அசலும் நகலும்

This entry is part [part not set] of 15 in the series 20010325_Issue

ரகுநாதன்


1

திருவாளர் பாண்டிப் பெருமாள் பிள்ளை தமது பெளத்திரன் செந்தில் விநாயகத்துக்கு காலாகாலத்தில் காலில் ஒரு கட்டுக் கட்டிப் போட்டுவிட்டு, மண்டையைப் போட வேண்டும் என்று எதிர்பார்த்தார். மேலும் காலஞ் சென்ற தமது புதல்வனும், செந்தில் நாயகத்தின் தந்தையுமான குருபரம் பிள்ளையைப் போல் தம் பேரப் பிள்ளையும் செய்ய வேண்டிய கிரியாதிகளை, உற்ற பொழுதில் செய்யாத காரணத்தால், சகவாச தோஷத்துக்காளாகி, கிருத்திருமத்திரிச்சலில் கிளம்பிவிடக் கூடாதே என்ற பயமும் அவருடைய ஆசையை, அவசரக் கடமையாகக் கருதச் செய்தது.

செந்தில் விநாயகம் சென்னையில் சர்க்கார் உத்தியோகத்தில் இருக்கிறான் என்ற பெருமை, டர்பனும் டையும் கட்டி வாழ்ந்த அந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டு ராஜ விசுவாசப் பிறவியான பிள்ளையவர்களின் மனசில் புகுந்து கொண்டதில் அதிசயமில்லை. ஆனால் செந்திலோ கெஜட் பதிவில்லாத சாதாரண குமாஸ்தாதான். பஞ்சப் படியையும் சேர்த்து எழுபது ரூபாய் சம்பளம் வாங்கி வந்தான். இன்றைய யுவ பாரத லட்சியத்தின் காரணமாக, அவன் சம்பளத்துக்குப் புறம்பாக, கிம்பளம் எதுவும் வாங்கத் துணியவில்லை என்பதைவிட, அவன் மனசில் கிடந்த கோழைத்தனமும், நியாய அநியாயத்துக்குப் பயந்த சுபாவமும்தான் அவனை அந்த ஸ்தானத்தில் அரிச்சந்திரனாக்கியது என்று சொல்லவேண்டும். சுய சம்பாத்யம், வாரத்துக்கு இருமுறை முக க்ஷவரம் செய்து கொள்ள வேண்டிய வயசு–இரண்டும் வந்து சேர்ந்தும், செந்திலுக்கும் தானும் நாலுபேரைப் போல் கட்டிய மனைவியோடு கடற்கரைக்குச் செல்லவேண்டும் என்ற ஆசையே உதிக்காமலிருந்தது.

இப்படி இல்லறத்தில் நாட்டமற்றுப் போவதற்குக் காரணம், பசையும் பிடிப்புமற்று, சென்னை நகரத்தில் மனிதரோடு மனிதராய்த் திரிந்து, தனக்கென்று ஒரு உலகை ஸ்தாபித்து வாழும் கோயில் மாட்டைப் போன்ற வாழ்க்கை மட்டுமல்ல. இரண்டாவது தேதி விடிவதற்குள் வாங்கிய சம்பளத்தை கைமாத்து, கடன்காரன், கடைக்காரன் என்று கொடுத்துவிட்டு மாசம் முப்பது நாளும் ரெயில்வே சீசன் டிக்கட்டையும், ஆபீஸ் காண்டானையும் நம்பி வாழும் அந்த என்.ஜி.ஓ வாழ்க்கையில், மனிதனுக்கு கல்யாண நினைப்பு வருவது அபூர்வந்தான். உள்ளத்தை எதற்கும் ஆகவொட்டாமல், நபும்சகமாயடிப்பதன் மூலம், உடலையும் சக்கையாக்கும் அந்த நைட்டிக வாழ்வு மட்டுமே செந்திலை அவன் கல்யாணத்தை ஒத்திப் போடும்படி தூண்டி வந்தது என்று சொல்லமுடியாது.

