அதிகாலைப் பொழுதுகள்

This entry is part [part not set] of 21 in the series 20020120_Issue

வ.ந.கிாிதரன் –


அதிகாலைப் பொழுதுகள்
அழகானவை. அற்புதமானவை – சில
அதிகாலைப்பொழுதுகளில்
அப்பாவின் தோளில் சாய்ந்தபடி
அடிவானச் சிவப்பு கண்டு
அதிசயித்திருக்கின்றேன்.
அப்பொழுதெல்லாம் விண்ணில்
அழகாகக் கோடிழுக்கும்

நீர்க்காகத்தின்
நேர்த்தி கண்டு
நினைவிழந்திருக்கின்றேன்.

இன்னும் சில
அதிகாலைப் பொழுதுகளோ
அற்புதமானவை. விடாது பெய்த
இரவின் அடை மழையில்
குட்டைகள் நிரம்பியதில்
வாற்பேத்தைகள் கும்மாளமிடும்.

பெரும்பாலான
அதிகாலைப் பொழுதுகளில்
நகாிற்குப் படையெடுப்பர்
நம் தொழிலாள வீரர்.
அவர்தம் விடிவு வேண்டி
அச்சமயங்களில்
ஆவேசம் அடைந்திருக்கின்றேன்.

விரகத்தால் துடிக்கும் பனைப்பெண்டிர்;
மூசிப் பெய்யும் மாசிப்பனி;
பனி தாங்கும் புற்கள்; புட்கள்.

இவையெல்லாம்
அதிகாலைப் பொழுதுகளுக்கு
அழகூட்டின. ஆயினெப்பொழுதுமே
அதிகாலைப் பொழுதுகள்
அது போன்றெ யிருந்ததில்லை. சில
அதிகாலைப் பொழுதுகள்
அவலத்தைத் தந்திருக்கின்றன.

அப்பொழுதெல்லாம்
எாிந்து கன்றி யுப்பிய
உடல்களை
அதிகாலைகளில் கண்டிருக்கின்றேன். இரவின்
அனர்த்தங்களை அவை சோகமாக
எடுத்துரைக்கும்;மெளனமான சோகங்கள்.
இப்பொழுதெல்லாம்
அதிகாலைப் பொழுதுகள் முன்புபோல்
இல்லை தான். அவை
அழகாகவுமில்லை.
அவலட்சணமாகவுமில்லை. அவை
அற்புதமாகவுமில்லை. ஏன்
ஆபத்தாகக் கூடத் தொிவதில்லை.

எத்தனை தரம் தான்
‘கான்கிாீட் ‘ மரங்களையும்
கண்ணாடிப் பரப்புக்களையும்
பார்ப்பது ?

இப்பொழுதெல்லாம்
அதிகாலைப் பொழுதுகள்
சலிப்பைத் தருகின்றன,
சலிப்பூட்டுகின்றன.

இருந்தாலும் இன்னமும்
‘விடிவை ‘ எதிர்வு கூற மட்டும்
அவை தயங்குவதேயில்லை.

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்