாறினாலன்றி ஒரு ஹிந்து இறுதிவரை ஹிந்துவாகத்தான் இருந்தாக வேண்டும். ஹிந்து சமய நம்பிக்கைகளை அவர் கைவிட்டு விட்டிருந்தாலுங்கூட! எனவேதான் ஈ.வே.ரா. வுங்கூட ஹிந்துவாகவே இருந்தாக வேண்டியவராகிறார். மேலும் தம் முன்னோர் விதித்த பிரகாரம் தமது பொறுப்பில் வந்த விநாயகர் கோவிலைத் திருத்தமான சமஸ்கிருத அர்ச்சனை வழிபாட்டுமுறை கூடப் பிசகாமல் நிர்வகித்தவர்தாம் அவர். அவர் ஹிந்து இல்லை என எப்படித் தள்ளிவிட இயலும் ?

ஹிந்துவாக இருந்துகொண்டு ஹிந்து சமூகத்தைப் பிளவுபடுத்தியவர் என்பதுதான் அவருடைய தெளிவான பிம்பம்.

பிற சமயங்களில் சமூகத் தொடர்பான நல்லவை, அல்லவைக்கெல்லாம் சமயச் சடங்காசாரச் சட்டாம்பிள்ளைகளின் அதிகாரப்பூர்வமான அங்கீகாரம் தேவைப் படுவதுபோல் ஹிந்து சமயத்தில் சமயத் தலைவர்களின் ஆளுமை இல்லை. எனவே ஹிந்துக்கள் ஹிந்து சமயச் சடங்குகளை அனுசரிக்காவிடினும், வேறு சமயத்திற்கு மாறாதவரை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஹிந்துக்களாகவே அறியப்படுவார்கள். ஒரு கிறிஸ்தவரோ, முகமதியரோ தமக்குச் சமயச் சடங்குகளில் நம்பிக்கையில்லை என்று பகிரங்கமாக அறிவித்தால் அவரது மறைவிற்குப் பிறகு அவரது சடலத்தை அடக்கம் செய்யக் கிறிஸ்தவக் கல்லறைகளிலோ, முகமதியரின் இடுகாட்டிலோ இடம் கிடைக்காது (முகமதியர் பகிரங்கமாக அவ்வாறு அறிவித்துவிட்டு வெளியே நடமாட முடியுமா என்பதே சந்தேகம்; சாதத் ஹாசன் மான்ட்டோ போன்றவர்கள் சமயச் சடங்குகளைப் புறக்கணித்ததால் படமுடியாத துயரெல்லாம் பட நேர்ந்தது, பாகிஸ்தானில். சு.ரா.வுக்கு அம்மாதிரியெல்லாம் நேராமல் போனதற்குக் காரணம் நல்ல வேளையாக அவர் ஒரு ஹிந்துவாக இருந்ததுதான் )!

எனது அனுபவத்தில் திராவிட இயக்கத்தவர் பலர் ஹிந்து சமூகம் இன்று எதிர் நோக்கியுள்ள சோதனைகளை உணர்ந்தும், ஹிந்து சமய உன்னதங்கள் புரிந்தும் ஹிந்துக்களாகத் தம்மை உணரத் தொடங்கியுள்ளனர். இத்தகையோரின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.

முன்னாள் அமைச்சர், முன்னாள் சட்டப் பேரவைத் தலைவர் என்றெல்லாம் அறியப்படும் க.ராஜாராம் தி.க. விலிருந்து தி.மு.க. உருவான பிறகுங்கூடச் சில ஆண்டுகள் தி.க.விலேயே நீடித்தவர் மட்டுமல்ல, ஈ.வே.ரா.வுக்குப் பிரத்தியேகச் செயலராகவே இருந்து,

அவருடன் மியன்மார் என்று இன்று அறியப்படும் பர்மாவுக்கெல்லாம் சென்று வந்தவர். 1955-56 வாக்கில்தான் அவர் தி.மு.க.வுக்கு வந்தார். ராஜாராமின் தந்தை சேலம் கஸ்தூரிப் பிள்ளை செல்வாக்கு மிக்க ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகராக இருந்தவர். ஈ.வே.ரா. வின் நண்பர்.

இன்று க. ராஜராம் ஹிந்து சமய வழிபாட்டில் திளைப்பவராகவும் ஹிந்து சமூக நலனில் ஆர்வமிக்கவராகவும் காட்சியளிக்கிறார். அவர்போல் மேலும் பலர் மனம் திரும்புவர் என்கிற நம்பிக்கை ஹிந்துக்களுக்கு இருப்பது அவசியம். இவ்வாறான மன மாற்றங்களுக்கு ஊறு நேராதவாறு தமது சொல்லும் செயலும் அமையுமா று ?ிந்துக்கள் பாஹர்த்துக்கொள்ள வேண்டும். திராவிட இயக்கத்தார் தமது மனம் புண்படுமாறு பேசவோ எழுதவோ செய்வதால் தாமும் அவ்வாறே செயல்படுவதைத் தவிர்த்து, நியாயங்களை எடுத்துக் கூறுவதை மட்டுமே தமது வழியாக ஹிந்துக்கள் மேற்கொள்வது அவசியம். இவாறல்லாது பதிலுக்கு பதில் ஏசிக்கொண்டிருந்தால் பலர் மனந் திரும்புதல் தாமதமாகும்.

