வெ.சா.வுக்கு என் ‘தன்னிலை விளக்கம்‘ “டென்னிஸ் இரட்டையர் ஆட்டம்“

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


>>>
நமது ‘யுகமாயினி’ திசம்பர் இதழில் மரியாதைக்குரிய வெ.சா. அவர்கள் எனது ‘வேற்றூர் வானம்’ மொழிபெயர்ப்பு நூல் சார்ந்த தமது மேலான மதிப்பீட்டை முன்வைத்திருந்தார். கடந்த வார திண்ணையிலும் அது காணக்கிடைக்கிறது. அன்னாருக்கு நன்றி. முன் பத்திகளில் அவர் என்னைப் பற்றிய விவரங்களில் சுத்தி வரும்போதே எதிர்பார்த்தேன் ஒரு சுத்தி என் தலைக்குமேல் வரும் என்று. மொழிபெயர்ப்பு நூல் சார்ந்த அவர் எதிர்பார்ப்புகளை மிக மரியாதையுடன் நான் அவதானிக்கிறேன்.

எழுத்தைப் போலவே மொழிபெயர்ப்புக்கும், ஒரு நோக்கும் போக்கும் தன்னைப்போல அமைந்துவிடுகிறது. அதாவது அறிந்தோ அறியாமலோ நாம் அமைத்துக் கொள்கிறோம். எழுதப்படுகிற போதே அந்த எழுத்துக்கான வாசகத்தளம், அதை நோக்கிய நமது குறி, எல்லாமும் இயல்பாகவே நிகழ்ந்து விடுகிறது. வெ.சா. தமது கருத்தாக இப்படிச் சொல்கிறார்.

”வாசிப்பவர் அறியக்கொடுக்க முயல்வது இன்னொரு மொழியிலிருந்து. வேற்று மொழியில் எழுதப்பட்டதை, வேற்றுமொழி கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்க்கையை, அனுபவங்களை, சிந்தனைகளை, இதில் எத்தனை வேற்று என்ற அடைமொழி எத்தனை உள்ளனவோ அவை அத்தனைக்கும் நாம் விஸ்வாசமாக இருக்கவேண்டும். தமிழில் படிப்பவன் நாம் வேற்று மொழிக் கலாச்சார மனிதரின் வாழ்க்கையைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் தோன்ற வேண்டும்.

மொழி பெயர்ப்பு என்றே தெரியாமல், ஆற்றொழுக்கு போன்ற நடை, என்றெல்லாம் புகழப்படும் மொழிபெயர்ப்பு, மொழி பெயர்க்கப்படும் மொழிக்கும், ஆசிரியருக்கும் அந்த எழுத்து நம் முன் விரிக்கும் உலகத்துக்கும் நியாயம் செய்ததாகாது.”

தனது மதிப்பீடுகளின் அடிப்படையில் வெ.சா. மிக நேர்மையாகப் பேசுகிறார் இப்படி. எங்கள் பார்வை வேறு அடையாளங்களுடன் இருப்பதை நாங்கள் அறியத்தர வேண்டியதாகிறது. முதல்கட்டம், அந்த மொழியை அந்தக் கலாச்சாரத்தை வாசகனுக்கு மொழிபெயர்ப்பு அறியத்தர வேண்டும், என்று நில்லாமல், உலகெங்கிலும் மனிதன் அகவுணர்வில் ஒரே மாதிரியானவன் என்கிற மதிப்பீடு சார்ந்த விவரங்களை நாங்கள் வாசகன் கவனிக்க உந்துகிறோம். நாங்கள் தேர்வுசெய்யும் கதைகளில் அத்தன்மை இருக்க வேண்டும் எங்களுக்கு.

மொழிபெயர்ப்பு என்ற பதமே இப்போது மொழிப்புனைவு (transcreation) என மாண்படைந்து வரும் தற்காலம் இது. நண்பர் நாஞ்சில் நாடன் ஒருமுறை ரேமண்ட் கார்வரின் ‘Cathedral’ சிறுகதையை நான் தமிழில் மொழிபெயர்த்தபோது (வேதக்கோயில், என்பது என் தமிழ்வடிவம். வார்த்தை இதழில வெளியானது. தேவாலயம், என்று நான் போட்டிருக்கலாம் என்று கருத்து கொள்வார் இருக்கலாம்.) வெகுவாக மகிழ்ச்சி தெரிவித்தார். அந்த மொழியில் எழுத்தாளன் தனது எல்லைகளை விரிக்க முடியுமானால், தமிழில் நாம் விரிப்பது சரியாகவே படுகிறது, எனவும் அவர் இசைவுகாட்டினார். கனெக்டிகட், சியாட்டில் நகரங்களில் நடக்கும் கதை. அதில் கதாநாயகன், ”என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை” என நினைத்துக்கொள்ள மாட்டான், என்ற வெ.சா. அவர்களின் வாதம் சரியே.

