ஃப்ரான்ஸ் இனிப்பு – நவ்கட் (Nougat)

This entry is part [part not set] of 20 in the series 20011111_Issue


வேலை நேரம் : 35 நிமிஷங்கள்

முழுமையாக ஆகும் நேரம்: 9 மணி நேரங்கள் (8 மணி நேரம் ஊறுவது)

இது இறுக்கமான, தேன் வாசம் நிறைந்த இனிப்பு பலகாரம். இது மெல்லும் அளவுக்கு மென்மையாகவும், வெட்டும் அளவுக்கு கடினமாகவும் இருக்கும். சரியாகப் படித்துவிட்டு, இதற்குத் தேவையான விஷயங்களை முன்னமே எடுத்துவைத்துக்கொண்டு ஆரம்பியுங்கள். தடிமனான அடிப்பாகம் கொண்ட வாணலி வேண்டும். (அதே நேரம் ஒரு கையில் இதனை தூக்கும் அளவுக்கு லேசாகவும் இருக்க வேண்டும்) இத்துடன், கிரைண்டர், இனிப்பின் வெப்பத்தை அறியும் தட்பவெப்பமானி, தோசைக்கரண்டி போன்றவையும் வேண்டும்.

தேவையான பொருட்கள்:

1 1/2 கோப்பை உப்புப்போடாத முழு பாதாம் பருப்புகள்

1/2 கோப்பை உப்புப்போடாத முழு பிஸ்தா பருப்புகள்

எண்ணெய்

4 அல்லது 6 சாப்பிடக்கூடிய அரிசிக்காகிதங்கள் (wafer papers)

2 கோப்பை சர்க்கரை தனியாக

3 மேஜைக்கரண்டி சர்க்கரை தனியாக

1/2 கோப்பை தண்ணீர்

3/4 கோப்பை தேன்

2 முட்டையின் வெள்ளைக்கரு

1 தேக்கரண்டி வண்ணிலா சாறு

ஓவனை 350 டிகிரி சூடு செய்யவும். ஒரு பேக்கிங் காகிதத்தில் பாதாம் பருப்புகளையும், பிஸ்தா பருப்புகளையும் பரப்பி பொன்னிறமாகும் வரை சூடு செய்யவும். 10 நிமிஷங்கள்

ஒரு 8 இன்ச் கேக் அச்சில் (8-inch-square cake pan) சரியாக 8 இன்ச் வெட்டிய அரிசிக்காகிதத்தை பரப்பவும். இன்னொரு 8 இன்ச் அரிசிக்காகிதத்தை தனியாக வைத்துக்கொள்ளவும். (இந்த அரிசிக்காகிதம் இல்லையென்றால், மெழுகுக்காகிதம் உபயோகப்படுத்தலாம். அதற்கு முன்னர், கேக் அச்சின் பக்கவாட்டிலும், கீழும் தடவி இந்த மெழுகுக்காகிதம் வைத்துக்கொள்ளலாம்)

2 கோப்பை சர்க்கரையையும், தண்ணீரையும் ஒரு சின்ன பாத்திரத்தில் போட்டு சுழற்றி தேய்த்து கலக்கவும். இந்த கலவையை 1 லிட்டர் பிடிக்கும் தடிமனான அடிப்பாகம் கொண்ட வாணலியில் ஊற்றவும். இந்தக்கலவையை நடுவாந்தர சூட்டில் கலக்கவும். சர்க்கரை முழுவதும் கரைந்ததும், கலக்குவதை நிறுத்திவிட்டு, கொதிக்கும் வரை சூடேற்றவும். ஒரு தூரிகை கொண்டு பாத்திரத்தின் ஓரங்களில் சர்க்கரை கட்டியாகிப் படியாமல் இருக்கும்படி கரைத்துக்கொண்டே இருக்கவும்.

சர்க்கரை வேகும் போது, இன்னொரு 1 லிட்டர் வாணலியில் தேனை கொட்டவும். ஒரு இனிப்பு தர்மாமீட்டர் கொண்டு வெப்பத்தை அளக்கவும். இந்த தேனை நடுவாந்திர சூட்டில் 280 டிகிரி வரும் வரை வைக்கவும். 16 நிமிஷங்கள். இப்போது தேன் கறுப்பு கலவை போல இருக்கும். இதை அடுப்பிலிருந்து எடுத்துவிடவும்.

இதே நேரம், முட்டை வெள்ளைக்கருவை ஒரு மிக்ஸரில் போட்டு (விஸ்க் இணைப்புள்ளது) நுரையாக வரும்வரை அடிக்கவும். மிக்ஸர் ஓடிக்கொண்டிருக்கும்போதே, மீதமுள்ள 3 மேஜைக்கரண்டி சர்க்கரையை மெதுவாக சேர்த்து அடிக்கவும். 1 அல்லது 2 நிமிஷங்கள்.

மிக்ஸர் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும்போது, தேனை இந்த வெள்ளைக்கருவில் மெதுவாக ஒரு சீராக ஊற்றவும். மிக்ஸரை நிறுத்திவிட்டு, சர்க்கரையின் வெப்பத்தைப் பார்க்கவும். சர்க்கரை 330 டிகிரி வெப்பமாக இருக்கும்போது, மீண்டும் மிக்ஸரை அதி வேகத்தில் ஓடவிட்டு மெதுவாக சர்க்கரையையும் மெதுவாக சீராக ஊற்றவும்.

கலவை கெட்டியாகும் வரை அதிவேகமாகச் ஓடவிடவும். 5 அல்லது 10 நிமிஷங்கள். கலவை ஈரமாகவும், பளபளப்பாகவும், இருக்கும். இப்போது வண்ணிலா சாற்றை ஊற்றி இன்னொரு நிமிஷம் ஓட்டி வண்ணிலா நன்றாகக் கலக்கும்படி அடிக்கவும்.

வேகமாக, பாதாம் பருப்புக்களையும், பிஸ்தா பருப்புக்களையும் இதனுள் போட்டு கலந்து, முன்னமே தயார் செய்து வைத்திருந்த கேக் அச்சில் ஊற்றவும். இனிப்பின் மேல்பாகத்தை ஒரு தோசைக்கரண்டியால் சமப்படுத்தவும். இதன் மேல் இன்னொரு அரிசிக்காகிதத்தை (அல்லது எண்ணெய் தேய்க்கப்பட்ட மெழுகுக்காகிதம், எண்ணெய் இனிப்பில் படும்படி) வைத்து மேற்பாகத்தை சமப்படுத்தவும். இந்த இனிப்பு 8 மணிநேரம் (அல்லது இரவு முழுவதும்) இருக்கும் படி விடவும்.

கேக் அச்சின் ஓரம் கத்தியை ஓட்டி, நவ்கட்டை வெளியே எடுக்கலாம். மெழுகுக்காகிதம் என்றால் அதனை தூக்கி எறிந்து விடுங்கள். வெட்டும் பலகையில் வைத்து ஓரங்களை வெட்டி விட்டு, 1 இன்ச் சதுரங்களாக வெட்டவும். இந்த துண்டுகளை மெழுகுக்காகிதங்களில் சுற்றி வைத்துக் கெடாமல் பார்த்துக்கொள்ளலாம்.

24 துண்டுகள் கிடைக்கும். (ஒவ்வொரு துண்டும் சுமார் 178 கலோரிகள் )

வேலை நேரம் : 35 நிமிஷங்கள்

முழுமையாக ஆகும் நேரம்: 9 மணி நேரங்கள் (8 மணி நேரம் ஊறுவது)

Series Navigation