திரைகடல் ஓடியும் கலையைக் கற்போர் (ஹாங்காங்கில் பரதநாட்டிய அரங்கேற்றம்)

This entry is part [part not set] of 31 in the series 20100128_Issue

சித்ரா சிவக்குமார்


இந்தியாவிலிருந்து திரைகடல் ஓடி திரவியம் தேடிச் செல்லும் பலருக்கு, தங்களின் சந்ததியினர் நம் நாட்டுக் கலைகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவா அதிக அளவில் இருக்கிறது என்பதை நாம் பல நாடுகளில் நடக்கும் கலை நிகழ்வுகளின் மூலம் கண்கூடாகக் காணலாம்.
சீனாவின் ஒரு அங்கமான, சிறு நாடாக விளங்கும் ஹாங்காங் அதற்கு விதிவிலக்கல்ல. சிறிய நகரம் என்றாலும், ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கும் இடம். அதில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்;கின்றனர்.
இங்கு அதிக காலம் வியாபாரம், கணிப்பொறி பணி, கல்வி என்று பல்வேறு துறைகளில் பணியாற்றும் தமிழர்களின் மத்தியில், தங்கள் குழந்தைகள் தமிழ் கற்க வேண்டும், தமிழ் கலைகளைக் கற்க வேண்டும் என்ற உந்துதல் அதிகம் உண்டு. பல வருடங்களுக்கும் மேலாக கலையைக் கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கும் இங்கு பஞ்சமேயில்லை. அதிலும் பரதக் கலையைக் கற்றுத் தருவோர் பட்டியல் நீளமானது. சந்தியா கோபால், ரஞ்சனி மேனன், சந்தோஷ் மேனன், ரூபா கிரண், ஒக்சானா போன்றோர் பல வருடங்களாய் கலையைப் பயிற்றுவித்து வருகின்றனர்.
ரஞ்சனி மேனன் நாட்டிய சிரோமணி பால சரஸ்வதியிடமிருந்து கலையைக் கற்று, சக்தி அகாடமியை நிறுவி பரதத்தைக் கற்றுத் தந்ததோடு மட்டுமல்லாது, சீனர்களும் பாராட்டும் வகையில் அரிய பல நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினார். அவரது மாணவியர் ரஸ்யா ராவ், உமையாள் மற்றும் சாக்ஷி குமார் பரத அரங்கேற்றம் செய்து, தாம் கற்ற கலையை அனைவரும் போற்றும் வகையில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.
சந்தியா கோபால், நாட்டிய சிகரா என்று கலைப் பள்ளியில் இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கலையைக் கற்றுத் தருகிறார். ஹாங்காங்கின் முதல் அரங்கேற்றத்தைச் சௌமியாவின் மூலமாகச் செய்த பெருமை இவரையேச் சாரும். 2009 மிகவும் சிறப்பான வருடமாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். இந்தப் பள்ளியைச் சேர்த்த மூவர், அரங்கேற்றம் செய்து கலைப் பணியில் தங்கள் காலடியை எடுத்து வைத்தனர்.
முதலில் ரேணுகா சந்தானம். 2008 டிசம்பர் மாதம் சென்னையிலும், மார்ச் மாதம் ஹாங்காங்கிலும் நாட்டியத் திறமையைக் காட்டினார். அவர் ஏழு வயதில் இக்கலையைக் கற்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் ரஞ்சனி மேனனிடமும் பிறகு சந்தியா அவர்களிடமும் பரதக் கலையைத் திறம்படக் கற்றார். தன் பதினாறாம் வயதில் மிகச் சிறப்பாக அரங்கேற்றம் செய்தார். அவர் பாலே நடனத்திலும் ஐந்தாம் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்;.