ஆனால் இது வாசகன் அறியாத விஷயம் அல்ல. தமிழில் வாசிப்பு ருசி காணாதவன் மொழிபெயர்ப்பு பக்கம் ஒதுங்குவான் என நான் நம்பவில்லை. மொழிபெயர்ப்பு பக்கம் வருகிறவன் ஒரு தேர்ந்த வாசகனே. இது அந்த சூழல்விளக்க ஒரு வாசகம், நாயகன் மன உளைச்சலில் இருக்கிறான் என்பதை அவன் யூகிக்க என்ன சிரமம் இருக்கும்? மதுரையை அவன் கவனிக்க மாட்டான் என்றா, அலட்சியமாய் நான் கையாண்டேன்?

Hamlet without hamlet, என்று ஆங்கிலத்தில் ஒரு பதம் உண்டு. ஹேம்லெட் என்கிற சிறு பிரதேசம். அதன் சிற்றரசன் ஹேம்லட். அந்த சிற்றரசன் இறந்துவிடுகிறான். அதை ஷேக்ஸ்பிரியர் ஹேம்லெட் வித்தவ்ட் ஹேம்லெட், என்று குறிப்பிடுகிறார். அதைத் தமிழில் தருகிற யத்தனம் அறிஞர் அண்ணாவுக்கு ஏற்படுகிறது. இதற்கு மேற்சொன்ன நான்கு வரி பொழிப்புரை தந்து, பின்குறிப்பு போட்டு எழுதவில்லை அவர். ‘ஹேம்லெட் வித்தவ்ட் ஹேம்லெட்’ என்பதை அவர் ‘மணமகன் இல்லாத திருமணம் போல’ என மொழிபெயர்க்கிறார்.

சரியாகவே படுகிறது.

உணர்வுபூர்வமான கதைவடிவத்தில் முன்குறிப்பு, பின்குறிப்புகளை முடிந்தவரை தவிர்க்கிறோம் நாங்கள். விவரக்குறிப்புகள் தேவைப்பட்டால் தரலாம். உணர்ச்சிக் குறிப்புகளும் தேவையா என்ன?

அடுத்து மொழியாளுமை.

‘The Orator’ என்ற ஆன்டன் செகாவ் சிறுகதை. ஒலிபெருக்கி கிடைத்தால் பேசத் துடிப்பாகிவிடும் பேச்சாளன் பற்றிய கிண்டலான கதை என்பதால் நான், ‘The Orator’ என்பதைத் தமிழில் ‘சொல்லின் செல்வன்’ எனத் தருகிறேன். அதேபோல ரோல் தால் எழுதிய ‘Lamb to the slaughter’ சிறுகதை, கிண்டல் தொனி நிரவிய கதை. என் தலைப்பு ‘கசாப்புக்காரனிடம் வாலாட்டும் குறும்பாடு.’ குறும்பாடு என்ற பதம் தமிழ்ச் சொத்து அல்லவா? கைமாற்றியிருக்கிறேன்.

He had grey hairs scattered on his cheek, என்பதை கன்னத்தில் நரைத் தூறல், என்று சொன்னால் தவறா என்ன? She was in need of money, என்பதை அவளுக்குத் துட்டுப்பாடு தட்டுப்பாடு, என்பது என் வழி. பகவான் அரவிந்தர் ஒருமுறை எழுதியது இது. (God) My body is your playground. என் மொழிபெயர்ப்பில், ‘என் உடல் உன் விளையாட்டுத் திடல்’ என்றாகிறது.

உலகளாவிய மனிதனை வேற்றுமொழிக் கதைகளில் இருந்து தமிழில் அடையாளங் காட்டவும், தமிழனை மானுடனோடு இனங்கண்டுணரவும் என் மொழிபெயர்ப்பு ஊடாக நான் முயற்சி செய்கிறேன். இன்னொன்று, மூலப்படைப்பு எந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டாலும், அந்க் காலப்பின்னணியைப் புறந்தள்ளாமலும், இன்றைய காலகட்ட வாசிப்புக்கு பங்கம் நேராமலும் நான் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

வெ.சா.வின் வாதம் கீழ்க்கண்டபடி அமைகிறது. ”படிக்க முதலில் சிரமம் தரும்தான். ஆனாலும் படிப்பது ஹெமிங்வே என்றோ, ஃபாக்னர் என்றோ தெரியும். ஹென்ரி ஜேம்சின் கதைசொல்லும் பாணியும், ஹெமிங்வேயின் நடையும் மலைக்கும், மடுவுக்குமாக வித்தியாசப்படுபவை. அவற்றை ஒரேநடையில் மொழிபெயர்ப்பது, கதை தரும் அனுபவத்துக்கும், எழுத்தாளனின் மொழிக்கும் கூட விசுவாசமான காரியமாக இராது.”