இதற்கெல்லாம் மேலாக, அவன் மனசுக்குள் மெல்லவும் மாட்டாமல், விழுங்கவும் ஒட்டாமல், நஞ்சுண்டனின் கண்டக்கறை போலக் கிடந்து உறுத்தும் அந்த எண்ணத்தின் நமைச்சலை அவனால் தாங்க முடியவில்லை. தவற்றின் காரணமாக, கர்ப்பவதியாகிவிட்ட கன்னிப்பெண் உள்ளுக்குள்ளேயே மருகிக் கண்ணீர் வடித்து, திகைப்பது போலத்தான் செந்திலும் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தான். அவளுக்காவது பத்து மாசம்; இவனுக்கோ ? அது இன்னும் தீராப்புதிர்.

இந்த வேளையில்தான் பாண்டிப் பெருமாள் பிள்ளை தமது பேரனின் தாமரையிலைத் தண்ணீர் போன்ற வாழ்வின் சூட்சும உண்மையை உணராமல், செந்தில் வெறுங்கோவணாண்டியாகப் போய்விடக் கூடாதே என்ற ஆதங்கத்தின் பேரில், மேல வீட்டு மைத்துனர் சுப்பிரமணியப் பிள்ளையவர்கள் குமாரத்தி கோமதியம்மாளை செந்திலுக்கு நிச்சயம் பண்ணி முடித்தார். பிறகு செந்திலுக்கும் விஷயத்தைத் தெரிவித்து தந்தி கொடுத்தார். எந்த விதமான அதிர்ச்சிக்கும் ஒரேவித உணர்ச்சி காட்டும் அவனது யந்திரப் புத்தி செந்திலை வசிய மந்திரம் போல் திருநெல்வேலிக்கு இழுத்துச் சென்றது.

அருணோதயத்தில் மிதுன லக்கினத்தில் கல்யாணம்.

செல்வி சிரஞ்சீவி செந்தில் நாயகத்துக்கும், செளபாக்கியவதி கோமதிக்கும் மாப்பிள்ளைச் சடங்கும் பெண் சடங்கும் நடந்தேறின. புரோகிதர் இருவருடைய சுண்டு விரல்களையும் பின்னிப் பிணைத்து, பட்டுத் துணியைச் சுற்ற ஆரம்பித்தார்.

செந்தில் இரு கரங்களையும் கவனித்தான்.

‘நல்லா புடிச்சிக்கடி. விட்டுடாதே ‘ என்று மதினிக்காரி கோமதிக்கு ஆணையிட்டாள். அந்தப் பிணைப்பின் பிடி இழந்தால், வாழ்க்கையிலும் பிடியும் பிணைப்பும் அற்றுப் போகும் என்று சாஸ்திரம் சொல்லுகிறதாம் ‘

அந்த இரு கரங்கள்: பட்டுப்போல் மிருதுத் தன்மையும் பசையும் ஏற்று, தங்கத்தின் தகதகப்பை மெருகேற்றிக் குளிர்வித்தது போன்ற கோமதியின் கரம். பிஞ்சு விரல்கள்; பிஞ்சுச் சதை.

சாம்பல் அகலாத தடியங்காயைப் போல் நிறம் பெற்று, முருங்கைக்காயின் முரமுரப்பும் விறைப்பும் கொண்டு, பசையற்று வெள்ளை பூத்த கரம்; செந்திலின் கரம்.

இந்த இரு கரங்களும் சேர்வதா ?

அவன் திகைத்தான்; அவர்கள் அக்னியை வலம் வந்தார்கள். முதல் சுற்றிலேயே அவர்களது விரல்கள் பிடிப்பை அறுத்துக்கொண்டன.

அவர்கள் வலம் வந்து முடித்தனர்.

கல்யாணம் முடிந்தது.

செந்தில் மஞ்சள் காப்பு அறுத்த அன்றே சென்னைக்குப் புறப்பட்டான். சாந்தி முகூர்த்தம்கூட நடைபெறவில்லை. திரும்பும்போது, அவனுக்குத் தான் ஒரு சம்சாரியாகி விட்டோம் என்ற உணர்ச்சி அழுத்தமாகவே பதியவில்லை. அதையும் மிஞ்சி அவனுடைய உள்ளத்தின் அந்த நமைச்சல் பயப்பிராந்திதான் தலைதூக்கி நின்றது.

