நல்லானின் புனித மோசடி கட்டுரைக்கு மறுப்பு: புதுவகை நோய் : இமி – 2

This entry is part of 26 in the series 20100101_Issue

வஹ்ஹாபி


உடன்படிக்கை என்றால் என்ன?
இருவர் அல்லது இரு சாரார் தத்தமது விருப்பங்களை/கோரிக்கைகளை முன்வைத்துக் கலந்துபேசி, பொதுவான முடிவுக்கு வந்து, அதை இருவரும்/இருசாராரும் ஏற்றுச் செயல்படுவதற்கு உடன்படுவதாக உறுதி கூறுவது/எழுதிக் கொள்வதற்குப் பெயர் உடன்படிக்கையாகும்.
அவ்வாறு ஏற்றுக் கொண்டவற்றைப் புறக்கணித்து உடன்படிக்கையை முதலாவதாக முறிப்பவர்கள் அநியாயக்காரர்களே. பிறரோடு செய்து கொண்ட உடன்படிக்கைகளை முஸ்லிம்கள் முறித்ததாக இஸ்லாமிய வரலாற்றில் எங்கும் பார்க்க முடியாது.
முஸ்லிம்களின் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறருடன் செய்து கொண்ட உடன்படிக்கைகள் பல. அவற்றுள் ‘யூத உடன்படிக்கை’ [சுட்டி-09], புகழ் பெற்றது. அந்த உடன்படிக்கையை முறித்தவர்கள் [சுட்டி-10] யூதர்கள் ஆவர். அதேபோல் இஸ்லாமிய வரலாற்றில் பெருமை பொங்கப் பேசப்படும் ஹுதைபிய்யா உடன்படிக்கையை முறித்தவர்கள் மக்கத்துக் குரைஷியர்கள் ஆவர்.
ஆனால், வரலாற்றைத் திரிக்கும் முயற்சியாக, ‘புனித மோசடி’யில் உடன்படிக்கையை முஸ்லிம்கள் உடைத்ததாகத் தலைகீழ்ப் பாடம் நடத்தப் பட்டது; அதைத் திண்ணையும் பதித்துப் பெருமை(!) சேர்த்துக் கொண்டது.
அரைகுறை-2 Sura (9:3) – “…Allah and His Messenger are free from liability to the idolaters…” (உடன்படிக்கையை உடைத்தல் என்பதும் ‘தக்கியா’வின் மற்றொரு விளைவு-பாணி).
அல்குர்ஆனின் ஒன்பதாவதான ‘மீட்சி/விலகல்’ அத்தியாயத்தின் மூன்றாவது வசனத்தின் சில (அரைகுறைச்) சொற்கள், ‘உடைப்பதற்கே உடன்படிக்கை’ என்று முஸ்லிம்களுக்கு உத்தரவு போடுவதுபோல் பம்மாத்துக் காட்டப் பட்டுள்ளது.
மேற்காணும் இறைவசனத்தில் பேசப்படும் உடன்படிக்கை யாது? அதன் பொருளடக்கங்கள் யாவை? அவற்றை மீறியவர் யாவர்? போன்ற முழுமையான தகவல்களை இங்கு நாம் அறிந்து கொள்வோம். அதற்கு முன்னர், இஸ்லாமிய மீளெழுச்சியின் 19ஆவது ஆண்டின் இறுதியில் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் மக்கத்து இணைவைப்பாளர்களின் தலைவர் அபூஃஸுப்யானின் பிரதிநிதி ஸுஹைல் பின் அம்ரூ என்பவருக்கும் ஏற்பட்ட ‘ஹுதைபிய்யா உடன்படிக்கை’யைப் பற்றி மேற்காணும் இறைவசனம் [009:003] பேசுவதால் 19 ஆண்டுகால இஸ்லாமிய மீளெழுச்சியைப் பற்றி மிகச் சுருக்கமாகப் பார்த்துக் கொள்வது நலம்.
