அகமும் புறமும் (In and Out)

This entry is part [part not set] of 28 in the series 20051230_Issue

வெங்கட்ராம கிருஷ்ணகுமார்


மனதிற்குள் Best Friend என்று நினைத்து அன்பே ஆருயிரே என்பதைப் போல, நானும் சிந்திக்க அகமும் புறமும் (In and Out) புறப்பட்டது !

ஆங்கிலத்தில் அடைகாத்து தமிழ் எழுதினால் தான் தமிழுக்குப் பெருமை ! வடமொழியைக் கூட எட்ட நிற்க வைத்து தம்பால் சிறுகச் சிறுக மாற்றிச் சேர்த்துக் கொண்ட தமிழுக்கு ஆங்கிலத்தை அரவணைத்துக் கொள்ள விருப்பம் போலும். ஒரு வேளை மூவாயிரம் ஆண்டுகள் இன்னும் நிலைத்து நிற்க வேண்டுமானால் அப்படித் தான் செய்ய வேண்டுமோ என்னவோ ?. இரு தலைக் கொள்ளி எறும்பு போல, இரண்டு முகம் கொண்ட அந்நியன் என்று பலவாறு சிந்தனைகள் சிதற . . . ஒருவாறு பிளந்து கிடந்த மூளையைச் இரு விரல்களால் சுரண்ட ஆரம்பித்தேன்.

“சட்டியில் இருந்தா அகப்பையில வரும்” என்று அம்மா சொல்லுவாள். எட்டாம் வகுப்பு வரைப் படித்த அவள் இந்த மாதிரிப் பழமொழிகளை அள்ளித் தெளிப்பதில் கில்லாடி. காலம் காலமாக வரும் ஞானமாக்கும். இந்தப் பெரிசுகளுக்கும், ஆச்சிகளுக்கும், அம்மாக்களுக்கும் காலம் காலமாக உபயோகிக்கத் தெரிந்த ஆயுதம் “பழமொழி”. ஏடாகூடாமாக நாம் “டென்ஷனாக” இருக்கும் போது இப்படி அள்ளித் தெளிப்பார்கள்.

நானும் சுரண்டி, சுரண்டிப் பார்க்கின்றேன். தெரிந்தது தானே எழுத முடியும் ?. அகத்தில் நினைத்து ஒன்று. புறத்தில் நடந்தது ஒன்று.

“கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்” என்று மகள்களுக்குப் புத்திமதி சொல்லும் அம்மாக்கள் கூறக் கேட்டதுண்டு. ஆயிரங்காலமாகத் திருமணம், காதல், காமம், ஒன்றுக்கும் மேலே மனைவிகள் வைத்திருப்பது போன்றவற்றில் கரை கண்டவர்கள் நாம். பெண்கள் ஒவ்வொருவரும் நமக்கு ஒரு பயிர்.

அப்ப ஒன்றுக்கும் மேலே இருப்பது நல்லது தானே ? அதான் ஆயிரங்காலத்துப் பயிர் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆயிரம் வரை போகலாம் போலிருக்குதே ? எனக்கென்னவோ, ஆயிரத்தைக் காட்டிலும் இரண்டு பிடித்திருகிறது. ஒன்று, என்று அடுத்துச் சுலபமாக இரண்டு சொல்ல முடிகிறது.

சரி ! இரண்டுடன் நிறுத்திக் கொள்வோம். நாமிருவர் நமக்கிருவர்.

நம்ம முருகன் கூட வள்ளி, தெய்வானை வைத்திருக்கிறாரே ?.

அட! பிள்ளையாருக்குப் பக்கத்தில் சித்தி புத்தி !

சிவனுக்கு பார்வதி, கங்கை !

நமக்கேற்றாப் போல தெய்வங்களையும் படைத்து வழிபடலாம் போலிருக்கு !

செளகரியமாக இரண்டிரண்டு பேராக வீட்டில் போட்டோக்கள் !

ஜாலியாக வழிபட்டு உதாரணம் காட்டி சட்டத்திற்கும், முதல் மனைவிக்கும் “ப்ப்பே” காட்டலாம். ஜீவனாம்சம் இல்லை. இலவசமாகச் சோறு போட்டு, புடவை கொடுத்தாப் போதும்.

