அடையாளம் காட்டும் கையேடு – கவிதை ரசனை -விக்ரமாதித்யன் – நூல் அறிமுகம்

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

பாவண்ணன்


ஒரு படைப்பை எப்படி அணுகுவது என்கிற கேள்விக்கான விடையில் ஓரளவாவது தெளிவுள்ளவர்களாக இளம்வாசகர்கள் இருப்பது நல்லது. இப்பயிற்சி பள்ளிகளிலும் கல்லுாரிகளிலும் கிட்டுகிற வாய்ப்புகள் மிகக்குறைவாகவே உள்ள நிலையில் மூத்த வாசகர்களின் அனுபவப் பகிர்வுகளையே இளம்வாசகர்கள் நம்பி நாடிவர வேண்டியிருக்கிறது. கேட்டுத் தெரிந்துகொள்வதில் எவ்விதப் பிழையுமில்லை. சொல்லிச்செல்வதில் மூத்தவர்களுக்கு எவ்வித இழப்புமில்லை. உண்மையில் இதை ஒரு கடமையாகவே மூத்த வாசகர்கள் செய்வது நல்லது என்று தோன்றுகிறது.

இந்நிலையில் 21 கவிஞர்களின் ஒருசில கவிதைகளை முன்வைத்து விக்ரமாதித்யன் எழுதியுள்ள இக்கட்டுரைகள் இன்றைய தமிழ்க்கவிதையின் முகத்தைப் புரிந்துகொள்ள உதவும்வண்ணம் உள்ளன. நல்ல கவிதைகளை அடையாளம் காட்டும் மிகச்சிறந்த கையேடு என்று இதைச்சொல்லலாம். கவிதைகள் உணர்த்துகிற அனுபவத்தைச் சென்று அடையவதில் தனக்கிருக்கிற சிக்கல்களை வாய்விட்டுச் சொல்லமுடியாத கூச்சமுள்ள இளம்வாசகனிடம் இந்த நுால் நெருக்கமான மொழியில் பேசுகிறது. ஒரு கவிதையைப் புரிந்துகொள்ள முக்கியமான தேவையாக விக்ரமாதித்யன் கருதுவது எவ்விதமான மனத்தடையுமின்றி வரிகளையொட்டி எண்ணப்பயணத்தைத் தொடங்கும் ஆசையை மட்டுமே. எக்கட்டுரையிலும் வகுப்பெடுக்கும் ஆசிரியத்தனமின்றி சகஜமான தோழைமையோடு தாமறிந்ததைப் பகிர்ந்துகொள்ளும் விழைவோடு ஒவ்வொரு கவிதையைப்பற்றியும் ஆழ்ந்த ஈடுபாட்டோடு பேசுகிறார் விக்ரமாதித்யன். எப்போதும் எல்லாக் கூட்டங்களிலும் ஏழெட்டு இளம்படைப்பாளிகள் சூழ விக்ரமாதித்யன் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். இக்கட்டுரைகளைப் படிக்கும்போதுகூட தன்னைச் சுற்றி உட்கார்ந்திருக்கிற நண்பர்களிடம் குரலை ஏற்றியும் இறக்கியும் அவர் பேசிக்கொண்டிருக்கிற சித்திரமே எழுத்துகளிடையே அசைகிறது.

இத்தொகுதி இரண்டுவிதமாக எழுதப்பட்டுள்ளது. முற்பகுதியில் சில கட்டுரைகள் யாராவது ஒரு கவிஞரின் ஒரு கவிதையை எடுத்துக்கொண்டு அதை அணுகுவதைப்பற்றிய வழிமுறைகள் தொடர்பாகவும் வாசிப்பு அனுபவங்களிலிருந்து நம் மனம் உருவாக்கிக்கொள்ளத் தோதான எழுச்சிகளைப்பற்றியும் விரிவாகப் பேசுகிறார். பிற்பகுதியில் ஒரு கவிதை என்பதற்கு மாறாக, ஒருவருடைய பல கவிதைகள் இடம்பெறுகின்றன. ரசனை மெல்லமெல்ல விமர்சனமாக மாற்றமடைகிறது. கவிதையைப்பற்றிய விமர்சனமும் கவிஞர்களைப்பற்றிய விமர்சனமும் மாறிமாறி இடம்பெறுகிறது. குறிப்பாக ஞானக்கூத்தன், தேவதச்சன், பிரமிள் ஆகியோருடைய கவிதைகளை முன்வைக்கும்போது நிறை, குறைகளை அலசி மதிப்பிடுகிற வேகம் உருவாகிவிடுகிறது. ஒரு படைப்பாளியின் படைப்புகளை எப்படி மதிப்பிடுவது என்பதை ஒரு வாசகன் அறிந்துகொள்வது அவசியமே. அதில் எவ்விதமான கருத்துவேறுபாடும் இல்லை. நுாலின் மையநோக்கம் அதுவாக இல்லாதபோது இம்மதிப்பீடு குழப்பத்தை உண்டாக்கிவிடுகிறது. 21 கவிஞர்களில் பதினெட்டு கவிஞர்கள் திறமான கவிதைகள் வழியே அறிமுகப்படுத்தப்படும்போது மூன்று கவிஞர்களின் கவிதைகள் மட்டும் தனிக்கவனத்துடன் முன்வைக்கப்பட்டிருக்கிறார்கள். வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு நோக்கத்துடன் எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்படும்பொது இப்படி நேர்ந்திருக்கலாம்.

