ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 8)

This entry is part [part not set] of 47 in the series 20040624_Issue

ஆசாரகீனன்


காலிஸ்தானிய இயக்கம் முழுவதும் வெளி நாட்டு சீக்கியரின் உந்துதலால் நடந்தது என்று நான் வாதிடவில்லை. ஆனால் அவர்களது பேரூக்கம் இன்றி அப்படி ஒரு பெரும் வன்முறை இயக்கமாக, இந்தியாவை உடைக்கும் பெரும் ஆபத்தாக அது வளர்ந்திருக்க வாய்ப்பில்லை. மேலை நாடுகளில் வாழும் சீக்கியர்கள் தம்மை முன்னாளில் அகதிகளாக்கி ஓட ஓட விரட்டிய பாகிஸ்தானிய முஸ்லிம் பஞ்சாபியருடன் கூட்டுறவு வைத்து, அகதிகளாக வந்தவரை ஏற்று இடம் கொடுத்து அவர்களுக்கு ஏராளமாக நிதி உதவியும், இந்திய அரசின் திட்டங்களில் ஒரு கணிசமான பகுதி வசதிகளை ஒதுக்கியும் கண்ணியமாக நடத்திய இந்தியாவிற்கு எதிராகச் செயல்பட்டதுதான் வரலாற்றின் கோணல்களுக்கு ஒரு முக்கியமான உதாரணம். இந்தியாவில் எங்கும் காலிஸ்தானிய இயக்கம் துவங்கும் வரையும் சீக்கியர்களிடம் நிரம்ப மரியாதையும், பரிவும், மதிப்பும், பொருளாதாரத்திலும் வேளாண்மையிலும் அவர்கள் பெற்ற பெரு வெற்றியால் ஒரளவு ஆச்சரியமும் கூட நிலவின என்பதைக் கருத்தில் கொள்ளாமல், காங்கிரஸ் கட்சியின் அதிகார வெறி மேலும் வட இந்தியாவில் ஏற்பட்ட அரசியல் சூதாட்டங்களின் பால் சீக்கியரின் மேல் மட்ட மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பை ஊதிப் பெருக்கிப் பிரிவினை வாதமாக்கினர் என்பதுதான் அவலம். இவை ஒரு சிறு நிலப் பகுதியில் ஏற்பட்ட அநீதிகள், பரந்த இந்தியாவால் அவர்களுக்கு இழைக்கப்பட்டதல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியாத வகையில் குறுகிய அரசியல் பார்வை பரந்த அரசியல் பார்வையை வென்றது என்பது அரசியல் அறிவியல் அளவில் ஏற்பட்ட ஒரு வரலாற்றுக் கோணல். இந்தச் சிறுநில தேசியத்தை அன்றைய திராவிட இயக்கத்தினர் பயன்படுத்திக் கொண்டு இதைப் பரந்த இந்தியாவின் மீதான ஒரு தாக்குதலாக ஊதிப் பெருக்க முயன்றனர் என்பது இன்றைய வாசகருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எழுபது-எண்பதுகளின் அரசியலை நன்கு கவனித்தவர்களுக்கு திராவிட இயக்கங்களின் அடிநாதம் அன்றும் இன்றும் பிரிவினைவாதம் என்பதை மறந்து விட வாய்ப்பில்லை. இன்று இந்தியாவில் எங்கும் முதலீடு செய்துள்ள முதலாளிகளைத் தமது உறுப்பினராகக் கொண்ட இந்த இயக்கங்கள் பிரிவினை வாதத்தைத் தற்காலிகமாகப் பின்னொதுக்கி வைத்திருக்கலாம். ஆனால் தேவைப்படும்போது வெளியில் எடுத்து நீட்டும் ஆயுதமாக அவர்களது ஆயுதக் கிடங்கில் பிரிவினைவாதம் இன்னமும் இருக்கிறது என்பது ஓர் எளிய உண்மை. இதை மொழி தேசியம், சுய நிர்ணயம் என்ற சொற்றொடர்களின் முலாம் பூசி மக்கள் விடுதலைக்காகத் தாம் பாடுபடுவது போல இந்த இயக்கங்கள் காட்டிக் கொள்ள முயல்வது ஒரு அபத்த நாடகம்தான் என்றாலும் அதற்கு இன்னமும் ஓரளவாவது மக்கள் வாழ்வைக் குலைத்து உருச் சிதைக்கும் சக்தி இருக்கத்தான் செய்கிறது. [கு1]

அன்று வெளிநாட்டு சீக்கியரின் தேவை வெளிநாட்டில் அவருக்கு மதிப்பு கிட்டுவது. உழைப்பாலும், சமூக ஒத்துழைப்பாலும், வியாபார நுணுக்கங்களாலும், தமது பொருளாதார நிலையை முன்னேற்றிக் கொண்ட அயல்நாட்டு சீக்கியருக்கு, பல நாடுகளிலும் சிறுபான்மையினருக்கு அதுவும் விடு விடுவென்று மேலெழும் ஒரு சிறுபான்மையினருக்கு ஏற்படக் கூடிய பல சிக்கல்கள் இயல்பாகவே எழுந்தன. வறிய நாடாகவும், மேலை நாட்டு முதலாளியத்துக்கு எதிரானதாகவும் தன்னை இனம் கண்ட இந்தியாவுக்கு அன்று மேலை நாடுகளில் மதிப்பு இல்லை. சீக்கியரின் நலன்களைக் காக்கும் அளவு வலுவும் இல்லை. மேலும், ஏராளமான பிரச்சினைகளை உள்நாட்டிலேயே எதிர் கொண்டு அவற்றைத் தீர்க்க முடியாமல் திக்கு முக்காடிய ஒரு காலனியம் கடந்த நாட்டில் அயல் மண்ணில் ஒப்பு நோக்கில் மிகவும் செல்வம் கொழிக்கும் நிலையில் இருந்தவராகக் காணப்பட்ட சீக்கியரின் நலன்களைக் காக்க பெரும் உற்சாகம் இல்லை என்பதையும் நாம் காண வேண்டும். அமெரிக்கருக்கோ, பிரிட்டிஷ் பிரஜைகளுக்கோ ஒரு சிக்கல் அயல் மண்ணில் எழுந்தால் அந்த அரசுகள் உடனே தமது தூதரகங்கள் மூலம் நடவடிக்கை எடுத்து தம் பிரஜைகளின் நலன் காக்கின்றன என்பதைக் கவனித்த அயல் மண் வாழ் சீக்கியர், இந்தியா தம்மைப் புறக்கணிக்கிறது என்று தவறான கணக்குப் போட்டனர் என்றே நான் கருதுகிறேன். இந்திய அரசு அனைத்து மக்களையும் ஒரே போல உதாசீனம் செய்தது, அதிகாரிகளின் சுய நலனை மட்டுமே கவனித்தது, அதன் கோணலான சற்றும் பொருத்தம் இல்லாத சோசலிச அமைப்பு முறை எந்த உருப்படியான செயல் திட்டத்துக்கும் இட்டுச் செல்லவில்லை என்பதை எல்லாம் அறிந்திருந்தாலும் அது ஏனோ தம்மைப் பழி வாங்குவதாக இந்தச் சீக்கியர்கள் புரிந்து கொண்டனர்.