வெவ்வேறுப் பள்ளிகளில் இரு மனைவிகளுக்கும் பிறந்தவர்களைப் போட்டுச் சமாளிக்கலாம். பணம் கஷ்டம் வந்தாலும் “ஆட்டு கிட்டே பிடுங்கி மாட்டுக்கும்”, “மாட்டுகிட்டே பிடுங்கி மனிதனுக்கும்” பங்கு செய்து விடலாம்.

சுனாமி வந்தால் கூட அதையும் தாண்டிக் கரை கண்டு மேடெழுப்பி வாழ்பவர்கள். மேடெழுப்பி சின்ன வீடு செட்டப் செய்து வாழ்ந்து விடலாம். அது போனால் பெரிய வீடு ! பெரிசு போனால் சிறிசு !

அனைத்துக் காதல் பாடல்களும், புலவர்களும், சினிமாக்களும் கண் முன் வந்தார்கள்.

“அட ! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக “உனக்கு டிரெயினிங்க்” கொடுக்கிறோம், உருப்பட மாட்டேன் என்று படுத்தி எடுக்கிறாயே ? என்றனர்.

சொல்ல ஆரம்பித்தார்கள் ! கோவலனுக்கிலாததா ? ! கண்ணனுக்கில்லாததா ?

அப்படி போடு !

“கங்கா கெளரி” எப்படி இருக்கு சினிமாத் தலைப்பு ?. ஜெமினி கணேசனை மேலுலகத்திலிருந்து கூப்பிடு ! இரு கதாநாயகிகளுடன் எவ்வளவு படங்கள் ? “வஞ்சிக் கோட்டை வாலிபன்”, “இரு கோடுகள்” தத்துவம் புரியுமா ? என்று என் அறிவை வளர்த்தனர்.

சும்மா பாரு கண்ணா !

தற்காலத்திற்கும் வாங்க சார் ! செல்வி, கோலங்கள் என்று போட்டு நம்ம பிள்ளைகளையும் நாளைய உலகத்திற்குத் தயார் படுத்தறோம் இல்லை ?

புதுசு கண்ணா ! புதுசு !

மண்டு ! அசடு ! அடிக்கடி வாங்கும் இரு திட்டுக்கள் ! வாங்கினேன், முதல் மனைவியிடம் ! அகத்துக் காரியிடமிருந்து ஒரே “ஜம்ப் !”

தப்பிக்க இரண்டாமவளிடம் சென்றா பிறகு ஒரே வாயைத் திறப்பேனா ?. இரண்டு கண்களைப் பார்த்து இருபது தப்படி பின்னால் நிற்கமாட்டேன் ?. அவள் வீட்டிற்க்கு கூட புறக் கடை வழியே தான் போவேன் !

அக வாழ்க்கை ! புற வாழ்க்கை ! அட, இதிலும் இரண்டு !

நம்ம ஆள்கள் கிரேட் தான். “உள்ள ஒண்ணு வைத்து வெளியில ஒண்ணு “ பேசாதே ! இதிலும் இரண்டு !

தமிழில் அகம், புற வாழ்க்கைகளைப் பற்றி நன்றாக அனைத்து புலவர்களும், பாடலாசிரியர்களும் பாடியிருக்கிறார்கள். காதலைப் பற்றிச் சதா கவிஞர்கள் பாடலை இழைத்த வண்ணமிருக்கின்றார்கள். காதல் பற்றிக் கேட்கின்றோம். காமம் பற்றி படிக்கின்றோம் !

ஆகா ! காதல், காமம் ! அகம் ! புறம் ! எல்லாம் இரண்டிரண்டு !

இப்படிச் சூடு ! ( மாலையைச் சூடுவதல்ல ! இது தெலுங்கு “சூடு!” “தமிழ் ! தெலுங்கு!” சும்மா இரண்டாகப் போடுவதற்குத் தான் !)

எனக்கு நினைவுத் தெரிந்த நாளிலிருந்து படித்தவைக் காதலைப் பற்றித் தான் பெரும்பாலும் புலம்பியிருக்கின்றன. காதல் தான் எனக்குப் பிடித்ததோ என்னவோ ?. காளிதாசன், கண்ணதாசன் பாடல்கள் தொகுப்பில் காதல், காமம் சம்பந்தப்பட்ட பாடல்கள் தான் அதிகமாக இருக்கின்றன. (சும்மா காளிதாசனை “இரண்டு” இலக்கத்திற்காக நியூமராலாஜி படி கொண்டு வந்தேன் !)

