ஃபீனிக்ஸ்

This entry is part [part not set] of 40 in the series 20030809_Issue

ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர்.


கடந்த சில நாட்களாய் மனம் ஒரு நிலையில் நில்லாமல் பேயாய் அலைந்தது. பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கையா என்று தான் சாதாரணமாக எல்லோரும் கேட்பர். ஆனால் பிரச்சனையே வாழ்க்கையாகிப் போன எனக்கும் கூட மனக் கலக்கம் ஏற்படுவது தான் என்னைப் பல முறை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். மனத்தின் மென்மை இன்னும் முற்றிலும் போய் விடவில்லை என்பதற்குச் சாட்சிகளாக அவ்வப்போது இத்தகைய சலனங்கள் ஏற்படத் தான் செய்தன.

மூன்று வருடங்களுக்கும் குறைவாகவே நான் அனுபவித்த மன அமைதி மறுபடியும் குலையக் கூடும் சாத்தியக் கூறுகள் தெரிந்தன. அவை பல முறை பல விதமாய் அடிபட்டு அடிபட்டு மரத்துப் போன என் மனதையும் கூட பயமுறுத்துகின்றன. இந்த முப்பத்தியாறு வயதிலேயே எழுபத்தியாறு வருடங்கள் வாழ்ந்து முடித்த ஆயாசம் என்னுள். ஆயினும், வாழும் ஆசை மட்டும் விடவில்லை, அது தான் ஆச்சரியம். இது தான் போலும் பிரபஞ்சச் சுழற்சிக்கு மறைமுக உந்து சக்தி! ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற நெருப்பு அணையாமல் என்னுள் கனன்று கொண்டிருந்தது.செந்தோசாவின் கடற்கரை வார நாளாக இருப்பதால் ஓரிருவரைத் தவிர சந்தடியின்றி அமைதியாக இருக்கிறது.விடாமல் தொலையழைப்பான் அலறுகிறது. சுதா தான் எட்டாவது முறையாக அழைக்கிறாள். அவள் மட்டும் இல்லையென்றால் என் கதி ?! இருந்தாலும், .. .. ..

இப்போது எனக்குத் தேவை தனிமை. நான் தீவில் தனிமையை நாடியது பிரச்சனையை விட்டு ஓட எண்ணியல்ல. திடாரென்று சும்மாவேனும் யோசிக்க வேண்டும் என்று தோன்றினால் கூட விடுப்பெடுத்துக் கொண்டு கிளம்பும் என் பழக்கம், சுதாவிற்கும் தெரியும். அவள் கவலையெல்லாம் ஒரு வேளை எனக்கு உடல் உபாதை ஏற்பட்டால் என்று தான். எப்படியும் முன்னிரவில் வீட்டிற்குப் போய் விடுவேன் என்று சுதாவிற்கும், ஏன் தீபனுக்குமே தெரியும்.

மறுபடியும் புயலா ? தாங்குமா என் மனம் ? உடலுக்கு மட்டும் ஏது வலு ? உடலில் இல்லாத வியாதிகளில்லை. ஒவ்வாமை பலருக்கு இருக்கும் சிறு வியாதி தான். அதனால் உயிருக்கே ஆபத்தாகக் கூடிய விளைவுகளை கேள்வியே பட்டிருக்க முடியாது. எனக்கு ஒவ்வாமை இருப்பதாய் நான் அறிந்தது என் ஒன்பதாவது வயதில். அதற்கு முன் இருந்து பெற்றோர் வைத்தியம் பார்த்தாய் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால், இந்த ஒவ்வாமையின் காரணமாக பள்ளியிலும் கல்லூரியிலும் நான் பல பாடங்களை நானே படிக்கும் படியாகியிருக்கிறது. அடிக்கடி விடுப்பெடுத்தும் கூட வகுப்பில் மட்டும் முதல் மூன்று இடத்திற்குள் வந்து எல்லோரையும் மூக்கில் விரலை வைக்க வைப்பேன்.

அப்படி என்ன ஒவ்வாமையால் கூடவா உயிருக்கு ஆபத்து வரும் என்று பலர் கேட்பதுண்டு. உடலில் ஒரு பாகம் விடாமல் அத்தனையும் வீங்கித் தடிக்க ஆரம்பிக்கும். முக்கியமாக தலைப் பகுதியும் முகமும். அரிப்பு உயிர் போகும். சொறிந்து சொறிந்து என் கைகள் சோர்ந்து போகும். சொறியச் சொறிய மேலும் அரிப்பெடுக்கும். மூக்கின் உட் பகுதிகள் அதி வேகமாக வீங்க ஆரம்பிக்கும். சீக்கிரமே இரு துவாரங்களும் அடை படும். சாதாரண ஜலதோஷத்திற்கே மூக்கு அடைத்து அவதிப் படுவோரை நாம் பார்க்கலாம். மூக்கினால் மூச்சு விட முடியாவிட்டால் நாம் வாயால் தானே மூச்சு விடுவோம். அதற்கும் வழில்லாமல் என் நுனி நாக்கு முதல் உள் நாக்கு வரை தடித்து வீங்கி விடும். பிராண வாயுவை செயற்கையாகக் கூட என் கல்லீரல்களுக்குக் கொடுக்க முடியாமல் மருத்துவர் அல்லாடுவர்.