அதே நேரம் இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே நவீன வேளாண்மை முறைகளையும், சிறு தொழில்களையும் உடனடியாகக் கைக் கொண்டு மிக முன்னேற்றம் கண்ட மாநிலமாகப் பார்க்கப்பட்டதால் அயல்நாடுகளில் கூட பஞ்சாபுக்கு மதிப்பு இருந்தது. மேலை ஆய்வாளர்கள் அதை ஒரு தனிச் சிறப்பான இடத்தில் வைத்திருந்தனர். ஆனாலும் இந்தியராகக் கருதப்பட்டதால் மேலை வாழ் சீக்கியருக்கு அச் சமூகங்களில் தனி மதிப்பு கிட்டவில்லை. இதனால் உந்தப்பட்ட சீக்கிய அடிப்படைவாதிகள் தாம் இந்தியர் என அறியப்படாமல், ‘முற்போக்கான ‘ முதலாளியத்தின் சார்பாளரான பஞ்சாபி சீக்கியர் போலக் கருதப்பட்டால், சீக்கியருக்கான வளமான ஒரு நாட்டில் இருந்து இடம் பெயர்ந்த மக்களாகக் கருதப்பட்டால் இஸ்ரேலினால் யூதர்களுக்கும், நெதர்லாந்து, பெல்ஜியம் போன்ற சிறு ஐரோப்பிய நாடுகளின் வளமான பொருளாதார நிலையால் அந்நாட்டு மக்களுக்கும் அமெரிக்காவிலும் இதர மேலை நாடுகளிலும் கிட்டுவதற்கு ஒப்பான மரியாதை தமக்கும் கிட்டும் என்று ஒரு திருகலான கணக்கு போட்டனர்.

மேலும் வறுமையிலும் சோசலிசத்து அதிகார வர்க்க அரசியலிலும் சிக்கிச் சீரழிந்த இந்தியாவிற்கு (தமது) வளம் கொழிக்கும் பஞ்சாப் ஏன் தொடர்ந்து வசதிகளை அளித்த வண்ணம் இருக்க வேண்டும் ? அந்த ‘தமது ‘ என்ற எண்ணத்தைக் கவனிக்கவும். இன்று பஞ்சாபில் உள்ள சீக்கியரில் கணிசமான எண்ணிக்கையினர் பாகிஸ்தானில் இருந்து துரத்தப்பட்டவர்கள், இவர்களுக்கு இந்தியா புகலிடம் கொடுத்து இன்று அவர்கள் வளமாக வாழ வகை செய்திருக்கிறது என்பதெல்லாம் இந்த வெளிநாட்டு சீக்கியர்களுக்குத் துளியும் நினைவில்லை. செய்யப்படும் நன்மைகள் எளிதில் மறக்கப்படும், செய்யப்படும் சிறு தீமை கூட நெடுநாள் நினைவில் இருக்கும் என்பதற்கு இது ஒரு வரலாற்று சான்று.

அது தவிர, அடிமை உணர்வு அதிகம் உள்ள, ஏற்ற தாழ்வுகள் அதிகம் உள்ள இந்துப் பண்பாட்டால் அடிமைப் படுத்தப்பட்டுத் தம் இயல்பான மேன்மைகளை அடைய முடியாமல் இருப்பதாகவும் தம்மைக் குறித்துக் கொண்டு, தாம் ஒரு துக்கப்பட்ட சமூகம் என்ற கருத்தைத் தீயாக வளர்த்து, அதற்காக சீக்கியர் இந்தியருடனோ அல்லது இந்துக்களுடனோ வாழ்வது இயலாது என்று ஒரு முடிவுக்கு வந்து, இந்தியாவிலிருந்து பஞ்சாபைப் பிரிக்கத் திட்டமிட்டனர். இந்துப் பண்பாட்டைப் பற்றிய இந்தக் கருத்து பல பாகிஸ்தானியரிடமும் புழங்குகிறது. இந்தியாவை விட பாகிஸ்தான் சிறந்த நாடு, பண்பாடு என்றெல்லாம் வாதிட இந்த வகை மதிப்பீடு அவர்களுக்கு ஓர் உறுதியான அஸ்திவாரமாக இருக்கிறது என்பதையும் நான் கவனித்து வருகிறேன். இதை இஸ்லாத்துடன் அவ்வளவு நல்ல உறவு இல்லாமல் வெகு நூறாண்டுகளாக இருந்து வந்த சீக்கியரும் கைக்கொண்டு விட்டது பற்றி என்று நாம் ஆய்வது அவசியம்.

இந்த அடிப்படைவாதிகளின் தாகம் எளிதில் அடங்குவதான வகை இல்லை. நிஜமான தேவைகளையே நிறைவேற்ற ஒரு ஜனநாயக அரசுக்குத் திறன் பற்றாது. கற்பனை வருத்தங்களை அது என்று துடைக்க முடியப் போகிறது ? மாறாக, காலனியத்தில் பல நூறாண்டுகளாக ஊறியிருந்த அரசின் அடக்குமுறை மனப் போக்கோ ஜனநாயக எதிர்ப்புச் சாயமோ இன்னமும் போகவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் அது தடாலடி நடவடிக்கைகளில் இறங்கி இயக்கங்களில் ஈடுபடுவர்களை துன்பப்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தது. மக்களைக் குடிமக்கள் என ஓர் அரசு கருதினால்தானே அது அவர்களது கோரிக்கைகளை யதார்த்தமாகக் கருதும் ? இந்திய அரசு இன்னமும் மக்களெதிர்ப்பு சக்தியாகத்தான் செயல்படுகிறது. அன்று, 70-80களில் காங்கிரஸ் கட்சியின் பல பத்தாண்டு கால எதிர்ப்பற்ற ஏகாதிபத்தியப் போக்கு மேலும் வாரிசு அரசியல் ஆகிய ஜனநாயக எதிர்ப்புச் செயல் முறைகளில் சிக்கியிருந்த இந்திய அரசு இன்றை விட அதிகமாகவே அடக்கு முறையை நம்பி இருந்தது என்பது நமது வரலாற்றில் இன்னொரு கருமையான பக்கம்.

