அதிகார வன்முறைக்கு எதிரான ஜிகாத்

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

ஹெச்.ஜி.ரசூல்ஒரு சமூக ரீதியான விலக்கம் அல்லது வன்முறை சார்ந்த விசயத்திற்கு கண்டனம், அது பற்றிய அபிப்ராயங்கள். உரையாடல்களைச் சொல்வது இங்கு நிகழ்ந்திருக்கிறது. இந்த அரங்கிலே பேசின அனைத்து படைப்பாளிகளும் தமிழியம். பெண்ணியம். தலித்தியம். இஸ்லாமியம். சார்ந்த வாசிப்புகளில் ஊர்விலக்க பிரச்சினை குறித்த உரையாடலை நிகழ்த்தி உள்ளார்கள்.

எழுதிக்கொண்டே இருப்பது என்ற விஷயம என்னில் தொடர்ந்து நிகழ்கிறது. இது கவிதைத் துறையிலிருந்து ஆய்வு எல்லைக்கு மெதுவாக நகர்ந்து வந்துள்ளது. தொடர்ந்து அனுதினமும் வாசிப்பதும் எழுதிக் கொண்டிருப்பதுமான ஒரு தீவிரமான எழுத்து இயக்கத்தோடு என்னை ஆட்படுத்திக் கொண்டிருப்பவன் என்ற முறையிலே பிரச்சினைக்கு உள்ளாக்கப்பட்ட உயிர்மை இதழின் கட்டுரையும் எழுதப்பட்டிருக்கிறது.

தமிழ்பண்பாட்டுச் சூழலிலும் தமிழ், இஸ்லாமிய கலாச்சார சூழலிலும் எழுதப்பட்ட எழுத்துக்கள் பல்வேறு விதமான படித்தரங்களில் வெளிப்பட்டுள்ளன. எழுபதுகளுக்குப் பிறகு இஸ்லாமிய சிந்தனைகளை அணுகினால் சுன்னத்துல்ஜமாஅத், வகாபிசம் என்பதான அடையாளங்களோடு உருவாகி வந்துள்ளன. பல்வேறு இயக்கங்களில் ஜாக், அந்நஜாத், த.மு.மு.க., தவ்ஹ“த் ஜமாஅத், ஜமாஅத்துல் இஸ்லாமி எனப் பலப் பெயர்களோடு இந்த உரையாடல்கள் தொடர்ந்து தமிழ்ச் சூழலிலே நடந்து வந்திருக்கிறது. தமிழ் சார்ந்த மரபுகளை எதிர் கொள்வது, இஸ்லாத்தின் பூர்வீக மரபுகளுக்கு ஒத்திசைவாக அவை இருக்கிறதா இல்லையா என்பது போன்ற விவாதங்களும் இதனூடே எழுந்துள்ளது.

இந்திய தமிழ் மரபில் அல்லது பாரஸீக சூபிய மரபுகள் இஸ்லாமிய சிந்தனைக்கு என்னவித பங்களிப்பைச் செய்திருக்கிறது என்ற வகையிலேயே நாம் தொடர்ந்து பேசி வந்திருக்கிறோம். தர்கா பண்பாட்டை கப்ருசியாரத் பிரார்த்தனை சார்ந்து மட்டும் பார்க்காமல் ஒரு சமூக பண்பாட்டு இயக்கமாகவும், அடித்தள மக்கள் சார்ந்தும் இது எவ்வாறு நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதாகவும் அந்த மரபுகள் சடங்குகளில் இடம் பெறும் சாரம்ச கூறுகள் என்னென்ன என்பது பற்றியும் விவாதித்துள்ளோம். சமூகவியல், மானுடவியல், உளவியல், மொழியியல், அமைப்பியல், ஆய்வுகள் உருவாகி வந்தபோது தர்கா பண்பாட்டை சுன்னத்துல் ஜமாஅத் மஸாயில் கோட்பாடு சார்ந்து மட்டும் பார்ப்பது என்ற நிலையிலிருந்து நீட்சி பெற்று இந்த நிகழ்வுகளை பிற ஆய்வியல் அணுகுமுறைகள் சார்ந்து எவ்வாறு புரிந்து கொள்வது என்ற அணுகுமுறையும் முன்னுக்கு வைத்தோம்.