வீக்கத்தைக் குறைப்பதும் கட்டுப்படுத்துவதுமே வழி. அதற்குத் தேவையான மருந்தை ஏற்றி ஏற்றி உடல் மருந்தின் முழுச் செயல் திறனையும் ஏற்காமல் அடம் பிடிக்கும். அப்போதெல்லாம் மருந்தின் வீர்யத்தை அதிகரிக்கும் படியிருக்கும். சுய நினைவு இருப்பினும் என்னால் பேச முடியாது. ஆகையால், என்னுடைய முழுச் ‘சரித்திரத்தை ‘ யும் தெளிவாய் எழுதி என் கைப்பையில் வைத்திருப்பேன். நான் போகுமிடமெல்லாம் கூடவே அதுவும் போகும்.

மருந்து வேலை செய்து மூச்சு விட ஆரம்பித்ததும் எழுந்து உட்காரந்து மருத்துவர் மற்றும் தாதியரிடம் பேசத் துவங்குவேன். அவர்கள் ஆச்சரியத்தில் வாயைப் பிளப்பர். மரணத்தை வென்ற பெருமிதமும் உற்சாகமும் என்னுள் பீரிட்டெழும். அதன் காரணமாகவே என்னால் சட்டென்று சகஜ நிலைக்கு வரமுடிகிறதென்று எனக்குத் தெரியும். ஆனால், அவர்களுக்குத் தெரிய நியாயமில்லையே. ஒவ்வாமை வருவதற்கான காரணம் மட்டும் இன்னமும் சரிவரக் கண்டு பிடிக்க முடியாமலேயே இருக்கிறது.

சரும நோயும் என்னை விடவில்லை. அதற்காகவே என் சம்பளத்தில் பாதியைச் செலவழித்தேன்.அது மட்டுமா, சமீபத்தில் தான் மூலத்திற்கு ஒரு அறுவை சிகிச்சையும் செய்தாகி விட்டது. ஒரு மகனைப் பத்து வருடங்களுக்கு முன் பெற்றெடுத்து யமனோடு சவாலில் ஜெயித்தும் ஆயிற்று. இன்னொரு பிள்ளை பெற நினைத்தால் நிச்சயம் யமனே ஜெயிப்பானென்று மருத்துவர் எச்சரித்ததை மட்டும் நான் இன்னும் மறக்கவில்லை. ஏனென்றால், அவ்வாறு எச்சரித்த மருத்துவர் என் உயிர் தோழி சுதா தான்.அடிக்கடி என் கர்பப்பையின் பலவீனமான நிலையை நினைவு படுத்திய வண்ணம் இருந்தாள்.

உணவே மருந்து என்றுரைத்த வள்ளுவப் பெருந்தகைக்கு எதிராக நானும் ‘மருந்தே உணவாக ‘ வாழப் பழகினேன். தாய் வழிச் சீதனமாய் நீரிழிவு நோயின் அடையாளங்கள் இப்போதே என்னிடம் இருப்பதாய் சுதா கூறிவிட்டாள். ஒரு வருடமாகவே என் இரத்த அழுத்தம் இரகசியமாக என்னை அவ்வப்போது ஏமாற்றி விட்டு எகிறிக் குதிக்கிறது.

நாடே, ஏன் உலகமே உடற்பயிற்சி மற்றும் யோகா என்று இறங்கியிருக்கும் போது நான் மட்டும் விடுவேனா ? விடாமல் உடற்பயிற்சி, வேக நடை இரண்டையும் செய்தேன். உடலில் நோய்கள் தான், உனக்கும் ‘பெப்பே ‘ உன் உடற்பயிற்சிக்கும் ‘பெப்பே ‘ என்று விடாமல் அழையா விருந்தாளிகளாய்த் தலைக்காட்டின.

என் உடலில் இருந்த நோய்களையும் அதற்கு மருத்துவர்கள் கொடுக்கும் சிகிச்சை மற்றும் மருந்துகள் போன்றவற்றை ஆர்வமாய் சிறு வயது முதலே அறியத் தொடங்கியதில் பல மருந்துப் பெயர்கள் மற்றும் சிகிச்சை முறைகள் எனக்கு அத்துப் படியாயின. அவற்றைப் பற்றி நான் பேச ஆரம்பித்தால் நான் ஒரு ஆங்கில ஆசிரியை என்று சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப மறுப்பர். மருத்துவ சஞ்சிகைகளை சுதா படித்ததும் மறக்காமல் நானும் வாங்கிப் படிப்பதுண்டு. பேசாமல் நான் மருத்துவமே படித்திருக்கலாமென்று அவள் பல முறை பூரிப்புடன் கூறியிருக்கிறாள்.

ஏராளமான தடவை யமனிடம் கைகுலுக்கும் பேரு பெற்றவள் நான். இதனாலேயே எனக்கு மரண பயம் துளியும் இல்லை. ஆனால், அதற்காக மரணத்திற்கு நாள் குறித்தால், ‘சரி ‘ என்று ஏற்க முடியமா என்ன! கண்ணைத் திறந்து கொண்டே கிணற்றில் குதிக்கச் சொன்னால் ?சாவைச் சந்திக்காதவர்களை விட எனக்கல்லவோ வாழும் ஆசை அதிகமாய் இருக்கிறது. இந்த ஆசை மட்டும் இல்லாதிருந்தால் நான் எப்போதோ காலனிடம் தோற்றிருப்பேன். வாழும் ஆசை என்றால் ஏதும் சாதிக்கும் வெறி தான் அதில் அதிகம். ஏதும் உலகத்திற்காக இல்லாவிட்டாலும் நாட்டிற்காக செய்ய வேண்டும் என என் மனம் துடித்தது. அது கூட வேண்டாம், ஒரு சிறு பகுதி மக்களுக்காகவே இருக்கட்டுமே, செய்ய வேண்டும். ஏதோ ஒரு வகையில் செய்ய வேண்டும். தன் மறைவுக்குப் பிறகும் தன் நினைவை விட்டுச் செல்ல எந்த மனிதன் தான் விரும்ப மாட்டான் ?! நானும் அதை மிகவும் விரும்பியதில் வியப்பொன்றும் இல்லை.