இதுவும் மிக முக்கியமான விஷயம்தான். ஆனால் மொழியால் அந்தப் படைப்புகள் சிறப்பது இல்லை. அதன் உள்ளடக்கத்தால் தான் சிறக்கிறது. தவிர இருவேறு எழுத்தாளர்கள் மொழிபெயர்க்கும் ஒரே கதை ஒரே மாதிரியாகவா அமையும்? மூல எழுத்தாளனைப் போலவே, மொழிபெயர்ப்பாளரின் தன்மையும் அதில் இராமல் எப்படி?

இதனால்தான் இந்த மொழிமாற்றம் என்பதை மொழிப்புனைவு என்று இப்போது நாம் வழங்க ஆரம்பித்திருக்கிறோம். ஹெமிங்வே நடையை இன்னொரு மொழியில் கண்டுபிடி, என்பது அதிகப்படியான எதிர்பார்ப்பாகவே படுகிறது. கதைத்தளத்திலேயே ஹென்ரி ஜேம்சும், ஹெமிங்வேயும் தங்கள் ஆளுமையைக் கொண்டுவந்து விடுவதை மறுக்க முடியாது அல்லவா? அவரவர் அடையாளங்கள் வாசகனைச் கட்டாயம் சென்றடையவே செய்யும். எனது மொத்த நூலையும் வாசிக்கிறவன், இதில் மொழிபெயர்க்கப்பட்ட அத்தனை எழுத்தாளர்களும் ஒரேமாதிரி எழுதியிருக்கிறார்கள், என்ற உணர்வுக்கு வருவதாகச் சொல்வது, எளிய மதிப்பீடே என்று தோன்றுகிறது.

வெ.சா. சொல்வதில் ஒரு விஷயம் எனக்கு விளங்கவில்லை. ‘எழுத்தாளனுக்கும்’ சரி, ‘எழுத்தாளனின் மொழிக்கும் கூட விசுவாசமான காரியமாக இராது’ என்கிறார். மொழிக்கு நாம் விசுவாசமாக இருப்பது எப்படி? அதற்கு வாசகன் மூல மொழியில்தான் வாசிக்க வேண்டும்.

பாலகுமாரன் ஒரு கதை நேர்முகத் தேர்வு களத்தில் எழுத, அது, நேர்முகத் தேர்வு முழுக்க ஆங்கிலத்தில் என்ற உணர்வை நமக்குத் தரும் வகையில் எழுதப்பட்டிருந்தது…. எனப் பாராட்டுகிறார் வெ.சா. வாழ்த்துக்கள் பாலகுமாரன்.

விஷயம் என்ன எனறால், மொழிபெயர்க்கையில் சில சமதையான தமிழ் வார்த்தைகளை நாங்கள் வாசகனுக்கு அறிமுகப்படுத்த முடியுமா? புதிய சொல்லாட்சிகளை coin செய்ய முடியுமா, என்றெல்லாம் உன்னிக்கிறோம். (மேலே சொன்ன ‘நரைத்தூறல்’ பிரயோகம் அப்படி வந்தமர்ந்ததுதான். இன்டர்வியூ என்பதற்கு நேர்முகத் தேர்வு என்கிற சொல்லாட்சியை நாம் இக்கணத்தில் நினைவுகொள்வது அழகாக இல்லையா?

Enlargement என்ற பதத்துக்கு ஒரு முறை விஸ்வரூபம் என்றில்லாமல், உருவோங்குதல் என்று பிரயோகித்தேன். இது முக்கியமான பிரயோகமாகவே நான் உணர்ந்தேன். காரணம் கிளைச்சொல், உருவொடுங்குதல் என்பதையும் இது உருவாக்கி விடுகிறது, அல்லவா?

ஸ்ட்ரெச்சர் என்பதற்கு ஒருமுறை நோயாளிக்கிடத்தி என்று பிரயோகித்திருக்கிறேன்.

என் மொழிபெயர்ப்பில் ”வாத்யாரே, நானே ஸ்காட்ச் ஆசாமிதான்” என நான் தருவது பற்றி வெ.சா. குரல் தருகிறார். ”இதெல்லாம் கனெக்டிகட்டில் வாழும் ஒரு அமெரிக்கக் குடும்பத்தில் நடக்கும் சம்பாஷணைகள். ஆனால் ஷங்கரநாராயணனின் மொழிபெயர்ப்பில் நமக்கு இந்த உணர்வு வருதல் சாத்தியமா என்ன?”