2

செந்திலின் தந்தையான குருபரம் பிள்ளைக்கு வீட்டில் தங்க விக்ரகம் போல் மனைவியிருந்த போதிலும், தூரத்துப் பச்சையிலேதான் மனம் ஓடியது. பணமும் பதவிசும் அவருடைய ஆசைக்குப் பாதை வகுத்துக்கொடுத்தன. அதனால் ஆடாத கிரீடை இல்லை; வாங்காத நோயில்லை. அந்திம காலத்தில், அவர் ஒட்டுத் திண்ணையில் அழுகிய விரல்களோடும், அருவருப்போடுந்தான் கிடந்து உயிர் நீத்தார். தந்தை இறந்ததெல்லாம் செந்திலுக்கு ஏதோ நினைவு தெளியாத சொப்பனம் மாதிரிதான். எனினும், ஊர்க்காரர்கள் செந்திலை ‘குட்டம் போத்தி ‘யின் மகன் என்று சகஜமாகவே கூப்பிட்டார்கள். அந்த வார்த்தையின் அர்த்தம் செந்திலுக்கு அந்த வயசில் புரியவில்லை யென்றாலும், தனது தந்தை தனக்கு ஒரு பொல்லாத் தீங்கிழைத்துக் சென்றதாகவே எண்ணினான்.

சிறு பையனாயிருக்கும்போது அவன் பெரிய கோயில் வாசலில் வெந்து அழுகின புன்மேனியோடு பிச்சை கேட்கும் குஷ்டரோகிகளைப் பார்த்திருக்கிறான். அந்தக் குஷ்ட ரோகிகளைப் பார்த்தபோது சித்தார்த்தனைப் போல் துன்பத்தின் சாகைகளின் மூலாதாரத்தைக் காணவேண்டும் என்ற லட்சிய எண்ணம் அவனுக்கு ஏற்படவில்லை. அதற்குப் பதிலாக, அந்த நோயால் இறந்ததாக ஊரார் சொல்லும் தன் தந்தையின் உருவமும், தனக்கு அந்த நோய் தொத்திக் கொண்டால் என்ற எண்ணமும்தான் அவன் மனசில் தோன்றும். அந்த எண்ணத்தின் கறை அவன் மனசின் அடித்தளத்தில் என்றோ பதிந்து உறைந்து போயிருந்தது.

ஒருநாள் அவனுடைய காதுச் சவ்வுகள் சிவந்து கனன்றிருப்பதைக் கண்ட அவனுடைய நண்பன் ஒருவன் திடாரெனக் கேட்டான்:

‘என்னடா, காது எல்லாம் இப்பிடி குஷ்டம் பிடிப்பதுபோல் சிவந்திருக்கு ? ‘

செந்தில் திகைத்துப் போய்க் கேட்டான்: ‘ஏண்டா, குஷ்டம் பிடிப்பதானா இப்படித்தான் சிவக்குமோ ? ‘

செந்திலின் பாமரத் தன்மையை நன்றாகப் பயன்படுத்திக் கொண்ட அந்தப் படுகாலி நண்பன் ‘ஆமாடா. முதலில் இப்படித்தான் சிவக்கும் ‘ ‘ என்று விதையை ஊன்றினான்.

செந்தில் அன்று முழுவதும் தன் காதை மேலும் சொரிந்து சிவப்பாக்கிக் கொண்டான். கண்ணாடியிலும் பார்த்தான். அவனுடைய சந்தேகம் வலுத்தது. அகரதியைப் புரட்டி, குஷ்டத்தின் தன்மைகளை அறிய முற்பட்டான்; ‘குஷ்டம்: உடம்பைக் கொஞ்சங் கொஞ்சமாக அரித்துத் தின்னும் படுமோசமான வியாதி. கெட்ட நடத்தையாலும், பிதுர் வழியாலும் வரக்கூடும் ‘ என்று போட்டிருந்தது.

செந்தில் அன்றிரவு முழுவதும் தூங்கவில்லை. படுக்கையிலேயே புரண்டு கொண்டிருந்தான். கடைச் சாமத்தில் லேசாகக் கண்ணயர்ந்தான். எனினும் அந்தப் பொழுதில் அவன் கண்ட அந்த விகாரக் கனவுகள் ‘ —