கவிதைகளையொட்டி விக்ரமாதித்யன் முன்வைக்கிற கருத்தாக்கங்கள் அனைத்தும் வாழ்க்கை சார்ந்ததாகவே இருப்பதைப் பாராட்டவேண்டும். எவ்விதமான கோட்பாட்டுப் பின்னணியமின்றி வாழ்வின் கசப்பையும் சந்தோஷத்தையும் வாசிப்புகளையும் அனுபவங்களையும் சார்ந்து தன் மனம் உருவாக்கி வைத்திருக்கும் கருத்துப்பின்புலத்தின் அடிப்படையிலேயே எல்லாக் கவிதைகளைப்பற்றியும் எடுத்துரைக்கிறார் விக்ராமதித்யன். சொந்த அனுபவங்களையே பிரதானமாக மதிக்கவேண்டும், கவிதையில் எப்போதும் பாடுபொருளைக்காட்டிலும் வித்தகம் பிரதானமாகப் போய்விடக்கூடாது, கண்டடைகிறவனே கவிஞன் என்னும் எண்ணங்கள் விக்ரமாதித்யன் மனத்தில் ஆழமாக இடம்பெற்றிருப்பதை புத்தகத்தைப் படித்துமுடித்ததும் உணரமுடிகிறது. இந்த எண்ணங்களின் அடிப்படையிலேயே அவர் தமிழ்க்கவிதை உலகை அணுகுகிறார் என்று தோன்றுகிறது.

வண்ணநிலவனுடைய ‘குளத்துப்புழை ஆறு ‘ கவிதையை அறிமுகப்படுத்தும் விதம் அழகாக உள்ளது. இக்கவிதை சிறிய ஒரு விவரிப்பு மட்டுமே. விவரித்துக்கொண்டே வரும் நிலையில் ஒரு புள்ளியில் கவிதை மேல்நோக்கித் தாவிவிடுகிறது. இயற்கையின் நிரந்தரத்தன்மையையும் பிரம்மாண்டத்தையும் சுட்டிக்காட்ட ஒருசில வரிகளை மட்டுமே வண்ணநிலவன் பயன்படுத்தி அடையும் வெற்றியை அழகாகச் சுட்டிக்காட்டுகிறார் விக்ரமாதித்யன். இந்த ஆறு தோன்றிய காலத்திலும் மனிதர்கள் இருந்திருப்பார்கள். இன்றும் புதியவர்கள் இருக்கிறார்கள். நாளை மேலும் சில புதியவர்கள் வரக்கூடும். அந்த வரிசை மாறிக்கொண்டே இருக்கிறது. நேற்றிருப்பவர் இன்றில்லை. இன்றிருப்பவர் நாளை இருக்கப்போவதுமில்லை. ஆனால் அந்த ஆறு மட்டும் காலத்தைக் கடந்து ஓடிக்கொண்டே இருக்கிறது. கவிதையின் அடிநாதம் ஓர் ஆழ்ந்த அமைதி. உணரமட்டுமே முடிகிற சோகம். விக்ரமாதித்யன் சிறப்பான முறையில் இக்கவிதையை அறிமுகப்படுத்துகிறார். விவரிப்பின் வழியாகவே சட்டென உச்சத்தை அடைகிற கவிதைகளை பலருடைய படைப்புகளிலிருந்தும் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கிறார். ஞானக்கூத்தனுடைய ‘மேசை நடராசர் ‘ கவிதையும் ‘கொள்ளிடத்து முதலைகள் ‘ கவிதையும் குருநாத் கணேசனுடைய ‘வாழ்வு ‘ கவிதையும் ந.ஜயபாஸ்கரனுடைய ‘பித்தளை நாள்கள் ‘ கவிதையும் இவ்வகைப்பட்டவை. இப்படி அடுத்தடுத்த பயிற்சிகள் மூலம் இளம்வாசகர்களிடம் கவிதையைப்பற்றிய ஈடுபாடு மேலும் மேலும் ஆழமடையும் என்பது உறுதி.

