அக்கினியின் ஊற்று……

This entry is part [part not set] of 39 in the series 20070920_Issue

ருத்ராகவிதை
என்ற எழுத்துக்கு
மூச்சு தந்தவன் நீ.

வெறும் வித்வான்களின்
சொத்தாகி இருந்த தமிழை
உலகின் சிறந்த
சொத்தாக்கியவன் நீ.

வடமொழியால்
வர்ணம் பூசப்பட்டுக்கிடந்த
தமிழின்
நிறம் காட்டியவன் நீ.
தமிழின்
திறம் காட்டியவன் நீ.

எளிமையாய்
அழகாய்
தமிழில்
உயிர் பூசி வைத்தவன் நீ.

எதுகையும் மோனையும்
மட்டும் அல்ல தமிழ்.
எரிமலையும் தான் தமிழ்
என்று
ஆவேசம் உமிழ்ந்தவன் நீ.

விடுதலைத்தீயை…நீ
தொட்டு எழுதியதில்
தளை பூட்டிக்கிடந்த
தமிழன்
தலை நிமிர்த்திக்கொண்டானே
அப்போது தான்
புரிந்து கொண்டோம்
நீ
தரித்திருந்தது
தலைப்பாகை அல்ல என்று.
தமிழனின் இமயம் அது.
தமிழனின் இதயம் அது.
ஆம்.
தமிழனின் தன்மானம் அது.

எட்டயபுரம் என்ற ஒரு
சமஸ்தானம்
மண்மூடிப்போன பின்னும்
எட்டாத உயரத்திலிருந்து
நீ பாடிய
தமிழ்ப்பாட்டு அல்லவா
இந்த உலகம் எல்லாம்
இன்னும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

உன் கவிதைகளின் தொகுப்பில்
கொந்தளிக்கும்
கடல் அல்லவா தமிழ்!
பசிக்கின்றவர்களின்
பசிபிக் கடலும் அங்கு உண்டு.
மூடத்தனத்தின்
கருங்கடல்களை எல்லாம்
செங்கடல் ஆக்கிடும்
பகுத்தறிவும்
அதில் உண்டு.
“தனியொருவனுக்கு உணவில்லை யெனில்
இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்”
என்ற கனல் வரிகள்
கருவுயிர்த்ததும் உன் பாடல்களில் தான்.

“புல்லை நகையுறுத்தி பூவை வியப்பாக்கி
மண்ணைத்தெளிவாக்கி நீரில் மலர்ச்சி தந்து….”
என்று
புதுவையின்
நீளமான நீலத்திரைக் கடலோரத்தில்
நின்றுகொண்டு
நெஞ்சையள்ளூம் கவிதைஅலைகள்
நிறைய வீசியிருக்கிறாய்.

குயிலுக்கு பாடும்போதும்
புயலைத்தான் பாடினாய்.
பாப்பாவின் மழலைக்கு
பாடினாலும்
அதில்
பாய்ந்தோடும் ஒரு வீரம் தந்தாய்.

கண்ணனுக்கும் பாடியிருக்கிறாய்.
விநாயகருக்கும் பாடியிருக்கிறாய்
ஆனாலும்
உன் கவிதையின்
இந்து மகா சமுத்திரத்தில்
மண் பொம்மைகளை கரைத்து விளையாடும்
இந்த மனம் முதிராதவர்களுக்கு
இடம் இல்லையே.
அப்புறம்
ஏன் இந்த “மெரீனா”
இப்படி குப்பைக்காடானது?
பாரதி எனும் செந்தமிழ்ச்சீற்றமே!
மதத்தின்
பினாமியாகிப் போனவர்களை
சுனாமியாகியாவது வந்து
சுத்தப்படுத்தி விட்டுப்போ.

தும்பிக்கையான்
துணையிருப்பான்
இருக்கட்டும்.
தமிழா நீ
கம்பியூட்ட்டர் அறிவில்
நம்பிக்கை வை.

தமிழா!
யாதும் ஊரே
யாவரும் கேளிர்
என்று பாடிய
கணியன் பூங்குன்றன்
மட்டும் அல்ல நீ

யாதும் முடியும்
யாவையும் இயலும்
என்று பாடும்
கணினியன் பூங்குன்றனும்
நீயே தான்!
தேமதுரத் தமிழோசை
உலகமெலாம் பரவ வேண்டும்
என்பதல்லவா
அவன் பெருங்கனவு.
உலகத்தமிழன் ஆகவேண்டிய நீ
சாதி சமயங்களின் இந்த
உழக்கிலா கிடந்து நீ
உழல வேண்டும்.
பைந்தமிழ்ப் பாரதியின் பாட்டுகள்
விண்தமிழ் வித்தகன்
ஆக்கட்டும் உன்னை.