சச்சார் அறிக்கைக்கு பிறகு ‘புதிய காற்றி’லே வெளிவந்த சச்சார் அறிக்கையும் அர்சால் முஸ்லிம்களும் பற்றி பிரசுரமான ஒரு கட்டுரையானதும் என்னைப் பொறுத்தவரையில் தமிழ்ச் சூழலிலேயே மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

நண்பர் ஜாகிர்ராஜாவின் மீன்காரத்தெரு நாவலை வாசித்தபோதும், வடஇந்திய சூழலிலே இஸ்லாமிய சமூகம், சாதியப் படிநிலைக்கு ஆட்பட்டு இருக்கிறது என்பதான விவரங்கள் மேலெழும்பி வந்தபோதும் இது குறித்து மிக ஆழமான பார்வையில் நாம் விவரிக்க வேண்டிய நிலையே ஏற்பட்டது.

அரபு பூர்வீகத்தை முன்னிறுத்தி அல்லது உயர்சாதிகளிலிருந்து மதம் மாறிய இஸ்லாமியர்கள், அரபுகள் – இந்து இடைநிலை சாதிகளிலிருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள் அஜ்லபுகள், ஒடுக்கப்பட்ட தலித்துகளிலிருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள் அர்சால்கள் என்பதான படிநிலைகள் வட இந்திய முஸ்லிம்களின் வாழ்வு நிலைகளிலிருந்து நமக்குக் கிடைத்தது. வடஇந்திய மாநிலங்களில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டவர் முக்தி மோர்ச்சா இயக்கத்தை நடத்தி கொண்டிருக்கிற இஜாஸ் அலி, அலி அன்வர் உள்ளிட்ட பல அறிஞர்களை நாம் பார்க்கிறோம். இந்த அறிஞர்கள் முன்வைக்கிற முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு பிரச்சினை மிகவும் சமூகத்திலே ஒடுக்கப்பட்டு, இன்னும் கீழே கிடக்கக்கூடிய தலித் முஸ்லிம்கள் சார்ந்து பேசப்படுவதை காணமுடியும். மத்திய பிரதேசத்திலும் சரி, பீகார், பாட்னாவிலும் சரி பல்வேறு இயக்கங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றன. இதனை தமிழ் சூழலுக்கு அறிமுகப்படுத்தவேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.

தமிழ் சமூகத்தில்கூட ஒரே ஊரில் ஏன் ரெண்டு ஜமாஅத்துக்கள் என்ற கேள்வியை இந்த பிரச்சினையோடு தொடர்புபடுத்தி யோசிக்க வேண்டும். உருது முஸ்லிம்கள், தமிழ் முஸ்லிம்கள் என்ற மொழி அடிப்படையில் மேல் கீழ் பேதங்கள் உள்ளது. மரைக்காயர், ராவுத்தர் லெப்பை உள்ளிட்ட பனிரெண்டிற்கும் மேற்பட்ட முஸ்லிம் சாதியினர் இன்று பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கிறார்கள். இது குறித்த இனவரைவியல், சமூகவியல் ஆய்வுகள் தொடர்ந்து தீவிரமாக நடத்தப்பட வேண்டியவையாக இருந்து வருகிறது.

