அஜ்னபி

This entry is part [part not set] of 26 in the series 20100516_Issue

அஜ்னபி


வேனில்

விழியெட்டும் தூரம் வரை
வெளிர் பச்சையில் விரியும்
வயல் வெளிகளினூடே
சிறகசைத்துப் படபடக்கிற
வேனில் பருவத்துப் பட்டாம்பூச்சி
அரை நொடிக்கொரு முறை
புலப்பட்டு மறைகிறதான
ஒற்றை ஓவியக் கண்காட்சியை
பிற்பகல் பொழுதின்
இளவெயில் மீது
தீட்டிச் செல்கிறது

அஜ்னபி

புலரி

ஒளி வருஷங்கள் தொலைவிருந்து
ஓஸோன் வழியே ஊடுருவி
மலை நுதல் வருடும்
முகில் பொதி கலைத்து
ஸ்படிகத் துல்யமான
சிற்றோடையில் தெறித்து
இன்னும் விலகியிராத
பனித் தூவல் மீது
சன்னமாய் ஒரு
நிறமாலை விசிறி
பிறிதொரு தினத்தையும்
புதிதாய் துவக்கிய
எழு திசைக் கதிரின்
இளவெயில் கீற்றுகள்
பகிர்தலின் சுகத்தை
விடியலாய் பதிந்தன

அஜ்னபி

நியதி

இளங்காலை வெயிலில்
கதிரொளி தொகுத்தபடி
தெருமுனையில் நின்றிருந்த
நெடிதுயர்ந்த விருட்சத்தின்
துளிர் இலை செறிந்த
கிளை நுனி நீங்கி
காற்றுடனான உரசலில்
ஓரிரு இதழ்கள் இழந்து
அந்தரத்தில் சுழன்றவாறு
உதிரிச் சருகாய் மிதந்து
புவியீர்ப்பு மய்யம் தொட்டு
சுய நிழலை முத்தமிடுவது வரையான
சில நொடிப் பயணத்தில்
வாழ்வியல் தத்துவமனைத்தும்
இலவசமாய் சொல்லிப் போனது
நேற்றைய பூ.

அஜ்னபி

எந்திரன்2010
மா நகரப் பெருவெளி
மய்யமான கட்டடம்
ஆறாவது மாடி
அயல் நாட்டு நிறுவனம்
ஐ.டி துறை வேலை
ஐந்திலக்க சம்பளம்
·
செவி கவ்வும் ஹெட் ஃபோன்
நுனி நாவில் ஆங்கிலம்
விரல் ஒற்றும் விசைப் பலகை
விழி மேயும் கணித்திரை

பின்னிரவின் மணித்துளிகள்
டிஜிட்டலில் கரைய
ஸைபர் வெளி வழியே
தொடரும் எந்திர தவம்

·

இடைக்கிடை தெம்பேற்ற
நுரை பொங்கும் நெஸ்கஃபே
சமயங்களில்
அகால வேளை குறும் பசிக்கு
ஒற்றை அழைப்பில் கதவு தட்டும்
பீட்ஸா
(இருவருக்கானது;
இலவசம்: ஒரு கோக்!)

·

இரவுப் பணி முடிந்து
இருப்பிடம் விரைகிற
நிகழ்வுத் தொடர்கள்
கனவு நனவாய்
நழுவியொழுகும்
‘தே ஜா வூ’ தருணங்கள்

·

இலக்கின்றி வெறிக்கும்
உலர்ந்த பார்வைகள்…
நிக்கொட்டின் கசிகிற
நீண்ட பெருமூச்சுகள்…

விளக்கு முட்டும் விட்டிலினது
சிறகசைப்பின் கணப்பொழுதினுள்
தோன்றி மறைந்து இறுகும்
ஸின்த்தட்டிக் புன்னகைகள்…

அறியா முகங்கள்…
பரிச்சயமான முதுகுகள்…
லிஃப்ட்டைப் பகிரும்
சக பயணிகள்!
·

மதியம் வரை நீடிக்கும்
ஆழ் துயில் அலைவரிசையின்
உதிரிக்கனவுகளுக்கிடையே
அடிக்கடி வந்து போகிறது
கடவுச் சொல் மறந்து
கைசேதப்படுகிறதான
துர்சொப்பனமொன்று…
·
அஜ்னபி

பயணிகள் கவனிக்கவும்!
கரடு முரடான பாதையை வென்று
ஃபோர் வீல் சுழற்சியின் வீர்யத்தில்
செம்மண் புழுதி கிளப்பிய
ஸஃபாரி ஜீப்பிலிருந்து
சன்னமாய் கசியும் டீஸல் புகையில்
கார்பன் கந்தகம் இன்ன பிற சேர்வைகளுடன்
அந்தி நேரத்து அவசரமும் சூழ்ந்தது

ஹைஜீனிக் வாழ்க்கை முறை பழகியதில்
ஃபுட் ஸிட்டியில் வாங்கி வந்த
மினரல் வாட்டர் புட்டிகளும் (லீட்டர் ரூ.40)
வழி நெடுக வாரியிறைத்து
வகை வகையாய் தின்று தீர்த்த
கலர் கலரான சிற்றுண்டிகளின்
விநோதமான மேலுறைகளும்
வாழ்க்கைத் தரச்சுட்டெண்ணை
அழுத்தம் திருத்தமாய் சொல்லிப் போயின

பாதையின் இரு மருங்கிலும்
ஓங்கு தாங்காய் வளர்ந்து நின்ற
பெயர் தெரியா மரங்களின் நிழலில்
புறமுதுகு காட்டி
குடை சாயும் இளமை
மற்றும்
சீரான இடைவெளிகளில்
பாதி நிரம்பிய
பச்சை நிறத்தொட்டிகள்

பிரதான வாயில் அருகே நட்டிருந்த
ஆளுயர வினைல் பலகையில்
லெதர் ஷூ ஃபேக்டரியின்
விளம்பர அனுசரணையுடன்
அரச கரும மொழிகள் யாவும்
திருப்திகரமாய் செயலாற்றின:

விலங்குகள் சரணாலயம்
(கடல் மட்டத்திருலிருந்து 120 மீட்டர்கள்)
நன்றி,
மீண்டும் வருக!

அஜ்னபி

Series Navigationவிஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தொன்று >>

அஜ்னபி

அஜ்னபி