உடுமலை நாராயணன் என்று தி.மு.க.வில் ஓர் உற்சாகமான பிரமுகர் இருந்தார். தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். ஹிந்து சமூக உணர்வு வரப் பெற்றவராய் அவர் கருணாநிதியிடம் தர்க்கித்ததுகூட உண்டு, ஹிந்து சமயத்தை மட்டும் கிண்டல் செய்து ஹிந்துக்களின் மனம் புண்படச் செய்வது தகாது என. நமக்கு வரும் பெருவாரியான

வாக்குகள் ஹிந்துக்களிடமிருந்து வருபவைதாம் என அவர் கருணாநிதிக்கு நினைவூட்டினார்.

பாரத தேசத்து கிறிஸ்தவ, முகமதிய சகோதரர்களும் கூட ஹிந்துக்களின் சந்ததியார்தாம். தம் முன்னோர் மூடர்கள் அல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும். தமது முன்னோரின் சமயக் கோட்பாடுகளையும் நம்பிக்கைகளையும் எள்ளி நகையாடுவது தமக்குப் பெருமை தருவதாகாது என அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமது முன்னோரின் சமூகத்திற்கு வரும் சோதனைகள் தமக்கே வரும் சோதனைகள் எனவும் அவர்கள் உணர்வது அவசியம்.

இன்று அமெரிக்காவில் உள்ள முகமதியருக்கு அங்குள்ள அறிவார்ந்த இமாம்கள் அறிவுறுத்தத் தொடங்கியுள்ளனர், அமெரிக்காவின் இஸ்லாம் அமெரிக்கத் தன்மையுடனும் அமெரிக்க நலனுக்கு உகந்தவாறும் இருக்க வேண்டும் என்பதாக. இங்கும் முகமதிய சமய, சமூகத் தலைவர்கள் பாரதத்தின் இஸ்லாமானது பாரதத் தன்மையுடனும் பாரத நலனுக்கு உகந்தவாறும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தத் தொடங்க வேண்டும். அமெரிக்காவில் முகமது மஜீத் என்கிற இமாம் இவ்வாறான மனப்போக்கை அங்குள்ள முகமதியரிடையே உருவாக்கி வருகிறார்.

அமெரிக்காவில் முகமதிய சமய அடிப்படையிலான பயங்கரவாதிகள் இருப்பின் அவர்களை அமெரிக்க முகமதியர்கள் உளவுத் துறையின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும் எனவும் அமெரிக்காவில் உள்ள அறிவார்ந்த இமாம்கள் தம் மக்களுக்கு அறிவுறுத்தத் தொடங்கியுள்ளனர். பாரத தேசத்து இமாம்களும் இவ்வாறான வழிமுறையினை மேற்கொள்ள முன்வர வேண்டும். இதனை வலியுறுத்தி ஒரு கட்டுரையை துக்ளக்கிற்கு எழுதி

யனுப்பினேன். ஆனால் ஏனோ அதனைத் துக்ளக் பிரசுரிக்கத் தக்கதாகக் கருதவில்லை. தம்முடைய ஆப்தரான குருமூர்த்தியைக் கூட ஹிந்து சமூக நலன் தொடர்பாக எழுதுவதற்குப் பதிலாகப் பொருளாதார விஷயங்களை எழுதுமாறு கூறியிருப்பதாகவும் குருமூர்த்தியும் அதற்கிணங்கப் பொருளாதாரம் தொடர்பான கட்டுரைகளைத் துக்ளக்கிற்கு எழுத முற்பட்டிருப்பதாகவும் சோ ராமசாமி இவ்வாண்டுக்கான தமது பத்திரிகையின் ஆண்டு விழாக் கூட்டத்தில் பகிரங்கமாகவே அறிவித்துவிட்டார். இந்நிலையில் நான் எம்மாத்திரம் ?

சாஸ்த்ரிய சங்கீதத்தில் தேர்ச்சி மிக்க ?ிந்தி திரை இசை இயக்குநர் நவ்ஷத் தமக்குக் கிட்டியுள்ள இசை ஞானத்தை ““சரஸ்வதி மா கீ தயா, ” ( சரஸ்வதி அன்னையின் அருள்) என்றுதான் சொல்வார். நான் மிகவும் ரசிக்கிற ஹிந்தி பின்னணிப் பாடகர் தலத் மஹமத் கூட வாணியை மனதால் வணங்கிய பின்னரே பாடத் தொடங்குவதாகப் பல ஆண்டு

களுக்குமுன் பாபுராவ் பட்டேலின் மதர் இந்தியா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பகிரங்கமாக அறிவித்தார். புகழ் மிக்க சாஸ்த்ரிய சங்கீதப் பாடகர்களான அலி சகோதரர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டபோதிலும், ஒரு முறை கல்கத்தாவுக்கு வந்திருந்தபோது காளி தேவியின் பூமிக்கு வந்து இசை நிகழ்ச்சி யளிக்கும் அருள் கிடைத்ததால் தமது நிகழ்ச்சியினைக் காளி மாதாவின் பாத கமலங்களில் அர்ப்பணிப்பதாகக் கூறி என்னை மெய் சிலிர்க்க வைத்தனர். நிகழ்ச்சி முடிந்தபின் அரங்கின் பின்புறம் சென்று அவர்களின் பாதங்களைத் தொட்டு வணங்கினேன்.