துப்புரவு, தோல், குளம் குடைகளில் மீன்பிடிப்பு, நாவிதம் உள்ளிட்ட மிகவும் பின்தங்கிய தொழில்களை செய்து கொண்டிருக்கக்கூடிய அடித்தள முஸ்லிம்கள் இன்னமும் கவனிப்பாரற்று கிடக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் குடிப்பழக்கத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதை நாம் கவனிக்கிறோம். பொழுதுபோக்கிற்காகவும், உல்லாசத்திற்காகவும் குடிக்கும் முஸ்லிம் நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்சினையிலிருந்து அடித்தள முஸ்லிம்களின் தொழிலோடு இணைந்த குடிப்பழக்கம் வேறுபடும் தன்மை கொண்டது. குடிப்பண்பாட்டோடு இந்த அடித்தள மக்கள் தங்களை ஏன் இணைத்திருக்கிறார்கள் என்பதற்காக எந்த பதில்களும், சமூகவியல் நோக்கிலான ஆய்வுகளும் இதுவரையிலும் எந்த இயக்கங்களாலும் உலமாக்களாலும் உருவாக்கப்படவில்லை. இத்தகைய அடித்தள முஸ்லிம்கள் மீதான தௌகீது பிராம­ய கட்டமைப்புக்குள் இருந்து பார்க்கும் இயக்கங்களின் பார்வை என்பதே இவர்களெல்லாம் தூய முஸ்லிம்களல்ல, காபிர்கள் என்பதாகும். அடித்தள முஸ்லிம்களின் தொழில் சார்ந்த பண்பாட்டிற்குள் குடி எவ்வாறு இயைந்து செயல்படுகிறது. குடிப்பதால் அவர்கள் காபிர்களா இது குறித்து திருக்குர்ஆனின் கருத்தாக்கம் என்ன என்பதை சமூக ஆய்வாக கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்த பின்புலத்தில்தான் அடித்தள முஸ்லிம்கள் சார்ந்து வாசிக்கும்போது, திருக்குர்ஆன் பிரதிகளிலும், ஹதீஸ் பிரதிகளிலும் அதற்குப் பிறகான மார்க்கச் சட்டப் பள்ளிகளான மத்ஹபுகளிலும் உலக அளவிலும் மேற்கத்திய இஸ்லாமிய அறிஞர்கள், மத்திய கிழக்கு அரபு நாடுகளின் அறிஞர்கள் தரப்பிலும் குடி கலாச்சாரம் பற்றி என்னென்ன விவாதங்கள் முன் வைக்கிறார்கள் என்பதை தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இத்தகையதான பல்வேறுவித கருத்துக்களை தொகுத்து முன்வைத்து தான் இஸ்லாத்தில் குடிகலாச்சாரம் மௌனங்கள் உற்பத்தி செய்யும் அர்த்தங்கள் ஆய்வுக் கட்டுரையை எழுதினேன். இதற்கு காரணமாக சுனாமிக்குப் பின் கடலோர மீனவர் வாழ்வு உட்பட எல்லா சமயங்களிலும், கலாச்சாரங்களிலும் குடி பற்றிய பார்வை எப்படி இருக்கிறது என்பதான மூன்று நாள் ஆய்வரங்கமும் அமைந்திருந்தது. அந்த அமர்வு ஒன்றில் வாசித்தளிக்கப்பட்ட கட்டுரையே உயிர்மையில் வெளிவந்தது.

இன்றைய தமிழ்ச் சூழலில் ஒரு திருக்குர்ஆன் வசனம் அல்லது வார்த்தை பொருள் கொள்வதிலும் அர்த்தப்படுத்துவதிலும் மாறுபாடு கொண்டு பல அர்த்தப் பிரதிகளாய் உருவாவதை பார்க்கிறோம். ஜிகாத் என்ற ஒற்றைச் சொல் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ நடத்தும் புனிதப்போர், ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்களைப் பாதுகாக்கும் போர். மன இச்சைக்கு எதிரான போர், சாதீய ஒடுக்குமுறைக்கு எதிரான முஸ்லிம் தலித்தின் போர் என பன்முக அர்த்தங்களை கொண்டிருப்பதை கவனிக்கலாம்.

