அசோகமித்திரனின் “ஒற்றன்!” : மார்க் டுவெயினுக்கு விடைகொடுத்த கரை தெரியாத மிசிசிப்பி நதி

This entry is part [part not set] of 35 in the series 20070308_Issue

ரெ.பாண்டியன்


1. அமெரிக்கா எனும் மனபிம்பத்தின் சிதம்பர ரகசியம்

அமெரிக்கா என்றால் எழுபதுகளின் மனிதர்களுக்கு ஒரு பிம்பம் இருந்தது : அது ஒரு பணக்கார, நவநாகரீக, உயர்தரமான அமைப்பு என்பது அது. ஆனால், அங்குள்ள கே-மார்ட் கடை ஊழியர்கள் அதனை ஒரு மோஸ்தரான காயலான்கடையாக மாற்றிக்கொண்டிருக்கும் ஒரு பரிச்சயமான காட்சி, அந்த பிம்பத்தில் ஒரு உடைவை ஏற்படுத்துகிறது.

அதுவரை அந்த சமூகத்தின் தினசரி அமைப்பிற்குள் ஒரு பரிச்சயத்தை அடைய ஒருவன் மேற்கொண்ட பிரயாசைகள் அனைத்தும் அவனது அனுபவ தோகையில் ஒரு புதிய இறகாக மாறி, ஒரு புன்னகை பிறக்கிறது.

பிடிபடாதிருந்த வெவ்வேறு காட்சிகளும் அனுபவங்களும் ஒரு ஞாபகக்கோர்வைக்குள் பழைய சாதனையாக இடம்
பெறதொடங்குகிறது. எதோ ஒரு கள்ளச்சாவியின் அசம்பாவித திருகலில் அனைத்து மர்மக்கதவுகளும் திறந்துவிடும் போது, ஒரு கணம் மூர்ச்சையாகும் மௌனம்.

இதைப்போல
அ) amongst others, Picasso கண்காட்சி ( இது நம்ம ஊர் கில்லாடிகள் மாதிரினா இருக்கு )
ஆ) “எப்பொழுதும் லேட்டாக வந்துசேரும் விவரம் தெரியாத இந்தியர்கள் !” என்கிற ஏளனத்தோடு நடந்துகொள்ளும் ஜான், வெண்டுராவின் வாந்தியை துடைத்து சுத்தப்படுத்த கிடைத்த உதவிக்குப்பிறகு, காட்டும் நட்புணர்வு.
இ) புகைப்படத்திற்கு பொருத்தமில்லாத முகம் கொண்ட வெள்ளைக்காரி காட்டும் இலகுபுன்னகை; அதுவரை தனது புகைப்படத்தைப் பற்றி வெட்க உணர்வு கொண்டிருப்பவன், இப்பொழுது அது மோசமில்லை என்பதோடு, அதில் இளமைக்களையையும் காண்கிறான். (என்னைப்போல் ஒருத்தி!)

அமெரிக்காவைவிட்டு “நான்” திரும்பிவரும்போது, அந்த மனப்பிம்பம் வெளிறிப் போயிருக்கிறது : அந்த சமூகத்தின் உள் அமைப்பும் அதன் பலவீனமான முனைகளும் தன்னுடைய மண்ணின் இன்னொரு சாயலாக தெரியத்
தொடங்குகிறது. அத்தோடு அந்த வேறொரு சாயல் அமைப்பில் பிழைத்துக் கொள்வதற்கான சில அடிப்படைத் திறமைகளைப் பெற்றவனாக “அவன்” திரும்புகிறான்.

ஒரு அந்நிய சமுக அமைப்பின் பலங்கள், பலவீனங்கள், தனித்துவங்கள், போலித்தனங்கள், மோஸ்தர்கள் அத்தனையையும் ஊடுருவிப் பார்த்துவிட்ட மனிதனாக (ஆகா, தலைப்பு கிடைத்துவிட்டது — “ஒற்றன்!” ) “அவன்” திரும்புகிறான்.

இந்த தலைப்பை வாசகன் அசோகமித்திரனிடமிருந்து மட்டுமே எதிர்பார்க்க முடியும் : அன்றாட வாழ்வில் விசேஷமாக எதுவும் நடைபெறாதது போல தோற்றமளிக்கும் நிகழ்வுகளின் ஊடாக வாழ்வின் மர்ம நகர்வுகளை நுணுக்கமான பதிவுகளாய் தந்திருப்பவர் அசோகமித்திரன். அலைக்கழிப்பின் ஊடாக கிரகிப்பையும், கிரகிப்பில் பிறக்கும் விகாசத்தில் மனபிம்பத்தின் மர்மம் உடைவதையும் தெரிவிக்கும் சொல் – ஒற்றன்!