காசியில் வசிக்கும் ஷெனாய் விற்பன்னர் பிஸ்மில்லாகான், கங்கையைத் தம் மாதா என்பவர். விசுவநாதர்க்ஷத்திரத்தில் வசிப்பதாகப் பெருமையுடன் கூறிக்கொள்பவர்.

பாகிஸ்தானின் பிரஜையாக மாறிய போதிலும் பாரத ரசிகர்களின் அபிமானத்தை இழக்காத நூர்ஜஹான், இசையின் மூலம் இறைவனை வழிபடுவதாகக் கூறி முல்லாக்களின் கோபத்திற்காளானார். அந்த இசைவாணியை மூர்க்கர் தம் முன் மண்டியிடச் செய்து மன்னிப்புக் கோர வைத்தனர்.

நமது மரியாதைக்குரிய குடியரசுத் தலைவர் கலாம், குழந்தைகளிடம் சரஸ்வதி வந்தனா பாடத் தெரியுமா என்று கேட்பவர்.

இப் பெரியோர் யாவரும் தம் முன்னோரின் மாண்பினை உணர்ந்திருப்பதோடு, அதனை வெளிப்படையாக உணரச் செய்வதிலும் பெருமிதம் காண்பவர்கள். இத்தகையவர்களின் எண்ணிக்கை பெருகுவதற்கான வழிமுறைகளில் ஹிந்துக்களின் கவனம் செல்லவேண்டும்.

முகமதியரின் மறைப் புத்தகத்தில் உள்ள வன்முறை உணர்வை விதைக்கக் கூடிய வாசகங்களை அவை எந்தக் காரணத்திற்காக இடம்பெற்றிருந்தாலும் அவற்றின் அவசியத்தைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாத இளஞ் சிறுவர்கள் பயிலும் மதரஸாக்களில் கற்பிக்கலாகாது என முடிவெடுக்க முகமதிய மார்க்க அறிஞர்கள் முன்வர வேண்டும்.

அடுத்து கிறிஸ்தவ சகோதரர்கள் பற்றிய எனது அனுபவங்களையும் எடுத்துரைத்தேன்.

கர்னாடக மாநிலத்தின் தலமைக் காவல் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் சாங்லியானா, ஐ பி எஸ். இவர் வட கிழக்கி லுள்ள மிஜோரம் மாநிலத்தவர். பெங்களூரையே தமது சொந்த ஊராகத் தேர்ந்து கொண்டவர். ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவரான இவர், இன்று வடக்கு பெங்களூர் நாடாளுமன்ற பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். ஆமாம், பி.ஜே.பி. எம்.பி.தான்!

சில ஆண்டுகளுக்குமுன் ஒரு சந்திப்பின்போது, வனவாசிகளான தங்கள் மத்தியில் கிறிஸ்தவ மிஷனரிகள் வந்து கல்வி, மருத்துவம் ஆகிய துறைகள் சார்ந்த தொண்டுகளைத் தங்கள் பிரதேசத்தில் மேற்கொண்டனர் என்றும், அதனைத் தொடர்ந்து தங்களுக்கு ஞானஸ்னானமும் செய்வித்தார்கள் எனவும் அதனால்தான் கிறிஸ்தவர்களாகிப் போனோம் என்றும் சொன்னார்.

ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவிகளும் இவ்வாறான சேவைகளைச் செய்த போதிலும் அவர்கள் மத மாற்றம் செய்ய முனையவில்லை என்றார், சாங்லியானா. செய்திருந்தால் நாங்கள் கிறிஸ்தவர்களாவதற்குப் பதிலாக ஹிந்துக்களாகியிருப்போம் என்று கூறினார். நீங்கள் ஏற்கனவே ஹிந்துக்கள்தாம், உங்களை மதம் மாறச் செய்யவேண்டிய அவசியமே இல்லை எனக் கூறி, மகாபாரதத்திலிருந்து சில ஆதாரங்களை எடுத்துரைத்தேன். மேலும், எம்முடைய துறவியர் தொண்டு செய்வது தொண்டிற்காகவேயன்றி மத மாற்றம் செய்வதற்காக அல்ல என்றும் சொன்னேன். சாங்லியானா யோசிக்கத் தொடங்கினார்.

நீங்கள் நல்ல கிறிஸ்தவராகவே இருங்கள், ஆனால் ஹிந்துத்துவம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் அது உங்கள் முன்னோரின் கோட்பாடுதான் என்று மேலும் கூறினேன். அடிப்படையான சில கருத்துகளை விளக்கினேன். சாங்லியானா தொடர்ந்து சிந்தித்து இறுதியில் ஹிந்துத்துவத்தைப் புரிந்துகொண்டதோடு, பாரதிய ஜனதாவில் சேரவும் விருப்பம் தெரிவித்தார். அது என் வேலை அல்ல என ஒதுங்கிக் கொண்டேன்.