சோற்றுக்கு பஞ்சம் வந்த போதும்
தமிழ் ஊற்றுக்கு பஞ்சம் வந்ததில்லை
ஆனாலும் தமிழா
உன் தமிழுக்கு ஏன் இந்த வறட்சி.?
என்று மடியும்
இவர்களின் சினிமா மோகம்
என்று தான்
இன்று நீ பாடியிருப்பாய்.
“நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்…”
என்ற வரிகளில் கசியும்
ரத்தக்கண்ணீரின் சிவப்பு கூட
இவர்களுக்கு உறைக்கவே இல்லை.
ஏனெனில்
இந்த சினிமாத்தமிழரின்
ஜிகினா எழுத்துக்களில்
இது வெறும் அக்ரிலிக் சாயம் தான்.

வெள்ளைக்காரனிடமிருந்து
விடுதலை பெற்றிட
சினங்கொள்ள வேண்டும் என்று
இந்தியனுக்கு
உருவகமாய்
பாஞ்சாலி சபதம் பாடினாய்.
அடிமைச்சங்கிலிகளில்
கட்டப்பட்டிருந்த போதே
ஜனநாயகச் சுடரேந்தியாய்
இவர்கள் எல்லோரும்
இந்நாட்டு மன்னர் என்று
மகுடம் சூட்டினாய்.
ஆனாலும்
எங்கள் ஒட்டுப்பெட்டிகளில்
சாதி சமயத்
துச்சாதனர்களின்
துகிலுரிபடலங்கள்
அரங்கேறிக்கொண்டி¢ருக்கின்றன.
தடுக்கவேண்டிய கிருஷ்ணர்களே
துகிலுரியும்
வினோத பாரதம் அல்லவா இது!

ஒரு குயியிலின் குரலே
விம்மிப்பரந்து விரிந்து
வானம் ஆகியது.
பிரபஞ்சம் கூட
அந்த சிறு புள்ளின்
புள்ளியில்
முற்றுப்புள்ளி ஆகி
டாக்டர் பென்ரோஸ் கூறும்
“சிங்குலாரிடி” ஆனது.
ஏனெனில் அது வெறும் குயில் பாட்டல்ல.
அது காதல் எனும் “காஸ்மாலஜி”.

இந்த சினிமாக்காரர்கள்
விடும் காதல் எனும்
சோப்புக்குமிழிகள் எல்லாம்
வார்த்தைகள் தோறும்
சுவாசம் சுவாசம் என்று
காதலை ஒரு காச நோயாக்கிவிடும்.
·ப்ராய்டிசத்தை பிசைந்து வைத்த
இந்த நிழல் உருவங்களின்
காலடிகளில்
தமிழனின்
இருபத்தியொன்றாம் நூற்றாண்டே
மிதிபட்டு நசுங்கிக்கிடக்கிறது.

சிவாஜி என்ற பெயரே
கூர் மழுங்கி போனது…இந்த
கூறு கெட்ட கூட்டங்களால்.
பம்மாத்துக்காக
“சும்மா..அதிருதில்ல..” என்று
பாக்ஸ் ஆ·பீஸ் வசூலுக்கு குறி வைத்த
பஞ்ச் டயலாக்குகளில்
படுத்த படுக்கையாய் கிடக்கும்
தமிழை தலைநிமிர்ந்திட…
பாட்டுகளால்
பார் அதிர வைத்த பாரதியே
இன்னொரு முறை நீ பிறந்திட வேண்டும்.
தமிழின் இந்த எட்டப்பர்களை
ஓட ஓட விரட்டுவதற்கு
தமிழ் மண்ணின்
ஒவ்வொரு துளியும்
எட்டயபுரங்கள் ஆகிட வேண்டும்.
எட்டு திசையும்
உன் முறுக்கிய மீசையில்
சூரியன்களின் முகங்கள்
பூத்திட வேண்டும்.

பாரதியைப்பற்றிய
நம் நினைவுகள்
நூற்றாண்டுகளுக்குள்
அடைந்து கிடக்கும்
நூலாம்படைகள் அல்ல.
இருட்டில்
இற்றுப்போகும்
பாட்டுகளும் அல்ல
அவன் பாட்டுகள்.
அக்கினியையே
நூற்றுக்கொண்டிக்குகும்
நூற்றாண்டுகளே
அவன் பாட்டுகள்!
.


ருத்ரா

Series Navigation

ருத்ரா

ருத்ரா