உடல் பெற்ற வலியும் கஷ்டமும் என் உடலுக்கு வலுவையும், மனதால் பட்ட ரணமும் வலியும் என் மனதிற்கு அசாத்திய நிதானத்தையும் துணிச்சலையும் கொடுத்தன. பொதுவாகவே ஒரு பெண்ணுக்குள் ஏற்படும் பாதகமான விளைவுகள் என்னுள் ஏற்படவில்லை என்பது தான் என் அதிர்ஷ்டம்.நெருப்பில் எத்தனை முறை விழ நேர்ந்தாலும் மறுபடியும் மறுபடியும் உயிர் பெற்று எழும் ‘ஃபீனிக்ஸ் ‘ பறவை போல நானும் வாழ்க்கையில் எண்ணற்ற தருணங்களில் எழுந்ததுண்டு.

ஆனால், இன்று பெரும் இக்கட்டு. தீபனின் கோரிக்கை முற்றிலும் நியாயமானது தான். அதில் யாதொரு சந்தேகமும் இல்லை. இருப்பினும் என் கோணத்திலிருந்து பார்த்தால் தானே என்னுடைய எதிர்ப்பிற்குக் காரணம் புரியும் ? இரண்டு வருடத்திற்கு முன், எங்கள் திருமணத்திற்கும் முன்னரே பேசி ஒரு மனதாக முடிவெடுத்தும் கூட இப்போது தீபன் தன் மனதை மாற்றிக் கொள்கிறார்.

இன்று தீர்மானித்து நாளை மாற்றிக் கொள்ளும் மனித மனம், இரண்டு வருடங்களில் மறாதா ?! மாறும் தான். ஆனால், இதற்கெல்லாம் சட்டப் படி ஒப்பந்தம் போட்டுக் கையெழுத்திடவா முடியும்.

மனித மனங்களின் மாற்றங்கள் தான் எத்தகையது! நினைக்க நினைக்கத் துளிக் கூட அலுப்பேல்லாமல் வியக்க வைக்கிறது. ஒரு தீர்மானமான வரையறை இல்லாததும் சுழற்சியோ ஒழுங்கோ இல்லாததும் உலகிலேயே மனித மனமாகத் தான் இருக்கக் கூடும். உலக உயிரினங்கள், மலை மற்றும் கடலும் காற்றும் கூட மாறுவதில்லை. மனிதன் மாறி விட்டானென்று கவி வியந்தது முற்றிலும் நியாயமே! பல சமயங்களில் நியாய அநியாயங்களே கூட இயற்கைக்குப் புறம்பாக மனிதனை மாற்றுகிறது. இது தவிர முன்னேற்றம் என்ற பெயரில் அவனே ஏற்படுத்திக் கொண்டுள்ள நாகரீகமுமே இயற்கையிடம் அவனை பகை கொள்ள வைக்கிறது.

மனிதமனங்களின் மாற்றங்களைத் தனக்குச் சாதகமாக இருக்கும் போது ரசித்து மகிழும் இந்தப் பாழும் மனம் தனக்குப் பாதகமாய் இருக்கும் போது மட்டும் அங்கலாய்ப்பது தான் பெரும் விந்தையிலும் விந்தை! எதிலுமே சாதகங்களையும் பாதகங்களையும் தராசில் நிறுத்துப் பார்த்துப் பழகி மனிதமனம் ஒரு பரிணாமம் கொண்டதுவோ ?! அதைக் கடந்து வேறு ஒன்றும் இருப்பதை மனிதமனம் பல வேளைகளில் மறந்து விடுவது மிக்க வேதனை தான்.

எப்போதோ நான்கு மாதங்களுக்கு முன் ஆங்கில ஆசிரியை பணிக்கு விண்ணப்பித்திருந்தேன். அதற்கு நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருந்தார்கள். விண்ணப்பிக்கும் போது ஏதோ சாதாரணமாகத் தான் விண்ணப்பித்தேன். சக ஆசிரியர்கள் கூட என்னைக் கேலி செய்தனர். சீனாவில் ஏதோ ஒரு கோடியில் இருக்கும் கிராமத்தில் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும். அதுவும் இருக்க இடம் , உணவு வழங்கப் படும்; சம்பளம் என்றால் அப்படியொன்றும் பெரிதாக இல்லை. சேவை மனப்பான்மை ஒரு தகுதியாகவே குறிப்பிடப் பட்டிருந்தது. யுனெஸ்கோவின் ஏற்பாடு. சவால்களை விரும்பும் எனக்கு அந்தக் குளிர் பிரதேசத்தில் கொஞ்ச நாட்களேனும் சேவையாக வேலை செய்ய ஆர்வம் பிறந்தது. முடியாது என்று மற்றவர் கருவதை செய்து பார்க்கும் ஆர்வம் சிறு வயது முதலே இருந்ததால்

உடன் பிறந்த நன்றியுணர்ச்சி எனக்குப் பல வகையான நட்புகளைப் பெற்றுத் தந்துள்ளது. பள்ளிகளில் படிக்கும் போதும் சரி பின்னர் வேலையில் அமர்ந்து பொருளீட்டும் போதும் சரி நான் மிகப் பிரபலம். என்னைச் சுற்றி எப்போதுமே ஒரு கூட்டம் இருக்கும். அதில் பங்களாதேஷ் துப்புரவாளரும், ‘கராங்குனி ‘ தாத்தாவும், ஏன் மிகப் பெரிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் வரை எல்லா தரப்பினரும் வயதினரும் அடக்கம். எள் என்பதற்கு முன் எண்ணையாய் பிறருக்கு உதவ மிகவும் பிடிக்கும் எனக்கு. ‘நீ தான் உதவ வேண்டும் ‘ என்று யார் என்னிடம் வந்தாலும், கை வேலைகளையெல்லாம் அப்படியே போட்டு விட்டு உதவச் செல்வதை மட்டும் என்னால் மாற்றிக் கொள்ளவே முடிந்ததில்லை.

