அஜ்னபி கவிதைகள்

This entry is part [part not set] of 30 in the series 20100530_Issue

அஜ்னபி


e=mc2

சமவெளிகள் தாண்டிய
மலைச்சரிவு நோக்கிப் புறப்பட்ட
வைக்கோல் நிறத்து வண்ணத்துப்பூச்சியின்

அலை கோட்டுப் பயணத்தில்
சகநிகழ்வாய்க் குறுக்கிட்ட
ஓடும் கடுகதி ரயிலின்
திறந்த ஜன்னல் வழி நுழைந்து
மறுபுறத்து ஜன்னல் வழி வெளியேறியதான
நுண்கணப்பொழுதில்
யுகங்களின் தொலைவு
கடந்துவிடப்பட்டிருந்தது


சுயம்
ஆரம்பப் பள்ளி மாணவனது
அளந்து எழுதுகிற வலது கை
எழுதிக் கொண்டே போக

அனிச்சை செயலாய் இடது கை
அட்டை கொண்டு மறைப்பதாய்

சுயநலச்சிறையின்
திரையிட்ட வாழ்வினூடே
போட்டிப் பரீட்சையென
சுமையாகிப் போயின
சுற்றமும் சூழலும்..

ஓரிரு வரிகளெழுதி
கைவிடப்பட்ட விடைகள்..

எட்டிப் பார்த்தெழுதிய
இரவல் கணக்குகள்..
இவை தவிர

ஊன்றியெழுதி
கிழிபட்ட தாள்களாய்
நட்பும் உறவும்..

எழுதிய கட்டுரையை
எழுத்தெண்ணி மீளாய்தல் போல்
பழைய நினைவுகளை
மீட்டுவதில் விரயமாகும்
சில பொழுதுகள்..

தேர்வு நேரம் முடிந்து
தாள்கள் பறிக்கப்பட்ட பிறகான
தருணத்தில்தான்
உறைக்கிறது
சுட்டெண் எழுத மறந்தது…
சுயம் அங்கு தொலைந்தது..!


3600

பிரச்னையென்கிற
மய்யப்புள்ளியை
தொட்டு நிற்கும்
தீர்வு ரேகைகள்
பல்வேறு கோணங்களில்…

துளியென இருக்கும்
புள்ளியிலான இடைவெளிகளை
முழு வட்டம் மிகையாக்கும்…

ஒன்றையொன்று ஊடறுக்கும்
நேர்க்கோடுகளின் நீட்சி
விலகிச்செல்லும் புள்ளிக்கு
சமாந்தரமாய் நீளும்…

தனியொரு ரேகை
வட்டத்தை துண்டாடும்…

பிறிதொரு புள்ளி நிழலென
புறவெளி நோக்கி
முடிவிலியாய்த் தொடரும்…

-அஜ்னபி

Series Navigation

அஜ்னபி

அஜ்னபி