இரும்பு வளையல்கள் அணிந்து, தலைவிரி கோலமாய், சுண்ணாம்புக் கீறலைப் போன்ற பல் வளைவுடன் ஒரு கரும்ராக்ஷஸப் பெண் சிரித்துக்கொண்டே வருகிறாள். தன் கையிலுள்ள கும்பத்திலிருந்து ஒளிவீசும் சந்தனக் குழம்பை வாரி வாரி அவன் மீது பூசுகிறாள். குழம்பு பட்ட இடங்களெல்லாம் பொத்துப் பொரிகின்றன. உடம்பெல்லாம் சந்தன மணம் ‘ எனினும் தாங்க முடியவில்லை. ஒரே எரிச்சல் ‘

அவன் ஓடிப்போய் தண்ணீரில் விழுகிறான். உடம்பைக் கழுவுகிறான். சந்தனத்தோடு உடம்பே கரைந்தொழுகிறது. கை விரல்களைப் பாறையில் தேய்த்துத் தேய்த்து மணத்தைப் போக்க முனைகிறான். தண்ணீரில் நனைத்து கைகளை உதறுகிறான். விரல்கள் உதிரும் மலரிதழைப் போல அறுந்து விழுகின்றன. கை விரல்கள்– கால் விரல்கள்–சதைப் பகுதி எல்லாம் கழன்றோடுகின்றன……….

‘இது என்ன மாயம் ‘ ? குஷ்டமா ?– ‘

அவன் விழித்துப் பார்க்கிறான். அவன் மீது ஒரு மூஞ்சுறுக் குஞ்சு விழுந்தடித்து ஓடியது.

கைகள்–கால்கள்–உடம்பு எல்லாம் சரியாக இருந்தன. விடியற்காலைக் கனவு பலித்தாலும் பலிக்குமாமே ‘

அவன் மனசில் அந்தப் பயம் குடி கொண்டது.

3

சில நாட்கள் கழிந்தன. செந்தில் சென்னையிலே வந்து வேலை ஒப்புக்கொண்டாய் விட்டது. அதைத் தொடர்ந்து அவனுக்குக் கலியாணமும் நடந்தேறி விட்டது.

எனினும், அவனுக்குத் தன் மனசிலுள்ள பயத்தைப் போக்க முடியவில்லை. தன் அப்பாவுக்குப் பெரு நோய்–அது தனக்கும் வரும் என்ற பயம். ஆகவேதான் ஊரில் சாந்தி முகூர்த்தத்தை நிச்சயம் பண்ணி, அவனுக்குக் கடிதம் எழுதும் போதெல்லாம் அவன் அதைக் காலங்கடத்தும்படியே பண்ணிவந்தான்.

அவனுடைய பயத்தின் பிரதிபலிப்பே போல், அவன் உடம்பு முழுதும் மலைப் பாம்பின் மேனியிலே தோன்றும் வட்டத் திட்டுக்கள் போல, சாம்பல் படரும் ஒரு வண்ணம்.

அவன் தன் உடம்பின் மாறுதலைக் கண்டு பயந்தான். நண்பர்களிடம் கேட்டான்.

சிலர் தேமல் என்றனர்.

சிலர் பூரிப்பு என்றனர்.

சிலர் இது ஏதோ சரும நோய்க்கு முன்னறிவிப்பு என்றும் சொல்லிச் சென்றனர்.

அவனுக்கு எதுவுமே ஓடவில்லை. வாய்விட்டுத் தனது நெஞ்சைக் குடையும் பயப் பிராந்தியை வெளியில் சொல்லி, தன்னைத் தெளிவுபடுத்தவும் முடியவில்லை. கடைசியில் ஒரு டாக்டரிடம் சென்றான்.

‘ஸார், என் உடம்பைச் சோதனை செய்யவேண்டும் ‘

அவர் உடம்பு முழுவதும் சரியாகச் சோதனை செய்து பார்த்தார். கடைசியில் ‘உடம்புக்கு எதுவுமில்லை ‘ என்றார்.

செந்தில் அவ்வளவு லகுவில் அவரை விட்டுவிடவில்லை.

‘ஸார், எனக்கு பெருநோய் வருமா ஸார் ? ‘ என்று பயந்து பயந்து கேட்டான்.

