மண் சுமந்த மேனியர் – உதவித் திட்டம்

This entry is part [part not set] of 35 in the series 20100905_Issue

பதிவு :- செல்லக்குட்டி கணேசன்



‘மண் சுமந்த மேனியர்’ சுவிஸ் சூரிச் சிவன்கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினரால் போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான அன்புக்கரம் நீட்டும் திட்ட அங்குரார்ப்பண வைபவம் 29.08.2010 ஞாயிறு காலை 11.00 மணிக்கு யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ள திக்கம் கலாசார மண்டபத்தில் தபாலதிபர் அ. அருளானந்தசோதி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ் மாவட்ட த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் அவர்கள் மங்களவிளக்கின் முதற்சுடரினை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். சிவசிறி சோமஸ்கந்த தண்டபாணிக தேசிகர் (பிரதமகுரு வல்லை முத்துமாரி அம்மன் ஆலயம்) அவர்களின் ஆசியுரை இடம்பெற்றது.
தொடர்ந்து தலைமையுரை இடம்பெற்றது. இக்கட்டான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பதிலாக ஆலயக் கட்டடத்தை இடித்து புணரமைப்பு செய்வதிலும் ஏட்டிக்குப் போட்டியாக திருவிழாக்கள் செய்வதும் கவலையளிப்பதாகக் கூறினார். இக்கருத்தினை கெளரவ விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய பி. கிருஷ்ணானந்தன் (முகாமையாளர் மக்கள் வங்கி வல்வெட்டித்துறை) அவர்கள் ஆத ரித்து உரையாற்றினார்.
சூழலியலாளர் பொ. ஐங்கரநேசன் தனக்கும் சூரிச் சைவத் தமிழ்ச் சங்கத்திற்கும் இடையே உள்ள தொடர்பு பற்றியும் அவர்களின் வாழ்வியல் அனுபவங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
பிரதம விருந்தினர் தமதுரையில் வன்னி மக்கள் யாரிடமும் கையேந்தியவர்கள் அல்லர். இன்று அவர்களின் நிலை அப்படியல்ல. தொடர்ந்து இவ்வுதவிகளைப் பெறுவதற்கு மாறாக மாற்றுத் திட்டங்களுடன் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.
இறுதியாக பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. அவற்றில் பத்து துவிச்சக்கரவண்டிகள் போரினால் பாதிக்கப்பட்ட பத்துப் பெண் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டன. இவற்றுள் ஐந்து துவிச்சக்கர வண்டிகள் சுவிஸ் வாழ் திருமதி மின்னொளி திருநாவுக்கரசு அவர்களும் மிகுதியை சைவத் தமிழ்ச் சங்கத்தினரும் வழங்கினர். கிளிநொச்சி கிராஞ்சி அ. த. க. பாடசாலை அதிபரின் வேண்டுதலுக்கு இணங்க அங்கு பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்வித் தரத்தை உயர்த்தப் பாடுபடும் தொண்டர் ஆசிரியர் ஐந்து பேருக்கு தலா ஐயாயிரம் ரூபா வீதம் வழங்கப்பட்டது. இவை தொடர்ந்து மாதாமாதம் வழங்கப்படும எனத் தெரிவித்தனர். தொடர்ந்து சிறுகைத்தொழிலில் ஊக்குவிப்பதற்கான உதவித் தொகையும் பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் ஆயிரம் ரூபா வழங்குவதெனவும் அதன் முதற்கட்டக் கொடுப்பனவு விழாவில் வைத்தே வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
சைவத் தமிழ்ச் சங்கத்தினருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்குமிடையே உறவை ஏற்படுத்திய இணைப்பாளர் கே. குமணன், திட்ட இயக்குனர் என். சுபேந்திரா ஆகியோரின் சேவை பாராட்டுக்குரியது என்ற கருத்து பார்வையாளர் மத்தியில் பேசப்பட்டது. இறுதியாக செல்வி கே. சந்தியாவின் நன்றியுரையுடன் பி. ப. 2.00 மணியளவில் நிகழ்வு நிறைவடைந்தது. நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டதும் இன்னுமோர் சிறப்பம்சமாகும்.

Series Navigation

பதிவு :- செல்லக்குட்டி கணேசன்

பதிவு :- செல்லக்குட்டி கணேசன்