இஸ்லாம் குறித்த நேசக்குமாரின் கட்டுரை: வஹ்ஹாபியிடம் என் சில கேள்விகள், மேலும் நேசக்குமாருக்கு என் சில விளக்கங்கள்

This entry is part [part not set] of 34 in the series 20090724_Issue

முகம்மது அமீன்


முதலில் நேசக்குமாருக்கு என் சிறு விளக்கம் எழுதப்படுகிறது. பிறகு வஹ்ஹாபி அவர்களிடம் என் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

முகம்மது நபி அவர்கள் பற்றி பற்பத்தாயிரம் கூற்றுகள் ( அரபியில் ‘ஹதீஸ்கள்’ அல்லது ‘ஹதீதுகள்’ எனப்படுபவைகள்) காணப்படுகின்றன. அவைகளிலிருந்து அவர்களைத் தாழ்த்தி விமர்சிக்கும் கூற்றுகள் மட்டும் நேசக்குமாரால் எடுத்தாளப்படுகிறது. அவரை எந்தக் கோணத்தில் காட்ட வேண்டும் என முடிவு செய்துவிட்டவரிடம் நாம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

இருப்பினும்,

அவர் எழுப்பியுள்ள கூற்றுகள் பல முஸ்லீம்களாலும் பேசாப் பொருட்கள். அவைகளை நேசக்குமார் பேசுவதில் ஒரு வகையில் பயன் உண்டு. அது எந்த வகையான பயன் என்பதைப் பிறகு பார்ப்போம்.

நேசக்குமார் அவர்கள் தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரத்திற்காக அவர் சில சமயங்களில் எடுத்தாளும் ஆதார நூல்கள் முஸ்லீம்களால் பெரிதும் போற்றப்படுபவை. எனவே அவைகள் அனைத்தும் புரட்டல்ல. ஆனால் ஏனோ வஹ்ஹாபி மற்றும் அவருடன் சேர்ந்து ‘பதில் கூறுகிறேன் பேர்வழி’ என எதிர்வினை செய்பவர்கள் அவை அனைத்தையும் பற்றி விவாதிப்பதில்லை. ஏனெனில் அவைகளைப் பற்றி அவர்கள் விவாதிக்க நேர்ந்தால், நேசக்குமார் அந்த சில ஹதீஸ் விஷயங்களில் சொல்வதை அங்கீகரித்துத் தான் ஆக வேண்டும். எனவே நலுவுகிறார்கள். அவ்வாறு அவர்கள் நலுவுவதை பார்க்கும்போது, அவர்களது இறைநம்பிக்கை (அதாவது அரபியில் இறைநம்பிக்கை என்பதினை ‘ஈமான்’ என்று சொல்வார்கள்) பலகீனமானதொன்று என அறிகிறேன். முகம்மது நபி மீது இத்தகைய விமர்சனங்கள் இல்லாமல் இருந்தால் மட்டுமே இஸ்லாம் போற்றப்படுமென வஹ்ஹாபியும் அவர் சார்ந்த மற்றவர்களும் முடிவுசெய்துவிட்டதாகத் தெரிகிறது. எனவே அவர்கள் பேச மறுக்கிறார்கள். நேசக்குமாரும் மற்றும் அவர் சார்ந்த மற்றவர்களும் எழுப்பும் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் கண்டும் காணாதது போல விட்டுவிட்டு எந்தெந்த குற்றச்சாடுகளில் நேசக்குமாரோ அல்லது மற்றவர்களோ தவறு விட்டு விடுகிறாகளோ அவைகளைப் பற்றி மட்டுமே பேசி ஓட்டிவிடுகிறார்கள்.