அகலமாகச் சிரித்துக் கொண்டு ஒவ்வொரு நாளையும் எதிர் நோக்கும் ஒரு பட்டாம்பூச்சியாகத் தான் இப்போதும் இருந்திருக்கிறேன். சிரித்த முகமென்று சிலரும் ‘சரியான லூஸு ‘ என்றும் பலரும் கூறுவது எனக்குத் தெரியும். எந்தத் துறையாக இருந்தாலும் அதில் என்ன தான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் இயல்பாகவே அமைந்திருந்தது எனக்கு. இதனால் பலவித விமரிசனங்களுக்கும் ஆளாகியதுண்டு நான். சுதா மட்டுமே என்னைச் ‘சுடர் மிகும் அறிவு ‘ என்று பெருமையாகக் கூறுவாள். ஆனால், பெரும்பாலும் ‘அலட்டல் ‘ ‘கிறுக்கு ‘ போன்ற பட்டப் பெயர்களே எனக்கு தாராளமாகக் கிடைத்தன.

தொடக்கப் பள்ளியிலிருந்து கூடவே இருக்கும் சுதா கூடப் பலமுறை என்னை ஏசியதுண்டு. தோழமை பாராட்டி இரண்டு வார்த்தை என்னைப் புகழ்ந்து பேசி, தன் காரியத்தைச் சாதித்துக் கொள்கின்றனர் என்றும் நான் ‘சரியான ஏமாளி ‘ என்று அவர்களே பின்னால் பேசுகின்றனரென்றும் பற்பல செய்திகளை மிகவும் கரிசனத்துடன் என் காதுகளுக்குக் கொண்டு வருவாள். என் முகத்திற்கு நேராகவே என்னைத் தூற்றியவரையே கூட கண்ணிமைக்கும் பொழுதில் என்னால் மன்னிக்கவும் முடியும்; அவரது ஏச்சை மறக்கவும் முடியும். கூடப் பிறந்த குணங்கள் கட்டை வேகும் வரை கூடத் தானே வரும்!

ஒரு மாதமாகவே தீபனின் தீவிரம் என்னை அழுத்த ஆரம்பித்தது. வழக்கம் போல சுதாவிடம் தான் பேசினேன். அவளும் எனக்காக நேரம் ஒதுக்கிப் பேசவே செய்தாள். ஆனால், இம்முறை தீபனுடைய கோரிக்கைக்கு மட்டும் மசியக் கூடாதென்று தீர்மானமாகக் கூறினாள். கர்பப்பை தவிர எனக்கு இடுப்பெலும்பும் மிகவும் பலவீனம் என்று எனக்குப் பிரசவம் பார்த்த அவளுக்குத் தானே நன்கு தெரியும். அதனால், தீபன் எதிர் பார்க்கும் குழந்தையை மட்டும் பெற நினைக்காதே என்று தீர்மானமாகச் சொல்லி விட்டாள்.

பூமியில் பிறக்கும் ஒவ்வொரு உயிரினமும் தன் பிரதிநிதியாக ஒரு உயிரை விட்டுச் செல்ல நினைப்பது இயற்கை. மூன்று நான்கு என்றில்லா விட்டாலும் ‘பேர் சொல்ல ‘ என்று ஒரே ஒரு குழந்தையை ஒவ்வொரு மனிதனும் எதிர் பார்க்கவே செய்வான். அதுவும் நம் சிங்கையில் மூன்றோ அதற்கும் மேலோ பெற்றுக் கொள்ள அரசாங்கமே ஊக்குவிக்கிறது. இந்நிலையில், ஒரு குழந்தையும் பெற்றுக் கொடுக்க முடியாமல் மனைவி இருக்கும் போது கணவனுக்கு நிச்சயம் வருத்தம் இருக்கும். ஆனால் இது தெரிந்து தானே என்னை மணமுடித்தார். இப்போது திடாரென்று மனதை மாற்றிக் கொண்டால் ?!

ஏன் எனக்கே கூட ஒரு குழந்தை இருந்தால் வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்கும் என்று பல முறை தோன்றும். ஆசைப் படவும் ஒரு தகுதி வேண்டியிருக்கிறது. அந்தத் தகுதி மட்டும் தானே எனக்கு இல்லை. பெற்ற ஒரே மகனைப் பார்க்கவும் முடியாமல் வாழ வேண்டிய துரதிஷ்டத் தாயாகிப் போனேன் .