இதனாலெல்லாம் ஆத்திரமடைந்த பஞ்சாபிய சீக்கியர் இன்னமும் கூடப் பிரிவினைக்கு வாக்களிக்கவில்லை. ஆனால், சீக்கிய மக்கள் கூட்டத்துக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ அந்தப் பிரிவினையைச் சாதித்தே தீர்வது என்று இயங்கிய சிறு கூட்ட வன்முறையாளர்களில் பெரும் பகுதி அயல் மண் வாழ் சீக்கியர். விளைவு காலிஸ்தான் இயக்கம், பெரும்பாலும் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்த சீக்கிய அயல் நாட்டுக் குடிமக்களின் விருப்பத்தாலும், நிதி வசதியாலும் மேலும் பல பன்னாட்டு அரசியல் சூழ்ச்சிகளாலும் உந்தப்பட்டு, தற்காலிக அரசியல் லாபங்களுக்காகவும், கருத்துக் குழப்பங்களில் சிக்கியிருந்த போது தெளிவான வழி ஏதும் தெரியாமல் வன்முறையில் இறங்கிய சிறுபான்மையினரினாலும் ஆன ஓர் இயக்கம் எழுந்தது. ஆயுதம் தாங்கிய கூட்டங்கள் புறப்பட்டால் சாதாரண மக்கள் உள்ளொடுங்குவரே தவிர அரசுக்கு ஆதரவாக உடனே எழ மாட்டார்கள். அதுவும் இலக்கோ அல்லது கருத்துத் தெளிவோ இல்லாத ஒரு ஜனநாயக அரசுக்கு இத்தகைய வன்முறை நிரம்பிய சூழலில் மக்கள் ஆதரவு தெளிவாகக் கிட்டுவது கடினம். விளைவு, பல்லாயிரக் கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்டதுதான். இந்த வன்முறை, கொலைகளில் அன்னிய மண்ணில் இருந்து இப் பிரிவினை இயக்கத்தை இயக்கியவர்களின் பங்கும், இந்த நியாயம் ஏதுமற்ற பிரிவினைவாதத்தை அழிக்க அரசு மேற்கொண்ட அடக்குமுறையும் இரு பெரும் காரணங்கள்.

ஆனால் வழக்கம் போல இடதுசாரியினர் அரசை மட்டுமே குறை சொல்வர், இந்தியப் பெரும் தேசியம் பேசும் வலதுசாரியினரோ காலிஸ்தான் இயக்கத்துக்குத் துணை நின்றவரை மட்டும் குறை சொல்வர். இரு சாராரிடமும் சிக்காது சுயமாகச் சிந்திக்கும் எந்த ஒரு மனிதருக்கும் இத்தகைய சித்தாந்தங்களின் அற்பத்தனங்கள்தான் உடனே புலப்படும். அவர்கள், நேயம் உள்ள மனிதராகச் சேர்ந்து வாழ்வது என்ற கடினமான ஆனால் வாழ்த்தப்பட வேண்டிய ஒரு வகை மனித யத்தனத்தைக் குலைக்க எத்தனை பேர், அதிலும் கணிசமான பகுதியினர் நிறையப் படித்தவர்களே கூட, முனைந்து செயல் படுகிறார்கள். இவர்களில் ஒரு சிறு பகுதியினர் கூட மக்களின் வாழ்வில் உள்ள ஊனங்களை, கோணல்களை நிமிர்த்த ஆக்கபூர்வமான செயலில் இறங்காதவர்கள் என்பதையும் உடனே கவனிப்பர். அதிலும் பெரும் தேசியத்தின் கோணல்களுக்கு விடை சிறு தேசியம் அல்ல என்பதையும் உடனடியே புரிந்து கொள்வர். ஆனால், இது அரசியல் அறிவியலில் இன்னமும் பெரும் சர்ச்சைக்குரிய தலைப்பாக இருக்கிறது என்பதை மட்டும் கவனித்து விட்டு இத்தோடு விடுகிறேன்.

இந்தியாவின் சோசலிசம், பன்னாட்டு அரசியலில் சார்பின்மை நிலை, வியத்னாம் போன்ற இடங்களில் மேலை ஆதிக்க முயற்சிகளுக்குக் கண்டனம் தெரிவித்த நிலை ஆகியன மேலை நாடுகளில் இந்தியாவை மிகவும் எதிரிப் பார்வையுடன் பார்க்க வைத்திருந்தன. மேலும் உலகக் காலனியத்துக்கு இந்தியாவின் விடுதலைப் போராட்டம் ஒரு மரண அடியைக் கொடுத்திருந்தது. இந்தியாவைக் கை நழுவ விட்ட பின் ஐரோப்பியக் காலனியம் + முதலாளியம், உலகெங்கும் தனது கிடுக்கிப் பிடியை விடுத்து மறுபடி ஐரோப்பிய மண்ணுக்குத் திரும்ப நேரிட்டது. உலக ஏகாதிபத்தியத்தின் முக்கிய உறுப்பினராக இருந்த சிறு ஐரோப்பிய நாடுகள் ஒரு பத்தாண்டுகளில் இன்னமும் வளமிக்க நாடுகளாக இருந்தாலும், சிறு நிலப் பரப்புள்ள குறுநில அரசுகளாக, சாதாரணமான, நூற்றிலொரு நாடுகளாக உலக அரங்கில் குறுக்கப்பட்டனர். இதை அந்நாடுகள் இன்றளவும் மறக்கவும் இல்லை, மன்னிக்கவும் இல்லை. ஐரோப்பிய இனவெறி பல நூறாண்டுகளாக வளர்க்கப்பட்டு ஓர் உச்ச கட்டத்துக்கு வந்திருந்த போது அங்கிருந்து தள்ளப்பட்டதால் அவர்களால் அந்த வீழ்ச்சியை இன்னமும் சீரணிக்க முடியவில்லை என நான் கருதுகிறேன் [கு2]. மேலும் இத்தகைய மேலாட்சி மனப்பான்மையை, எஜமான நோக்கை அந்நாட்டு மக்கள் இன்னமும் கைப் பிடிப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மேலே தெரிவித்தபடி காலனியத்திலிருந்து விடுபட்ட நாடுகள் மிகச் சாதாரணமான அரசியல் பொருளாதார இயக்கத்தை நிறுவவே பல பத்தாண்டுகள் ஆகியுள்ளன. இது ஐரோப்பியருக்குத் தாம்ான் ஆளப் பிறந்தவர்கள், ஆசிய ஆப்பிரிக்க மக்கள் அடிமை இனங்கள் என்று பல நூறாண்டுகளாக நம்பியதை உறுதி செய்வதாக இருந்தது. இத்தகைய சிந்தனைதான் இன்றளவும் பெரும் நுகர்வுப் பொருளாதாரம், இயந்திர உற்பத்தி, உலகப் பொருளாதாரச் சரக்குச் சுழற்சியில் ஒரு கணிசமான அளவைத் தன் பங்காக அளிப்பது ஆகியனவற்றைச் சாதிக்காத நாடுகளை ஏளனமாகப் பார்க்கும் ஓர் அரசியலை ஐரோப்பியரால் கை விட முடியவில்லை. அத்தகைய நாடுகளை உடைப்பதையும், சீரழிப்பதையும் அவை உலகப் பொருளாதார இயக்கத்தில் அடிமை நாடுகளாக இயங்கும் படி செய்வதையும் தமது உரிமைகளாகக் கூட இந்நாடுகள் கருதுகின்றன. இது பொருளாதாரப் போட்டி என்றே அவர்களால் கருதப்படுவதால் இயல்பான செயலாக்கப் பட்டிருக்கிறது. இத்தகைய சிந்தனையால் இயக்கப்பட்ட மேலை நாடுகள், தமது நாடுகளில் வாழ்ந்து கொண்டு, இந்தியாவை உடைக்கச் சதி செய்யும் ஓர் ஆயுதம் தாங்கிய வன்முறைப் போராட்டத்துக்கு நிதி உதவி மேலும் ஆயுத உதவி சேர்க்க ஒரு சிறு கூட்டம் முயல்வதைத் தடுக்க எந்த முயற்சியும் செய்ய மறுத்தனர்.