இரண்டு பேர் கட்டிக் கொள்வதைப் பக்கம், பக்கமாக ஆயிரம், இரண்டாயிரம் வருடங்கள் எழுதி வருகின்றோம் !

கல்லணை எப்படிக் கட்டினோம் ! விவரமாக எழுதக் கூடாதா ?. பெரியக் கோவிலைச் சுற்றி அகழிகள் எப்படி பிளான் போட்டுக் கட்டினோம் ? எங்களுக்குத் தெரிந்திருந்தால், சென்னைச் சூளை மேட்டில் கூவம் புகாமல் தடுத்திருப்போம் தானே ?

எப்படி கடாரம் போவதற்கு சோழ மரக்கலங்கள் தயாரித்தோம் ? விவரமாக எழுதினால் நாங்களும் கட்டி சுனாமி மேலே போயிருப்போமில்லை ?.

இப்ப அமெரிக்க குடியரசு தரும் கட்டு மரங்களுக்காக இரு கைகளை ஏந்த வைத்திருகின்றாயே ?

ஏரிகள், குளமென்று ஏன் நீர் நிலைகள் வைத்தோம் ?

பிறகு அதிலேயே வீடுகள் கட்டுவோம் ! “எங்கயாவது ஆற்றிலே, குளத்திலே, ஏரியிலே ! போய் விழுடா “ என்று அம்மா சபித்ததால், ஏரியில் வீடு கட்டி மழை பெய்து மூழ்கிப் போனோம் !

ஜாலியாகப் பேசும் போது துக்கமாகப் பேசாதே ! சரி ! கண்ணதாசன், காளிதாசனுக்கு வருவோம் ! நீயெல்லாம் “அர்த்தமுள்ள இந்து மதம்”, ரகு வம்சம்” படிப்பதில்லையா ? அவையெல்லாம் “சீரியஸ் மேட்டர் !”. உனக்கு ஆகாது ! மெகா சீரியல் பார்த்து ஒழிந்து போ !

அட போடா ! எல்லாம் ஓய்ந்து களைத்த பின்னால் “அர்த்தமுள்ள இந்து மதம்”, “ரகு வம்சம்” என்று அகத் தூய்மையைக் கொண்டாட வந்திருப்பார்கள். வெளிப் புறத்தில என்ன “மேட்டர்” இருக்கு ! அதுக்குத் தான் சினிமாவும் ! மெகா சீரியலும் !

வீட்டில் மிகச் சுத்தமாக இருக்கின்றோம். வீட்டு கேட் வரை நன்றாகக் கூட்டிப் பெருக்கி இருக்கின்றோம். சுத்தம் படுத்த நம் கைகளை நம்பாமல் அடுத்தவருக்கு, இரண்டாமவருக்காக ஏங்கியிருக்கின்றோம்.

அகம் சுத்தமாக இருந்தால் போதும். புறம் எக்கேடு கெட்டு போகட்டும் . வீட்டு “கேட்” தாண்டி வீதியைப் பற்றித் தெரிந்தோமில்லை. வீதியில் குப்பை இருந்தால் நமக்கென்ன ?

வீதியில் என்ன வகை ரோடு போட்டிருக்கின்றது. தார் ரோடா ? சிமிண்டா ? கவலையில்லை ! குண்டும் குழியுமா இருக்கிறதா ? அப்படி, இப்படி என் “பைக்” கை ஓட்டணும் அவ்வளவு தான் என் கவலை !

எவ்வளவு குப்பை வருகின்றது ? அகக் குப்பையா ( நம்ம வீட்டுக் குப்பை !) ? புறக் குப்பையா ? (பக்கத்து வீட்டுக் குப்பை !)

குப்பையைக் கையால் “கடாசலாமா” (வீசலாமா ?) ? பக்கத்தில் மெதுவாக நின்று பணிவாகக் குனிந்து போடலாமா ?.

குப்பை யாரால் வாரப் படுகின்றது ? கையால் வாருகின்றார்களா ? அல்லது மெஷின் வைத்து வாருகின்றார்களா ?