கனெக்டிகட்டில் இருக்கிற உணர்வு வராது தான். ஆனால் வெகு சரளபாவனையுடன் அவன் ‘bub’ என தோழியின் கணவனை அழைத்து பார்வையற்றவன் உரையாடுகிறான். அந்த இயல்புநிலையிலேயே, சகலை, வாத்யாரே… என்கிற நம்பக்க வழக்குகளை நான் பிரயோகிக்கிறேன். ‘பப்’ என்று எழுதி பின்குறிப்பு நட்புச் சொலவடை, என்று போடுவது மூல எழுத்தாளனுக்கே நியாயம் செய்வதாக ஆகாது. மூலாசிரியனின் உணர்ச்சி வியூகத்தை நான் கைமாற்றினேனா, அதுவே என் குறிக்கோள்.

இதில் இன்னொரு விஷயம். மூல மொழியின் வியூகத்தையும் நாம் கணக்கில் கொணர வேண்டியிருக்கிறது. நாம் நம் மொழியில் அப்படியான வியூகத்தை நிலைநாட்ட வேண்டியதும் ஆகிறது. ஹாம்லெட் வித்தவ்ட் ஹெம்லெட், உதாரணம் போல. அவசரமாய் இங்குமங்கும் ஓடிக்கொண்டிருந்தான், கால்ல வெந்நீரைக் கொட்டிக்கொண்டாப் போல… என்பதை ஆங்கிலத்தில் அப்படியே தருவார்களா என்ன?

‘பப்’ என்பதை தோளில் கைபோட்ட சகஜத்துடன் தமிழில் கொண்டுவருகிறேன் நான். அங்கே தூய தமிழுக்கு, சரியான தமிழ்வார்த்தை தேடுவதுதான் எனக்கு நியாயமாகப் படவில்லை.

ஒரு கதை வாசித்தபின் எனக்கு அடையாளப்படும் ஒரு உணர்வுவியூகம், தவிர மதிப்பு என் மொழிபெயர்ப்பில் கட்டாயம் கைமாற்றப்பட வேண்டும், இதில் நான் உறுதியானவன். இரண்டையுமே முன்னிறுத்த நான் முயல்கிறேன். மதிப்புகளைக் காட்டி, உணர்ச்சிப்பகுதிகளை பலிகொடுக்க என்னால் ஆகாது. அது அறுவைச்சிகிச்சை வெற்றி, நோயாளி இறந்துவிட்டான் என்ற நிலையாகவே நான் கருதுவேன்.

புலவர் மொழிபெயர்ப்பில் ஷேக்ஸ்பியர் செகப்பிரியர் ஆனது பார்த்திருக்கிறோம். எகனாமிக் சைக்கிள், பொருளாதார மிதிவண்டி என ஆனதும், ஸ்மால் இரிகேஷன் பிராஜக்ட் சிறுநீர்ப்பாசனம் ஆனதும் தெரிந்த கதை. அன்டன் செகாவின் Lady with a dog தமிழில் நாயுடன் கூடிய சீமாட்டி என ஆனதாகச் சொல்வார்கள்.

ஒரு உண்மை சொல்கிறேன். மொழிபெயர்ப்பில் செல்லப்பாவும், ஜானகிராமனும், க.நா.சு.வும், நா.தர்மராஜனும் வாசித்து ரசித்தவன் நான். ஆனால் சகிக்க முடியாத வறட்சித்தனமான மொழிபெயர்ப்புகளைக் கண்டபோது…. ஆமாம், நானும் மொழிபெயர்ப்புப் படைப்புகளைத் தர முன்வந்தேன். நான் கைக்கொள்ளும் படைப்புகளில் யுனவர்சாலிடி, உலகளாவிய பொதுக்களம் அடையாளப்பட வேண்டும் என்பது என் அவா.

முல்க் ராஜ் ஆனந்தின் ‘மார்னிங் ஃபேஸ்’ நாவலை தமிழில் ‘விடியல் முகம்’ என சாகித்ய அகாதெமிக்காக மொழிப்புனைவு செய்தளித்திருக்கிறேன். அதில் என் குறிப்பாக ஒன்றைக் குறிப்பிட்டேன்.

மொழிபெயர்ப்புக்கும் மூலப்படைப்புக்கும் அடிப்படையில் வித்தியாசம் உண்டு. மூலப்படைப்பு ஒற்றையர் டென்னிஸ் ஆட்டம் என்றால், மொழிபெயர்ப்பு இரட்டையர் டென்னிஸ் ஆட்டம். ஒருத்தரை ஒருத்தர் அனுசரித்து நிகழ்த்த வேண்டிய ஆட்டம்.

வெ.சா. புத்தக மதிப்புரையில் வைத்த முத்தாய்ப்பு இது.

அவரவர் பார்வையும், ருசியும் அவரவர்க்கு.

லோகோ பின்ன ருசி.

தங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றி, வெ.சா. ஐயா.
>>>
(யுகமாயினி சனவரி இதழில் அளித்த தன்னிலை விளக்கம்)
storysankar@gmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்