குவைத்தில் ரமாலான் சிறப்பு மாதாந்திர இலக்கிய நிகழ்வு

This entry is part [part not set] of 37 in the series 20100912_Issue

வித்யாசாகர்


குவைத்தில், கொட்டா மழை கொட்டினாலும், மாதம் தவறாது முதல் வெள்ளிக் கிழமையன்று இலக்கிய கூட்டம் நடத்தும் ‘குவைத் தமிழோசை கவிஞர் மன்றத்தின்’ இன்றைய இலக்கிய நிகழ்வுகளும் தரம் குறையாதவை. மன்ற பொது செயலாளர் பாவலர் பிரமோத் ராஜன் தலைமையில் விழா துவங்க, தலைவர் உ.கு. சிவகுமாரின் உற்சாகமாக உரையினையடுத்து தம்பி தாராவின் ‘தமிழோசை’ பற்றிய சிறப்புக் கவிதை சக்கைபோடு போட்டது.

அதை தொடர்ந்து, கவிதையில் காதல் என்ற தலைப்பில் பாவலர் வித்யாசாகரும், கவிதையில் வாகை என்ற தலைப்பில் பாவலர் கருங்குளம் சிவமணியும், கவிதையில் வீரம் என்ற தலைப்பில் பாவலர் ஆனந்த ரவியும், இன்னும் கவிதையில் ஈரம், கவிதையில் ஈகை என ஐந்து தலைப்புகளில் ஐயா சாதிக் பாஷா தலைமையில் கவியரங்கம் கர ஓசைகளோடு முடிய, ஐயா கவிசெய் சேகர் அவர்களின் தலைமையில் தேனினும் இனிது தமிழ் என்ற தலைப்பில் பாவலர் முனு.சிவசங்கரனும், சங்ககால புத்தகங்களை படி என்ற தலைப்பில் பாவலர் பழ கிருட்டிண மூர்த்தியும், இஸ்லாத் ஒரு பார்வை தலைப்பில் பொறியாளர் திரு ராஜசேகரும், கம்யூனிசம் பற்றி ஒரு பகிர்வு என்ற தலைப்பில் திரு சியாம் அவர்களும் என வேறுபட்ட தலைப்புக்களில் கருத்தரங்கமும் விமரிசையாக நடந்தேறியது. இடை இடையே பாடகர்கள் கணேஷ் மற்றும் இலங்கேஸ்வரனின் பாடலில் சொக்கிப் போக முடிந்ததும், முடிவில் இப்தார் விருந்துமென வயிறும் மனதும் அறிவும் நிறைந்து விழா நிறைவுற்றதென்பது மிக மகிழ்விற்கும் மிக்க நன்றிகளுக்கும் உரிய உன்னத செயலாகும்!

விழாவில் தமிழ் தமிழர் சார்ந்த கேள்வி பதில் போட்டியும் நடைபெற்றது, அதில் போட்டிக்கான பரிசை பாவலர் முனு.சிவசங்கரன் பெற்றுக் கொள்ள , இறுதியாய் அரங்கத்தில் மிச்சமிருந்த வெற்றிடத்தை தன் நன்றியுரையினால் நிறைத்து, கலந்து சிறப்பித்த அனைவருக்கும் இன்முகத்தோடு விடை தந்தார் முன்னாள் பொறுப்பாளரான பாவலர் விட்டுக் கட்டி மஸ்தான் அவர்கள்.

தமிழ்; இதுபோன்ற நல்ல மன்றங்களாலும், உயர்ந்த படைப்பாளிகளாலும் ஆர்வலர்களாலும் நிலைத்தே நீடு வாழுமென்ற நம்பிக்கை; தனையறியாது ‘விடைபெற்ற அனைவரின் மனதிற்குள்ளும்’ பூத்து விரிந்திருக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை!

Series Navigation

வித்யாசாகர்

வித்யாசாகர்