முதலில் நேசக்குமார் அவர்கள், நபி அவர்களை, தற்கால மதிப்பீட்டு நோக்கில் குற்றஞ்சாட்டும் ஹதீஸ்களைக் கொண்டு தேர்ந்தெடுத்து விடுக்கும் குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை 14 நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட அரபிகளின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கைச் சார்ந்த குற்றச்சாட்டுகள். அவைகள் முகம்மது நபி மீதான குற்றச்சாட்டுகள் அல்ல. முகம்மது நபி அவர்கள் அரேபியாவாழ் மக்களின் கலாச்சாரத்தினை முற்றிலுமாக சீரமைக்க வந்த நபி அல்ல. இதில் வஹ்ஹாபிகள் வேறுபடுகின்றனர். கலாச்சாரத்தினை சீரமைப்பதில் முகம்மது நபி அவர்களின் பங்கு இருப்பினும் அவைகள் முழுமையானதல்ல. அவர்கள் அனைத்து சீர்திருத்தங்களையும் முழுமையாக ஏற்படுத்தியவர் அல்ல. ஆனால் நிச்சயமாக கலாச்சாரத்தில் அவர் சீர்திருத்தங்களைச் செய்துள்ளார். உதாரணமாக பெண்களுக்கான சொத்துரிமையை ஏற்படுத்துதல், எடுத்த எடுப்பில் விவாகரத்து செய்தலை சீர்திருத்தம் செய்தல், பெண்சிசு கொலைகளை தடுத்தல், அடிமைகளை விடுவிப்பதை ஊக்குவித்தல், தானதர்மங்களை ஊக்குவித்தல், மற்றவர்களின் வீட்டிற்குள் நுழையும்போது அவர்களின் அனுமதிபெற்று நுழையும்படி கண்ணிய நடத்தையினை வலியுறுத்துதல் போன்றவைகள். ஆனால் இச்சீர்திருத்தங்களை வாய்ப்புகள் ஏற்பட்டபோது ஏற்படுத்தினார். இவைகளை அவர் முன்கூட்டியே சிந்தித்து ஏற்படுத்தியல்ல. அவரது தலையாய பணி இறைக்கொள்கைச் சார்ந்தே இருந்தது. அவர் மூலம் ஏற்பட்ட இறைநூலான குர்ஆன், “மனிதன் இறைவனை வணங்குவதற்காகவே படைக்கப்பட்டவன்” எனக் கூறி மனிதனை இறைவன் படைத்ததன் நோக்கமாகக் கூறுக்கிறது. எனவே இறைவன் பற்றிய ஞானத்தினை அருளி அந்த காட்டுமிராண்டி அரபிகளின் வாழ்க்கையில் இறைவழி பாட்டினை செப்பனிடுவதற்காகவே அவர்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

அவ்வாறு இறைவன் பற்றிய ஞானத்தினைப் பரப்பும் செயலின்போது, அரபிகளின் காட்டுமிராண்டித்தனமான எதிர்செயல்களினால், நபி அவர்கள் அரசியலிலும் ஈடுபடவேண்டியதாயிற்று. மேலும், சமூகங்களுக்கிடையேயான நல்லுறவிற்காக திருமண உறவுகளை ஏற்படுத்தி அவரது தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கையும் அவரது வெளிவாழ்க்கையின் தாக்கத்திற்கு உள்ளானது. ஏனெனில் சமூகங்களுக்கிடையேயான நல்லுறவு அவரது இறைப்பணி சார்ந்த அரசியலுக்கு தேவையானதாக இருந்தது.

நேசக்குமார் அவர்கள் கூறுவதுபோல அடிமைமுறைகளை முற்றிலுமாக ஒழிக்க அவர் முயன்றிருக்கலாம்தான். அது அரபிகளை மேலான சமூகமாக மாற்றியிருக்கும் தான். அடிமைமுறையினை புழக்கத்தில் இருக்கும் சமூகத்தைவிட அது இல்லாமல் இருக்கும் சமூகம் நாகரீகத்தில் மேம்பட்டதுதான். ஆனால் உண்மை என்னவெனில், நபி அவர்களின் இறைபணிக்கு அது தேவையற்றதாக இருந்தது. எனவே அவர்கள் அவைகளின் பக்கம் அதீத கவனத்தினை செலுத்தவில்லை. இருப்பினும் அடிமைகளுக்கு சுதந்திரம் அளித்தலை அவர்கள் ஊக்குவித்துள்ளார்கள். அதைக் கடைபிடித்தும் உள்ளார்கள். அடிமைகளை விடுவித்தலை இறைவனின் திருப்பொறுத்தத்திற்கான செயலாக போற்றியவர். செய்யப்படும் சில தவறுகளுக்குப் பரிகாரமாக இறைவனிடம் பாவமன்னிப்புக் கோறுதலுடன் அடிமைகளை விடுவித்தலையும் பரிகாரமாகக் கூறியவர். ஆனால் அடிமை முறையினைத் தடுக்கப் பட்டதாக அறிக்காததென்னவோ உண்மைதான்.