தரப்பட்ட காரணம் – ஒரு சிறுபான்மையினர் தம் சுய நிர்ணயத்தை நாடினால் அதை ஆதரிக்கத் தாம் கடமைப்பட்டுள்ளதாகப் பல மேலை நாடுகள் கருதின. அந்தச் சிறுபான்மையினரின் கூட வாழும் இன்னொரு சிறுபான்மையினரின் குடி உரிமை, விருப்பங்கள் பற்றி இந்த மேலை நாடுகள் சிறிதும் கவலைப்படவில்லை. அவற்றின் தாராளவாத அரசியல் இதற்கு உதவியது. இது மேற்கண்ட வரலாற்றுப் போக்கு குறித்த எனது சுருக்கமான புரிதல்.

இதற்கு மேலே சென்று நுணுக்கமாக ஆய்ந்தால் சீக்கியருக்குச் சில நியாயமான கோரிக்கைகள் இருந்தன. அவற்றை காலனியத்தில் இருந்து விடுபட்ட முதல் தலைமுறைத் தலைவர்கள் அசட்டை செய்தனர். அதனால் அம் மக்களிடம் பிரிவினைவாதம் தலை தூக்கியது. பசுமைப் புரட்சி உழைக்கும் சீக்கிய மக்களுக்கு உதவவில்லை. அவர்களும் இந்தப் பிரிவினைவாதத்தால் ஓரளவு கவரப்பட்டனர் என்னும் யதார்த்த அரசியல் உண்மைகளும் புலப்படும். ஆனால் மொத்த நாட்டின் வறிய மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட நிதியால் பெரும் நிர்மாணத் திட்டங்கள் பஞ்சாபில் செயல்பட்டன. அவை சீக்கியரின் உழைப்பாலோ அல்லது உதவியாலோ கட்டப்பட்டவை அல்ல. அத்தகைய நிர்மாண முயற்சிகள் இல்லாமல் பஞ்சாப் வளம் கொழிக்கும் மாநிலமாக ஆகியிருக்காது. மேலும், பெரும்பாலான சீக்கிய வேளாண் முதலாளிகளுக்கு இந்தியாவின் இதர மாநிலங்களில் இருந்து பஞ்சாபிற்கு அவ்வப்போது இடம் பெயர்ந்த நிலமற்ற கூலி வேலைக்காரர்கள், சீக்கியரின் நிலங்களில் அடிமட்ட ஊதியத்திற்கு வேலை செய்ததால்தான் பெரும் லாபம் ஈட்ட முடிந்தது என்னும் எளிய உண்மைகளை சீக்கியப் பிரிவினைவாதிகள் ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. இந்தப் பிரிவினை இயக்கத்தைக் கண்டு பாகிஸ்தானுக்கும் மிகவும் மகிழ்ச்சி, இந்தியாவை உடைக்க ஒரு வாய்ப்பு கிட்டியது என்று. அது தன்னளவில் இந்த இயக்கத்தை ஊக்குவித்தது. இந்த வரலாறு அல்ல இங்கு நான் கருதுவது. எப்படி அன்னிய மண்ணில் வாழும் இந்தியா போன்ற முன்னாள் காலனிய நாட்டின் குடிமக்கள், இடம் பெயர்ந்து தாம் வாழும் அந்த சூழலின் மதிப்பீடுகளை ஆழமான விசாரணைக்கு உட்படுத்தாமல், அவை எப்படி எல்லாம் வேர் கொண்டு எந்த வகை வளங்களால் உயிரூட்டப்படுகின்றன என்று புரிந்து கொள்ளாமல், அவற்றை உலகிற்கு ஏற்றதாகக் கருதி, நல்லெண்ணத்தாலோ அல்லது கெடுமதியாலோ இந்தியாவிற்கு (அல்லது தம் நாடுகளுக்கு) அவற்றை இறக்குமதி செய்து அங்குள்ள சிக்கலான வாழ்வில் எளிதில் தீர்க்கப்பட முடியாத பெரும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றனர் என்ற கருத்துக்கு ஓர் உதாரணமாக இதை முன் வைத்தேன்.

இதே போல் நாகாலாந்து, காஷ்மீர் போன்ற பகுதிகளிலும் பிரிவினைவாதத்துக்கு அன்னிய மண், குறிப்பாக மேலை நாட்டு வாசம் உதவுகிறது. [கு3]

இப்போது கிருஸ்தவ அடிப்படைவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம், இந்து அடிப்படைவாதம் ஆகியனவும் மேலை நாட்டில் வாழும் இந்தியரின் உதவியால் மேலேழும்பி இந்திய ஜனநாயக அமைப்பின் இயலாமைகளைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டைப் பிளக்க முனைகின்றன. இதில் சுய நிர்ணயம் ஒன்றுதான் பாக்கி இருந்தது. அதையும் நடத்தி, இருக்கும் சில்லறைப் பிரச்சினைகளை என்றென்றைக்கும் தீர்க்க முடியாத பெரும் பிரச்சினைகளாக ஆக்கியே தீருவோம் என்று முனைவதில் இடதுசாரிக்கு இருக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையே கிடையாது.

