தமிழ்ச்செல்வனுக்கு புதியமாதவியின் எதிர்வினை குறித்து

This entry is part [part not set] of 38 in the series 20100718_Issue

அரவிந்தன் நீலகண்டன்


திரு. தமிழ்ச்செல்வன் என்பவரின் கட்டுரைக்கு புதியமாதவியின் எதிர்வினையை கண்டேன்.

தமிழ்ச்செல்வனின் கட்டுரையில் சில அதீதப்படுத்துதல்களும் தகவல் பிழைகளும் உள்ளன. ஆனால் புதிய மாதவியின் எதிர்வினை எவ்விதத்திலும் சிறந்து விளங்கிடவில்லை. அந்த எதிர்வினையில் அடிப்படையான பார்வைக் கோளாறு உள்ளது.

1. ‘திராவிட’ என்கிற சொல்லை முதன்முதலில் ஒரு இனவாதக் கோட்பாடுடன் முடிச்சு போட்டு பயன்படுத்தியவர் கால்டுவெல்தான். நமது பண்டைய இலக்கியங்களில் ஆரிய என்கிற பதமும் சரி திராவிட என்கிற பதமும் சரி இனக்கோட்பாட்டு பதங்களாகப் பயன்படுத்தவில்லை. இந்த பொருளில்தான் தமிழ்ச்செல்வன் சொல்கிறார் என்பது சொல்லப்படும் சூழலின் அடிப்படையில் எளிதில் புரியும். “ஆரிய” எனும் பதத்தை வள்ளலார் வரை நம் ஞானிகள் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அதனை இனவாதத்துக்கு பயன்படுத்த சுழி போட்டது மாக்ஸ்முல்லர்தான். அப்படியே திராவிட என்கிற பதத்தை இனவாதத்துக்குப் பயன்படுத்தியது கால்டுவெல்தான்.

2. கால்டுவெல் ஆதிதிராவிடர்களே இந்த மண்ணின் மைந்தர்கள் என்று சொன்னார் என்பது வேண்டுமென்றே தற்போது செய்யப்படுகிற ஒரு பிரச்சாரம். கால்டுவெல் அவர் வாழ்ந்த காலகட்டத்தின் பிரிட்டிஷ் ஆச்சாரவாத (cpnservative) பிரிவைச் சார்ந்தவர். அவரது சூழலுக்கொப்ப இனங்கள் குறித்து தெளிவான பார்வை அவருக்கு இருந்தது. அதாவது எந்த இடத்திலும் பூர்விகர்கள் பண்பாடற்றவர்கள். அவர்கள் மீது படையெடுத்து வெல்பவர்கள் அவர்களைப் பண்படுத்துபவர்கள் என்பது அப்பார்வை. இதன்படி அவர் திராவிடர்கள் ஆதி திராவிடர்களையும் ஆரியர்கள் திராவிடர்களையும் பிரிட்டிஷார் ஒட்டுமொத்த இந்தியர்களையும் பண்படுத்துவதாக கருதினார். இதில் ஆரியர்கள் திராவிட-ஆதி திராவிட மக்களின் பேய் வழிபாட்டையும் ஆவி வழிபாட்டையும் முழுமையாக அகற்றாமல் சிலைவழிபாட்டையும் சாதி அமைப்பையும் கொண்டு வந்துவிட்டதாக அவர் கருதினார். இதில் சாதிய எதிர்ப்பு என்பதே கூட மதமாற்றத்துக்கு அது வழிவகுக்கவில்லை என்பதாகவே இருந்தது. சான்றோர் சமுதாயத்துக்கென்று ஒரு பாரம்பரியம் இருக்கமுடியாது என்றே அவர் கருதினார்.
பிராம்மண கருத்தாக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டால் பின்னர் தென்னிந்தியருக்கும் ஏசுவுக்கும் நடுவே இருப்பது இவ்வினத்தவரின் “மொந்தையான அறியாமை மட்டுமே” என்று சொல்லும் அளவில்தான் கால்டுவெல்லின் சிந்தனை இருந்தது
மொழியியலை இனவியலுடனும் சாதியை இனத்துடனும் இணைத்து வெறுப்பு இயக்கத்தை வடிவமைத்ததே கால்டுவெல்லின் முக்கிய பங்களிப்பு. கால்டுவெல் ஒப்பிலக்கணத்தில் பிராம்மணர்களை சித்தரிக்கும் விதத்தினை பொதுவாக ஐரோப்பாவில் நிலவிய யூத-வெறுப்பு மனப்பாங்குடன் ஒப்பிடலாம்.

3. அடுத்ததாக இந்த “போரிடும் இனம்” என்கிற கோட்பாட்டுக்கு வருவோம். 1890 இல் மகர்களை இராணுவத்திலிருந்து விலக்கியதற்கு காரணம் பிரிட்டிஷார் வர்ண பாகுபாட்டை ஏற்றுக் கொண்டதாக புதியமாதவி தெரிவிக்கிறார். ஆனால் இந்திய சமுதாய பாகுபாடுகளைக் காட்டிலும் முக்கியமான காரணியாக இருந்தது பிரிட்டிஷ் இனக் கோட்பாடுகளும் பிரிட்டிஷாருக்கு இந்தியாவை ஆளுவதற்கு பாதுகாப்பான இராணுவத்தை இங்கு ஏற்படுத்துவதும்தான். சாதியின் நெகிழ்ச்சித்தன்மையை இல்லாமல் ஆக்கியதில் பிரிட்டிஷாரின் பங்கு முக்கியமானது. பிரிட்டிஷ் கல்வி முறையினால் தாழ்த்தப்பட்ட சாதியினரிடையே கல்வியின்மை பரவியது என சொல்கிறார் ஒரு நவீன பிரிட்டிஷ் கல்வி ஆராய்ச்சியாளர். ஆகவே இங்குள்ள சமூக பாகுபாடுகள் இறுக்கமடைய பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கமும், அதனால் ஏற்பட்ட பொருளாதார சுமையும் ஒரு முக்கிய காரணம். அதனால் ஏற்பட்ட தீய விளைவுகளை மதமாற்றிகள் பயன்படுத்திக் கொண்டனர். அதனை தனது அரசியல் முதலாக்கி வெறுப்பு வியாபாரம் செய்தவர்தான் ஈவெரா. அதனுடைய கோமாளித்தனமான நீட்சிதான் கோவையில் பல நூறு கோடி ரூபாய்கள் செலவில் நிகழ்ந்த வரிப்பண வீணடிப்பான கூத்தடிப்பும் ஒரு குடும்ப புகழ்பாடலும்.

அரவிந்தன் நீலகண்டன்

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்