தேவதச்சனுடைய ‘ஜன்னலெங்கே ? ‘ கவிதை விக்ரமாதித்யன் அறிமுகப்படுத்த விரும்பும் இரண்டாம் வகைப்பட்டதாகத் தோன்றுகிறது. அடைக்கலம் தேடிவந்த புறாவின்மீது எழுந்த கருணையால் விரட்டிவந்த கழுகுக்கு தன் தொடைச்சதையை அரிந்துகொடுத்த சிபிச்சக்கரவர்த்தியின் கதையை நாம் அனைவருமே அறிவோம். சிபியும் இல்லாத கருணையும் இல்லாத இன்றைய நாகரிக உலகில் இப்படி ஒரு புறா பரிதவிக்க நேர்ந்தால் நிலைமை எப்படி இருக்கும் என்று சொல்லாமல் உணர்த்துகிறது கவிதை. உண்மையில் இது புறாகூட இல்லை. கொடுமையைக் கண்டு அஞ்சி அபயம் தேடி ஓடுகிற நாமே அந்தப் புறா. நம் கஷ்டங்களுக்கு ஒரு புகலிடம் இல்லை. நம்மீது கருணைவைப்பவர்கள் யாரும் இல்லை. நம் துன்பங்கள் தீர வழியில்லை. யாருடைய வீட்டுக் கதவையும் யாருடைய மனத்தையும் நம்மால் தட்டித் திறந்துவிடமுடியாது. குறைகளை முறையிட நமக்கு எந்த இடமும் இல்லை. இப்படி விரிவடையச்செய்து பார்ப்பதற்கு இணக்கமாக உள்ளது இக்கவிதை.

லஷ்மி மணிவண்ணனுடைய ‘சங்கருக்கு கதவற்ற வீடு ‘ என்னும் கவிதை விக்ரமாதித்யன் அறிமுகப்படுத்த விரும்பும் மூன்றாவது வகைப்பட்டதாகத் தோன்றுகிறது. எதார்த்தமான ஒரு நிகழ்வை குறியீட்டின் வழியே சட்டென உச்சப்புள்ளியை நோக்கி நகர்த்துகிற தன்மை இக்கவிதையில் இயங்குகிறது. சங்கருக்கு கதவற்ற வீடாயிருக்கிறது என் வீடு என்பதுதான் கவிதையின் தொடக்கவரி. இருபத்திநாலு மணிநேரம் கொண்ட ஒரு நாளில் எந்நேரத்திலும் வருபவன் சங்கர். எப்போதும் சுதந்தரமாக உள்ளே நுழைவதற்கான உரிமை உள்ளவன். எந்த மனநிலையிலும் வந்து அமர்ந்துகொள்பவன் . அவன் வருகையால் வீடு சிற்சில தருணங்களில் புத்துணர்வெய்துகிறது. உறவின் அருமையில் கதவற்றுப் போகிறது. தளைகளுமற்றுப் போகிறது. கவிதையில் வெளிப்படும் சங்கர் என்னும் பெயர் தனிப்பட்ட நபரின் பெயரல்ல. உண்மையில் கவிதை தொடங்கும்போது அது தனிப்பட்ட நபரின் பெயராக இருந்து சில வரிகள் கடந்ததும் சட்டென குறியீட்டுப் பெயராக மாறிவிடுகிறது. ஒவ்வொரு உயிரும் மனமும் தோழைமையைத்தான் தேடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவருடைய வீடும் மனமும் இன்னொருவருக்கு கதவற்றதாக மாறிவிடுகிறது. அன்பும் நெருக்கமும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். எதார்த்தத்திலிருந்து நிகழம் இந்த அற்புதத்தை வடித்துக்காட்டுகிறது கவிதை.

இந்த அறிமுகக்கட்டுரைகள் இளம்வாசகர்களுக்கு விக்ரமாதித்யன் ஆற்றியிருக்கும் பெரிய உதவி. இளைஞர்களின் பாராட்டுதல்களுக்கு முற்றிலும் தகுதியானவர் அவர். தொகுப்பை அழகாக வெளியிட்டிருக்கிற மருதா பதிப்பகமும் பாராட்டுக்குரியது.

( கவிதை ரசனை. கட்டுரைத்தொகுதி-விக்ரமாதித்யன், கடை எண்:3, கீழ்த்தளம், ரியல் ஏஜென்ஸி, 102, பாரதி சாலை, சென்னை- 600 014. விலைரூ.100)

***

paavannan@hotmail.com

Series Navigationரவி சுப்பிரமணியன் கவிதைகள் >>