இஸ்லாத்தின் மீளெழுச்சிக்குப் பின்னர் 13 ஆண்டுகள்வரை, தம் குடும்பச் சொந்தமான குரைஷியர்களால் நிகழ்த்தப் பட்ட ஊர்விலக்கல் முதல் கொலை முயற்சிவரை அனைத்தையும் எதிர்கொண்டு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவில்தான் வசித்தார்கள். 13ஆவது ஆண்டின் இறுதியில், தாம் பிறந்த மண்ணான மக்காவைத் துறந்து, அடைக்கலம் கொடுப்பதற்கு அழைத்த மதீனாவுக்குப் புலம் பெயர்ந்தார்கள். இந்தப் புலப் பெயர்வுக்கு, ‘ஹிஜ்ரா/ஹிஜ்ரத்’ என்பது அரபுப் பெயராகும். அந்த ஆண்டிலிருந்தே முஸ்லிம்களின் வரலாற்றுப் பதிவுகளை ‘ஹிஜ்ரீ’ எனும் பெயரால் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
மதீனாவின் மக்களுக்கிடையே பன்னெடுங்காலம் நிலவி வந்த இனப்பகையை ஒழித்துக் கட்டி, மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தியதாலும் பல சீர்திருத்தங்களைச் செய்ததாலும் மதீனாவின் மக்கள் அண்ணல் நபியைத் தம் ஆட்சித் தலைவராக்கிக் கொண்டனர் [சுட்டி-11].
அண்ணல் நபியின் செல்வாக்குக் கூடிக் கொண்டே போவதையும் அவர்கள் மக்காவில் வாழ்ந்த காலத்தில் பரவியதைவிடப் பன்மடங்கு அவரது புலப் பெயர்வுக்குப் பின்னர் அதிவேகமாக தம் சொந்த மண்ணில், தங்களின் கண் முன்பே வெகு வேகமாக இஸ்லாம் பரவுவதைக் கண்ட குரைஷிகள், மதீனாவைச் சூறையாடுவதற்கும் மதீனாவின் ஆட்சித் தலைவராகத் திகழ்ந்த அண்ணலாரை ஒழித்துக் கட்டுவதற்கும் மக்காவிலிருந்து (ஏறத்தாழ 400கி.மீ) பயணித்து வந்து பலமுறை (முதல் பத்ரு ஹிஜ்ரீ2இல்; உஹது ஹிஜ்ரீ3இல்; இரண்டாவது பத்ரு ஹிஜ்ரீ4இல்; அகழி ஹிஜ்ரீ-5இல்) போர் புரிந்தனர்; அனைத்திலும் தோல்வியைத் தழுவித் திரும்பிச் சென்றனர்.
***
அகழிப் போருக்கு அடுத்த ஆண்டு ஹிஜ்ரீ 6இல் மக்காவிலுள்ள கஅபா எனும் இறைப் பேரில்லத்தில் உம்ரா எனும் புனித வணக்கம் புரிவதற்காக நபிகள் நாயகமும் அவர்களின் 1400 தோழர்களும் மதீனாவிலிருந்து புறப்பட்டு மக்காவை நேக்கிச் சென்றார்கள். மக்காவைப் புனிதப் பயணக்குழு சென்றடைவதற்கு ஏறத்தாழ 15 கி.மீ தொலைவு இருக்கும்போது மக்காவின் இணைவைப்பவர்கள், பயணக்குழுவை மக்காவுக்குள் அனுமதிக்க முடியாது எனத் தடுத்தனர். அந்த இடத்துக்குப் பெயர் ஹுதைபிய்யா.
தாங்கள் போர் செய்ய வரவில்லை என்றும் அக்கால அரபியர் அனைவருக்கும் பொதுவான ‘உம்ரா’ வணக்கம் புரிவதற்கே மக்காவுக்கு வருவதாக முஸ்லிம்கள் தரப்பில் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் எதிரணியினர் செவி சாய்க்கவில்லை. முஸ்லிம்களும் முறுக்க ஆரம்பித்தனர். இதற்கிடையில் மக்காவின் தலைவர்களுக்கிடையே முஸ்லிம்களை இறையில்லத்திற்கு வரவிடாமல் தடுப்பது குறித்து இரு வேறு கருத்துகள் [சுட்டி-12] ஏற்பட்டன.