இப்போது அவனுக்குப் பதினோரு வயது முடிந்து விட்டது. நன்றாக வளர்ந்திருப்பான். பார்த்து நான்கரை ஆண்டுகள் ஆகின்றன. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை ஒரு வருடப் பிரிவிற்கப்புறம் அவனைப் பார்க்கப் போயிருந்தேன். பரிச்சயமேயில்லாதவரை பார்ப்பது போலப் பார்த்தவன், நான் சிரித்ததுமே பதிலுக்குச் சிரித்தான். ‘சரி, என்னை மறக்கவில்லை, ஆயிரமிருந்தாலும் பெற்றவளில்லையா! ‘ என்று நினைத்தேன். அடுத்த நிமிடமே, ‘ஆண்டி, நீங்க மம்மியோட கூட்டாளியா, உங்க பேர் என்ன ?, ‘ என்றதுமே என்னுள் ஏதோ ஒன்று லொடக்கென்று உடைந்து இதயம் வலித்தது.

சிறிது நேரம் பேசி விட்டுப் பிரிய முடியாமல் தவித்த என் தாய் மனதை அதட்டி வலுக் கட்டாயமாய் இழுத்துக் கொண்டு தான் அன்று ஜோஹூரிலிருந்து சிங்கைக்கு வந்தேன். ஒரு வருடத்தில் ஆறு வயதுச் சிறுவன் அம்மாவை மறக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. அவன் தந்தை மறுமணம் செய்து கொண்டு அவனுக்கு அவளை ‘மம்மி ‘ யாக்கி, பிள்ளையை மூளைச் சலவையும் செய்திருந்தார்.

அதற்கப்புறம் ஒரு முறை சுதா அவனைப் பார்த்து விட்டு வந்த போது அவன் தன் புதிய ‘அம்மா ‘வுடன் நன்றாக ஒட்டிக் கொண்டு விட்டானென்று கூறினாள்.அவனது புது அம்மா நல்லவளாய் இருந்தது மட்டுமே எனக்குச் சற்று ஆறுதல். தனக்குத் தம்பிப் பாப்பா பிறந்திருப்பதாயும் சொன்னானாம். உடுத்தியிருந்த தன் கால் சட்டையைக் காட்டி ‘ஜமுனா ஆண்டி ‘ வாங்கிக் கொடுத்ததாய் கூறினானாம். என்னை ‘ஆண்டி ‘களின் பட்டியலில் அவன் சேர்த்தது என்னை வருத்தத்தில் ஆழ்த்தியது என்பதை ஒப்புக் கொண்டேயாக வேண்டும்.

ஆனால், ஒரு வருடத்தில் அதையும் ஜீரணித்து விழுங்கினேன். அவனுக்கு ஒரு புதிய அம்மாவும் தம்பியும் மட்டுமின்றி புதிய வாழ்க்கையே அமைந்திருக்கிறது. என்னை எப்போதாவது பார்க்கும் அவனது பிஞ்சு மனம் குழம்பினால் புது உறவுகளுடன் அவன் ஒட்டாமல் போகலாம். அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் அல்லாட நேரும். அவனைப் போய் பார்ப்பதில்லை என்று முடிவுக்கும் வந்தேன். அதன் மூலம் நான் எனக்கு மட்டுமில்லாமல் அவனுக்கும் குழப்பங்களைத் தவிர்க்க எண்ணினேன்.

எப்படியும் ஒரு காலம் வரும், அவன் குழப்பங்களின்றி ஓரளவு மன முதிர்ச்சியடைந்து வாலிபனாக வளர்வான். அப்போது நிச்சயம் அவனைப் போய் பார்ப்பேன். அவனும் என்னைப் புரிந்து கொள்வான் என்று இன்றும் என் மனம் நம்புகிறது.

வேலையை விட்டு விட்டு வீட்டோடு இருக்க வேண்டும் என்று பிடிவாதமாக அவனுடைய அப்பா கூறியது தான் மணவிலக்குக்குக் காரணம் என்பது அவனுக்கு அப்போது நிச்சயம் புரியும். மற்ற சிறு சிறு காரணங்கள் இருக்கவே செய்தன. எல்லாமே அதன் தொடர்புடையவையாகவும் இருந்தன. அல்லது அந்தக் காரணத்தைச் சுற்றியே அமைந்திருந்தன. ‘நான் சொல்லிக் கேட்க மாட்டாயா ? ‘ என்ற ஆணாதிக்கத்தின் முன்னால் என் தைரியமெல்லாம் தவிடு பொடியாயின. இருவரும் பிரியாதிருக்க இரு பக்கத்து உறவினரும் தலை கீழாக நின்று முயன்றனர். இரண்டு வருடங்கள் முயற்சிகளிலேயே கழிந்தது. வேலையை விட நான் தயாராக இல்லை அப்போது. ஐந்தாறு வயது கூடியதில் ஏற்பட்டிருந்த முதிர்ச்சி, அந்தப் பிடிவாதத்தை இன்று அடையாளம் காண்கிறது.

ஆனால், அன்றோ ஒருவர் பேச்சையும் கேட்காது பிடிவாதம் பிடித்தேன். என்னைப் பெற்றோரும் உடன் பிறந்தோருமே கூட என் மகன் அவன் தந்தையோடு இருப்பதே நல்லதென்றனர். என்னைப் பெற்றவளே ஒரு புறம் எனக்காக இரகசியமாகக் கண்ணீர் சிந்தி விட்டு, நேரில் என்னைப் பார்க்கும் போது, ‘ என்ன அறிவு ஜீவியாக இருந்தென்ன, வாழ்க்கையில தோற்கத் தயாராயிட்டியே ? ‘ என்று இடித்துரைத்தாள்.