‘ ஏன் ? ‘

‘வருமென்று என் மனசுக்குப் படுகிறது. ‘

‘உங்களுக்கு ஏதாவது மேக நோய் உண்டா ? ‘

‘மேக நோயா ? ‘

‘ஸ்திரீ சகவாசம் உண்டா ? ‘

‘கிடையாது. ‘

‘பின் உங்களுக்கு வராது ஸார். ‘

‘ஆனால், எங்கப்பாவுக்கு இருந்ததாம். எனக்கும் வரலாமல்லவா ? ‘

‘வரணுமென்ற கட்டாயமில்லை. ‘

‘எனக்கென்னவோ அந்த நோய் கட்டாயம் வந்தே தீரும் என்றுதான் தோன்றுகிறது, ஸார். ‘

‘அப்படி தோன்றுவதும் ஒரு நோய்தான். ‘

‘என்ன நோய் ? ‘

‘பயம் ‘ ‘

அவன் எதுவுமே பேசவில்லை. எனினும் அவன் மனசில் தெளிவு ஏற்படவில்லை. கடைசியில் பழவர்க்கங்கள் அதிகம் சாப்பிட வேண்டும் என்று டாக்டர் சொல்லிய புத்திமதியைக் கேட்டுக் கொண்டு திரும்பிவிட்டான்.

4

செந்திலுடைய நண்பன் ஒருவன் ஒரு புதுக் காமிராப் பெட்டியும் கையுமாய் வந்து சேர்ந்தான். அந்த நண்பன் கொஞ்சம் பணமுள்ள ஆசாமி. ஆகவே பணமுள்ளவர்கள் தேர்ந்தெடுக்கும், பணத்தைக் கரியாக்கும் ‘ஹாபி ‘யாக புகைப்படம் பிடித்தலைத் தனது பொழுதுபோக்காகக் கொண்டவன். தோல் வாரோடு கூடிய காமிராவைத் தோளில் மாட்டிக்கொண்டு போவதிலேயே அவனுக்கு ஒரு குஷி. அன்று வந்தவன், தான் இப்போது படம் எடுக்கமட்டும் கற்றுக்கொள்ளவில்லை என்றும், அதை இருட்டறையில் கழுவி, ‘டெவலப் ‘ பண்ணவும், ‘பிரிண்ட் ‘ எடுக்கவும் கற்றுக் கொண்டதாகவும் பெருமை அடித்துக் கொண்டான்.

‘என்னடா செந்தில் ‘ உன்னை ஒரு படம் எடுப்பமா ? ‘ என்று உல்லாசமாகக் கேட்டுக்கொண்டு ‘உன் மனைவியையும் கூட்டி வந்திருந்தால் ஒரு ‘கப்பிள் போட்டோ ‘ கூட எடுக்கலாம் ‘ என்றும் சொன்னான்.

செந்திலுக்குத் தன்னைப் படம் எடுத்துக் கொள்வதில் சபலம் தட்டியது. நண்பனின் வேண்டுகோளுக்கிணங்கச் சம்மதித்து வெயிலில் வந்து நின்றான்.

நண்பன் படத்தை எடுத்துக் கொண்டு போய், இரண்டு நாட்களில் போட்டோ காப்பி ஒன்றும் போட்டுக் கொண்டு வந்தான். செந்திலுக்கு படத்தில் தான் நன்றாயிருப்பது போலவே பட்டது. படத்தைச் சட்டம் போட்டு, அலங்காரமாக அறையில் மாட்டி வைத்தான். தன் அறைக்கு வரும் நண்பர்களிடமெல்லாம் படத்தைக் காட்டினான். அவர்கள் அபிப்பிராயங்களைக் கேட்டான்.

அன்று இரண்டு நண்பர்கள் வந்தார்கள்.

செந்தில் அவர்களிடமும் படத்தைக் காட்டினான்.

ஒருவன் ‘என்னடா இது ? முகமெல்லாம் குஷ்டம் பற்றியது மாதிரி திட்டுத் திட்டாயிருக்கிறது ? ‘ என்று சொல்லிவிட்டான்.

செந்திலுக்கு திக்கென்றது. எதிரே இருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்தான். முகத்தில் படர்ந்திருந்த தேமல் விகாரமாயிருந்தது. அது தேமலா ? அல்லது குஷ்டமா ?