நிலைமை மோசமாவதை அறிந்து கொண்ட மக்கத்துக் குறைஷிகள், அமைதி உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்வதற்காக சுஹைல் இப்னு அம்ரு என்பவரை நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர்.
நபி (ஸல்) அவர்களிடம் சுஹைல் நீண்ட நேரம் பேசினார். பின்பு இருவரும் உடன்படிக்கைக்கான கூறுகளை முடிவு செய்தனர். அவையாவன:
[1] முஸ்லிம்கள் இந்த ஆண்டு மக்காவுக்குள் நுழையாமல் திரும்பிச் சென்றுவிட வேண்டும். அடுத்த ஆண்டு முஸ்லிம்கள் உம்ராவிற்கு வந்து மக்காவில் மூன்று நாட்கள் தங்கிக் கொள்ளலாம். சாதாரணமாக ஒரு பயணி தன்னுடன் வைத்திருக்கும் ஆயுதங்களை எடுத்து வரலாம். ஆனால், அவற்றை உறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த ஆண்டில் முஸ்லிம்களுக்கு எவ்வகையிலும் எந்தவித இடையூறும் இருக்காது.
[2] பத்து ஆண்டுகளுக்கு இரு தரப்பிலும் போர் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது. அக்காலங்களில் அனைவரும் அச்சமற்று இருப்பார்கள். யாரும் எவருக்கும் எவ்விதத் தீங்கும் செய்யக் கூடாது.
[3] யாரொருவர் முஹம்மதுடைய உடன்படிக்கையாளராகச் சேர்ந்து கொள்ள விரும்புகிறாரோ அவர் அதில் சேர்ந்து கொள்ளலாம். போலவே, மக்காக் குறைஷிகளின் உடன்படிக்கையாளராகச் சேர்ந்து கொள்ள விரும்புகிறவர் அதில் சேர்ந்து கொள்ளலாம். இந்த இரு பிரிவினரில் ஒன்றுடன் சேர்ந்து கொள்ளும் எந்த ஒரு கிளையினரும் அந்தப் பிரிவைச் சேர்ந்தவராவார். அதற்குப்பின் அந்தக் கிளையினருக்கு எதிராக யாராவது அத்துமீறி நடந்து கொண்டால் அஃது அவர் சார்ந்த முழுப்பிரிவின் மீதான அத்துமீறலாகக் கொள்ளப் படும்.
[4] மக்கத்துக் குறைஷி ஆண்களுள் யாராவது தன் பாதுகாவலரான நெருங்கிய உறவினரின் அனுமதியின்றி, தப்பித்து முஹம்மதிடம் வந்து சேர்ந்தால் முஹம்மது அவரை மக்கத்துக் குறைஷிகளிடம் திருப்பி அனுப்பி விடவேண்டும். ஆனால், முஹம்மதிடம் உள்ளவர்களில் யாராவது தப்பித்து மக்கத்துக் குறைஷிகளிடம் வந்துவிட்டால் அவர் முஹம்மதிடம் திருப்பி அனுப்பப்பட மாட்டார்.
மேற்காணும் உடன்படிக்கை [சுட்டி-13] முழுமை பெறுமுன்னர், மக்காவைச் சேர்ந்த, அண்மையில் இஸ்லாத்தைத் தழுவிய அபூஜந்தல் என்பார் முஸ்லிம்களுடன் சேர்ந்து கொள்ளப் புகலிடம் தேடி வந்தார். அவர், மக்கத்துக் குரைஷிகளின் பிரதிநியான சுஹைலின் மகனாவார். மக்காவைச் சேர்ந்த ஆண் தங்களிடம் வந்தால் திருப்பி அனுப்பி விடுவோம் என்ற பேச்சு வார்த்தை முடிந்து விட்டதால், அபூஜந்தலை அவரின் தந்தையிடமே ஒப்படைத்த நேமையாளர் எங்கள் தலைவர் [சுட்டி-14] முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
பிற்றை நாட்களில் அதேபோல், மக்கத்துக் குரைஷியரின் உடன்படிக்கைப் பிரிவான ஸகீப் இனத்தவருள் ஒருவரான அபூபஸீர் என்பார் புகலிடம் தேடி மதீனாவுக்கு வந்தபோது, அவரைத் திருப்பி அனுப்புமாறு கேட்டு வந்த மக்கத்தவர்களுடன் அவரை அனுப்பி வைத்த நேர்மையாளர் எங்கள் தலைவர் [சுட்டி-15].
