அகண்ட பஜனை

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

தமிழ்நெறியன்பள்ளிக்கூட பாடபுத்தகங்களுக்கும் என்ஸைக்ளோப்பீடியாக்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. உதாரணமாய், “ஆதிகாலத்திலிருந்து தமிழை வளர்ப்பதற்கு முதல், இடை, கடை சங்கங்கள் இருந்தன, இச்சங்கங்கள் இயல்-இசை-நாடகத்தின் மூலம் தமிழை வளர்த்தன; கடைச் சங்கம் என்றால் கடைசி சங்கம் என்று பொருள்.” இப்படியெல்லாம் பள்ளிக்கூட பாடப்புத்தகங்கள் சொல்லுகின்றன. ஆனால், இவற்றின் காலம், வரலாற்று அறிஞர்கள் வரலாறு பற்றி அறியக்கூடிய காலத்திற்கு முன்பே முடிந்துவிட்டது என்பதை என்ஸைக்ளோப்பீடியாக்களில் இருந்துதான் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதைப்போலவே, அந்த எழுத்தாளரின் மறைவுக்கு நினைவஞ்சலி செலுத்துமிடமாக அறியப்பட்ட அந்த சங்கத்தின் முகவரி அந்த ஊரில் இருக்கும் பல தமிழர்களுக்குத் தெரியவில்லை. என்ஸைக்ளோப்பீடியாவிலும் ஏனோ இல்லை.

விசாரித்துக்கொண்டு போனபோது ஏதோ ஒரு முதலியார் தெருவில் தமிழை வளர்ப்பது தெரியவந்தது. தமிழ் அரசியல்வாதிகள் போல, தமிழன்னையும் சாதிப் பெயரை வைத்துத்தான் அடையாளம் காட்டப்படுகிறாள் போலும். மற்றபடி, அந்தத் தெருவிலாவது தமிழ் வளர்வது குறித்து மகிழ்ச்சியே.

மாலை 4 மணிக்கே வந்துவிட்ட ஒரு இஸ்லாமியப் பெரியவர் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தார். அங்கே போடப்பட்ட சேர்களில் அவர் மட்டும் தனியாக அமர்ந்திருக்க, தனிமையின் துயரம், நினைவஞ்சலி என்னும் அந்த துக்கமான சூழலுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. பேசுபவர்களுக்காக வைக்கப்பட்டிருந்த டேபிளில் “மனு ஒளி” என்று பெயரிட்ட ஒரு ஒன்றரையணா பத்திரிக்கையின் பிரதிகள் இரண்டு மூன்று இருந்தன. அவற்றில் ஒன்றைக் கையில் வைத்துப் படிக்க ஆரம்பித்தவர், திடீரென்று படிப்பதை நிறுத்திவிட்டு ஒரு எகத்தாள புன்னகையோடு பக்கத்துக் கடையில் சாயா குடிக்கப்போனார்.

பத்திரிக்கையை எடுத்துப் பார்த்தால் ‘பரலோகத்தில் இருக்கும் கர்த்தராகிய விஷ்ணுவை வணங்குவதன்மூலம், சாத்தானிடம் இருந்து விடுதலை பெற்று வைகுண்டலோகத்திற்கு இறுதி மீட்பு நாளில் சென்றடைவீர்கள்’ என்றிருந்தது. அந்த இஸ்லாமியப் பெரியவர் அதை ஒரு நகைச்சுவைப் பொக்கிஷமாக நினைத்ததில் தப்பு இல்லை. எப்படியோ, குல்லா போட்டுக்கொள்பவர் கைகளுக்குக்கூட ஏசு போய்விடுகிறார், ஒரு வைணவ நாமத்தைப் போட்டுக்கொண்டாவது.

வாசலில் திரைப்பட போஸ்டர்கள்போல எத்தனையாவது நாள் என்ற குறிப்போடு ஒரு சின்ன போஸ்டரும் இருந்தது. சங்கத்தின் சமூக சேவை நிகழ்ச்சிகளில் ஒன்றாக எவருக்கெல்லாம் திருமணங்கள் நடத்துகிறார்கள் என்பதைப் பட்டியலிட்டிருந்தது. முதலில் அனைத்துப் பிரிவினர் என்று போட்டுவிட்டு, அடுத்தபடியாக தமிழ் கிருத்துவர் என்று போட்டிருந்தது.

