அச்சமும் அருவருப்பும் – மலர்மன்னனின் ‘அற்பஜீவிகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 76)

This entry is part [part not set] of 36 in the series 20030911_Issue

பாவண்ணன்


ஹோஸ்பெட்டில் நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு மலையாளக் குடும்பமும் குடியிருந்தது. அப்பளம் போட்டு உலரவைத்துக் கட்டுகளாக்கிக் கடைக்குத் தருவதில் அக்குடும்பமே ஒற்றுமையாக உழைத்து வந்தது. அவர்களுடையது விசாலமான வீடு. வீட்டின் முன்பக்கம் அப்பளங்களை உலர்த்தவென்றே போடப்பட்ட விஸ்தாரமான சிமெண்ட் தரை. அதற்கும் முன்னால் ஒரு சின்னத்தோட்டம். அக்குடும்பத்தினர் அத்தோட்டத்திலிருந்து எந்தப் பூவையும் பறிப்பதே இல்லை. பூக்களின்மீது ஈடுபாடு கொண்ட என் மனைவி அமுதா அவர்களுடன் பேசி எப்படியோ உறவை உருவாக்கிக்கொண்டாள். சுதந்தரமாக அத்தோட்டத்துக்குள் நினைத்த நேரத்தில் செல்லவும் பூப்பறிக்கவும் எங்களுக்கு எப்போதும் அனுமதி இருந்தது. அந்த அனுமதியால் ஓய்வு நேரங்களில் கொய்யா மர நிழலில் காற்றாட உட்கார்ந்து மணிக்கணக்கில் பல்லாங்குழி ஆடுவதற்கும் வாய்ப்பு உருவானது. அப்பளக்கார விஸ்வநாத நாயர் குடும்பத்தின் மூலம் கற்றுக்கொண்ட சின்னச்சின்ன மலையாள வார்த்தைகள் எங்கள் தனிமைப்பேச்சில் தாராளமாகப் புழங்கத் தொடங்கின.

ஒருநாள் அதிகாலையில் நாயர் யாரையோ போபோவென்று காலையிலேயே விரட்டியடிக்கும் குரல்கேட்டு எழுந்தோம். ஜன்னல் கதவைத் திறந்தபோது அவர்கள் வீட்டு வாசல்காட்சி தெரிந்தது. யாரோ ஒரு வயசாளி. பிச்சைக்காரன் என்றோ சன்னியாசி என்றோ குறிப்பிட்டுச் சொல்லமுடியாதபடி நாடோடித் தோற்றம். ஆனால் அவன் முகம் பரமசாந்தமாக இருந்தது. காலையில் எழுந்ததும் அப்பளம் உலர்த்தும் தரையைப் பெருக்குவதற்கு வந்த நாயரின் மனைவி தரையில் அவன் உறங்குவதைப் பார்த்து எழுப்பியிருக்கிறாள். மனைவியின் சத்தம் கேட்டு எழுந்துவந்த நாயருக்கு அந்தப் புதிய ஆளைக்கண்டு கடும்கோபம் மூண்டுவிட்டது. கன்னடத்திலும் மலையாளத்திலுமாகக் கலந்து வசைபாடியபடி அவனை விரட்டத்தொடங்கி விட்டார். எந்த அவசரமும் இல்லாமல் தன் துணிமூட்டையைச் சரிசெய்துகொண்டு அந்த வயசாளி வெளியேறினான். அவன் போனபிறகும் நாயர் வாசலில் நின்று அவனைத் திட்டியபடி இருந்தார். காலைக்குளியல் முடிந்தபிறகு நாயர் தோட்டத்துக்குச் சென்று அமுதா பூப்பறித்து வந்தாள். ‘நாயர் உன்னை ஒன்றும் சொல்லவில்லையா ? ‘ என்று வேடிக்கையாகக் கேட்டேன். ‘வரவர உங்கள் கிண்டல் அதிகமாகிவிட்டது. சாமியாருக்கும் எனக்கும் வித்தியாசம் புரியாதவரா நாயர் ? ‘ என்றாள்.