இருப்பதை அழிப்பதில் அவர்களுக்கு நிகர் ஏது ? பூமாலையைக் கண்டால் குரங்குகளுக்கு எத்தனை மகிழ்ச்சி இல்லையா ? கட்டும் வேலை முன் நின்றால் முதலாளிகளிடம் கை மாற்றிக் கொடுத்து விட்டால் போயிற்று இல்லையா ? அப்போது மட்டும் உலக முதலாளியம் அழிக்கப்பட வேண்டிய பெரும் தொற்று நோயாகத் தெரியாது. ஆனானப்பட்ட டெங் சியாவ் பெங் உலக முதலாளியத்தின் காலில் விழுந்த போது, துக்கடா புத்ததேவ் என்ன செய்ய முடியும் ? அவரும் கப்பரை ஏந்தி உலக முதலாளியத்திடம் போய்த்தான் நிற்க வேண்டி இருக்கிறது, இல்லையா ? ஆனால், தெலுங்கானாவிலும், ஜார்கண்டிலும் இருக்கிற ஒன்றிரண்டு தந்தி அலுவலகம், ஒற்றை காபின் ரயில் நிலையத்தை எல்லாம் வெடிகுண்டு வைத்துப் பிளந்து தம்மை பெரும் வீரராகக் கருதிக் கொள்ளும் மாஒயிசங்களுக்கு இந்த சிறு உண்மை கூடத் தெரியாது என்பதுதான் அவலம். நாளை தாம் விரும்பிய பேரதிகாரம் தம் கைவசம் வந்த பின் என்ன செய்யப் போகிறோம் என்று சிறு குறிப்பு கூட இல்லாதவர்கள், தம்மைப் பெரும் அரசியல் இயக்கங்களாகக் கருதுவதுதான் இன்னொரு வரலாற்று அபத்த நாடகம். இத்தனை குழப்பத்தின் நடுவே இந்திய முதலாளிகள் மேலை முதலாளிகளின் கூட்டணியோடு இந்திய இயற்கை வளங்களைத் தாம் கட்டுப்பாடு இன்றிச் சீரழிக்கிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல், இந்தியாவில் தொழில் துறையை ‘முன்னேற்று ‘கிறார்கள். மேலும், பெரும் ஊடக நிறுவனங்கள் (காட்டு: டைம்ஸ் ஆஃப் இந்தியா) அன்னிய ஊடகங்களின் பத்திரிகைகளை நம் நாட்டில் அச்சடித்து வினியோகிக்க முன்னுரிமை பெற்று இருக்கின்றன. மக்களோ எது தமக்கு நீண்ட நாள் நலனைத் தரும் என்பது பற்றித் தகவலோ, அரசியல் பார்வையோ, அல்லது வழிமுறைகளோ தெரியாத ஒரு கருத்து + பண்பாட்டுப் பாலையில் அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.

இது போன்ற பலவகை ஊடுருவல்களை மனதில் கொண்டுதான் அந்த வரிகளை எழுதினேன். இவை பெரும்பாலும் மேலை முன்மாதிரிகளை மனதில் கொண்டுதான் எழுப்பப்படுகின்றன. சராசரி மக்களுக்கு இவற்றால் அநேகமாக பலன் ஏதும் இல்லை. மாறாக, இருக்கிற வசதிகளோ அல்லது நலன்களோ அழிக்கப்படுவது துரிதமாக நடக்கிறது என்பது கருத்து.

இங்கு ஒன்று சொல்லி விட வேண்டும். அயல்நாடுகளில் வாழ்ந்திருந்து, இந்திய அனாதை ஆசிரமங்களுக்குப் பண உதவி செய்பவர்கள், விவசாயிகளுக்குப் பூச்சி மருந்துகள் பயன்படுத்துவதைக் குறைக்கவோ மறுபடி இயற்கை வழி விவசாயம் செய்யவோ வழி சொல்பவர்கள், மரபாகப் பயிர் செய்த உணவுப் பொருட்கள் சந்தையின் அலட்சியத்தால் பயிர் செய்யப்படாமல் வழக்கொழிந்து போவதை நிறுத்தப் பாடுபட்டு அந்த வகை பயிர்களை எதிர் காலத்துக்குக் காப்பாற்ற உதவுபவர்கள், கவனிப்பாரற்று அழியும் பல வகை ஆவணங்களைப் பாதுகாக்க நிதி உதவி செய்து நூலகம் மேலும் ஆவணக் காப்பகம் கட்ட உதவுபவர்கள், கிராமங்களில் (மதச் சார்பற்ற) பள்ளிகள் கட்ட உதவுபவர்கள், தலித்துகளுக்கு (இந்தியாவை உடைப்பதைக் குறிக்கோளாகக் கருதாமல்) குடியுரிமைப் போராட்டம் நடத்த உதவுபவர்கள், மார்க்சியருக்குக் கூட உலக மார்க்சியத்தில் நடந்துள்ள தற்கால சர்ச்சைகள் பற்றிய தகவல்கள் நூல்கள் ஆகியன தந்து இந்திய மார்க்சியத்தைப் பதப்படுத்துபவர்கள் என்று பல வகையில் ஆக்க பூர்வமாகச் செயல்படுபவர்கள் இருக்கிறார்கள். சுற்றுச் சூழல் பாதுகாப்பு, காடுகள் பராமரிப்பு, சிறுவர் உடல் நலப் பாதுகாப்பு முகாம்கள் நடத்தும் முறைகள், காவல் துறையினருக்கு மனித உரிமைகளைச் சீரழிக்காமல் எப்படித் தமது தொழிலை மேலும் சீராகச் செய்வது என்று பயிற்சி தருபவர்கள், பல்கலைக் கழகங்களில் ஆய்வு மாணவருக்கு சமூக அறிவியல் துறை அல்லது பொருளாதாரம் அல்லது பொது ஆரோக்கியம் போன்ற துறைகளில் எப்படித் தனி நபர் அந்தரங்கத்தில் அத்து மீறி நுழையாமல் தகவல் சேகரிப்பது, அதை ஆய்ந்து எழுதும் போது அவருடைய வாழ்வின் விவரங்கள் பரந்த சமூகத்தில் சிதறி விடாமல் காப்பது போன்ற தொழில் நுணுக்கங்களை கைமாற்றித் தருபவர்கள் இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் என் கட்டுரையில் நான் கருதவில்லை, விமர்சிக்கவும் இல்லை. இவற்றில் பலவும்கூட பயனற்ற வழிகளில் இந்தியாவைச் செலுத்தக் கூடும் என்றாலும் இன்றைய நிலையில் இவை உதவுவனவே. நாளை இவற்றில் எவை எதிர் விளைவுகளைத் தந்தன என்பது வெளிப்படலாம். ஆனால் முயற்சி செய்யாதிருப்பது அதையும் விட மோசமானது என்பதால் தவறிழைப்பது கூடப் பரவாயில்லை என்றுதான் நான் கருதுகிறேன். ஆகையால் தாம் கொணரும் தீவிர கருத்துகளுடன் உடன்பட மறுப்பவரை, உள்நாட்டில் இத்தகைய முயற்சிகளை ஆதரிக்க மறுப்பவரை அழிப்பது என்று இம் முயற்சிகளில் இறங்குபவர்கள் கருதினால் அப்போது இத்தகைய முயற்சிகள் உடனடியாக நிறுத்தப் படவேண்டி வரலாம்.