கூட வந்தவன் சொன்னான்: ‘யாரு, நம்ம ராமசாமி எடுத்த படம்தானே. படத்தில் ‘கிரெய்ன்ஸ் ‘ ஜாஸ்தியாயிருக்கு. சரியா ‘டெவலப் ‘ பண்ணலே. அதுதான் இப்படி இருக்கு. ‘

‘இந்தச் சமாதானம் செந்தில் நாயகத்தின் மனசில் அவ்வளவு லகுவில் உறைக்கவில்லை. உண்மையிலேயே அந்தப் புகைப்படம் தனது ‘குஷ்டம் பிடித்து வரும் ‘ முகத்தைத்தான் பிரதிபலிக்கிறதா ?

அந்த எண்ணத்தை அவனால் தாங்க முடியவில்லை. அதிலிருந்து அந்தப் படத்தைப்பற்றி யாரிடமும் அவன் அபிப்பிராயம் கேட்பதே இல்லை.

ஒரு நாள் அவன் அறையில் உட்கார்ந்து சாவகாசமாக ‘ஷெல்ப் ஷேவ் ‘ பண்ணிக் கொண்டிருந்தான். பிளேடு புதிதாகையால், ஜாக்கிரதைக் குறைவால் தோலில் அழுத்திப் பதிந்து, கன்னத்தில் ரத்தம் துளித்தது.

வேதனையைத் தாங்கிக்கொண்டு, அவன் துளித்த ரத்தத்தை விரலால் சுண்டினான். சுண்டிய ரத்தம் தெறித்து விழுந்தது. க்ஷவரம் பண்ணி முடித்துவிட்டு, தனது படத்தின் பக்கம் திரும்பினான்.

என்ன ஆச்சரியம் ?

படத்திலும் கன்னத்தில் வடு தென்பட்டது; அது மட்டுமல்ல, ஒரு துளி ரத்தமும்கூட இருந்தது ‘

செந்தில் திகைத்தான்.

அப்படியானால் அந்தப் படம் ? அது அவன் வாழ்க்கையையே பிரதிபலிக்கிறதா ? புகைப்படம் என்பது உயிர் ராசியின் நகல் பிரதி என்றாலும், உயிர் ராசியின் இன்ப துன்பங்களும், தாழ்வு வீழ்ச்சிகளும் அந்த நகலையும் பாதிக்குமா ? அவன் யோசித்தான். அவனுந்தான் ஆஸ்கார் ஒயில்டின் டோரியன் கிரேயையும், லூகாசின் காரையில் கண்ட முகத்தையும் படித்திருக்கவே செய்கிறான்.அந்தக் கதைகளில் வரும் படத்திலும், சுவரிலும் உயிர்க்குலத்தின் துடிப்பு பிரதிபலிப்பது போலவே, இந்தப் படமும் அவனது வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறதா ? அப்படியானால் இதோ இருக்கும் அந்தப் படம் அவனது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சூத்திரதாரியா ?

அவன் திகைத்தான். மருண்டான்.

அன்று முதல் அந்தப் படத்தை மிகவும் ஜாக்கிரதையாகக் கவனித்து வந்தான். தனக்கு வரும் ஆபத்து எப்படி அந்தப் படத்தையும் பாதிக்கிறதோ, அதுபோலவே அந்தப் படத்துக்கு வரும் ஆபத்து தன்னையும் பாதிக்கக் கூடுமென்று கருதினான்.

படத்தைப் பத்திரமாக மாட்டி வைத்தான்.

ஆனால்–

சில நாட்கள் கழித்து அவன் அந்தப் படத்தைப் பார்க்கும்போது அந்தப் படத்தில் முன்னைவிட அதிகக் கருமை தென்பட்டது. முகத்தில் துலாம்பரமாக வட்ட வட்டத் திட்டுக்கள் தென்பட்டன. கரையான் அரித்தது போல் படத்தின் பல பாகங்கள் மங்கி மறைந்தன.

செந்திலால் இந்த மாற்றத்தைத் தாங்க முடியவில்லை. நண்பர்களிடம் மீண்டும் அபிப்பிராயம் கேட்டான். வந்த நண்பர்கள் படத்தைப் பற்றிப் பலவாறாகப் பேசினார்கள்.

‘என்ன கருங் குஷ்டம் பிடித்ததுபோல் கறுத்துக் கொண்டிருக்கிறதே ‘ என்றான் ஒருவன்.