பின்னர் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார், சாங்லியானா.

பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பாவின் கார் டிரைவராக இருந்த ஜாபர் ஷெரீப் என்பவர் அகட விகடம் செய்து பிற்காலத்தில் இந்திரா காங்கிரசில் பெரிய பிரமுகராகி

விட்டார். மக்களவை உறுப்பினராகி மத்தியில் அமைச்சராகக் கூட ஆகமுடிந்தது அவரால். பெங்களூர் வடக்கு மக்களவைத் தொகுதியைத் தமது பிதுரார்ஜிதமாகவே வைத்திருந்தவர். காரணம் சிவாஜி நகர் மற்றும் பல வடக்கு பெங்களூர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த சட்டசபைத் தொகுதிகளில் முகமதியர் மிக அதிகம். அங்குதான் சாங்லியானா 2004ல் பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பெங்களூரில் பி.என்.பெஞ்சமின் என்று ஓர் எழுத்தாளர் இருக்கிறார். சிரியன் கிறிஸ்தவரான இவர் ஹிந்துத்துவ ஆதரவாளர். P N Benjamin என்று கூகிளில் தேடினால் உடனே

கிடைப்பார். அவர் எழுதிய கட்டுரைகளும் படிக்கக் கிடைக்கும். அவற்றுள் பெரும்பாலானவை இன்றுள்ள பிரத்தியட்ச நிலையைக் கண்டுணர்ந்து ஹிந்துத்துவக் கோட்பாட்டிற்கு இசைவான கருத்தை வலியுறுத்துபவை. கிறிஸ்தவ தலித்துகள் கிறிஸ்தவச் சூழலில் சம கவுரவமும் சம வாய்ப்பும் பெற ஓயாது பிரசாரம் செய்துவருபவர்தான் பெஞ்சமின்.

எனக்குத் தெரிந்தவரை ஏராளமான கிறிஸ்தவர்கள் இன்றைக்கு பாரதத்தில் மத அடிப்படையிலான முகமதிய பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டுமானால் ஹிந்துத்துவத்தை பலப்படுத்த வேண்டும் என மனப் பூர்வமாக உணரத் தொடங்கியுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை பெருகுமாறு விவரம் அறிந்த ஹிந்துக்களின் அணுகுமுறை அமைய வேண்டும்.

உன் அயலானை நேசி என்று ஏசு நாதர் கூறியது சரிதான். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று உபதேசிக்கப் பட்ட வட்டாரத்தில் இவ்வாறு சொன்ன ஏசு சந்தேகமின்றி மகான்தான். ஆனால் அவர் பெயரால் தொடங்கப் பட்ட சமயத்திற்கும் அவருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அது ரோமானியரின் உருவாக்கம். எனவேதான் ஒரு சாம்ராஜ்ஜிய விரிவாக்க வெறியுடன் அது சென்றவிடமெல்லாம் ரத்தக் களறியாக்கிகொண்டு பரவியது. ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் தென்னமெரிக்காவிலும் அது பரவியது மிகக் கொடூரமான வன்முறைகள் மூலமாகத்தான். நம் நாட்டிலுங்கூட சவேரியார் போன்றவர்கள் வன்முறையின் மூலமாகவே அதனைப் பரப்பினார்கள்.

குறிப்பாக மேற்கு கர்னாடகத்திலும் கோவாவிலும் வன்முறையில் வலுக்கட்டாயமாக ஹிந்துக்கள் கிறிஸ்தவராக மதமாற்றம் செய்யப்பட்டனர். மங்களூர் வட்டாரத்தைச் சேர்ந்த இந்திரா காங்கிரஸ் பிரமுகரான மார்கரெட் ஆல்வா ஒருமுறை முகத்தில் பெருமிதம் தவழ என்னிடம் கூறினார்:

“நாங்கள் எல்லாம் பிராமணர்கள்தான் தெரியுமா ? சேவியர் வந்து துன்புறுத்தி எங்கள் முன்னோரை வலுக்கட்டாயமாக மத மாற்றம் செய்திருக்காவிட்டால் ஹிந்துக்களாகவும் பிராமணர்களாகவுந்தான் இருந்துகொண்டிருப்போம்!”

மத மாற்றம் செய்வதற்காகத் தமிழ் நாட்டிற்கு வந்த கிறிஸ்தவ குருமார்கள் தங்கள் நோக்கம் நிறைவேறும் பொருட்டு மேற்கொண்ட முறைகேடுகளுக்கும் மாய்மாலங்களுக்கும் அளவே இல்லை. வலுக்கட்டயாமாக எதிரில் வருவோரின் வாயில் பசு மாமிசத்தைத் திணித்துக் கிறிஸ்தவர்களாக்கிய சம்பவங்கள்கூட உண்டு (கிறிஸ்தவமும் ஜாதியமும் என்கிற தலைப்பில் ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய, காலச் சுவடு வெளியீடாக வந்துள்ள நூலில் இதற்கான ஆதரத்தைக் காணலாம் )!