பொதுவாக அதிகாரம், சமூக இயக்கங்கள், அடையாள அரசியல் போன்றனவற்றில் மேல் நாட்டு தாராள ஜனநாயகத்தின் வரலாறு, சமூக அமைவு, தத்துவ வரலாறு, அதன் பொருளாதார அடுக்கு முறை அமைப்பு, கடுமையான சட்ட மேலும் சமூக ஒழுங்கு, தாக்குதலும் ஊடுருவுதலும் உள்ள ஊடகங்களின் பங்கு ஆகியவற்றையும், இவற்றால் ஒழுங்குபடுத்தப்பட்டு கண்காணிக்கப் படும் சராசரி மனிதர் அல்லது இந்த ஒழுங்கிற்கு மேற்பட்டுத் தாம் இருந்தாலும் தாமும் கட்டுப்படுவது போல நடிக்கவாவது நடிக்கும் ஆளும் கூட்டங்கள் ஆகியோரின் நடத்தையையும் கணக்கில் கொள்ளாமல் இவற்றில் சில கருத்தாக்கங்களையோ அல்லது அமைவு முறைகளையோ இந்தியாவில் மாற்றிப் பொருத்த முடியும் என்று கருதி அத்தகைய முயற்சி செய்வோரையும், மாறாக மேலை ஜனநாயகங்களின் தாராள நடத்தையைப் பொறுக்க முடியாமல் தம் பழமை நிறைந்த பண்பாடுதான் உயரியது, அதை மீட்டெடுத்து முலாம் பூசி மறுபடிப் புழக்கத்தில் கொணர்ந்தால் உலக அரங்கில் தமது சமூகம், பண்பாடு, நாடு உயர்ச்சியை அடையும் என்று கருதி அத்தகைய முயற்சிகளில் சமாதான வழியாகவோ, அல்லது வன்முறை வழியாகவோ இறங்கும் நபர்களைத்தான் இலக்காகக் கருதியிருந்தேன். ஆகப் பொதுவில் எழுதப்படும் விமர்சனத்தைத் தன்னை இலக்காகக் கொண்டு எழுதப்பட்ட விமர்சனமாகக் கருதி விசனப்பட இதில் காரணம் ஏதும் இல்லை என நான் கருதுகிறேன்.

இறுதி வரிகள் சில. ஃபூகோவைப் பற்றி எழுதக் கிளம்பி விட்டு பல திக்கிலும் இம் முயற்சி சென்றிருக்கிறது. காரணம் தெளிவு. முன்பு இக் கட்டுரைத் தொகுப்பில் தெரிவித்தபடி, ஃபூகோ பருந்துப் பார்வையையும் (Macro) நுண்பார்வையையும் (micro) இணைத்த ஒரு யதார்த்தப் பார்வையைக் கைக் கொள்ள முயன்றிருக்கிறார். இதன் வலிமைகள், நோய்மைகள் ஆகியன குறித்து நெடுகிலும் கவனித்திருக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு பார்வையில் இந்திய யதார்த்தத்தையும், தமிழக யதார்த்தத்தையும், உலக யதார்த்தத்தையும் இணைத்து எழுத முயன்றிருக்கிறேன். மானுடவியல் குறித்து ஃபூகோவுக்கு நல்ல கருத்து அதிகம் இல்லை. அது ஒரு விதமான பண்பாட்டு நசுக்கல் முறை என்று கருதுகிறார். அதனால் குறுங் குழுக்களின் பண்பாடு, மதிப்பீடுகள் ஆகியன சார்ந்த பண்பாட்டு அரசியலை அதிகம் இங்கு கருதவில்லை. ஆனால் உண்மையான நுண்பார்வை என்று ஒன்றைக் கைக் கொள்வதானால், குறுங் குழுக்கள், குடும்பம், தனி நபர் இயக்கங்கள் வரையிலும் ஆய்வுப் பார்வை செலுத்தப்பட வேண்டும். அதற்கு கட்டுரை உகந்த களமல்ல என்பதால் அதை இங்கு முயலவில்லை.

உலக மயமாக்கல், ஒற்றை நாட்டு ஏகாதிபத்தியம், சந்தையாக்கப்படும் யதார்த்தம், செமிதிய மதங்களிடையே நடக்கும் பெரும் பண்பாட்டுத் தளம் மேலும் ராணுவத் தளப் போர், சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்டுள்ள அசாதாரணமான அழிப்பு ஆகியன இந்தியாவையும் தமிழ் நாட்டையும் அச்சுறுத்துகின்றன. இந்தக் குழப்பத்தில் கிடைக்கும் வரை ஆதாயம் என்று கருதி இந்திய தேசியத்தையும், இந்தியப் பண்பாட்டையும் எப்பாடு பட்டாவது அழித்தே தீர்வது என்று இயங்கும் பல கூட்டங்கள் இந்தியாவில் இன்று இயங்குகின்றன. இவை சிறு வட்ட அடையாள அரசியலைப் பயன்படுத்தி, இன்னொரு பரந்துபட்ட அடையாள அரசியலை அழிக்க முயல்கின்றன. ஆனால், தமது இத்தகைய இயக்கம் வெளியில் ஒரு பெரும் அழிப்பு சக்தியாக இயங்கும் உலகு தழுவிய ஆக்கிரமிப்பு சக்திக்குத் தம்மைக் கைப்பாவையாக ஆக்குகிறது என்பது இவர்களுக்குத் தெரியாமல் இல்லை. தெரிந்தே தமது மக்களின் காப்பை அழிக்க முற்படுகிறார்கள் என்றுதான் கருத வேண்டி இருக்கிறது. இப்படித் தாம் இயங்குவதால் இந்தியா என்னும் கருத்தாக்கத்தையும், உலக ஏகாதிபத்தியத்தையும் ஒரே நேரத்தில் முறியடித்துத் தாம் வலிமை பெறுவதாக நினைக்கும் இத்தகைய இயக்கங்கள் நாளை இந்திய தேசியம், இந்தியப் பண்பாடு ஆகியன ஒரு பெரும் பாதுகாப்பாக இருந்தன, மேலும் அப்படியே பல காலம் இருந்திருக்கக் கூடும் என்பதை உணர்ந்து அவற்றை அழித்ததற்காகப் பரிதவிக்கும் நிலை வரப் போகிறது என்றே நான் கருதுகிறேன்.

ஆனால் செவிடர் காதில் சங்கூதி என்ன பயன் ?

இது ஃபூகோவுக்கும் தெரிந்து இருந்திருந்தது. இருந்தும் அவரளவில் மக்களை எச்சரிக்கவும் அவர்களது தன்னியல்பான எதிர்ப்பு முறைகளை ஆதரிக்கவும் அவர் முயன்றிருக்கிறார். அவரது செயல்பாடுகளின் தற்செயல் தன்மையை நான் உணர்ந்த போதும் அவற்றின் மையத்தில் இருந்த பரந்த மக்களின் பால், மேலும் அமைப்பாகாமல் உதிரிகளாக இருப்பதால், அமைப்புகளால் தொடர்ந்து செலுத்தப்படும் மக்களின் பால் உள்ள பரிவையும் அவர்கள் நலன் மீது அவருக்கிருந்த அக்கறையையும் கருதியே இந்தக் கட்டுரையின் மையப் பார்வையை அமைந்திருக்கிறேன். இது இன்னமும் மேம்பட்ட வகையில் கட்டமைக்கப் பட்டிருக்கலாம் என்பது எனக்கே தெரிகிறது.