மணமுறிவு என்பதை வாழ்க்கையின் தோல்வி என்று அம்மா நினைத்தால் அதற்கு நான் பொருப்பல்ல. திருமணம் வாழ்க்கையின் ஓர் அங்கம் என்று மட்டுமே என நம்பிய எனக்கு அது தோல்வியாகவே தெரியவில்லை. மணமுறிவு அப்படி ஒன்றும் எனக்குப் பெரியதாய்த் தெரியவில்லை. ஆனால், பகைமை இல்லாது பிரிந்திருக்கலாமே என்று இன்றும் வருந்தியதுண்டு. பகைமை முற்ற நானும் ஒரு காரணம். அது என் இயல்புக்குப் புறம்பானது தான். முளையிலேயே கிள்ளாமல் வளர விட்டதும் ஒரு வகையில் என் தவறு.

மற்றபடி என் பிடிவாதத்திற்கும் வலுவான காரணம் இருந்தது. எனக்கிருந்த பணத்தேவை முக்கியமான காரணம். எனக்கு அடிக்கடி என் மருந்துச் செலவுகளுக்கு பணம் தேவையாக இருந்தது. மற்றவர் போல எப்போதேனும் மருந்தும் மருத்துவமனையும் தேவையென்றால் பரவாயில்லை. மாதத்தில் எல்லா நாட்களுமே தயாராக இருக்க வேண்டியிருந்தது. நிச்சயம் ஒருவர் சம்பாத்தியம் போதாது.

நான் பெற்ற பிள்ளைக்கு பிறந்த நாள் முதல் புட்டிப்பால் கொடுக்க வேண்டிய கட்டாயம். அதற்குக் காரணம் என் வியாதிகளுக்கு நான் எடுத்துக்கொண்ட மருந்துகள். முற்றிலும் பால் சுரப்பே இல்லை. அவன் தோலிலும் என்னைப் போன்றே சரும நோயின் அறிகுறிகளை அவனது மூன்றாவது வயதிலேயே கண்ட நான், அதை சிகிச்சை செய்து குணப் படுத்த ஆரம்பித்திருந்தேன். தேவையும் பொறுப்பும் இரட்டிப்பானது. வேலையை விட முடியாது என்ற என் பக்கத்து நியாயம் யார் காதிலும் அப்போது விழவில்லை.

சம்பாதிக்கும் திமிர் எனக்கிருந்ததாக என்னைச் சுற்றியிருந்தோர் நினைத்தனர். சிங்கையில் நான் பார்த்த வேலை நல்ல வேலை. அதை விட முடியாதிருந்தது. உள்ளூரில் வேறு நல்ல வேலை கிடைக்க வழியிருக்கவில்லை. வேலைக்குப் போய் வந்ததில் பிள்ளையை நான் கவனிக்கவில்லை என்பதும் ஒரு குற்றச்சாட்டு. உண்மையில் உற்றார் அனைவரும் அருகிலேயே வசித்து வந்ததில் அவன் சிறப்பான கவனிப்புடனே வளர்ந்தான்.

வாழ்க்கையே ஓர் அனுபவம். அனுபவப்பட்டு விட்டு பின்னர் முழுமையாக ஒரு வாழ்க்கையை வாழமுடிந்தால் எத்தனை அருமையாக அமையும் ?! ஆனால் சுவாரசியமில்லாமல் போகலாம். எல்லோரது வாழ்வும் ஒரே மாதிரி அமையலாம். அதுவே கூட அலுப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தலாம்.

சுதா மேல் படிப்பிற்காக இங்கிலாந்து சென்றிருந்த நேரம். கடிதத் தொடர்பு மட்டுமே எங்களிடையே இருந்த காலம். அவளிருந்திருந்தால் நான் அந்தக் கட்டத்தை இன்னும் கூட மன உறுதியுடன் சந்தித்திருப்பேன். மனக் கஷ்டம் மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட்டுத் தவித்த போதெல்லாம் தீபனே துணையிருந்தார். ஜோஹூரில் வீடும் சிங்கையில் தொடக்கப்பள்ளியில் வேலையுமாக நான் அலைந்த நாட்கள். தீபன் பக்கத்து வீட்டில் குடியிருந்தார்.என் திருமணம் மயிரிழையில் ‘இப்போவோ அப்பவோ ‘ என்று ஊசலாடிக் கொண்டிருந்த போதெல்லாம் பெரும் அளவில் உதவியிருந்தார் தீபன்.

அதற்கெல்லாம் என் தோலைச் செருப்பாகத் தைத்து அவர் கால்களுக்குக் கொடுத்தாலும் தகும். எனக்கு உதவி செய்த அவர் ஏச்சுக்கும் பேச்சுக்கும் உள்ளானார். அந்தச் சமயத்தில் தான் தீபன் என்னை மணக்க விரும்புவதாகக் கூறினார். என்னால் நம்ப முடியவில்லை. ஒரு நண்பனைப் போல நினைத்துப் பழகியிருந்த எனக்கு முதலில் தீபனின் எண்ணத்தை ஏற்க முடியவில்லை. ஏனென்றால், திருமணத்திற்கு என் மனம் அப்போது தயராகவில்லை.

கிட்டத் தட்ட ஆறேழு மாதங்கள் யோசித்து பின் தீபனின் நச்சரிப்பிற்காகவே மறுமணத்திற்கு ஒப்புக்கொண்டேன். சுதா அப்போது சிங்கை திரும்பியிருந்தாள். என் தீர்மானத்தை அவள் ஆதரிக்கவில்லை. உன் காதல் திருமணமே முறிந்த போது ‘நன்றியுண்ர்வில் ‘ ஒரு திருமணம் நீடிக்குமா என்று கேள்வி கேட்டாள். முழுமையாகவும் என் மனத்தில் ஆர்வம் இல்லாதிருந்தாலும் தீபன் நல்லவர் என்பதால் அவளது சந்தேகம் அநாவசியம் என்று தான் அன்று எனக்குத் தோன்றியது. இதைப் பற்றி இருவரும் நிறைய விவாதித்தோம். சுதா என் நலனில் கொண்ட அக்கறை என்னை கோபப்படுத்தவில்லை. மாறாக நன்கு யோசிக்க வைத்தது.