தமிழ் கிருத்துவர்கள், தமிழர்களில் உள்ள அனைத்துப் பிரிவினருக்குள்ளே வரமாட்டார்களா அல்லது அங்கே சொல்லியிருக்கும் அனைத்துப் பிரிவினர்கள் தமிழர்கள் இல்லையா, அல்லது தமிழர்களில் அனைத்துப் பிரிவினர் மற்றும் தமிழ் கிருத்துவர் என்கிற இரண்டுதான் இருக்கிறதா எனக் குழப்பங்கள் எழுந்தன. அத்தோடு தமிழ் நாட்டில் தமிழ் எங்களாலும் வளர்ந்தது என முஸ்லீம்களும் சொல்லிக்கொள்கிறார்கள். அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்போது, தமிழ் இஸ்லாமியர்கள் என்கிற ஒரு பிரிவு இந்தப் பட்டியலில் ஏன் இல்லை என்றும் குழப்பம் ஏற்பட்டது.

இலங்கையைப் போலத்தான் இந்தியாவிலும் நிலவரம் போலும். நமக்கு என்ன தெரியும்? அச்சுக்கள் தோன்றியபோது தமிழ் எழுத்துக்களைக் கண்டுபிடித்ததோடு, திராவிட இனத்தையும் கண்டுபிடித்துத் தமிழினத்தையும் தோற்றுவித்த ஏசுவே எல்லாம் அறிந்தவர்.

யாரோ ஒரு நான்கு பேர் உள்ளே நுழைவதா வேண்டாமா என்று தயங்கியவாறு தெருவிலேயே நின்றுகொண்டிருந்தார்கள். வாசலில் இருந்த “இங்கே கராத்தே கற்பிக்கப்படுகிறது” போர்ட் பயமுறுத்தியிருக்கலாம். அதெல்லாம் இங்கே திருமணம் செய்துகொள்கிற அப்பாவி ஆண்களுக்குத்தான், கவலைப்படாமல் உள்ளே வாருங்கள் என்று சொல்ல யாரும் இல்லை. அப்படிச் சொல்லும் பண்பாடுகள் தமிழ் பண்பாடுகள். எல்லாம் 1921ல் முடிந்துபோய்விட்டன. இப்போது இருப்பது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட திராவிட பாரம்பர்யம். அதன்படி வந்தவர்கள் வாசலிலேயே நின்றுகொண்டிருந்தார்கள்.

உள்ளே மாலை போட்டுக்கொண்ட படத்தில், அந்த எழுத்தாளர் மிக சோகமாக இருந்தார். ரசனையும் நகைச்சுவையும் நம்பிக்கையூட்டுவதுமாக வாழ்க்கையைக் கழித்த அவர் எதை நினைத்துப் பயந்துபோய் அப்படி இருக்கிறார் என்பது முதலில் புரியவில்லை.

யாரோ ஒரு ரசிகர், அந்த எழுத்தாளரின் புத்தகங்களை ஒரு மேடையில் அழகாய் அடுக்கிவைத்துக்கொண்டிருந்தார். அவை கீழே விழாமல் இருக்க, அந்த சங்கத்துக்குச் சொந்தமான ஒரு பலகையை அண்டக் கொடுத்தார். எழுத்தாளரின் புத்தகங்கள் சங்கப்பலகை ஏறின. எழுத்தாளருக்கு ஔவையார் தேவைப்படவில்லை. பெயர் தெரியாத அந்த ரசிகரே போதுமானதாக இருந்தார்.