[கு1] சென்ற வாரம் இறுதிக் குறிப்பில் இடதுசாரியினர் பெரும்பான்மை என்று அவர்கள் கருதியவருக்கு எதிராகத் தம் நிலையை எடுக்கிறார்கள் என்று ஒரு பொதுமையான கருத்தை முன் வைத்தேன். இதுதான் இந்துக்களைக் குறித்து அவர்களது நிலைபாடுக்கு அடிப்படை என்று கொள்ள முடியாது. இந்துக்கள் சிறுபான்மையானாலும் அவர்களுக்கு எதிராகத்தான் இடதுசாரியினர் செயல்படுவர் என்பதைக் குறிக்க வேண்டி இருக்கிறது. அந்த ஓர் இடத்தில் மார்க்சியர், குறிப்பாக இந்திய மார்க்சியர் மூலவர் (மார்க்ஸ்) செய்ததைத் தொடர்கின்றனர். அதாவது எந்தப் பண்பாட்டில் அவர்கள் வளர்க்கப் பட்டார்களோ அந்தப் பண்பாடுதான் உலகத்தின் மோசமான எதிரி என்று கருதி, இது வெறும் மன உளைச்சல் சார்ந்த முடிவு, அறிவியல் பார்வைக்கும் இதற்கும் எந்த உறவும் இல்லை என்பதைப் பார்க்க மறுத்து, தொடர்ந்து தமது ஆதி பண்பாட்டை வன்மையாகத் தாக்குவதை ஒரு தவிர்க்க இயலாத கடமையாகக் கருதுகிறார்கள். மார்க்சுக்கு யூதம் இப்படி ஒரு பெரும் எதிரியாகத் தென்பட்டதென்றால், இந்திய மார்க்சியருக்கு இந்து மதமும், மேலை மார்க்சியருக்கு கிருஸ்தவமும், சீன மார்க்சியருக்கு பெளத்தம்+கன்ஃபூசியப் பண்பாடும் எதிரிகளாகத் தென்படுகின்றன. மார்க்சினால் யூதம் அழிக்கப்படவில்லை என்பது போல, லெனின், ட்ராட்ஸ்கி, மேலும் ஸ்டாலின் போன்ற தயக்கமற்ற வன்முறையாளர்களினால் ஆசார கிருஸ்தவம் அழிக்கப் பட முடியாதது போல, மாஓயிச வன்முறைகளாலோ, டெங் சியாவ் பெங்கின் சிறு குழு ஆதிக்கத்தாலோ பெளத்தமோ, கன்ஃப்யூசியப் பண்பாடோ அழிக்கப் பட முடியாதது போல, இந்திய மார்க்சியராலும் இந்து மதம் அழிக்கப்படாது என்பது என் கருத்து.

பொதுவாக எந்தப் பெரும்பான்மையும் அவர்களது அரசியல் முன்னிலை பெறுவதற்கு உதவாது என்பதால் அந்தப் பெரும்பான்மைக்கு எதிர் செயல்பாடுகளை ஊக்குவிப்பது அவர்களது இயல்பு. இதன் தர்க்க நியாயங்கள் அப்படி ஒன்றும் எளியவை அல்ல. ஒரு சிறு சதுரத்துக்குள் உடலை எத்தனை கோணலாக ஆக்கிக் கொண்டு முடக்கிக் கொள்ள முடியும் என்று ஏதாவது போட்டி வைத்தால் அதில் கெலிப்பது மார்க்சியத் தத்துவ ஆய்வாளராகவோ அல்லது அதன் கருத்தியல் வாதிகளாகவோதான் இருக்க முடியும். மாறாக பாசிஸ்டுகள் அல்லது வெறும் மதவாதிகளின் கருத்துச் சிக்கல்கள் மேல் பார்வைக்கே அற்பமானவை என்பது புலப்பட்டு விடும் என்பதால் அது குறித்து நாம் அதிகம் இங்கு கவனம் கொள்ளத் தேவை இல்லை என்று கருதுகிறேன். எனக்கு அல்லது எங்களுக்குத்தான் அதிகாரம் உரியது என்று அதட்டிக் கேட்க பாசிஸ்டுகளுக்கு அதிகம் தர்க்கம் தேவைப்படுவதில்லை, பெரும்பாலும் அடையாள அரசியல்கள் மனிதரை இங்குதான் கொண்டு நிறுத்துகின்றன. எமக்குத்தான் உண்மை தெரியும் – அதனால் மற்றவர்கள் எல்லோரும் எம் பின் திரள்வது அவசியம் என்று கர்ச்சனை செய்யும் மதவாதிகளுக்கு மனப் பிறழ்வு நிரந்தரமானது. யதார்த்தத்தின் கொடூரம் தாங்க முடியாத மனிதர் மதங்களில் போய்ப் புகலிடம் தேடுகிறார், அங்கும் கொடூரம் அவர்களைக் கவிந்து மூடுகிறது என்பது மனித வாழ்வில் ஒரு பெரும் அவலம். இதில் மையத்தில் தொகுக்கப் படாத, குறிப்பிட்ட மனிதரின் கையில் அதிகாரத்தைக் குவிக்காத மதங்கள், மாறான மதங்களை விட மேல் என்பது என் கருத்து. மதமே இல்லாத நிலை எதையும் விட மேல்தான். ஆனால் நம்பிக்கை வைக்க ஏதாவது ஓர் இலக்கைத் தேடும் மனிதருக்கு மதமோ அல்லது மதமே போன்ற கருத்தியல்களோ புகலிடம் ஆகின்றன என்பது யதார்த்த நிலை. அதை மறுப்பதில் ஏதும் பயனில்லை என்று கருதுகிறேன். குறைந்த பட்சம் அவற்றின் அதிகார வெறியை அல்லது அடக்கு முறையை எதிர்ப்பதால் ஏதும் பயன் கிட்டலாம். அதேபோல மையத்தில் கட்டமைக்கப் படாத, சிதறல் கருத்தியல்கள் மோதும் பகிரங்க வெளியால் ஆன ஜனநாயக அரசியலையும் நான் இதர கருத்தியலில் மையம் கொண்டு மேலிருந்து கட்டமைக்கப்படும் வேறெந்த அரசியலையும் விட மேலானதாகக் கருதுகிறேன். ஆனால் மதங்களோ, உருத் தெளிவற்ற ஜனநாயகமோ மக்களுக்கு மிக அவசியமான, அன்றாடத் தேவையான உடல் சுதந்திரம், கருத்து சுதந்திரம், உயிர் சுதந்திரம் ஆகியவற்றைப் பூரணமாகப் பெற்றுத் தரப் போவதில்லை என்பது எனக்குத் தெளிவாகவே தெரிகிறது. அதே நேரம் ஒரு பகுதியாவது இச் சுதந்திரங்களைத் தருமாறு அவற்றை வற்புறுத்துவதும், மக்கள் அவற்றைத் தமது தேவைகளுக்கு வளைக்க முற்படுவதும் அவசியம் என்பதும் எனக்குத் தெரிகிறது. இது ஒரு குறைந்த பட்ச அரசியல்/கருத்துப் போராட்டமாக இருக்க வேண்டும். இதை ஃபூகோவின் மையக் கருத்தாக நான் கருதுகிறேன். முள்வேலி மேல் போடப் பட்ட சேலை அல்லது வேட்டி நமது அரசியல் பொருளாதாரப் பண்பாட்டு நிலைகள். கவனமாகத்தான் கைப்பிடி, கைப்பிடியாகத்தான் விடுவிக்க வேண்டும். அதைத்தான் இக்கட்டுரையில் சுட்டுகிறேன். அதுவே ஃபூகோவின் இறுதிக் கருத்துநிலை என்று எனக்குத் தோன்றுகிறது.