என்ன யோசித்து என்ன பயன் ? மனிதன் பிறந்ததுமே பிரச்சனையும் உடன் அல்லவோ பிறந்துவிடுகிறது! முன்பு பிரச்சனை என் வேலை ஒரு காரணமாய் அமைந்ததென்றால், இதோ இப்போது தீபனின் குழந்தை ஆசை . தீர்வு தான் என் தேடலின் நோக்கம். அன்று பிரச்சனையை முளையிலேயே கிள்ளாது விட்டதன் விளைவுகளை நான் துளியும் மறக்கவில்லை.

அப்போது முதிர்ச்சியின்மையின் காரணமாய் சுமூகமாகப் பேச வேண்டிய சந்தர்ப்பத்தில் கூட சரிக்குச் சரியாக சவாலாய்ப் பேசியதில், நண்பனாகிக் காதலனாகி பின் கணவனாகியிருந்த ஒருவரின் எதிரியாக நான் ஆனேன். மணமுறிவிற்குப் பிறகும் கூட குறைந்த பட்சம் பேச்சு வார்த்தை இருந்திருக்கலாம்.

இருவரிடமும் பொறுமையின் சுவடே காணாமல் போயிருந்த நேரம். இருவருமே யோசிக்கவும் நேரமில்லாது வேலைகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்தினோம். விளைவு, ஒரு நண்பனை எதிரியாக்கிக் கொண்டு மகனையும் பார்க்க முடியாமல் போனது. காலத்தின் சுவடுகளைப் பின்னோக்கிக் கொண்டு போக முடியுமா ?!

சமீப காலமாக தீபனுக்குத் தன் தம்பியின் மகளையும் மகனையும் பார்த்ததிலிருந்து, குழந்தை ஆசை பிறந்திருக்கிறது. நிச்சயம் நியாயமான ஆசை தான். ‘ஆயிரம் தான் தம்பி புள்ளைங்கன்னாலும் தன் பிள்ளைங்க மாதிரி வருமா ? ‘ என்று எடுத்துக் கொடுக்க அவருடைய அம்மா வேறு வீட்டிற்கு அவ்வப்போது வந்து போனார். மற்றவருக்குச் சரி, நான் இருந்தாலென்ன செத்தால் தான் என்ன ? ஆனால் தீபனுக்கும் கூடவா ?

அந்தக் குழந்தைகளைப் பார்க்கும் தீபனின் கண்கள் எப்படி மின்னுகின்றன! பக்கத்தில் இழுத்து வைத்துக் கொண்டு அவர்களைத் தடவியும் கொஞ்சியும் ரசிப்பது எனக்குப் புரியாமல் இல்லை.அவர்களைப் பார்க்கும் போது எனக்குமே அந்த ஆவல் எழுகிறது. ஆனால், தீபன் என் நிலையை முற்றிலும் மறந்தவர் போலப் பேசுவது தான் எனக்குக் கொஞ்சம் எரிச்சலைக் கொடுக்கிறது. கடந்த ஒரு மாதமாகவே தீபனின் ‘குழந்தை ‘ நச்சரிப்பு அளவிற்கதிகமாக இருப்பது போல உணர்கிறேன் நான்.

தீபன் மணம் புரிவதற்கு முன் நானும் சுதாவும் என் உடல் நிலையை எடுத்துரைத்த போது மிகவும் தெளிவாகப் புரிந்து கொண்டார். ஆனால் இன்று அதில் ஒன்றுமே நினைவில் இல்லாதது போல நடக்கிறார். அன்று சுதா சொன்னது சரிதானோ ? ‘குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன் என்ற நிபந்தனையெல்லாம் நடை முறைக்கு ஒத்து வராது, அப்படியே ஒத்து வரும் போல இருந்தாலும் பின்னாளில் அதுவே பிரச்சனைக்குப் பிள்ளையார் சுழியாகும் ‘, என்று விடாமல் என்னிடம் வாதிட்டாள். நான் தான் நடைமுறையிலும் சாத்தியம் தான் என்று நிரூபிக்க சவாலாகவே ஏற்றேன்.

மரணத்திற்கு பயந்தவள் நானல்ல. இப்போது கூட மறுபடியும் சுதாவின் எச்சரிக்கையை மீறி மறுபடியும் ஒரு சவாலாய் நான் கருத்தரித்து பிள்ளை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், தெரிந்தே ஒரு பச்சிளங்குழந்தையை தாயில்லாமல் செய்ய வேண்டுமா என்று தான் யோசிக்கிறது என் மனம்.

தவிர நான் சாதிக்க வேண்டும். எடுத்த பிறவிக்காக ஏதேனும் சேவையும் ஆற்ற வேண்டாமா ? அன்னை தெரேசா செய்ததில் கோடியில் ஒரு பங்கானும் என் பங்கிற்கு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இன்று நேற்றல்ல, சிறு வயது முதல் என்னுள் இருக்கிறது. இன்றும் நான் பிறந்து வளர்ந்த கல்லாங் வட்டாரத்தில் நான் பிரபலம். அதற்குக் காரணம், அன்றே நான் பேதமோ அல்லது பிரதிபலனோ பாராது பலருக்குப் பல விதமாக உதவியிருக்கிறேன்.