எழுத்தையும், எழுத்தாளர்களையும் ரசிப்பவர்களும் சுவாசிப்பவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர்ந்தார்கள். தமிழ் இலக்கியக் கதைகளை ஆங்கிலத்திற்கு எடுத்துச் செல்லுபவர்களும், தனக்குப் பிரியமான கதாசிரியருக்கு கடைசி அஞ்சலி செலுத்துவதற்காக பல மைல்கள் தாண்டியவர்களுமாக அவர்களுக்கிடையே அறிமுகங்கள் ஆரம்பித்தன. தொடர்ந்தன. முடிந்தன. ஆனால், நிகழ்ச்சிதான் ஆரம்பிப்பதாகத் தெரியவில்லை.

துறு துறுவென்று இருந்த ஒருவர்மட்டும் நேரத்திற்கு ஆரம்பிக்கவேண்டாமா, சங்கத்தின் பெயர் கெட்டுவிடாதா என்று கேட்டுக்கொண்டிருந்தார். தலைவர் வராமல் நிகழ்ச்சியை ஆரம்பிக்கமுடியாது, தாமதமாக வருகிறவர்களுக்குக் காத்துக்கொண்டிருப்பதுதான் சங்கத்தின் பாரம்பரியம் என்று பதில்கள் வந்தன. இருவருடைய சங்க பாரம்பரியங்களும் வேறு வேறு போல. தமிழ் பாரம்பரியத்தின் தவிப்பை திராவிட பாரம்பரியம் அலட்சியமாகக் கவனித்துக்கொண்டிருந்தது.

வந்திருந்த கொஞ்ச நபர்களும் நெளிய ஆரம்பித்தனர். அந்தக் கட்டிடத்தில் அங்கேயும் இங்கேயுமாக அலைந்தனர். அங்கிருந்த ஒரு அறையில் அமைதியாகவும், கம்பீரமாகவும் ஒருவர் உட்கார்ந்திருந்ததையும், அவரைச் சுற்றிப் பலர் இருந்ததையும் கவனித்தார்கள். மேலும், அந்தக் கட்டிடத்தில் பார்ப்பதற்கும் சுவையான விஷயங்கள் இருந்தன. கேட்பதற்கு மட்டும் ஒரே ஒரு கேள்விதான் இருந்தது. “எப்போ தலைவர் வருவார்?” என்ற கேள்விக்கு, “வரும் வழியில் கார் ரிப்பேராகிவிட்டது” என்று பதில் வந்தது.

ஒரு 6.30 மணிக்கு தலைவர் வந்துவிட்டார் தலைவர் வந்துவிட்டார் என்று பரபரப்பு. வந்தார்கள்.

வந்தவர்கள் அந்த அறையில் இரண்டு மணி நேரங்களாக அரட்டை அடித்துக்கொண்டிருந்தவர்கள்தான். அப்படியானால் கார் ரிப்பேரான தகவல்? பாரம்பரியத்தின் விளைவு. நிகழ்ச்சி ஆரம்பித்தது. ஒருவழியாக.

புதிய பாரம்பரியத்தின் பிரதிநிதி ஒருவர், “நினைவஞ்சலி என்பது இறந்துபோன 13ம் நாள் துக்கம் கேட்கும் நிகழ்ச்சி போன்றது, அதைக் கேதம் என்பார்கள்” என்றார். அது சம்பந்தமான சங்கப் பாடல் நினைவில் இல்லை என்பதைப் பெருமையோடு சொல்லிக்கொண்டார். அன்னார் நல்லவர் வல்லவர் நாலும் தெரிந்தவர். அதனால், அவரது நினைவஞ்சலி “விழாவைக்” “கொண்டாட” முடிவு செய்தோம் என்றார். நெளிந்துகொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். யாரோ ஒருவர் கை தட்டினார்.

ஒருவர் குறள்வாழ்த்து பாடி நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாமா என்றார். துக்க நிகழ்ச்சிக்கு குறள்வாழ்த்தா? குறளுக்கு தீட்டுப்பட்டதுபோல புதியகலாச்சாரம் தெரியாதவர் கலங்கினர். நல்லவேளையாக பேச வந்தவர்களில் ஒருவர் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். குறள் அங்கேயிருந்த சேர்களின் இடைவெளியில் தப்பி, வெளியே ஓடி, ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டது. தமிழின் சிறப்புக்களான இயல், இசை மறைந்துபோனாலும், இன்னும் மறையாத நாடகம் ஆரம்பமாயிற்று.