ரேணுகா சந்தானம்

அடுத்தது சாக்ஷி கௌசிக். சந்தியா அவர்களின் மகள். தன்னுடைய ஆறாம் வயது முதல் இக்கலையைக் கற்க ஆரம்பித்து 14 ஆம் வயதில் ஜூலை மாதம் 11 ஆம் தேதி சென்னையிலும், செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி ஹாங்காங்கிலும் அரங்கேற்றம் செய்து, பார்வையாளர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார். அவர் ரிதமிக் ஜிம்னாஸ்டிக்ஸ் என்னும் நளினமான உடற்பயிற்சி முறையை, ஆஸ்திரேலியாவில், ஆஸ்திரேலிய நாட்டின் ஒலிம்பிக் பதக்க வீரரிடம் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாக்ஷி கௌசிக் தாயுடன்

தமிழருக்கான கலை மட்டுமே பரதம் என்றில்லாமல், கர்னாடகத்தைச் சேர்ந்த வைஷ்ணவி கௌஷிக்கும் பரதக் கலையைத் திறம்படக் கற்று, அனைவரும் பிரமிக்கத் தக்க வகையில், பெங்க@ரு நகரில் ஆகஸ்டு மாதம் 8 ஆம் தேதி பல பிரமுகர்கள் முன்னிலையில் அரங்கேற்றம் செய்தார். ஆறாம் வயதில் கலாச்சேத்திரத்தில் பயின்ற திருமதி யசோதா அவர்களிடம் சென்னையில் கலையைக் கற்க ஆரம்பித்து, பின்னர் அனிதா பிரன்சிஸ் மற்றும் மஞ்சுளா அமரேஷ் ஆகியோரிடம் சிறிது காலம் பயின்ற பின், சந்தியா கோபாலிடம் வந்து சேர்ந்தார். மூன்றாண்டு பயிற்சியின் போது சந்தியா அவருக்கு இந்தக் கலையின் நுணுக்கங்களைத் கற்றுத் தந்து, பதினைந்தாம் வயதில், இக்கலையின் வெற்றிப்படிகளில் கால் பதிக்க உதவினார்.

வைஷ்ணவி கௌஷிக்

தென்னகம் மட்டுமில்லாமல் வட இந்தியர்களும் இந்தக் கலையில் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடப்பட வேண்டிய விசயம். அலாகாபாத்தைச் சேர்ந்த சாக்ஷி குமார் அதற்குச் சான்று. ஏழு வயதில் சந்தியாவிடம் பரதத்தைப் பயில ஆரம்பித்து, பின்னர் ரஞ்சனி மேனனிடம் தொடர்ந்து கற்று, தன் பதினைந்தாம் வயதில், மே மாதம் 28ஆம் தேதி, அரங்கேற்றம் செய்தார். இவர் பியானோ இசையிலும் ஆர்வம் காட்டி ஏழாம் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர் என்பது அவரது கலை ஆர்வத்தைக் காட்டுகிறது.


சாக்ஷி குமார்

நால்வருமே சர்வதேசப் பள்ளியில் பயின்று வருபவர்கள். இவர்கள் அனைவரும் ஹாங்காங்கில் நடைபெறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து, நம் இந்தியக் கலைக்கு சிறப்பினைச் சேர்த்து வருபவர்கள். திரைகடல் ஓடியும், கலையை மறவாமல், பரதத்தைக் கற்றுத் தரும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டத் தக்கவர்கள்.
இவ்வாண்டு ஹாங்காங்கில் பரதக் கலைக்கு மகுடமான இந்த நான்கு கலைஞர்களும் அருமையான நிகழ்ச்சிகளைத் தந்து, அனைவரது பாராட்டையும் பெற்றவர்கள்;. இனி வரும் வருடங்களிலும் இவர்களும் இதர நாட்டிய சிகரா பள்ளி மாணவியரும் பெரும் சாதனைகளைச் செய்வார்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அவர்கள் அனைவருக்கும் நம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.

Series Navigation

சித்ரா சிவக்குமார்

சித்ரா சிவக்குமார்