திருக்குர்ஆன் வசனத்தை முன்வைத்து மஸாயில் பிரச்சினைகளில் சுன்னத்துல் ஜமாஅத்தினர், தவ்ஹ“து ஜமாஅத்தினர், வகாபிகள், குதுபிகள், காதியானிகள், அஹ்லே குர்ஆனிகள் மாற்றுக்கருத்துக்களை, மாற்றுப் பிரதிகளை உருவாக்குவதை கண்கூடாகக் காண்கிறோம்.

திருக்குர்ஆனிய மொழியாடல்களை அணுகும்போது யதார்த்த மொழியாடல், குறியீட்டு மொழியாடல் என இருவித தன்மைகளை நாம் பார்க்கிறோம். தொழுகையை பேணுங்கள். பசித்தோருக்கு உணவளியுங்கள் என்று சொல்லும்போது நேரடி யதார்த்த தன்மை அறிவுரைகளாக அமைகின்றன. அதே சமயம் அல்லாஹ் நன்கு பார்ப்போனும் கேட்போனுமாக இருக்கிறான் என்றால் அதனை நேரடியாக இஸ்லாமிய கருத்தாக்கத்தின்படி பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் பார்ப்போன் என்றால் கண்கள் உண்டு, கேட்போன் என்றால் செவிகள் உண்டு. எனவே இறைவன் ஒரு ஆண்போல் இருக்கிறான் என்று அர்த்தம் உருவாகிவிடும். எனவே இதனை ஒரு குறியீட்டு மொழியாடலாக கருதமுடியும். அப்ரஹாவின் யானைப்படைகளை அழிப்பதற்கு இறைவன் அபாபீல் பறவைகள் மூலம் சிறு களிமண் உருண்டைகளை எறிய வைத்து அழித்தான் என்றால் அதுவும் ஒரு விதத்தில் குறியீட்டு அர்த்தத்தை உற்பத்தி செய்வதைப் பார்க்கலாம்.

திருக்குர்ஆன் பிரதியின் வசனங்களை முன்வைத்து குடிப்பண்பாடு தொடர்பான ஆய்வை செய்தபோது இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாக்கம் இரு விதங்களில் முன்வைக்கப்பட்டிருந்தது. சவுதியைச் சார்ந்த இஸ்லாமிய சாதிகள், குடியை ஹராமாகவும், எகிப்து சார்ந்த இஸ்லாமிய அறிஞர்கள் அதனை மக்ரூஹாகவும் இருவித கருத்தாக்கங்களாகப் பேசியிருந்தனர். திருக்குர்ஆன் வசனங்களில் இடம் பெறும் கம்ர் என்ற சொல்லின் அடிப்படையில் தடைச்செய்யப்படுவது போதை தானே தவிர மது அல்ல என இராக் இஸ்லாமிய நீதி வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். நபித் என்பது போதையூட்டப்பட்ட பானம். இவையெல்லாம் சம காலத்தின் விவாதங்களாகும். நமக்கு தெரிந்த பிரதிகள், தமிழ் பிரதிகள், ஆங்கிலத்தில் கிடைக்கும் பிரதிகள். இன்று சில உலமாக்கள் அரபு கிதாபின் ஏதோ ஒரு மூலையில் உள்ள வரியை எடுத்துக் கொண்டு வந்து வியாக்கியானங்கள் செய்து கொண்டிருப்பதை பார்க்கிறோம்.

தமிழ்நாடு தவ்ஹ“து ஜமாஅத்தின் உணர்வுபத்திரிகையில் எழுதும்போது கூட கருத்துக்கு கருத்தை எழுதாமல் அரைவேக்காடுகளுக்கு ஆணித்தரமான பதில் என்றும் இன்னும் பலவாறாகவும் நாகரீகமற்று, குழம்பிப் போய் எழுதக்கூடிய முறையியல்களை காணமுடிகிறது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தக்கலை நகரத்து நண்பர்கள் கூட ஜாக் அமைப்பு ஆலிம் ஒருவரின் பிரசுரத்தை தங்கள் வெளியீடாக கொண்டு வந்து ஊர்விலக்கம் என்னும் வன்கொடுமைக்கு ஆதரவாக எழுதியிருந்ததும் அதிர்ச்சிகரமாக இருந்தது. அந்த பிரசுரமும் கீழ்த்தரமான மறைமுகமான தனிநபர் வசவை செய்திருந்தது.