2. நான் ஏன் இவ்வளவு அசடாயிருந்தேன் ?

இருப்பது அசலூரில்; பிராணவாயுக்கு அடுத்தபடியாக தேவைப்படுவது கடிகாரம்; பழுதானதை சரிபார்க்க வழியில்லை; பதினைந்து டாலருக்கு நேரம் காட்டும் பேனா; அது தொலைந்து விடுவது பெரும் பதட்டத்தை தந்துவிடுகிறது.

throwaway culture-ன் (பழுது பார்க்கும் செலவிற்கு நுகர்வோரை புதியதை வாங்கத் தூண்டும் அமெரிக்க வணிக கலாச்சாரம்) கொடுமுடியான அமெரிக்காவில் எங்கே சென்று ஒன்றை பழுது பார்க்க முடியும் என்பதை யாரும்
சொல்லமுடியாதிருப்பதும், டாலரில் செலவு செய்து வாங்கியதை தொலைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத சுய
பொருளாதார நிலையும் நிதானத்தை இழக்கச் செய்துவிடுகிறது; கடும் பனியிலும் இருட்டிலும் தெரியாத ஊரின் தனிமையிலும் அவதியை சம்பாதிக்கவேண்டிவருகிறது.

அந்நிய சூழலில் ஒருவனுக்கு தன்னுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள இருக்கும் மிகவும் குறுகலான வெளிகள் அவனை மனரீதியாக பாதித்து, நிதானத்தை இழக்க செய்து, துன்பத்தை சுமத்திவிடுகின்றன.

இதற்கெல்லாம் ஒருவன் தன்னைதானே கையாலாகாததனமாய் (ஆனால் பொருத்தமற்றதாய்) கேட்டுக்
கொள்ளக்கூடிய கேள்வி : நான் ஏன் இவ்வளவு அசடாயிருந்தேன் ?

3. யார் அவன் ?

“நானி”ன் முகத்தை ஓவியமாக வரையும் அனுபவம் ஜிம்முக்கு ஒரு சாகஸம்தான்; ஆனால், அதற்கு அனுமதி
பெறாமலே, “நானை” எல்.ஏ.க்கு அலைய வைத்து ஒரு கொலை முயற்சிவரையிலான சிக்கலில் மாட்டிவைத்துவிடுகிறான். ஜிம்மும் சூசியும் வசிக்கும் மாளிகையும், ஓட்டும் காரும் அவர்களுடையது அல்ல; அவர்களின் உறவும் கூட.

சம்பந்தமே இல்லாதவன் கொலை செய்ய வருகிறான். கொலை செய்ய வருபவனும் அதை எதிர்பார்த்திருப்பவனும் துப்பாக்கி சகிதமாய் வந்து போகின்றனர். இரு துப்பாக்கிகாரர்களில் உண்மையான கொலைகாரன் யார்?

“நானி”ன் முகத்தை வரைவதில் ஆவேசம் கொண்டிருந்த ஜிம்மின் கவனம் கலைவதற்கு காரணமாயிருந்த “நானி”ன் முகம் கண்ணாடி அறையில் சுடப்பட்டு சிதறும் கற்பனையை ஜிம் சொல்லிக்காட்டுகிறான். நடக்கவிருந்த அசம்பாவிதம் ஒன்றுக்கு மிகவும் பரிவுடன் “நானி”டம் நடந்துகொள்கிறான்.

வாழும்விதம் பற்றி, உறவுகள் பற்றி, ஏன் பகைமைப் பற்றி கூட எந்த தொடர்ச்சியும் இல்லாத திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை -இதையெல்லாம் எந்த கணத்திலும் அணைத்துவிடக்கூடிய துப்பாக்கியை சதா உடலில் சுமந்துதிரியும் நோய்க்கூறான மனிதர்கள் – அமெரிக்காவில் விளிம்பில் வாழும் சமூகம் பற்றிய அனுபவம் ஒரு மின்னலடித்த இரவில் தெரிந்த காட்சியாய் வந்து போகிறது.

4. எல்லோரும் எழுத்தாளர்தாமா ?

அமெரிக்காவை பற்றிய மனப்பிம்பம் போலவே தடம் புரளும் மற்றொரு கற்பனை எழுத்தாளர்கள் பற்றியது.