படைப்பிற்கு என்று இறைவன் பெண்ணைப் படைத்திருக்கிறான். ஆனால் படைக்கும் போதே தன்னை அழித்துக் கொள்ளத் துணியவேண்டுமா ? தீபன் வேறு ஒரு மருத்துவரைக் கலந்தாலோசிக்கலாம் என்றார். சுதாவை விட வேறு ஒருவர் எனக்கு நல்ல அறிவுரை கொடுக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. இருப்பினும், அவரது திருப்திக்காக ஒத்துக் கொண்டு வேறு மருத்துவரையும் பார்த்தாயிற்று. அவரும் சுதாவின் கணிப்பு நூறு சதவீதம் சரியென்று கூறிவிட்டார். இருந்தாலும் தீபன் மட்டும் விடாமல் அதே பல்லவியைப் பாடுகிறார்.

கருத்தரித்து ஒரு பிள்ளையைப் பெற்றெடுக்க நான் தயாராக இல்லை. தீபனைத் திருப்திப் படுத்த முடியும் என்பதைத் தவிர வேறு ஒரு சாதகமும் இல்லை. பாதகங்கள் ஏராளமாய் இருக்கின்றன. யோசித்து யோசித்து தலை வலி வந்தது தான் மிச்சம்.

பிரச்சனையைத் தற்காலிகமாக ஒதுக்கி விட்டு ஒரே கூரையின் கீழ் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக் கொள்ளும் போதெல்லாம் ஒதுக்கிய பிரச்சனையே நினைவில் வருமென்றால் நாட்களைக் கழிப்பது தான் எவ்வளவு கடினம் ? இது வரை இந்த விஷயத்திலும் சரி, வேறு விஷயத்திலும் சரி எங்களிடையே வாக்குவாதம் வந்ததேதில்லை. சமீபமாய்த் தான் இந்த பிரச்சனை குறித்து வரக் கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. முதல் ஓரிரு முறை வரும் போது இருக்கும் குற்ற உணர்வு பிறகு இருக்காது. மெள்ள மெள்ள பிரச்சனை விரிந்து பல கிளைப் பிரச்சனைகள் முளைக்கலாம். நேராக்கவே முடியாத படி பூதாகாரமா உருவெடுத்தால் பிறகு அந்த இறைவனாலும் உதவ முடியாது. சூடு கண்ட பூனையல்லவா நான், யோசித்தேன்.

இப்போதைக்கு தீபனுக்கும் எனக்கும் முழுமையான தனிமையே தேவை. இருவரும் யோசிக்க, ஒருவர் மற்றவரின் தேவையை முழுமையாக உணரத் தனிமையே தேவை . பிரிவு இருந்தால் பல நன்மைகள் ஏற்படும் போல இருக்கிறது. கொஞ்ச காலம் பிரிந்திருந்து விட்டு மறு படியும் கலந்து பேசலாம்.

அப்போதும் திடமாகத் தனக்கென்றொரு வாரிசு தேவை என்று தீபனுக்குத் தோன்றினால் சுமூகமாகவும் சினேகமாகவும் கை குலுக்கிப் பிரியலாமே. வேறு ஒரு துணையைத் தேடிக் கொண்டு தன் விருப்பத்தை அவரும் நிறைவேற்றிக் கொள்ளலாம். எங்களிடையே நட்பும் எப்போதும் போல நீடிக்கும். அதைவிட முக்கியமாக பகையுணர்வைத் தவிர்க்கலாம்.

இதற்கு ஒரே வழி சீனாவில் கிடைக்கக் கூடிய வேலை ஒத்துக் கொண்டு நான் கிளம்புவது தான். அங்கு போக வேண்டும் என்று நினைப்பது பிரச்சனையினால் அல்ல. பிரச்சனையிலிருந்து நான் நிச்சயம் ஓடவில்லை.விருப்பம் இருப்பதால் தானே போக நினைக்கிறேன். அதனால் சுதாவிடம் மட்டும் இரண்டுக்கும் உள்ள தொடர்பைக் கூறினால் போதும். தீபனுக்குக் கூட சாதாரணமாக ஒரு வருடத்திற்கு அங்கு வேலை செய்யப் போவதாய்க் கூறினால் போதும்.

வேற்றுமையிலும் ஒற்றுமை போல பிரிவிலும் நட்பையே நாடுகிறது என் மனம். அதற்கு நிச்சயம் இதுவே ஒரு நல்ல தீர்வாக அமையும் என்று என் உள் மனம் அடித்துக் கூறுகிறது.

கையடக்கத் தொலைபேசியை எடுத்து, அதற்கு உயிரூட்டி சுதாவின் எண்களை ஒத்தினேன். உடனே ‘ஜமுனா ‘, என்று என் பெயரை கூப்பிட்ட படியே எடுக்கிறாள். ‘ சுதா, நான் சீனாவுக்குப் போறதா முடிவு பண்ணிட்டேன். இப்போ வீட்டுக்குப் போறேன். நாளைக்கி காலையில வந்து விவரமாச் சொல்றேன்,ம்.. சரியா,ம் . ., பை. ‘

வானில் வெளிச்சம் முற்றிலும் மறைந்து இருள் கவ்வும் நேரம் என்னுள் இருள் மறைந்து நிர்மலமான வெளிச்சம் பரவியது. தொலைவானில் ஒரு பறவை தன் கூட்டை நோக்கிப் பறக்கிறது.

(முற்றும்) (Dedicated to my only dear sister)

( தமிழ் முரசு – 24th&31st May 2003)

sankari01sg@yahoo.com

Series Navigation

ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர்