அநாதி சொரூபக் கவிதை – அநாதி சொரூபக் கவிதை

This entry is part [part not set] of 40 in the series 20080103_Issue

திலகபாமா



நேற்றைய வரலாற்றுக் கதையாடல்களுக்குள் வாசிக்கப் படாத உணர்வுகளும் இன்றைய யதார்த்த வாழ்வுச் சிக்கல் எழுப்பும் கேள்விகளும் ஒரே நேர் கோட்டில் இருப்பதைப் பதிவு செய்து போகும் இக்கவிதையில் நேற்றுமல்லாது இன்றுமல்லாது இதுதானென்று அறுதியிட்டுக் கூற முடியாத ஏற்கனவே இருக்கின்ற வடிவங்களுக்குள் தன்னை திணித்துக் கொள்ளாத சொரூபம் தாங்கி இருக்கின்றது என்பதால் அநாதி சொரூபக் கவிதை என இக்கவிதை வடிவத்திற்கு பெயரிட்டுள்ளேன். பெயர் என்பது ஓர் அடையாளப் படுத்துதல் அவ்வளவே.
இன்றைய கேள்விகளாய் பாரதியும் நேற்றைய உணர்வுகளாய் பாஞ்சாலியும் இக்கவிதையில் உரத்துச் சிந்தித்துப் போகின்றார்கள். பாஞ்சாலியையோ புராண பாத்திரங்களையோ மீட்டுருவாக்கி உலா விட வேண்டிய தேவை இக்கவிதைக்கு இல்லை , புராண கதையாடல்களும் வாழ்வின் பிரதி பலிப்பே .அந்த வகையில் பிரச்சனைகளுக்கு பின்னிருக்கும் உணர்வுகளை சொல்லுவதற்கு பொதுமைப் படுத்தி உணர்த்துவதற்குப் பயன்படுகின்றது தொன்மக் கதையாடல்கள். ஏற்கனவே இச்சமுதாயம் கட்டமைத்து வைத்திருக்கின்ற புரிதல்கள் தாண்டிப் புதிய உணர்வுகளை வாசித்து விடும் உணர்வுத் தளத்தில் நவீனக் கலைஞர்களோ முற்போக்காளர்களோ இருவருமே பயணப் படவில்லை . நேரடியாகப் பலரும் மறைமுகமாகச் சிலரும் ஆதிக்க கட்டமைப்புச் சூழலுக்குள்ளும் சிந்தனைக்குள்ளும் சிக்கியபடியே தான் இருக்கின்றனர். அது தாண்டியதான புதிய வாசிப்புகளை புரிதல்களை இத்தொகுப்பு சாத்தியப் படுத்தும் போது புராண தொன்ம மீட்டுருவாக்கல் எனும் சொல்லாடலில் இருந்தும் விடுபட்டு நடப்பியல் யதார்த்தத்திற்கான புதிய தடமாக அறிமுகமாகும் . வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தந்த அத்தியாவசியத் தேவையாக இக்கவிதை உணரப்படும்.
2003 இல் எழுதத் தொடங்கிய இக்கவிதை 3 வருட இடைவெளியில் பல்வேறு வாழ்வின் வேறுபாடுகளில் எழும்பிய விசாரணைக்குள்ளிருந்தும் எழுதப் பட்டது.
இந்தக் காலகட்டத்தில் எனது தன்னிச்சையான பயணங்கள் எனது எண்ணங்களுக்கும் அனுபவங்களூக்கும் நிறைய வலு சேர்த்திருக்கின்றன .காலத்தையையும் பூமியையும் வென்று விடும் நதிகள் தான் பின்னால் மறக்கப் பட்டும் மறுக்கப் பட்டும் போயிருக்கின்றன பெண்ணினது வாழ்வைப் போல, கலாச்சாரத்தையும் மனித வாழ்வின் தொடர்ச்சியாக பண்பாட்டு் தளங்கள் அமைவதை , நதியின் கரைகள் தான் , அதன் மண்ணும் நீரும் சேர்ந்த வாழ்வுதான் வடிவமைத்திருக்கின்றன பெண்ணைப் போல. எனவே நதிகளும் காடுகளும் எனை ஈர்க்கின்ற ஒன்றாகவே இருக்க இருந்து இல்லாமல் போகின்ற நிலையின் வலியை நினைத்தே நதிகளின் பெயரை வைப்பதே பொருத்தமானது என உணர்ந்தேன்.


mathibama@yahoo.com

Series Navigation