பிராவோ உலக இலக்கியங்களை ‘கரைத்துக் குடித்தவன்’ ; பேராசிரியன். அட்டவணை போட்டு தொடங்கிய மகாநாவல் வெளியில் சொல்ல முடியாத குட்டிக்கதையாகிவிடுகிறது.

அபே தனது எழுத்தைப் பற்றி மட்டும் கவலைப்படுபவன்; பிறரின் எழுத்தை ஏறெடுத்தும் பார்க்காதவன்; பணக்கார தோழமையின் தயவில், எதையும் அனுபவித்து பார்த்திராத மனவறுமையை ஒரேயடியாக தீர்த்துக் கொள்ள நினைப்பவன்.

கஜுகோ எல்லோர் மீதும் அன்பை பொழிபவள், ஆனால்,அவளது கவிதை நிகழ்வு முதிர்ச்சியற்றதாய் இருக்கிறது.

சே தன்வயமானவன்; தன் மொழிக்கு வெளியில் எட்டிப்பார்த்திராதவன். சுத்தமாக இருப்பதற்கும் வறுமைக்கும் இன்னும் வித்தியாசம் உணராத ‘நான் ஏழை’ புகழ் வெண்டுரா.

அபே எதியோப்பியாவின் முக்கியமான எழுத்தாளன் ; ஆனால், கஜுகோவிடம் அவன் உடல் முள்ளம்பன்றிபோல் சிலிர்த்துக்கொள்கிறது.

‘எழுத்தாளன்’ என்கிற ஒற்றை பதத்திற்குள் இத்தனை வகைமாதிரிகள் கொள்ளுமா ?

5. நான் x அவர்கள்

“நான் X அவர்கள்” என்கிற கதை சொல்லும் கோணத்தில், “நான்” என்னதான் கட்டியக்காரன் வேஷம் தாங்கினாலும், “அவர்களி”ன் ஸ்தாயியை உயர்த்த முயன்றாலும், “நானி”ன் பார்வையை எழுத்தாளன் நிறுவ முயல்கிறான் என்கிற சாயல் படிந்துவிடுகிறது.

“நான்” தனது புறவாழ்வை பெரும் பிரயாசைக்குப்பிறகு, ஒரு புகைப்பட நுணுக்கத்தோடு அறிந்துவைத்திருப்பவன். அகவாழ்வில், இந்த புறவாழ்வு தரும் தடுமாற்றங்கள் தவிர, சலனமற்று இருப்பவன். பிறர் வாழ்வில் ஏற்படும் சூறாவளிக்கு, மனசாட்சியாய் நின்றிருப்பவன்.

“நான்” ஒரு சாதாரணனின், கோபமே இல்லாத(angst-absent) அறிவுஜ“வி; அதிகபட்சம், தனது போதாமை பற்றிய சிறு இமைச்சிலிர்ப்பே அவனது நெற்றிக்கண்ணின் எல்லை.

“அவர்கள்” யாரும் எழுத்தாளர்களாக “நானை” எந்த பொழுதிலும் ஆச்சரியப்படுத்துவதில்லை; தனி மனிதர்களாக, இலாரியா creative writing கற்றுக்கொள்ள செய்யும் செலவுகளும் மேற்கொள்ளும் உதிரித் தொழில்களும், பிராவோ போடும் அட்டவணைகளும் அபே குபேக்னா பணக்கார இளவரசத் தோழனின் தயவில் செய்யும் ஆடம்பரமும் தான் , “நானை” ஆச்சரியப்படுத்துகின்றன.

வரித்துக்கொண்ட வித்தையில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்களான விக்டோரியாவும் அபே குபேக்னாவும் “நானி”ன் மதிப்பை பெறுகின்றனர்.