கிறிஸ்தவம் உலகில் எத்தகைய வன்முறைகள் மூலமாகவெல்லாம் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டது என்பதை அறிய வேண்டுமானால் கூகிளில் Inquisition என்று தேடச் சொன்னேன்.

தமிழ் நாட்டில் மயிலை கபாலீச்வரர் ஆலயம் இடிக்கப்பட்டு அது இருந்த இடத்தில்தான் இன்று சாந்தோம் ஆலயம் எழும்பி நிற்கிறது. புதுச் சேரியில் ஈச்வரன் தர்மரஜா கோவில் இடிக்கப்பட்டு மாதா கோவில் கட்டப்பட்டது. மயிலை கபாலீச்வரர் ஆலயம் இடிக்கப்பட்டமைக்கு ஆதாரம் சாந்தோம் ஆலயத்தின் பின்புறமே வெகு காலம் வரை இருந்து வந்தது. புதுவை ஈச்வரன் தர்மராஜர் கோவில் இடிக்கப் பட்டமைக்கு ஆனந்த ரங்கம் பிள்ளையின் தினசரி நாட்குறிப்பில் ஆதாரமுள்ளது. ஈச்வரன் கோவில் இருந்த இடத்தில் கட்டப்பட்ட கன்னி மேரி மாதாகோவிலின் படிக்கட்டுகளாக ஹிந்துக்கள் வணங்கிய விக்கிரகங்கள் பயன்படுத்தப்பட்டன!

பகையுணர்வூட்டுவதற்காக இவற்றை யெல்லாம் விவரிக்கவில்லை. ஆனால் மண்ணாங்கட்டிகளாக மழுங்கிக் கிடக்க வேண்டாம் என்பதற்காகவே எடுத்துக் கூறினேன்.

ஆயிரந்தான் ஆனாலும் பாராத தேசத்து கிறிஸ்தவ, முகமதிய சகோதரர்கள் நம் மக்கள். அவர்களுடைய முன்னோரும் ஹிந்துக்களின் முன்னோரும் ஒன்றானவர்களே. அவர்கள் அனைவரும் தாய் மதம் திரும்பியாக வேண்டும் என ஹிந்துக்கள் எதிர்பார்க்க மாட்டார்கள். பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்று பாரத தேசத்தவரைப் பிரித்து வைப்பதை இனியும் அனுமதியோம் என அவர்கள் பிரகடனம் செய்து தங்களுடன் இரண்டற சங்கமிக்க வேண்டும் என்பதே ஹிந்துக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்.

அடுத்து காஷ்மீரம் குறித்துத் தெரிவிக்கப்பட்ட எதிர்வினைகளுக்கு விளக்கம் வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.

காஷ்மீர மாநிலம் முகமதியர் இல்லாத ஜம்மு, லடாக் ஆகியனவும் அடங்கிய பிரதேசம். இவை தவிர பாகிஸ்தான் ஆக்கிரமித்த மூன்றிலொரு பாக காஷ்மீரமும் அதில் அடங்கும். காஷ்மீரத்தில் வனவாசிகள் வேடத்தில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவமும் ஆசை வார்த்தைகள் காட்டப்பட்ட வட மேற்கு நிஜ வனவாசிகளும் இழைத்த கொடுமைகளால் காஷ்மீர மக்கள் ஆத்திரமுற்றிருந்த காலம்தான் 1947. பாரத ராணுவம் பாகிஸ்தான் கவர்ந்த பகுதியை மீட்கும் நிலையில் நேருவின் அனுபவமின்மையாலும் உள்ளேயிருந்தே பாதகம் செய்த மவுண்ட்பேட்டன் கும்பலின் தவறான ஆலோசனையாலும் விவகாரம் ஐ. நா. வின் தீர்விற்குப் போயிற்று.

அந்தச் சமயத்தில் தீர்மானிக்கப்பட்ட பொது வாக்கெடுப்பு நடந்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரப் பகுதி மக்களையும் சேர்த்து அனைவருமே பாகிஸ்தானுக்கு எதிராகத்தான் வாக்களிப்பர்கள் என்பதால் பொது வாக்கெடுப்புக்கு பாகிஸ்தான்தான் முட்டுக்கட்டை போட்டது. நாமோ காஷ்மீர மக்களின் பொது வாக்கெடுப்பிற்கு ஒப்புக்கொண்டோம்.

இன்று நிலைமை மாறிவிட்டது. பயங்கர வாதிகளின் மிரட்டலுக்கும் மதவாதிகளின் எச்சரிக்கைக்கும் பணிந்து போகவேண்டிய நிலையில் காஷ்மீர் மக்கள் உள்ளனர். அவர்கள் மனப்பூர்வமாக முடிவு எடுக்கும் நிலையில் இன்று இல்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ள காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானுக்கு விரோதமாக வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆகவேதான் இன்று காஷ்மீர் மாநில மக்கள் தமது மாநிலம் பற்றிப் பொது வாக்களிக்கும் தீர்மானம் காலாவதியாகிவிட்டது என்கிறோம். காஷ்மீர் மாநிலத்தில் நமது ராணுவத்தை நிறுத்திவைத்து தினம் தினம் இளம் வீரர்களை நாம் பலிகொடுத்துவருவதற்குக் காரணமும் பாகிஸ்தானிலிருந்து வரும் இடைவிடாத எல்லை தாண்டிய பயங்கர வாதம்தான்.