உடலை விட்டவரின் உறவினர் ஒருவர் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அடுக்கு மொழி, ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக வெளிவரும் வழக்கமான துக்க வீட்டுப் பேச்சு. மரணித்தவரோடு பங்கிட்டுக்கொண்ட வாழ்வின் நிகழ்ச்சிகள்.

மரணம் பற்றிய செய்தி எப்போதும் நம்பிக்கையின்மையையே ஒருவரிடம் ஏற்படுத்துகிறது. நம்மோடு இருந்த பழகிய, சிரித்த, ஒரு ஸ்தூலம், ஒரு உயிர் திடீரென்று இல்லாமல் போவது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு நிகழ்ச்சி. எத்தனைக் காலமானாலும் இது இப்படித்தான் இருக்கிறது. பல வருடங்கள் கழிந்தாலும் அவர் இருந்திருந்தால் இப்படிச் செய்திருப்பார், இப்படி நினைத்திருப்பார், இப்படி வருந்தியிருப்பார், இப்படியெல்லாம் மகிழ்ந்திருப்பார் என்று மரணம் குறித்த நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இந்த இயல்பினால் மரணம் மனிதர்களுக்கு நடுவில் வாழ்ந்துகொண்டே இருக்கிறது.

மரணிப்பவருக்கு அவருடைய வாழ்க்கை என்பது அவரது நினைவுக்கு வரக்கூடிய சில கணங்களே. சில அனுபவங்களே. ஆனால், அவருடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அவரோடு கிடைத்த அனுபவத்தின் நினைவுகளே மரணித்தவராக இருக்கிறார். அந்த உறவினரின் பேச்சும் அப்படித்தான் இருந்தது. ஆனால், ஒரு எழுத்தாளரின் வாசகர்களுக்கோ, அந்த வாசகர்களால் மறக்க முடியாதபடி, அவர்களை பாதிக்கும்படி அவர் எழுதிய வரிகளே அந்த எழுத்தாளர். இப்படிப்பட்ட அனுபவங்களின் ஆதிமூலம் அழிந்த துக்கத்தை, அதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையை பங்குபோடவே அவரது ரசிகர்கள் குழுமியிருந்தனர்.

இதற்கிடையில், வெளியில் சூழலுக்கு ஒத்துப் போவதுபோல அதிகரித்துக்கொண்டே இருந்த புழுக்கம் பெருமழையாகப் பெய்ய ஆரம்பித்தது. வேறு ஒருவர் பேச வந்தார். தான் எழுதிவைத்திருந்ததை கடகடவென்று வாசித்து முடித்துவிட்டார். நல்ல வாசகர்.

அடுத்து வந்தவர்தான் நிகழ்ச்சியின் நட்சத்திரம். அவர் வந்தவுடன் வெளியே இருந்த சண்டாமிருதம் அந்த அவைக்குள்ளும் நுழைந்தது. நெருப்புப் பறந்தது. பறந்துபோய் ஏற்கனவே சிதையில் எரிந்துபோனவர் எழுதிய பல வரிகளுக்குக் கொள்ளிவைத்தது. அவர் பேசியதைக் கேட்டால் இறந்துபோனவர் இவருக்கு செய்யவேண்டிய நன்றிக்கடன்களுக்காக இன்னும் ஏழு தலைமுறைக்கு மறுபிறவி எடுக்கவேண்டும். அவர் மட்டும் இல்லாவிட்டால் எழுத்தாளர் இந்த நிலைக்கே வந்திருக்கமாட்டார் என்பது கேட்டவர்களுக்குப் புரிந்தது. அதற்கான ஆதாரங்களும் அடுக்கப்பட்டன. படத்தில் இருந்த எழுத்தாளர் ஏன் சோகமாக இருந்தார் என இப்போது புரிந்தது. தாங்க முடியாத சிலர், வெளியே பெரிய மழை பெய்தாலும் பரவாயில்லை என நினைத்து கொட்டும் மழையிலும் வெளியேறி போய்விட்டனர்.

