ஃபிடலுக்கு ஒரு பாடல் – செ குவேரா

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

தமிழாக்கம் : புதுவை ஞானம்.


விடியலை அறிவிக்கும் வீரமிக்க தூதுவனே ‘
அமைதி குலுங்கும் அகன்ற சாலைகளினூடே
வந்து கொண்டிருக்கிறோம்….
நீ நேசிக்கும் பசிய தீவினை விடுவிக்க ‘
மார்ட்டியினின் புரட்சிக் கனலை
விழிகளிலே தேக்கி வந்து கொண்டிருக்கிறோம் ‘
அடிமைத் தளையென்னும் அவமானம் தகர்த்தெறிய
‘வெற்றி அல்லது வீர மரணம் ‘ என வெஞ்சூளுரைத்து
விரைவாய் வருகின்றோம் ‘

உன்னுடைய முதல் வேட்டினிலே…
கன்னித்துயில் கலைந்து காடு விழித்தெழும் போதினிலே
அடுக்கடுக்காய் வேட்டோசை எழும்…எங்களை
உன் பக்கத்தில் காண்பாய்.

‘நிலம் – நீதி–உரிமை–உணவு ‘
உன் அறை கூவல் காற்றில் மோதித்தெரிக்கையில்
கூட்டுக்குரலெழும்பும்…எங்களை
உன் பக்கத்தில் காண்பாய் ‘

வேட்டையின் முடிவினிலே
கொடுங்கோன்மையின் புரையோடிய அவயங்களை
அறுவைச் சிகிச்சையால் அறுத்தெரியும் போது
பஞ்சுடன் நிற்கும் தாதியாய் – எங்களை
உன் பக்கத்தில் காண்பாய் ‘

விடுதலை ஈட்டிகள் விளைவித்த காயத்தை – அந்த
ராட்சத மிருகங்கள் நக்கியழும் போது
கனவுகள் நிறைந்த இதயத்தோடு – எங்களை
உன் பக்கத்தில் காண்பாய்.

மெடல்களும் ஆயுதங்களும் மேனியெங்கும் இருந்தாலும்
ஈக்களின் கூட்டமே அந்த ஈனர்கள் கூட்டம்.
வாளை மழுங்க வைக்கும் எங்கள் வைர நெஞ்சங்கள்
ஊளை ஈக்கள் முன்னே உரம் குன்றிப் போய்விடுமோ ?

நாங்கள்

அவர்களது துப்பாக்கிகளை ரவைகளைக்
குன்றுகளைக் கைப்பற்றுவோம்…அவ்வளவே.

ஒரு கால்….முன்னணியில்
எதிரியின் குண்டுகள் எங்களைச் சில்லிட்டுப் போக வைத்தால்
உன்னுடைய ‘க்யூபன் ‘ கண்ணீர்த்துளிகளால்
எங்கள் எலும்புகளை மூடு…
அது போதும்.

ஏனெனில்

அமெரிக்க சரித்திரமே
எலும்புகளால் நிணத்தால்
கண்ணீர் சுதை கொண்டு
கட்டப்பட்டது தான் ‘

****
-Che-Guerra – 1956 -Mexico The speaches and writtings of CHE.

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்