மறுநாள் காலையிலும் நாயரின் குரல்கேட்டுத்தான் எழ நேரிட்டது. அதே பிச்சைக்காரன். அதே விரட்டல் குரல். அதே வெளியேற்றம். அவரும் தரையை ஈரமாக்கிப் பார்த்தார். முள்களைப் பரப்பிப் பார்த்தார். எதற்கும் பயனில்லை. ஒரு வாரமாக அதே காட்சி திரும்பத் திரும்பத் தொடர்ந்தது.

அன்று முழுநிலவு. இரவு உணவுக்குப் பிறகு துங்கபத்ரா நதிக்கரையோரமாக சிறிது நேரம் நடந்து வரும் ஆசையில் நானும் அமுதாவும் வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினோம். ஏறத்தாழ ஒருமணிநேரத்துக்குப் பிறகு திரும்பியபோது தம் வீட்டு வாசலில் நாயர் நின்றிருப்பது தெரிந்தது. ‘என்னங்க சார் இன்னும் துாங்கலையா ? ‘ என்றபடி அவருக்கருகில் சென்றோம். ‘இல்லிங்க. தெனம் அந்தப் பிராந்து பிடிச்ச பிச்சைக்காரனோட ஒரே பிரச்சனையா போயிடுச்சி. எந்த நேரத்துல வந்து படுக்கறானோ தெரியலை. வந்தான்னா, அப்பவே கழுத்த புடிச்சி வெளிய தள்ளணும்ன்னுதான் நின்னுட்டிருக்கேன் ‘ என்றார். எங்களுக்குப் பாவமாக இருந்தது. பிச்சைக்காரனை விரட்டுவது அப்பளம் போடுவதற்கு அடுத்த பெரிய வேலையாக மாறிவிட்டது அவருக்கு.

தீராத பிரச்சனையைத் தீர்ப்பதற்காக அவர் முன்பக்கம் முள்கம்பியால் ஆன வேலி எழுப்பினார். பிறகும் அப்பிரச்சனை ஓயவில்லை. அவர் சார்பாக நானும் பல நாள்கள் அப்பிச்சைக்காரனிடம் சொல்லிப் பார்த்தேன். இதைவிட வசதியான மரத்தடிகளையும் தண்ணீர்த் தேக்கத்தொட்டித் திண்ணைகளையும் அடையாளம் காட்டித் திசைதிருப்பினேன். அவனிடம் எதற்கும் பதிலே இல்லை. மெளனமே உருவாக இருந்தான். வந்து உறங்கிவிட்டுச் செல்வதைத் தவிர வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் மெதுவாகத் தொடர்கிற இதுபோன்ற ஒரு விஷயம் நாளைக்கு ஏதாவது பெரிய சிக்கலாக மாறிவிட்டால் என்ன செய்வது என்கிற யோசனையில் நாயர் அவனை அப்புறப்படுத்துவதில் குறியாக இருந்தார். ஒரு மாதத் துரத்தலுக்குப் பிறகு தானாகவே அவன் காணாமல் போனான்.

இடையில் நாயரின் மிரட்டல் குரலைக் கேட்டாலும் உருவத்தைப் பார்த்தாலும் அச்சம் கொள்கிற அளவுக்குப் போய்விட்டது அமுதாவின் நிலை. அவர் இருக்கிறார் என்றாலே தோட்டத்துப்பக்கம் செல்லத் தயங்குகிற அளவுக்கு ஆகிவிட்டது. ‘ஐயோ, என்னமா பேசறார் ? ‘ என்று நெஞ்சைப் பிடித்துக்கொள்வாள். அவளுக்காக அத்தோட்டத்திலிருந்து பூப்பறித்து வருவது என் வேலையாகிவிட்டது. அவள் அச்சத்தைக் களைவதும் என் கடமையானது. அவர் நிலையில் யாராக இருந்தாலும் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்று சொல்லி அமைதிப்படுத்தினேன். தன்னுடைய தோட்டத்தில் நம்மை அனுமதித்ததைப்போல அவர் மற்றவர்களையும் அனுமதிக்கவேண்டும் என எதிர்பார்ப்பது பேதைமை என்றும் சொன்னேன்.

‘ஒரு குடும்பஸ்தனையும் ஒரு நாடோடியையும் யாராலும் ஒரேவிதமாக நடத்தமுடியாது. நானும் ஒரு நாடோடி என்றால் ஒரே திண்ணையில் இன்னொரு நாடோடியுடன் படுத்து உறங்குவதில் எந்தச் சங்கடமும் இல்லை. ஆனால் குடும்பஸ்தன் என்கிற அந்தஸ்து அந்த மனநிலையைத் தருவதில்லை. நாடோடியை விட ஒருபடி உயர்ந்தவன் என்கிற நிலையிலேயே குடும்பஸ்தன் இருக்கிறான். இந்த நிலைதான் ஒரு நாடோடியை அற்பமானவனாகப் பார்க்கவும் விரட்டியடிக்கவும் குடும்பஸ்தனைத் துாண்டுகிறது. ‘

அமுதாவுக்கு என் விளக்கங்கள் ஓரளவு போதுமானவையாக இருந்தன. பல வாரங்களின் தொடர்ச்சியான முயற்சியால் ஒரு பிச்சைக்காரனை விரட்டிய நாயரின் சித்திரம் எங்கள் மனத்தைவிட்டு அகலவே இல்லை. பல சந்தர்ப்பங்களில் அவரை நினைத்துக்கொள்வோம். காசு போட்டால்தான் விலகுவேன் என்கிற பிடிவாதத்தோடு அருகிலேயே நின்றும் சட்டென ஒரு கணத்தில் முழங்கையைச் சீண்டியும் பிச்சை கேட்கிற பிச்சைக்காரர்களைப் பேருந்து நிறுத்தங்களில் சந்திக்கும்போதெல்லாம் அந்த நாயரின் நினைவு வந்துவிடும். கரப்பான் பூச்சிகளைக் கண்டு அருவருத்து ஒதுங்கும் ஒரு குடும்பஸ்தனைப் பற்றிய கதையும் அப்போது தவறாமல் நினைவில் இடம்பெறும். அச்சிறுகதை மலர்மன்னன் எழுதிய ‘அற்பஜீவிகள் ‘.

உறக்கத்தில் கெட்ட கனவொன்றைக் கண்டு அதிர்ச்சியில் விழித்தெழும் ஒருவனின் தோற்றத்துடன் அக்கதை தொடங்குகிறது. ஒரு வாய்த்தண்ணீர் குடிக்கவேண்டும்போல இருக்கிறது அவனுக்கு. எழுந்து விளக்கைப் போடுகிறான். திடாரென்று அறையில் பரவிய வெளிச்சத்தால் அதுவரைக்கும் சுதந்தரமாக நடமாடிக்கொண்டிருந்த பல கரப்பான் பூச்சிகள் சரசரவென்று அங்குமிங்கும் ஓடி மறைந்துகொள்ள மறைவிடம் தேடுகின்றன. உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அவன் மனைவியின் மேலாக்கில் ஊர்ந்துகொண்டிருந்த ஒரு பூச்சி அவசரமாக அவள் கழுத்து, வாய், மூக்கு, நெற்றி, முன்தலைக்கூந்தல் எல்லாவற்றையும் கடந்து கண்ணாடிச் சட்டத்தையும் தாண்டிச் சுவர்ப்பக்கமாகத் தாவுகிறது. தனக்குத் தெரியாமலேயே தன்னுடன் இத்தனைப் பூச்சிகள் வசித்து வருவதை அவன் அப்போதுதான் முதல்முறையாக அறிகிறான்.

தொடர்ந்து துாங்க முடியாத நிலையில் ஏதாவது படிக்க நினைத்து மாடிப்படி இறங்கி வந்து விளக்கைப் போடுகிறான். கூடம், படிப்பறை, மேசை, அலமாரி எங்கெங்கும் பூச்சிகள் பரபரவென்று கொட்டமடிக்கின்றன. சோர்வோடும் அதிர்ச்சியோடும் அவன் நாற்காலியில் அமர்கிறான். சில கரப்பான் பூச்சிகள் திடாரென பறக்கத் தொடங்குகின்றன. எங்கேயாவது கரப்பான் பூச்சிகள் பறந்தால் அங்கே தேள் தலைகாட்டியிருக்கும் என்று தன் தாய் சொன்னதை நினைத்துக்கொள்கிறான். நாற்காலியின் மீது கால்களைத் துாக்கி வைத்துக்கொண்டு கவலையுடன் சுற்றுமுற்றும் பார்க்கிறான்.

பறந்துவந்து தோள்பட்டை மீது உட்கார முனைகிற ஒரு கரப்பான் பூச்சியைத் தட்டிவிடுகிறான். அது தரையில் மல்லாந்து விழுகிறது. அதைக் காலால் உதைத்துத் தள்ளுகிறான். தொலைவில் போய் விழும் அது புரண்டு நிமிர்ந்து உயிர்பெற்று ஓடுகிறது. மெல்லமெல்ல அருவருப்பு உணர்ச்சி அவன் மனத்தில் ஓங்கிக்கொண்டே செல்கிறது. அறைக்குள் சில குருட்டு ஈக்களும் பறக்கின்றன. தன் புறங்கையில் வந்து உட்கார்ந்த ஒரு ஈயை மறுகையால் அடித்துச் சுருண்டுவிழச் செய்கிறான். அந்த வெற்றி அவனுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

பூச்சிகளின் நடமாட்டம் சற்றே ஓய்கிறது. ஒரு புத்தகத்தை எடுத்துப் பிரிக்கிறான். இரண்டு பக்கங்களின் நடுவே ஒரு பூச்சியின் சடலம் அடைந்துகிடக்கிறது. அதைப் பார்த்ததும் அவனுடைய சிந்தனை பூச்சிகள், அவற்றின் பிறப்பு, இறப்பு. இனப்பெருக்கங்கள் ஆகியவற்றைப் பற்றிப் படரத் தொடங்குகிறது. தன் மனைவி சொன்னதைப்போல விடிந்ததும் பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கிவர வேண்டும் என்று முடிவெடுத்துக்கொள்கிறான்.

எதிர்பாராத கணத்தில் விளக்கு அணைகிறது. சூழ்ந்த இருளில் பூச்சிகள் ஓசை எழுப்பியபடி தன்னை நெருங்குவதை உணர்கிறான். இருள் அவற்றுக்கு சுதந்தரத்தைத் தருவதாக உணர்கிறான். திடாரென ஒரு பூச்சி அவன் முகத்தில் மோதி மடிமீது விழுகிறது. பிறகு மடியிலிருந்து சுறுசுறுப்பாக ஏறி மார்புச்சட்டைக்குள் புகுந்துகொள்கிறது. உடனே அவன் நாற்காலியிலிருந்து எழுந்து சட்டையை உதறுகிறான். அதே கணத்தில் கால் வழியே சில பூச்சிகள் மொலுமெலுவென்று மேலேறி வருகின்றன. நாற்காலியைத் தள்ளி அறையைவிட்டு வெளியேற முனையும்போது மேசையின் விளம்பில் இடிபட்டு வலியால் அவஸ்தைப்படுகிறான். பின்னங்கழுத்தில் ஏதோ ஊர்வதைப்போல இருக்கிறது. விரலிடுக்கில் சிக்கிய ஒரு பூச்சியை விரலாலேயே நசுக்கி உதறுகிறான். அதற்குள் மற்றொரு பூச்சி வேறொரு விரலைப்பற்றி ஏற முயற்சி செய்கிறது.

கண்ணுக்குத் தெரியாத யாரோ எதிரி தன்னைத் தாக்குவதைப்போல உணர்கிறான் அவன். திருப்பித் தாக்க வழி தெரியவில்லை. அவனுக்குள் சட்டென அச்சம் பரவுகிறது. தன்மீது ஒன்று பத்து என்று பூச்சிகள் ஏறுவதைப்போல இருக்கிறது. தலைக்குள் புகுந்து குடைவதைப்போல இருக்கிறது. அறைவாசலை நோக்கி ஓடுகிறான். சுவரோரமாக வைக்கப்பட்டிருக்கும் சோபாவில் இடித்துக்கொள்கிறான். விழும்போது மார்புக்கடியில் பல பூச்சிகள் நசநசவென்று நசுங்குகின்றன. எழுந்து நிற்க முயற்சி செய்யும்போது ஒன்று மூக்கினுள் நுழைய முயற்சி செய்கிறது. பூச்சிகள் அவனைத் தாக்குவதற்காகப் படையெடுத்து வந்ததைப்போல இருக்கிறது. கதவைத் திறந்து மாடிப்படிகளில் தாவித்தாவி ஏற முனையும்போது சுவரிலும் மாடிப்படிகளிலும் மோதி அவன் முழங்கையிலும் முட்டிக்காலிலும் சிராய்த்துக்கொள்கிறான். மாடியறைக்குப் போனபிறகுதான் ஒருவித பாதுகாப்பு உணர்வை அடைகிறது அவன் மனம். எவ்விதக் கவலையுமில்லாமல் நிம்மதியாகத் துாங்குகிற மனைவியிடம் விடிந்ததும் இந்த விஷயத்தைச் சொன்னால் எப்படியெல்லாம் கேலி பேசக்கூடும் என்று நினைக்கும்போது அவனுக்குச் சிரிப்பு வருகிறது. ஓடி வந்த அவசரத்தில் விளக்கைப் போட்டது போட்டபடி வந்ததை நினைத்துக்கொள்கிறான். மின்சாரம் வந்ததும் விடியவிடிய விளக்கு தேவையில்லாமல் எரிந்துகொண்டிருக்குமே என்கிற எண்ணம் எழுகிறது. போய் அணைத்துவிட்டு வரலாமா என்று யோசனை எழுகிறது. ஆனாலும் ஏதோ ஒரு பயம் அவனைத் தடுத்துவிடுகிறது.

குறிப்பமைதியோடும் கச்சிதமான வடிவ அமைதியோடும் சொல்லப்பட்ட இக்கதை மனத்துக்குள் மீண்டும்மீண்டும் அசைபோடத்தக்க ஒன்றாகும். பூச்சிகள், உறங்கும் மனைவி, உறக்கத்திலிருந்து எழுந்த கணவன் என மூன்று புள்ளிகள் கதையில் உள்ளன. உறக்கநிலையில் எந்தப் பேதமும் இல்லை. அற்பஜீவிகள், உயர்ந்த ஜீவிகள் என்று பிரிவினைக் கருத்துநிலைகள் இல்லை. உயர்வு தாழ்வு என்கிற பேச்சுக்கும் இடமில்லை. தாம் புழங்கும் இடத்திலேயே அவையும் புழங்குவதில் எந்தச் சிக்கலும் இல்லை. தம் படுக்கை, படிப்பறை, மேசை, கட்டில், விரிப்பு ஆகியவற்றில் அவையும் ஊர்ந்து கடப்பதற்கும் பறந்து அமர்வதற்கும் கூட எந்தத் தடையும் இல்லை. தம்மீதே ஊர்ந்து செல்வதற்கும் கூட எந்தத் தடையும் இல்லை. உறங்கும் மனைவி அப்படித்தான் இருக்கிறாள்.

ஆனால் மனிதர்களால் சதாகாலமும் உறக்க நிலையிலேயே இருக்க முடிவதில்லை. எதாவது ஒரு கட்டத்தில் விழித்தெழ வேண்டியதாக இருக்கிறது, தண்ணீருக்காக விழித்தெழும் கணவனைப்போல. விழிப்புற்றதும் காரண அறிவு செயல்படத் தொடங்குகிறது. தம்மையும் தம் ஸ்தானத்தையும் மையப்படுத்தி மற்றவற்றை எடைபோட்டு அணுகும் அறிவு செயல்படத்தொடங்குகிறது. தம் இடத்தில் அவை வசிக்கின்றனவா அல்லது அவற்றுக்குரிய இடத்தில் தாம் வசிக்கிறோமா என்று எரிச்சலடைகிறது. அந்த அணுகுமுறையின்படி பூச்சிகள் அற்பமானவை. கொல்லத்தக்கவை. தம்முடன் இருக்கத் தகாதவை. ஏமாற்றி எப்படியோ கூடவே இருப்பதற்கு இடம்பிடித்துவிடுபவை. ஏமாந்த தருணங்களில் தம் இடத்திலேயே சுதந்தரத்துடன் நடமாடி மகிழ்பவை. இவற்றின் தந்திரங்கள் முறியடிக்கப்பட வேண்டியவை. இப்படியெல்லாம் விழிப்பில் எண்ணங்கள் அலைமோதுகின்றன. ஒரே ஒரு பூச்சியாக இருந்தால் நசுக்கிக் கொன்றுவிடலாம். பட்டாளமாகப் பறக்கிறவற்றை எப்படிக் கொல்வது ? கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கும் பட்டாளத்தை என்ன செய்வது ? வெளிச்சத்தில் நேருக்கு நேராகப் பார்க்க முடிகிற விதத்தில் ஊர்ந்தாலும் பரவாயில்லை. எண்ணிக்கையில் பலவாக இருந்தாலும் துணிச்சலாகவும் வேகமாகவும் கொன்றுவிடலாம். ஆனால் இருட்டுப் பின்னணியில் அவை தம் இயக்கத்தைத் தொடரும்போது அச்சம் கவிகிறது. அச்சம் இருட்டைக்கண்டா ? இருட்டில் இயங்கும் பூச்சிகளைக் கண்டா ? என்னதான் தேடித்தேடி அழித்தாலும் அவற்றை முற்றிலுமாக அழித்துவிட முடியாது என்கிற எண்ணமா ?

கதையின் முடிவில் முக்கியமான ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. எதைவைத்து நாம் ஓர் உயிரை அற்பம் அல்லது உன்னதம் என்று முடிவெடுக்கிறோம். ஓர் உயிர் நம்மை அண்டி வாழ்வதாலேயே அற்பமாகிவிடுமா ? அண்டி வாழாத உயிர்கள் எல்லாமே உன்னதமாகிவிடுமா ? அண்டி வாழ்கிற பூச்சிகள் மட்டும்தாம் அற்பமா அல்லது அண்டி வாழ்கிற அல்லது அண்டிவருகிற மனித உயிர்களும் அற்பமானவைதாமா ? இக்கேள்விகளை ஒட்டி நாம் யோசிக்கும்போது கதையையொட்டி மேலும் வெளிச்சம் கிடைக்கிறது.

பூச்சிகளை மனிதர்களின் படிமமாக மாற்றியதுமே கதை மேலும் விரிவடைகிறது. நம் தோட்டத்து மரநிழலில் யாரோ சில வழிப்போக்கர்கள் சற்றுநேரம் தலைசாய்த்து இளைப்பாறிவிட்டுச் செல்லக்கூடும். கிணற்றிலிருந்து நாலைந்து குடம் நீரை யாராவது இறைத்து எடுத்துச்செல்லக்கூடும். பல சிறுவர்களும் சிறுமிகளும் ஓடிப் பிடித்து விளையாடக்கூடும். கைக்கு எட்டுகிற மாம்பழங்களையோ கொய்யாப்பழங்களையோ பறித்துப் பசியாறக்கூடும். இரவில் முகப்பில் உள்ள திண்ணைகளில் யாராவது பரதேசிகள் படுத்து எழுந்து செல்லக்கூடும். நம் இருப்பிடம் அவர்களுக்கு ஏதோ ஒருவகையில் ஒதுங்கவும் ஓய்வெடுத்துச் செல்லவும் வசதியாக இருப்பதை நாம் மனம் எப்படி எடுத்துக்கொள்ளும் ? அவர்கள் அனைவரையுமே அற்பமானவர்கள் என்று எடுத்துக்கொள்ளுமா ?

உயிரினங்கள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் தம் இருப்பிடங்களைத் தாமே வடிவமைத்து வரையறுத்துக்கொள்கின்றன. சிங்கம் தம் குகையையும் இரைதேடும் எல்லையையும் வரையறுத்துக்கொள்கிறது. யானைக்கும் அப்படி ஓர் எல்லை உண்டு. பறவைகளும் கூடுகட்டி வாழ்கின்றன. தும்பிகள், வெட்டுக்கிளிகள், பட்டாம்பூச்சிகள் என வெளியே வாழ்கிற பல பூச்சிகளுக்கும் அத்தகு சில இடங்கள் இருக்கின்றன. ஆனால் மனிதர்களிடையே வாழ்ந்து பழகிவிட்ட கரப்பான்பூச்சிகளுக்கு அப்படி தனிப்பட்ட இடங்களில்லை. மனிதர்களின் வசிப்பிடங்களிலேயே சில பகுதிகளை ரகசியமாகத் தம் இடங்களாக்கிக்கொண்டு வாழ்கின்றன. தம்முடைய இடத்தில் தம்மை ஏமாற்றிவிட்டு வசிப்பதை மனிதர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதனாலேயே அவை அற்பமாக அவன் கண்களுக்குப் படுகின்றன. அதனாலேயே அவை கொல்லத்தக்கவை ஆகின்றன. ஆனால், அவற்றுக்கு சகஜமான இருளில் அவர்களால் செல்ல முடிவதில்லை. தம் பலவீனமான ஒரு பகுதி அவற்றின் பலமாக மாறி அவற்றுக்குப் பாதுகாப்பளிப்பதை ஒருவித இயலாமையுடன் பார்ப்பதைத் தவிர மனிதர்களுக்கு வேறு வழியில்லை. நகரங்களில் பாதையோரங்களிலும் மைதான விளிம்புகளிலும் சட்டென இரவோடு இரவாக கட்சித் தலைவர்களின் பெயர்களுடன் முளைத்துவிடுகிற குடிசைக் குடியிருப்புகளுக்கும் இருப்பிடமின்மையே காரணமென்பதை இதன் தொடர்ச்சியாக எண்ணிப் பார்க்கவும் கதை வழிவகுத்துத் தருகிறது. அந்த அற்ப ஜீவிகளால் வேறு எப்படித்தான் வாழமுடியும் ?

*

கணையாழி இதழுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர் மலர்மன்னன். இலக்கியத்தின் மீதுகொண்ட அளவுகடந்த ஈடுபாட்டால் ஏகால்ஏ என்னும் இதழைச் சிறிதுகாலம் நடத்தினார். லியோ டால்ஸ்டாய், நீட்சே, விவேகானந்தர் ஆகியோரைப்பற்றிய நுால்களை இவருடைய நுால்கள் பிரேமா பிரசுரத்தின் வெளியீடாக வந்துள்ளன. ஏராளமான சிறுகதைகளை இவர் எழுதியிருந்தாலும் அவை தொகுப்பாகத் தொகுக்கப்படவில்லை. ஏஅற்ப ஜீவிகள்ஏ என்னும் இச்சிறுகதை 1979 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்திய கணையாழி இதழில் வெளிவந்தது.

paavannan@hotmail.com

Series Navigation