6. உயிரினும் ஓம்பப்படுவது

அசோகமித்திரன் தலைமுறைவரையிலான எழுத்தாளர்களிடம், அதே காலக்கட்டத்தைச் சேர்ந்த மேற்கத்திய எழுத்தாளர்களோடு ஒப்பிடும்போது, தனிமனிதனின் காமம் சார்ந்த தடுமாற்றங்கள் இலைமறை காயாக, மன பிறழ்வாகவே பெரும்பாலும் பதிவாகியிருக்கிறது. (ஆதவன், இவர்களின் ராஜபாட்டையிலிருந்து பிரியும் முதல் ஒத்தையடிப் பாதை; தி ஜானகிராமனில் தனக்குத்தானேகூட காமம் ஒப்புக்கொள்ளப்படுவதில்லை; அது நிறுத்திவிடமுடியாத மனதின் சஞ்சலமாகவே அலைக்கழித்துக்கொண்டிருக்கும்)

இலாரியா மீது வபின்ஸ்கிக்கு இருக்கும் மூச்சுத்திணறல், கஜூகோ மீது அபே குபேக்னாவுக்கு தோன்றும் கடுங்காதல், இலாரியாவுக்கு ‘நான்’ மீது முகம் சிவந்து விரிய ஏற்படும் துடிப்பு, பிராவோவுக்கு ஸ்பானிஷ் தட்டச்சுக்காரியின் மீது ஏற்படும் க்ரியா ஊக்கம் – இந்த உடல் சார்ந்த தடுமாற்றங்களிலிருந்து “நான்” விலகியே செல்கிறார்.

கோபமே இல்லாத, சாதாரணனின் அறிவுஜ“வி ஒழுக்கம் சார்ந்த தடுமாற்றங்களும் இல்லாதவர்தான். angst-ridden போலவே rom ance-ridden னும் தான்;

நவீனத்துவ பண்புகள் கேள்விக்குள்ளாக்கப்படும் இன்றைய காலத்தில் இதனை ‘நானி”ன் ஒழுக்கவியல் பார்வை என்று சொல்ல இடமிருந்தாலும், சக மனிதர்களின் தடுமாற்றங்கள் மிகையின்றியே பதிவாகியிருக்கின்றன.

7. அமானுஷ்யமே வந்து மண்டியிட்டாலும்

கவித்துவத்துக்கு எம்பாத நடை அசோகமித்திரனுடையது. அதனை நிர்தாட்சண்யமாய் நிராகரித்துவிடுவது. அகவுலக தரிசனங்களை பீடத்தில் அல்ல, ஒரு கணுக்கால் உயர கல் மேடையில் ஏற்றிவைக்கவும் கூட உள்ளூர கூசுவது.

உலகின் அமானுஷ்யம் கூட அசோகமித்திரனின் நிலைக்கு இறங்கி வந்து, அவரது பேனாவின் நிப்பை சுற்றி வாலைக் குழைத்துக் கொண்டு தான் கிடக்கவேண்டும். அந்த நிலையிலும் , ” அட பாவமே, இது எவ்வளவு உயரத்தில் எவ்வளவு வசதியுடன் இருந்தது, இப்படி இங்கே வந்து பழிகிடக்க எவ்வளவு துன்பமாயிருக்கும் ? பார் அதற்கு இன்னும் வாலை சரிவர சுருட்டிக்கொள்ளக்கூட வரவில்லை ” என்று தனது காலடியிலிருந்தே அசோகமித்திரனின் (அடுத்த கதையின்) வரி கிண்டலுடன் எழ தொடங்கும்.

8. பயண அனுபவமா? நாவலா?

தமாஷ், வருத்தம், விநோதம் ஆகியவை பயண அனுபவங்களின் சாரமாக இருக்கும்; பயணம் செய்திராத, கற்பனைத் திறன் உடைய வாசகனை அவை வெவ்வேறு திசைகளில் பயணிக்க வைத்து இன்பம் தரும். பரந்துபட்ட வாழ்வின் விநோதமே பயண அனுபவ எழுத்தாளனையும் வாசகனையும் இணைக்கும் பொது தளம்.

ஆனால், நாவலில் எவ்வளவு விரிந்த அனுபவங்களுக்கும், எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்லும் ஒரு பார்வை வாய்த்திருக்கும், அசோகமித்திரனின் கட்டுரைகளின் பொதுதன்மை புனைகதையின் ர்ருறுநுமிசூயு விவரிப்லம் முத்தாய்ப்பும். அப்படி கட்டுரையாகத் தொடங்கிய ஒன்றே நாவலாய் வளர்ந்து முடிந்திருக்கிறது.

“ஒற்றன்!” நாவல் எழுபதுகளின் அமெரிக்காவை / அயோவா நகரத்தை ஒரு தமிழன் தெரிந்துகொண்டவிதம் பற்றிய பதிவாக காலங்காலத்திற்கும் நின்று கொண்டிருக்கும்.


( மே 06 )
pandian_rethinam@sembdc.com.sg

Series Navigation

ரெ.பாண்டியன்

ரெ.பாண்டியன்