இஸ்லாமிய கருத்தாக்கங்களில் நின்று கொண்டு எல்லா விஷயங்களையும் விவாதிப்பதற்கு நாம் தயாராக இருக்கிறோம். அது குடி கலாசாரம் சார்ந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, திருக்குர்ஆனில் ஹராம் என்று சொல்லப்பட்ட செயல்களுக்கு தண்டனைகள் சொல்லப்பட்டிருக்கிறது. பாலியல் வன்புணர்வு குற்றமெனில் அதற்கு நூறு சாட்டையடிகள், வட்டி வாங்கினால் நரக நெருப்பில் எரிக்கப்படுதல் என்பதான தண்டனை முறைகள் இருக்கின்றது. ஆனால் திருக்குர்ஆனில் குடிபோதை தொடர்புடைய நான்கு வசனங்களிலும் எந்தவிதமான தண்டனையும் சொல்லப்படவில்லை. எனவே ஹுதூத் எனப்படும் கொலை உள்ளிட்ட பெருங்குற்றங்களில் ஒன்றாக இதனை வரிசைப்படுத்தமுடியாது. தஸ“ர் எனப்படும் சிறு குற்றமாக இதனைச் சொல்லலாம். இதன் அடிப்படையில்தான் குர்ஆன் வசனத்தில் நீங்கள் இதிலிருந்து விலகி கொள்வீர்களா என்பதான அறிவுறுத்தல் சார்ந்த சொல்லாடல்கள் இடம் பெறுகின்றன. மேற்கத்திய இஸ்லாமிய அறிஞர்களின் இக்கருத்தின் விவாதக்கூறுகள் தான் என கட்டுரையின் முற்பகுதியில் இடம் பெற்றிருந்தன. இரண்டாம் பகுதியில் புகாரி ஹதீஸ்களின் அடிப்படையில் இடம் பெற்றிருந்த கருத்துக்களில் குடிபோதைக்கு தண்டனைகள், சாட்டையடிகள் வழங்கப்பட்டிருந்த சம்பவங்களும் சொல்லப்பட்டிருந்தன. அந்த கட்டுரையே ஒரு பன்முக உரையாடல் வடிவத்திலேயே அமைந்திருந்தது. இந்தக் கட்டுரையை எப்படி வாசித்து புரிந்து கொள்வது என்ற வாசிப்பின் அரசியல்கூட பலருக்குத் தெரியவில்லை.

இக்கட்டுரைக்காக நான் சார்ந்துள்ள ஊர் அமைப்பான அஞ்சுவன்னம் பீர்முகமதியா முஸ்லிம் அசோசியேசன் ஜமாஅத் என்னை அழைத்து விசாரித்தது. கன்னியாகுமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை ஒரு கடிதம் எழுதி அதில் என்னை காபிர் என்று அறிவிப்பு வெளியிட்டனர். காபிர் என்று சொல்லும் போது இஸ்லாத்திலிருந்து விலக்கம் செய்யப்பட்டவர் என்று அர்த்தம். நான் காபிர் என்று அறிவிக்கப்பட்டால் இத்தனை வருஷம் என்னோடு வாழ்ந்த என் மனைவி, என் மனைவியல்ல. ரத்தமும் சதையுமான என் பிள்ளைகள் என் பிள்ளைகளல்ல. நான் தொழுகைக்கு பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கிடையாது. நான் இறந்துபோனால் அடக்கம் செய்தவற்கு மையவாடி கூட கிடைக்காது. இப்படியான காபிர் என்ற பத்வாவைக் கொடுக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?