[கு2] யார் யாரை மன்னிப்பது என்பதில் ஐரோப்பிய நாடுகளுக்கு உள்ள இந்த அறக் குழப்பம் இன்னமும் அவர்களுக்குத் தெளிவாகவில்லை. நவீனத்துவப் பகுத்தறிவு அவர்களது தேசியம், இனப் பற்று ஆகிய பகுத்தறிவுக்கு அகப்படாத உணர்வுகளுக்கு முன் தோற்றுப் போய் நிற்கிறது. இந்த ‘பகுத்தறிவில் ‘ பிறந்த பல அரசியல் சிந்தனைகளைத்தான் இன்று இந்திய இடதுசாரியினர் இந்திய மண்ணுக்கு இறக்குமதி செய்து அதை மக்கள் தலையில் திணிக்கப் பெரும் முயற்சி செய்கின்றனர். இது போன்ற முயற்சிகளையும் கறாராகப் பார்க்க ஃபூகோவின் சிந்தனை நமக்கு உதவும். ஃபனோனின், பாபாவின் அரசியல் கருத்துகளும் இந்த வகையான, மூட நம்பிக்கையை ஒத்த, புதுக் காலனியத்துக்கு காலாட் படையாக உதவும் செயல் முறைகளை விமர்சிக்க நம்மைத் தூண்டுகின்றன. காலனியத்தையும் அடிமைகளை வைத்து வேளாண்மை செய்வதையும் ஆதரித்து அதற்கு விவிலிய நூல்களில் சான்றுகளையும் தேடிக் கண்டு பிடித்து வெள்ளையரின் நிற/இன வெறிக்குத் துணை போன மேலைக் கிருஸ்தவம், தனது கடந்த காலக் களங்கங்களை மறைத்து, இன்று இந்தியாவில் நசுக்கப் பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் தன்னைக் காட்டிக் கொள்ள மேலை நாட்டு கிருஸ்தவ அடிப்படைவாதத்தின் பெரும் நிதி உதவியுடன் ஏவாஞ்சலிகல் கிருஸ்தவம் இந்தியாவில் முயல்வதை இந்திய இடதுசாரியினர் ஆதரிக்கும் அபத்தம் இத்தகைய கருத்துக் குழப்பங்களால் தான் நிகழ்கிறது. அமெரிக்காவில் எதை இடதுசாரியினர் கடுமையாகச் சாடுகின்றனரோ அதே சிந்தனையின் இந்தியப் பதிப்பை, மேலை நாடுகளில் இடதுசாரிகளாக உலவும் முற்போக்கினர், இந்தியச் சூழலில் முற்போக்காக இனம் கண்டு அதற்குத் துணை போகும் அபத்தத்தை சந்தர்ப்பவாதம் என்று கருதாமல் வேறெப்படிக் கருதுவது ?

இத்தனைக்கும் அத்தகைய இயக்கங்கள் மேலை நாடுகளில் இருந்துதான் பெருமளவு நிதியுதவி பெறுகின்றன. அவற்றின் மேலைப் புரவலர்கள், இன்றளவும் மேலைத் தொலைக் காட்சிகளில் இந்தியப் பண்பாடு, இந்து மதப் பழக்கங்கள் ஆகியவற்றைக் காட்டு மிராண்டிப் பண்பாடாகத்தான் சித்தரிக்கின்றனர். அதிலிருந்து இந்திய மக்களை மீட்டெடுப்பது கடவுளால் தமக்கு விதிக்கப்பட்ட கட்டளை என்று கூட அவர்கள் இத்தொலைக் காட்சிகளில் பிரசங்கிக்கின்றனர். இந்திய முற்போக்குகளுக்கு இது தெரியாமலா இருக்கிறது ? மூலவரின் அறியாமையால் இன்னமும் கட்டுப்படுத்தப்படும் பக்தர்களான இந்திய மார்க்சியர் இந்திய நாகரிகத்தையே இன்னமும் எதிரியாகக் கருதுவதால் தானே இந்த வகைக் கூட்டுறவு சாத்தியமாகிறது – தவளையும் காக்கையும் ஒத்துழைத்த கதைதான் இது. ஆனால் எது தவளை எது காக்கை என்பதுதான் வரலாற்றில் பிற்பாடு விளங்கப் போகிறது.

[கு3] இந்த வகை வருணிப்பைப் பற்றி இடதுசாரியினர் கோபித்து ஒரு பயனும் இல்லை. இவை எல்லாம் இந்தியாதான் என்பது என் கருத்து. இன்றைய உலகில் காலனியத்தில் இருந்து விடுபட்ட ஒரு பெரும் நாடு மூலை முடுக்கில் இருக்கிற பத்து சிறு இனங்களுக்கெல்லாம் சுய நிர்ணயம் கொடுத்துக் கொண்டு இருக்க முடியாது. உலக அரசியலோ, அல்லது நாட்டின் நலனோ கருதாத முட்டாள் அறிவு ஜீவிகள்தான் இப்படி எல்லாம் வாதம் செய்து கொண்டு இருக்க முடியும். பிறகு இது பெரும் புற்று நோயாக வளர்ந்து இன்று காங்கோ, ருவாண்டா, சாட், சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும், செர்பியா, ஸ்லாவீனியா, குரோவேசியா, மேலும் பாஸ்னியாவில் நடந்தது போலப் பல்லாயிரக் கணக்கான மக்களின் சாவிலும், பட்டினி, பஞ்சத்திலும் தள்ளிய பின் இடது சாரியினர் ‘நாங்கள் தவறு செய்து விட்டோம் ‘ என்று கையைப் பிசைவர். காலம் கடந்த பின், எல்லாம் நாசமான பின் கையைப் பிசைந்து கொண்டு அசடு வழிவதில் இடதுசாரிகளுக்கு நிகர் யாருமே கிடையாது.

aacharakeen@yahoo.com

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 1)

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 2)

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 3)

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 4)

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 5)

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 6)

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 7)

அறிந்தே அம்மணமாக இருக்கவில்லை

Series Navigation