***
பின்னர், தங்களுக்குப் பாதகம் விளைந்தபோது, ஹுதைபிய்யா உடன்படிக்கையின் நான்காவது கூறுதனைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தவர்கள் மக்கத்துக் குறைஷிகளாவர்.
உடன்படிக்கையின் மூன்றாவது கூறான, “ஒருபிரிவினருடன் சேர்ந்து கொள்ளும் எந்தக் கிளையினருக்கும் எதிராக மறுபிரிவினர் அத்து மீறக் கூடாது” என்பதை உடைத்தவர்களும் மக்கத்துக் குரைஷியரே.
ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு முன்னர்வரை குஜாஆ, பனூபக்ரு ஆகிய இரு குலத்தவரும் பன்னெடுங் காலமாகப் பகைமை மாறாமல் தங்களுக்குள் அடிக்கடி சணடியிட்டுக் கொண்டிருந்தனர். உடன்படிக்கைக்குப் பின்னர், குஜாஆவினர் நபியவர்களுடன் சேர்ந்து கொண்டனர். பனூபக்ரு குலத்தார் குரைஷிகள் பக்கம் சேர்ந்து கொண்டனர். இரு குலத்தவரிடையே சண்டைகள் தொடராமல் ஹுதைபிய்யா உடன்படிக்கைக் கட்டுப் படுத்தி வைத்திருந்தது.
ஹிஜ்ரீ 8, ஷஅபான் (எட்டாவது) மாதம் பனூபக்ரு குலத்தினரின் ஒரு கூட்டத்தினரை அழைத்துக் கொண்டு நவ்ஃபல் இப்னு முஆவியா அத்தியலி என்பவன் புறப்பட்டான். அன்று குஜாஆக் குலத்தவருள் சிலர் ‘அல்வத்தீர்’ என்ற கிணற்றுக்கருகில் ஒன்றுகூடியிருந்தனர். நவ்ஃபல், தான் அழைத்து வந்தவர்களைச் சேர்த்துக் கொண்டு குஜாஆவினரைத் தாக்கினான். குஜாஆவினரில் சிலர் கொல்லப்பட்டனர். எஞ்சியுள்ளவர்களுடன் கடுமையான சண்டை நடந்தது. பனூபக்ருக் கிளையினருக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியதோடு, அவர்களோடு இணைந்து கொண்டு குரைஷிகளுள் சிலரும் இரவின் இருளை பயன்படுத்திக் கொண்டு குஜாஆவினரைத் தாக்கினர்.
சண்டைசெய்து கொண்டே குஜாஆவினர் புனித (ஹரம்) எல்லைக்குள் நுழைந்து விட்டனர். அப்போது பனூபக்ருக் கிளையினர், “நவ்ஃபலே! நாம் நிறுத்திக் கொள்வோம். நாம் ஹரம் எல்லைக்குள் நுழைந்து விட்டோம். உமது இறைவனைப் பயந்துகொள்! உமது இறைவனை பயந்துகொள்!” என்று கூறினர். ஆனால், சதிகாரன் நவ்ஃபல் அதைச் செவிமடுக்காமல், மிகக் கடுமையான வார்த்தையைக் கூறினான். “பக்ரு இனத்தாரே! இன்றைய தினம் எந்த இறைவனும் இல்லை. உங்களது பழியைத் தீர்த்துக் கொள்ளுங்கள். என்மீது சத்தியமாக! ஹரம் எல்லையில் திருடும் நீங்கள் அதில் ஏன் கொலை செய்யக் கூடாது?” என்றான். கொல்லப் பட்டவர்களைத் தவிர்த்து, எஞ்சிய குஜாஆவினர் புதைல் இப்னு வரகா மற்றும் ராபிஃ ஆகிய தங்களின் நண்பர்கள் வீட்டில் சென்று அடைக்கலம் புகுந்து கொண்டனர்.