என் பார்வையிலோ திருக்குர்ஆன், ஹதீஸ் பார்வையிலோ அல்ல, கன்னியாகுமரி மாவட்ட ஜமாஅத் உலமாசபையின் பார்வையிலும், ஊர் ஜமாஅத் நிர்வாகத்தின் பார்வையிலும் நான் காபிராக ஆக்கப்பட்டேன்.

மிகவும் அவமானப்படுத்தப்பட்ட சூழலில் அந்த உலமாக்களை, அந்த நிர்வாகத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது தான் நீ புதிதாக இஸ்லாத்திற்கு வருகிறவன்போல கலிமா சொல்ல வேண்டும் என்று நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்தியாவில் இப்படியாக ஏதேனும் அருவருக்கத்தக்க சம்பவம் நடத்திருக்கிறதா என்பது தெரியவில்லை. இது ஒரு வன்கொடுமை. இதை அனுபவிக்கக் கூடியவனுக்குத்தான் அதன் வலிமையும், குரூரமும் தெரியும்.

சரி அத்தோடு இந்த பிரச்சினை முடியுமென நினைத்தால், தொடர்ந்து, என்னையும் என் மனைவி குழந்தைகளையும் ஊர் விலக்கம் செய்தார்கள். ரத்த பந்தங்கள், உறவுகள் எல்லாவற்றிலும் துண்டித்தல் செய்வதாகும். ஊரில் நடக்கும் உறவினர் வீட்டு கல்யாணத்துக்கு எல்லோரும் போவார்கள். நானும், என் மனைவியும், குழந்தைகளும் போகமுடியாது.

ஒரு மரண வீட்டிற்கு விசாரிக்கப் போகமுடியாது. இது குடும்பம், சமூகம், சமய நடவடிக்கைகளிலிருந்து விலக்கி வைத்தலாகும். பொதுமக்கள் கூடும் தர்கா நிகழ்வுகளிலும் பங்கேற்க முடியாது. பைலா விதிப்படி ஊர்விலக்கம் செய்யப்பட்ட நபர் செத்துவிட்டால் மட்டும் இவ்விதிகள் பொருந்தாதாம். ஆனார் ஊர்விலக்கம் செய்யப்பட்டவரின் மனைவி குழந்தைகள் மீது ஊர்விலக்கம் தொடரும். பிரபுத்துவ கால சாதீய வெறிகொண்ட இந்த நடவடிக்கை மிகவும் கொடூரமானது. இவர்கள் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அறிவுரையையும், கடிதத்தையும் கூட மதிக்கவில்லை.

இதுமட்டுமல்ல, கன்னியாகுமரி மாவட்ட உலமாசபை ஆலிம் ஒருவர் (என்னை காபிர் என்று பத்வா வழங்கியவர்களில் ஒருவர்) வகாபி – சுன்னத்து வல் ஜமாஅத் விவாத சிடி தொகுப்புரையில் கஞ்சா, அபின் போன்ற லாகிரி வஸ்துக்களை போதை வரும் அளவுக்கு அடித்தால் ஹராம். போதை வராத நிலையில் அடித்தால் மக்ரூஹ். ஆலிமுக்கும் பாமரனுக்கும் இது பொதுவான சட்டம். மத்ஹப் இதனை அங்கீகரித்துள்ளது என்று பேசியுள்ளார். இந்த சிடிக்கள் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. திருக்குர்ஆன் ஹதீஸ’ன் கருத்துக்கள் தான் மத்ஹபின் கருத்துக்கள் என்றால் போதையைப் பற்றி தமிழக முஸ்லிம் மக்களுக்கு உலமா சபை பதில் சொல்லியே தீரவேண்டும்.