இன்று எல்லை தாண்டிவரும் பயங்கரவாதக் குழுக்கள் காஷ்மீரில் பலவந்தமாக த் தமது அணிகளுக்கு ஆளெடுத்து வருகின்றன. பதினைந்து வயது கூட நிரம்பாத சிறுவர்களைக் கூட இழுத்துச் செல்கின்றன. வர மறுக்கும் சிறுவர்களின் கை விரல்கள் வெட்டப் படுகின்றன. நிலைமை இவ்வாறிருக்கையில் வாக்கெடுப்பிற்கு அங்கு என்ன பொருள் இருக்கமுடியும் ?

காஷ்மீர் மாநிலம் குருஜி கோல்வல்கர் பாரதத்திற்கு வழங்கிய மகத்தான அருங்கொடை. இதற்காக அவருக்கு நன்றி செலுத்தாவிடினும் பரவாயில்லை. எதிர்வாதம் செய்ய வேண்டும் என்பதற்காக அவரது சாதனையை துச்சமென மதிப்பது மட்டுமின்றி சொந்தத் தாயகத்திற்கே விரோதமாகப் பேசுவது விசித்திரம்.

விடுதலைப் போராட்ட காலத்து தியாகி சுப்பிரமணிய சிவா பற்றி மீண்டும் பேச்சு வந்தது. சிறையில் பல கொடுமைகளுக்கு ஆளாகித் தொழுநோயும் வரப் பெற்றவர் அவர். விடுதலைப் பிரசாரத்திற்காக அவர் கையாண்ட தந்திரம் மிகச் சுவையானது.

ஆங்கிலேய ஆட்சியை மிகக் கடுமையாகக் கண்டனம் செய்து பேசுவார் அவர், முச்சந்திகளில் நின்றுகொண்டு. இதில் அவருக்கு ஆதர்சம் கிறிஸ்தவ மதப் பிரசாரகர்கள்தான். ”ஏ, பாவிகளே” என்று அவர்கள் கூவி அழைப்பதுபோல் இவரும் ஏ, பிரிட்டிஷ் ராஜாங்க அடிமைகளே என்று கூவி மக்கள் கூட்டத்தைத் திரட்டி சுதந்திர ஆர்வத்தைத் தூண்டுவாராம். அவரது ராஜத் துரோகப் பேச்சிற்காக அவரைக் கைது செய்து கூண்டில் நிறுத்துவார்கள். அவர் சிறிதும் தயக்கமின்றி ஏதோ புத்திக் கோளாறு காரணமாக அவ்வாறு பேசிவிட்டதாகக் கூறி மன்னிப்புக் கோருவார். நீதிபதியும் கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்புவார். வெளியே வரும் சிவா, ஐம்பது மைல் தொலைவி லுள்ள ஒரு ஊருக்குப் போய் அதேவிதமான பிரசாரத்தைத் தொடர்வார். இப்படியே ஒவ்வொரு ஊரிலும் மன்னிப்புக் கோரியே வெளியில் வந்து சுதந்திரப் பிரசாரம் செய்துகொண்டிருந்தார். எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் காரியம் தடங்கலின்றி நடைபெற வேண்டும் என்றால் இப்படியெல்லந்தான் இயங்கியாக வேண்டும். மன்னிப்புக் கடிதம் கொடுத்துவிட்டு வந்தவர் என்றெல்லாம் விவரம் தெரியாமல் சிலரை அவமரியாதையகப் பேசுவது தவறல்லவா ?

வந்த நால்வர் பொருளாதாரம் பற்றிய எதிர்வினைக்கும் விளக்கம் வேண்டும் என்றனர். சந்தைப் பொருளாதாரம் என்றாலே உலகமயமாக்கல் அல்ல என்பதை எடுத்துச் சொன்னேன்.

இது அரைகுறை அறிவினால் வரும் குழப்பம். இனி உலகமயமாதலிலிருந்து எந்த நாடும் தப்பிக்க இயலாது என்பது வேறு விஷயம். ஆனால் சாமர்த்தியமாகக் காய் நகர்த்த முடியும்.

பாரதம் தனது விசாலமான பரப்பளவினாலும் மக்கள்தொகையினாலும் மிகவும் அருமையான சர்வ தேசச் சந்தையாக விளங்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளது. இதனைப் பயன்படுத்தி நாம் நன்கு பேரம் பேசி உற்பத்தி, வினியோகம் செய்வதில் பிரச்சினையுள்ள பண்டங்களுக்கு மட்டும் நமது வாயிற் கதவுகளைத் திறந்துவிடலாம். சுதேசித் தொழில்களை நசிப்பிக்கும் அன்னியத் தொழில்களுக்குக் கதவை அறைந்து சாத்தலாம்.