ஹுதைபிய்யா உடன்படிக்கையை மக்கத்துக் குரைஷிகள் மீறி, தங்களைக் கொன்றொழிக்க வந்ததை, குஜாஆக் குலத்தைச் சேர்ந்த அம்ரு இபுனு ஸாலிம் மதீனாவுக்குச் சென்று நபியவர்களிடம் கவிதையாகப் பாடினார்:
இறைவா! நான் முஹம்மதிடம் எங்கள் உடன்படிக்கையையும்
அவர் தந்தையின் பழமையான உடன்படிக்கையையும்
கேட்டு வந்திருக்கின்றேன். நீங்கள் பிள்ளைகள்;
நாங்கள் பெற்றோர்கள்; பின்னரே முஸ்லிமானோம்.
பின்வாங்கவில்லை. முழுமையாக உதவுங்கள்!
அல்லாஹ் உமக்கு வழிகாட்டுவான்.
அல்லாஹ்வின் அடியார்களை அழை;
உதவிக்கு அவர்களும் வருவார்கள்
அவர்களில் ஆயுதம் ஏந்திய அல்லாஹ்வின்
தூதரும் இருக்கின்றார். அவர் வானில் நீந்தும்
முழு நிலா போல் அழகுள்ளவர்.
அவருக்கு அநீதமிழைத்தால் முகம் மாறிவிடுவார்.
நுரை தள்ளும் கடல்போன்ற படையுடன் வருவார்
குறைஷிகள் உன் வாக்கு மாறினர்.
உன் வலுவான உடன்படிக்கையை முறித்து விட்டனர்.
‘கதா’வில் எனக்குப் பதுங்குக் குழி வைத்துள்ளனர்.
ஒருவரையும் உதவிக்கு அழையேன்
என நினைத்துக் கொண்டனர். அவர்கள் அற்பர்கள்
சிறுபான்மையினர் வதீல் இரவு எங்களைத் தாக்கினர்.
நாங்கள் இறைவனைப் பணிந்து குனிந்து வணங்கிய போது
எங்களை அவர்கள் வெட்டினர்.
மக்கத்துக் குரைஷியரால் ஹுதைபிய்யா உடன்படிக்கை மீறப்பட்ட பின்னரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்கத்துக் குரைஷியருக்கு மூன்று கூறுகளைத் தேர்வுக்காக முன் வைத்தார்கள்:
1. வலியச் சென்று சண்டையைத் துவக்கிய பனூ பக்ரு குலத்தாரை உடன்படிக்கையிலிருந்து நீக்குவது
2. மக்கத்துக் குரைஷியரும் பனூ பக்ருவினரும் சேர்ந்து கொண்டு கொலை செய்த குஜாஆவினருக்காக நஷ்ட ஈடு வழங்குவது.
3. ஹுதைபிய்யா உடன்படிக்கையை முற்றாக முறித்துக் கொள்வது.
குரைஷியர் மூன்றாவதைத் தேர்ந்தனர் [சுட்டி-16].
அடுத்த மாதமே, அதாவது ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு, ரமளான் (9வது) மாதம் பத்தாம் நாளில் பத்தாயிரம் தோழர்களுடன் மதீனாவிலிருந்து நபியவர்கள் புறப்பட்டு மக்காவை அடைந்தபோது நபியவர்கள் பிறந்த மண், தன்னை முழுமையாக அவர்களிடம் ஒப்படைத்தது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், தன்னை ஊரைவிட்டு விரட்டியடித்தவர்கள் அன்று வெருண்டோடி ஒளிந்து கொள்வதை நபியவர்கள் கண்டனர் [சுட்டி-17]. அதற்குப் பின்னரும் – மக்கா வெற்றி கொள்ளப் பட்டு, உடன்படிக்கை என்பது செல்லாமல்/இல்லாமல் ஆகிவிட்ட பிறகும் – அவ்வாறு நபியவர்கள் அறிவிக்கவில்லை என்பது வரலாற்று ஆசிரியர்களின் வியப்பின் உச்ச கட்டமாகும்.