இறந்த எழுத்தாளரின் வளர்ச்சியை மட்டும் அல்ல, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததும், அங்கு பேசவந்திருப்பவர்களை வரவழைத்ததும் தாமே என்றும், இந்த நிகழ்ச்சிக்கு அணி செய்ய வந்திருப்பவர்கள் எல்லாம் அரியவர்கள், பெரியவர்கள் என்றும் சொல்ல ஆரம்பித்தார். நினைவஞ்சலி பாராட்டு விழாவானது. ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் யாரேனும் மூன்றுபேர் கைதட்டிக்கொண்டே இருந்தார்கள். அவையில் இருந்தவர்களை விட, வராது வந்த மாணிக்கங்களுக்கும் புகழஞ்சலி செலுத்தப்பட்டது. “நம கருணாநிதி பதயே” என்று ஒருவர் எடுத்துக்கொடுக்க மற்றவர்கள் பஜனையைத் தொடர்ந்தனர்.

கருணாநிதியின் அருமை பெருமைகளும், கனிமொழியின் இலக்கிய அறிவும், கமலஹாஸனின் இலக்கிய ஆதரிப்பும் அனைவராலும் பேசப்பட்டன. இவர்களுக்கெல்லாம் தெரிந்தவர் இறந்துபோன அந்த எழுத்தாளர் என்பதை, அவருடைய பெயர் அவ்வப்போது உச்சரிக்கப்பட்டதிலிருந்து தெரியவந்தது. ஒவ்வொருவரும் மற்றொருவருக்கு நன்றிகள் தெரிவித்ததோடு, பரஸ்பரம் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டனர். மோகனத்தை முகாரியோடு கலந்து உறுமியில் வாசிக்க, அதை 80,000 டெசிபலில் காதுக்கருகே வைத்துக் கேட்டதுபோல ஒரு அனுபவம். இப்பேர்ப்பட்ட எழுத்தாளர் இறந்துவிட்டாரே என்று அதுவரை வருத்தப்பட்டுக்கொண்டிருந்த அவரது வாசகர்கள், அவர் உயிரோடு இருந்திருக்கக்கூடாதா என்று எண்ண ஆரம்பித்தார்கள். இந்த அனுபவத்திலிருந்து தப்பித்திருக்கலாம்.

கடைசியாக ஒருவரை “சுருக்கமாகப்” பேசச் சொன்னார்கள். அவர் பேச்சிலிருந்து, இறந்து போனவர் ஒரு மனிதர், உணர்வுள்ளவர், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சுடுகாட்டுப் பணியாளரையும், ஒரு ஸாஃப்ட்வேர் இன்ஜினியரையும் ஒரே மாதிரியான துக்க உணர்வில் தனது எழுத்துக்களால் அழுத்தியவர் என்பது தெரிந்தது. இது இலக்கியம் இல்லை என்றால் வேறு எதுவும் இலக்கியம் இல்லை எனச் சொல்லிவிட்டு அவர் வந்துவிட்டார். அவ்வளவு நேரம் உறைந்துபோய் கிடந்த மனிதர்கள் இறுதியிலாவது தங்கள் உணர்வுகள் பரிமாறப்பட்ட திருப்தியில் கலைந்தனர்.

மழை நிற்பதற்காக காத்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் நட்சத்திரப் பேச்சாளரிடம் கமலஹாசனின் ஆட்டோக்ராஃப் கிடைக்குமா என்று விசாரித்துக்கொண்டிருந்தார்.

காலமான அந்த எழுத்தாளர் சொர்க்கத்தில் அகண்ட பஜனை செய்துகொண்டிருப்பவர்களைவிட நரகத்தில் இருக்கும் சுவாரஸ்யமான மனிதர்களைச் சந்திக்கவே தாம் விரும்புவதாகச் சொல்லியிருந்தார். சுவாரஸ்யமானவர்களின் அகண்ட பஜனையை இந்தக் கூட்டத்தில் அவர் கேட்டிருப்பார்.


thamizneriyan@gmail.com

Series Navigation

தமிழ்நெறியன்

தமிழ்நெறியன்