சில்லறை வியாபாரம் என்பது நமது நாட்டில் ஓர் அற்புதமான சுயவேலை வாய்ப்பு. கோடிக்கணக்கானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் அதன் மூலம் வருவாய் பெற்றுவருகிறார்கள். மிகவும் கவுரவமாகவும், அரசுக்குக் கூட ஏராளமாக வருமானம் தேடித்தருவதாகவும் நடைபெறுவது சில்லறை வியாபாரம். வேலையில்லாத் திண்டாட்டம் என்கிற அசுரனிடமிருந்து ஆட்சியாளரையும் மக்களையும் காப்பது அது. வேலை கிடைக்காத ஓர் இளஞர் ஒரு பெட்டிக்கடை வைத்துச் சீரான வருமானம் பெறத் தொடங்கிவிடுகிறார், நம் ஊரில்.

வால் மார்ட் இங்கு நுழையுமானால் புட் வேர்ல்ட் போன்றவையே தாக்குப் பிடிக்கமுடியாமல் அழிவது திண்ணம். எனவே பிற சிறு சில்லறை வியாபாரிகள் நிலை எப்படியிருக்கும் என விவரிக்கத் தேவை இல்லை. வால் மார்ட்டின் நுழைவால் நாம் மிகப் பெரிய சங்கடத்திற்கு ஆளாவோம் என்பதில் சந்தேகமில்லை. இது பற்றி நான் மிகவும் விரிவாக ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். வேண்டுமெனில் திண்ணையில் அதனை மறு பிரசுரமாக வெளியிடலாம்.

வால் மார்ட் பற்றி எதிர்வினையில் எழுப்பப்பட்டுள்ள கேள்வி நூற்றுக்கு நூறு சரிதான். ஆனால் உலகமயமாக்கலை ஏற்பதாலேயே எல்லாவற்றுக்கும் ஒப்பவேண்டுமென்பதில்லை. நமக்குள்ள உரிமைகளை நாம் இழக்கத் தேவையில்லை.

ஐரோப்பிய நாடுகள் பலவும் ஷேம நலத் திட்டங்க ளை மக்களுக்கு வழங்குகின்றன. அங்கெல்லாம் மக்கள் தொகை மிகவும் குறைவு. எனவே அரசுகளுக்குத் தொல்லை அதிகமில்லை. நமது தேசமோ மக்கள் தொகைப் பெருக்கத்தால் தள்ளாடுவது. ஆனால் இங்குள்ள சவுகரியம் மக்களின் அடிப்படைத் தேவைகள் குறைவு. அவர்கள் எளிதில் நிலைமைக்குத் தக்கவாறு தங்களைச் சரிசெய்துகொள்பவர்கள். இதுபோன்ற மக்களைக் காண்பது அரிதிலும் அரிது. ஆனால் வெகு எளிதில் திருப்தியடைந்துவிடுகிற இந்த மக்களைக் கூடத் திருப்தி செய்யாத ஆட்சியாளர்களை நாம் பெற்று வருகிறோம்! மக்களை சுய மரியாதையிழந்த பிச்சைக்காரர்களாகவும் மாற்றிவிட்டவை நமக்குக் கிடைத்த மத்திய, மாநில அரசுகள்!

எதற்கெடுத்தாலும் அரசை எதிர்பார்க்கும் சவலைப் பிள்ளைகளாக மக்களை உட்கார்த்தி வைப்பது ஷேம நலமல்ல. சந்தைப் பொருளாதார அமைப்பில் சிறிது மாறுதல்கள் செய்வதன் மூலம் அவர்களை வாழவைப்பது சாத்தியம். உதாரணத்திற்கு மகளிர் சுய நிதிக் குழுக்களைக் கூறலாம். உற்பத்தியாளர் நுகர்வோர் நேரடி வியாபார ஏற்பாடு இன்னொரு மக்கள் நல நடவடிக்கையாகும். இன்றைக்கு வெறும் சூதாட்டமேயான பங்குச் சந்தை தீபாவளி வாணம்போல் உயரே சீறிச் செல்வதை உண்மையான வளர்ச்சிபோல் காட்டுவது அரசியல் சாதுரியம் மட்டுமே. இது தேசத்தின் நிஜமான பொருளாதார வளர்ச்சியல்ல. வெள்ளம் போல் பாயும் அந்நிய முதலீடுகள் ஆபத்தானவையே. இதிலும் வரைமுறை அவசியம். திடாரென அந்த வெள்ளம் வடியும்போது திண்டாட்டத்தில் சிக்கிக் கொள்வோம்.

சந்தைப் பொருளாதாரம் என்றால் இப்படித்தான் என மயங்கலாகாது. கடிவாளத்தை நம் கையில் வைத்திருக்க முடியும்தான். அதற்கு நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் கவலைப் படுபவர்களிடம் அதிகாரம் இருக்க வேண்டும்.