மக்கா வெற்றி கொள்ளப் பட்டபோது, “குரைஷிக் கூட்டத்தினரே! நான் உங்களிடம் எவ்வாறு நடந்து கொள்வேன் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?” என்று நபியவர்கள் கேட்க, ” நல்ல முறையில் நடந்து கொள்வீர்கள். நீங்கள் எங்களின் சிறந்த சகோதரரும் எங்களுள் சிறந்த சகோதரரின் மகனுமாவீர்கள்” என்று குரைஷியர் கூறினர். “இன்றைய தினம் உங்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு” என்று அறிவித்து, தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தி, மனிதாபிமானத்தை நிலைநிறுத்தினார் எம் தலைவர் [சுட்டி-18].
***
அரைகுறை-2இல் குறிப்பிடப் பட்டுள்ள கீழ்க்காணும் வசனங்கள் ஹிஜ்ரீ ஒன்பதாவது ஆண்டில் அருளப் பெற்றன.
அல்லாஹ்வும் அவனின் தூதரும் இணைவைப்பவர்கள்(உடன் செய்திருந்த உடன்படிக்கை)ஐ விட்டும் முற்றிலும் விலகி விட்டனர் என்பதை இந்த மாபெரும் ஹஜ் நாளில் மக்களுக்கு அல்லாஹ்வும் அவனின் தூதரும் அறிவிக்கின்றனர். (இணைவைப்பாளர்களே!) நீங்கள் திருந்திக் கொள்வீர்களாயின் அஃது உங்களுக்குச் சிறப்பைத் தரும். மறுதலிப்பீர்களாயின், அறிந்து கொள்வீர்! அல்லாஹ்வை நீங்கள் வெல்ல முடியாது. (நபியே!) வலிமிகு வேதனையைப் பற்றி இறைமறுப்பாளர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!
நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இணைவைப்போருள் உடன்படிக்கைக்கு ஊறு செய்யாமலும் உங்களுக்கு எதிரானவர்களுக்கு உதவி செய்யாமலும் இருப்பவர்களுடன் அவ்வுடன்படிக்கையை அதன் காலக் கெடுவரை முழுமைப் படுத்துங்கள். அல்லாஹ், தன்னை அஞ்சி வாழ்வோரிடம் அன்பு செலுத்துகிறான் [அல் குர்ஆன் 009:003-004].
And an announcement from Allah and His Messenger, to the people (assembled) on the day of the Great Pilgrimage,- that Allah and His Messenger dissolve (treaty) obligations with the Pagans. If then, ye repent, it were best for you; but if ye turn away, know ye that ye cannot frustrate Allah. And proclaim a grievous penalty to those who reject Faith. (But the treaties are) not dissolved with those Pagans with whom ye have entered into alliance and who have not subsequently failed you in aught, nor aided any one against you. So fulfil your engagements with them to the end of their term: for Allah loveth the righteous [சுட்டி-19].
மேற்காணும் முழுமையான இறைவசனத்தில் இருப்பது என்ன வகை தக்கியா புக்கியா என்று சொல்லத் தெரியாமல் கட்டுரையாளர் ஊமை வேஷம் போடுகிறார்.
– பிற அரைகுறைகள் முழுமையாக்கப் படும்வரை தொடரும், இன்ஷா அல்லாஹ்
ஃஃஃ
to. wahhabi@gmail.com
http://wahhabipage.blogspot.com
 
சுட்டிகள்:
சுட்டி – 09  http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#7
சுட்டி – 10  http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#59
சுட்டி – 11  http://en.wikipedia.org/wiki/Muhammad_as_a_diplomat#Reformation_of_Medina_.28622.E2.80.94.29
சுட்டி – 12 http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#135
சுட்டி – 13 http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#140
சுட்டி – 14 http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#141
சுட்டி – 15 http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#146
சுட்டி – 16 http://en.wikipedia.org/wiki/Treaty_of_Hudaybiyyah#Aftermath
சுட்டி – 17 http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_second_phase.htm#70
சுட்டி – 18 http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_second_phase.htm#73
சுட்டி – 19 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/009.qmt#009.003

Series Navigation