இதையெல்லாம் மறைத்துவிட்டு நான் எழுதாததை எழுதினேன் என்று சொல்லி மிகவும் மோசமாக ஷரீஅத்தின் போலீஸ்காரர்களாக பாவித்துக் கொண்டு அபீமுஅ நிர்வாகத்தினர் எனக்கு எதிரான பிரச்சாரத்தை செய்தார்கள். பல இஸ்லாமிய இயக்கங்கள் தங்கள் கைவசம் இருப்பதாகவும், அதன் மூலம் உங்களுக்கு பிரச்சினையை உருவாக்குவோம் என்று சொல்லியும் மிரட்டினார்கள். எனக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஜமாஅத் உறுப்பினர்களை தொலைத்துக் கட்டிவிடுவதாக சவால் விட்டார்கள். ஊர்விலக்கத்தை ஏற்றுக் கொண்டு அடிபணிந்து இருக்க வேண்டும் என எச்சரித்தார்கள். எனவேதான் நீதிமன்றத்தை சார்ந்து இந்த பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் வந்தது.

குடிபழக்கமுள்ளவர்கள் போதையில்லாத ஃபாரின் பீர் பாட்டில்களை தங்கள் நிறுவனங்களில் வியாபாரம் செய்பவர்களும் சேர்ந்து குடிப்பழக்கமே இல்லாத ஒரு ஆய்வாளனாகிய எனக்கு நேர்மையற்ற முறையில் தண்டனை வழங்கியதுதான் வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

இந்த வகையில் இந்த வருத்தங்கள், வலிகள், துயரங்கள், போராட்டங்கள் தொடர்கின்றன. ஆனால் ஒன்று எந்த நடவடிக்கையாலும் நியாயம் சார்ந்த எனது தீவிர எழுத்து இயக்கத்தை தடை செய்ய முடியாது. இஸ்லாமிய தளங்களுக்குள் ஜனநாயகத்தையும், மனிதாபிமானத்தையும் சமத்துவ மனோபாவத்தையும் உருவாக்க வேண்டிய கடப்பாடு நமக்கு இருக்கிறது.

அதிகார வன்முறைக்கு எதிரான ஜிகாத் இது. மனரீதியாகவும், சமூகரீதியாகவும் சில இழப்புகள் ஏற்படத்தான் செய்கின்றன. அதற்காக யாரும் நிலைகுலைந்து போய்விடவில்லை. என் மனைவியும், குழந்தைகளும் குடும்பத்தினர்களும், நண்பர்களும், இந்த வலிகளை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை பெற்றிருக்கிறார்கள். இந்த வகையில் இந்த ஆய்வரங்கம் எனக்கும் உறுதுணை புரிந்திருக்கிறது. உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

ஊர்விலக்கப் பிரச்சினைக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆதரவு இயக்கம் நடத்தும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தமிழ் படைப்பாளிகள் முன்னணி, தலித் மற்றும் பெண்ணிய அமைப்புகளுக்கும் இது குறித்து கருத்துக்களை பதிவு செய்து ஊடக இதழ்களில் விரிவாக வெளியிட்டு வரும் ஜனசக்தி, தீக்கதிர், குமுதம் ரிப்போர்ட்டர், உயிர்மை, புதிய பார்வை, புதியகாற்று, புதுவிசை, காலச்சுவடு, சுந்தரசுகன், ஓம்சக்தி, அமைதிப்படை, புத்தகம்பேசுது, குமரிக்கடல், உங்கள் நூலகம், கருஞ்சட்டைத் தமிழர் உள்ளிட்ட பல இதழ்களுக்கும், என் நன்றி உரியது.

உலகமெங்கும் வாழும் தமிழர்களிடத்திலும், முஸ்லிம்களிடத்திலும், எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக கட்டுரைகளை வெளியிட்டுவரும் ‘திண்ணை’ இணையத் தளத்திற்கும், தமிழகம் மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்தும் கடிதங்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் கலை இலக்கிய படைப்பாளிகளுக்கும் சேர்த்து இந்தத் தருணத்தில் என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்