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நாராயணனுக்குத் தான் காணாத முரளி கபே பற்றித் தெரிந்துகொள்ள ஆசை. ஏனெனில் இன்று அது இல்லை. காஞ்சி பரமாச்சாரியார் அறிவுரைப்படிதான் பிராமணாள் என்ற சொல் நீக்கப்பட்டது; அதற்கு இணங்கவே என் தந்தையார் ஈ.வே.ரா.வைச் சந்ததித்து சொல்லை எடுத்துவிடுவதாக அறிவித்துக் கிளர்ச்சியை நிறுத்திக் கொள்ளுமாறு கூறியிருக்கக்கூடும் என்று முரளி தெரிவித்த செய்தியை அவரிடம் கூறினேன்.

ஈ.வே.ரா.வுக்கும் அவரது இயக்கத்தவருக்கும் தார்ச் சட்டியும் ஒரு கை கண்ட ஆயுதம். எனவே அது ஒரு பெரிய விஷயமில்லை என்று சொன்னேன்.

பிராமணாள் ஹோட்டல் என்கிற அறிவிப்புப் பலகை வைப்பதன் நோக்கம் பிராமணர்கள் மட்டுமேயோ, அல்லது பிராமணர்கள் ஆசாரம் கெடாமல் சாப்பிடலாம் எனவோ அறிவுறுத்துவதல்ல.

முல்லை சத்தியின் முல்லை அச்சகம் மவுண்ட் ரோடில் ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்தபோது, மதிய அசைவ உணவு என்றால் பொன்னுசாமிப் பிள்ளை ஹோட்டலிலிரு ந்தும் பலகாரம், காபி, சைவச் சாப்பாடு என்றால் பிராமணாள் ஹோட்டல் என்ற பலகை தொங்கிய ஆயிரம் விளக்கு கபேயிலிருந்தும்தான் வரவழைப்போம். காரணம் காபி, சாம்பார், சட்னி, பலகாரங்களுக்கு பிராமணாள் கைப் பக்குவம்தான் அதிக ருசியாக இருக்கும்.

அய்யர் ஓட்டலாப் பார்த்து காபி வாங்கியாங்க என்பார்கள், தீவிர திராவிட இயக்கத்தார் கூட!

இப்படி அடையாளம் கண்டு நல்ல காபி அருந்த முடியாமல் செய்கிறாரே நம் பெரியார் என்று சத்தி, மதியழகன் முதலானோர் சொல்லிச் சிரிப்பதுண்டு!

இன்றைக்கு அநேகமாக எல்லா ஓட்டல்களிலுமே நல்ல காபியும் சாம்பாரும் கிடைப்பதால் அப்படிப் பலகை தொங்கியதன் முக்கியத்துவத்தை உணர இயலாதுதான்!

இன்றைக்குச் செட்டிநாடு ஓட்டல், டப்பாக் கட்டு ராவுத்தர் ஓட்டல் என்றெல்லாம் உணவின் பக்குவத்தைத் தெரிவிப்பதற்காகப் பெயர் வைப்பதில்லையா, அதுபோலத்தான் அன்று பிராமணாள் ஹோட்டல் என்கிற பலகைகள் தொங்கின. அதை ஈ.வே. ரா. மிகவும் தீவிரமாக அர்த்தப்படுத்திக் கொண்டு ஜன நடமாட்டம் மிகுந்த கடற்கரை நோக்கிச் செல்லும் பாதையில் மக்களுக்கு இடைஞ்சலாகவும் சட்டம்ஒழுங்குப் பிரச்சினையாகவும் அப்படியொரு விதண்டா வாத மறியலை நடத்தி அதற்குப் பொருத்தமேயில்லாத ஒரு உதாரணத்தையும் சொல்லியிருக்க வேண்டாம்தான்!

வந்த இளைஞர்கள் மேலும் சில விஷயங்கள் குறித்தும் கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்றனர். ஆனால் அவையெல்லாம் அப்படியொன்றும் முக்கியமானவை அல்ல. இன்றைய இளைஞர்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளவைதாம்.

விளக்கம் பெற வேண்டி வாசகர்களாக வந்த நால்வரும் நான் பெற்றெடுத்த பிள்ளைகளாக மனநிறைவுடன் விடைபெற்றார்கள்.

(திண்ணையில் இனி எழுதுவதில்லை என அறிவித்த சமயத்தில் நிகழ்ந்த சந்திப்பு இது. அவ்வாறு அறிவிக்கச் செய்த எதிர்வினையைச் சுட்டிக் காட்டி எழுப்பப்பட்ட கேள்வி களுக்கான பதில்களாக மேற்கண்ட விளக்கங்களைக் கருத வேண்டுகிறேன். அந்தச் சமயத்தில் வேறு சிலரும் வந்து திண்ணைக்கு அனுப்பப் போவதாகக் கூறி பேட்டிபோல் எடுத்தனர். ஆனால் அது என்னைப் பற்றிய சொந்த விஷயங்களையே அதிகம் சார்ந்திருந்ததால் அதனை அவர்களின் வலைப் பதிவுகளில்கூட வெளியிடவேண்டாம் எனத் தடுத்துவிட்டேன் . மலர்மன்னன் )

===

பிப்ரவரி 19, 2006

malarmannan79@rediffmail.com

Series Navigation