குப்பையை எரிக்கின்றார்களா ? அல்லது மின்சாரம் தயாரிக்கின்றார்களா ?. சனியன் ! வீட்டை விட்டு போட்டோமா , அதை பற்றி ஏன் நினைத்து குமட்ட வேண்டும் ?

நாற்றம், மணமென்றாவுடன் ஞாபகம் வருது !

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் ! அவன் மல்லிகை வைத்தால் நான் ஏன் வைக்கப் போறேன் ! நான் ரோஜா வைக்கிறேன் ! எனக்குத் தான் இரண்டாக இருந்தால் பிடிக்குமே !

நாம், நம் வீடு, நம் மாநிலம், என்று ஏகத்திற்கும் பேசியாகிவிட்டது. இரண்டாம் மாநிலத்தைப் பார்க்கலாம். “

“நம்மத் தண்ணியை விடமாட்டேங்கிறான் பா !” ( பாருங்கள் ! என்பதைச் சுருக்கி சென்னைத் தமிழில் “பா!” )

“கிரிகெட்டில பாரு ! நம்ம இரண்டு ஆட்டக்காரர்களையும் குளோஸ் பண்ணிட்டாம்பா ! முரளி கார்த்திக், தினேஷ் கார்த்திக் !

“எங்க வீட்ல பொங்கல் கொண்டாடப் போறாங்க ! பொங்கல் ! மாட்டுப் பொங்கல். பொங்கலென்று சொன்னதும் ஞாபகம் வந்தது ! “வெண் பொங்கல், சக்கரைப் பொங்கல் !”

“சாப்பிடு ! உள்ளே இனிமையானக் கரும்பு போகும்! ஆனால் வெளியேச் சக்கையைத் துப்புவோம் !”

நம்ம வீட்ல தான் அதிகம் சைக்கை இருக்கணும். ஆமா! பார்த்துக்கோ !

வீட்ல எவ்வளவு பண்ணினாலும் வெளியே சாப்பிட்டா ! சூப்பர் தான் ! தனியே ஒரு வேலை செய்யப் பிடிக்காது ! “சும்மா வாயேண்டா ? துணைக்கு யாருக்கும் அழைப்பு விடுப்போம் !

எங்கு இட்லி சாப்பிட்டாலும் இரண்டிரண்டாக ஆர்டர் செய்வோம் ! தொட்டுக்க மற்றொன்று ! பீர் குடித்தால் தொட்டுக்க ஊறுகாய் !

சரவணா பவன் பாருங்க சார் ! பெரிய ரெஸ்டாரண்ட். பக்கத்திலேயே “ஃபாஸ்ட் ஃபுட்” டும் கூட.

எமக்குத் தெரிந்த மொழிகளிலே இனிமையானது இரண்டு ! சென்னைத் தமிழ் மற்றும் தமிழ்!

எமக்குத் தெரிந்த நதிகளில் மிகவும் பழகிப் போனது அடையாறு ! நாறிப் போனது கூவம் !

உள்ளே நான் தமிழன் ! வெளியே “இங்கிலீஷ்காரனாக்கும் !

உள்ளே “சூப்பராக் கீறே!” ! வெளியே “ யூ லுக் பியீட்டி ஃபுல் !”

உள்ளே “தயிர் சாதம்! ! வெளியே “சும்மா சண்டைக்கு வந்தே, கீசிடுவேன் !”

உள்ளே “நாமனைவரும் குட்டையில் ஊறிய ஒரே மட்டைகள்” ! வெளியே “நான் பெரியவனா ? நீ பெரியவனா ?”

உள்ளே நான் “லோக்கல்” ! வெளியே நான் “இன்டெர்நேஷனல்” !

நான் அகத்தையும் புறத்தையும் பார்த்தாச்சு ! நீங்க ?

நான் ரெடி ! நீங்க ரெடியா ?

உள்ளே எப்படியிருந்தாலும், வெளியே “உளமொன்று வைத்து புறமொன்று பேசாமை வேண்டும்” என்றூ சுத்தத் தமிழில் பேசினால் போச்சு !

—-

kkvshyam@yahoo.com

Series Navigation

வெங்கட்ராம கிருஷ்ணகுமார்

வெங்கட்ராம கிருஷ்ணகுமார்