‘ராமசாமியின் போட்டோ டெவலப்மெண்டின் அழகு இது ‘ அவனுடைய அமெச்சூர் போட்டோகிராபிக்கு இது ஒரு உதாரணம். ‘ஹைப்போ ஸொலூஷ ‘னில் படத்தைச் சரியாகப் போடவில்லை. அதனால்தான் இந்தக் கோளாறெல்லாம் ‘ என்றான் மற்றொருவன்.

‘இந்தப் படத்தை மாட்டி வச்சிருக்க உனக்கு வெட்கமாயில்லை ? கழற்றித் தூர எறி ‘ என்றான் வேறொருவன்.

செந்தில் நாயகத்தால் இந்த அபிப்பிராயங்களைக் கேட்க முடியவில்லை. தன்னுடைய வாழ்க்கையின் பிரதி பிம்பமே அந்தப் படம் என்று அவன் கருதுகிற விஷயத்தை நண்பர்களிடம் சொல்லவும் துணிவில்லை. தனது உள்ளத்தில் கிடந்து உறுத்தும் நமைச்சலையும் வெளியிடத் திராணியில்லை.

அன்று முதல் அவன் அந்தப் படத்தையும் தன்னையும் ஒழுங்காகக் கவனித்தான்.

படம் நாளுக்குநாள் கருத்துக்கொண்டு வந்தது.

‘எனக்கு, குஷ்டம் வருவதைத் தடுக்க முடியாதா ? அப்படி வந்தால்…. ‘

அவன் யோசித்தான். ‘வீட்டிலிருந்து கடிதத்துக்கு மேல் கடிதம் வருகிறது. சாந்தி முகூர்த்தமாம் ‘ ஏன் ? அந்த அபலை கோமதிக்கும் இந்த விஷயத்தில் பங்கு கொடுக்கவா ? என் தந்தையின் வழியாக எனக்கு வந்து கொண்டிருக்கும் இந்தத் தொழுநோய் பரம்பரை பரம்பரையாய் நிலைத்து வாழவா ? நான் குஷ்டரோகியாய், அழுகி வழியும் தொழும்புப் புண்களுடன் சீழுடன் விரலற்ற மொட்டைக் கரங்களுடன் உலகிலேயே திரிய வேண்டுமா ? என் நண்பர்கள், உறவினர்கள் என்ன நினைப்பார்கள் ? எல்லோரும் காறியுமிழ, கதியற்று, ஆதரவற்று, யாவரும், அருவருக்கும் புழுத்துச் செல்லரித்துப்போன ஒரு ஜென்மமாய் நாட்டில் உலவவா ? ‘

அவனால் அந்தச் சிந்தனையின் வலிமையைத் தாங்க முடியவில்லை.

படம் கறுத்துக்கொண்டே யிருந்தது ‘

அதே வேளை தாத்தாவிடமிருந்தும் உடனே புறப்பட்டு வரும்படி தந்தி வந்தது ‘

அவனோ அறையை விட்டு வெளிச் செல்வதில்லை. உடம்பைத் திறந்தவாறே வைத்திருப்பதில்லை. யார் மத்தியிலும் வரக் கூசினான்: ஜெகிலின் உருவைத் திரும்பப் பெற முடியாத ஹைடைப் போலப் பயப்பட்டான்.

‘எப்படி இந்த நோயிலிருந்து விடுபடுவது ? தற்கொலை செய்து கொள்வதா ?அல்லது ஓடிப் போய்விடுவதா ? ‘

அவன் திகைத்தான்; அழுதான்; கண்ணீர் சிந்தினான்.

5

ஒரு வருஷ காலத்திற்குப் பின் பத்திரிகையில் ஒரு விளம்பரம் வந்திருந்தது:

செந்தில் நாயகத்துக்கு

அருமைச் செந்திலே ‘ இப்படி எங்களை யெல்லாம் பரிதவிக்க விட்டுவிட்டு நீ தகவலற்றுப் போய் விடலாமா ? உன் மனைவியும் அவள் குடும்பத்தாரும் கண்கலங்கி நிற்கிறார்கள். நானும் படுக்கையில் விழுந்துவிட்டேன். உன் தாய் மரணப் படுக்கையில் கிடக்கிறாள். இந்த வேளையாவது நீ இங்கு வந்து எங்களுக்கு ஆறுதல் சொல்லப்பா.

–தாத்தா, பாண்டிப் பெருமாள் பிள்ளை.

Series Navigation

author

ரகுநாதன்

ரகுநாதன்

Similar Posts