அதுபோலவே போரின்போது பிடிபட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் விஷயங்களிலும். அவைகளைப் போரின்போது கைப்பற்றபட்ட பொருட்கள் போலவே அரபிகள் கருதினர். அரபிகளின் வாழ்க்கையில் அவைகளின் உரிமையாளர்கள் ஆண்கள் மட்டுமே. எப்போது ஆண்கள் போரில் தோற்கிறார்களோ, அவர்களின் உடமைகள் வெற்றி பெற்றவர்களுக்கு உரித்தாகும். இது அந்தக் கால விதிமுறை. வஹ்ஹாபி இதனைப் போற்றக் கூடியவர். இதனை அவர் கொள்கைச் சார்ந்து சொல்கிறேன். ஆனால் இக்கால மேம்பட்ட நாகரீகத்தில் இது சிறந்ததல்ல. ஆனால் இதில் என்ன உண்மையென்றால், நபி அவர்கள் போரின்போது பிடிபடும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தவர். போரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வேண்டுமென்றேத் தாக்கப்பட்டுக் கொல்லப்படுவதைத் தடுத்தவர். அவ்வாறு கொல்லப்படுவதைத் தடுத்து குர்ஆன் வாசகங்கள் உள்ளன. பிடிபட்ட பெண்கள் பாலுறவுக்காகவும் அடிமையாகப் பயன்படுத்தப்படுவது அரேபியாவில் வழக்கில் இருந்ததென்னவோ உண்மைதான். முகம்மது நபி அவர்கள், பிடிபட்ட திருமணமான பெண்களில் கணவன் உயிருடன் இருப்பார்களானால் அவர்களை அவர்கள் பாலுறவு அடிமையாக பயன்படுத்தலைத் தடுத்துள்ளார்கள். அதற்கான குர்ஆன் வாசகமே உள்ளது. மேலும் அரேபியப் பண்பாட்டில் கற்பழிப்பு எனும் கருத்து தற்கால கண்ணோட்டத்தில் இல்லை. பெண்ணின் உரிமையாளருக்கு எதற்கும் உரிமை இருந்தது. அக்காலத்தில் பெண்கள் எதற்காகப் பயன்படுத்தப்பட்டார்களோ அதற்காகப் பயன்பட்டார்கள். அவர்களது வாழ்க்கை அந்த மாதிரி. அதனை வஹ்ஹாபிகள் மட்டுமே போற்றமுடியும். அந்த வஹ்ஹாபிகளால் மட்டுமே அவைகளை இக்காலத்திற்கும் பொறுத்தமான சட்டம் எனப் போற்றமுடியும். ஏனைய முஸ்லீம்களால் அல்ல. ஆனால் முகம்மது நபி அவர்களின் முன்னுதாரணமாக பாலியல் அடிமைகளாக அவருக்கு வந்த சிலரை விடுவித்துள்ளார்கள். சிலரை மணந்தும் உள்ளார்கள். ஆனால் ஒப்புக் கொள்கிறேன், இக்கால நாகரீக வாழ்க்கையில், அக்கால அரேபியாவைவிட சிறந்த முறையில் வாழ முடியும். இறைவன் குர்ஆனில், “வரம்பு மீறாதீர்கள்” என்றும் “கண்ணியத்துடன் நடந்து கொள்ளுங்கள்” என்றும் கூறுகிறான். ஆனால் வரம்பு எது என்றும், கண்ணியம் எது என்றும் இறைவன் வர்ணிப்பதில்லை. எந்த காலகட்டத்தில் இருக்கிறோமோ அக்கால வரமுறைகளைப் பயன்படுத்தி நாம் கண்ணியமுள்ளவர்களாகவும் வரம்பு மீறாதவர்களாகவ்ம் இருக்க வேண்டும். இது வஹ்ஹாபிகளுக்கு சற்று சிரமம் தான்.

நேசக்குமாரது மற்றொரு கூற்றாவது, “சூஃபியஸம் இஸ்லாத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது” என்பதாகும். இவ்விஷயத்தில் அவர் வஹ்ஹாபியுடன் ஒன்றுபடுகிறார். இவ்வாறு சில சமயங்களில் அவர் வஹ்ஹாபியுடன் சேர்ந்துக் கொள்வது அவரது தேவையாகும். சூஃபியிசம் இந்து மதத்திலிருந்து உருவானது என அவர் நிறுவ அவர் எடுத்துக் கொண்ட முயற்சி இது. ஏனெனில் வஹ்ஹாபியே திண்ணையில் அவ்வாறு எழுதியிருந்தார். சூஃபியிசம் பலவிதமான பொருளைக் கொள்ளும்படி இன்றைய நிலையில் காணப்படுகிறது. சிலர் இசை, ஆட்டம் முதலியவைகளை சூஃபியிசத்துடன் இணைத்துப் பார்க்கின்றனர். சிலர் அடக்கஸ்தலங்களைப் போற்றுவதை சூஃபியிசம் என்கின்றனர். சிலர் மனிதன் இறைவனுடன் இரண்டறக் கலக்கலாம் என்பதினை சூஃபியிசம் என்கின்றனர். இறுதியாக சொன்னதென்னவோ இந்த இந்தியத் துணைக் கண்டப் பகுதியில் வழக்கில் இருந்த கூற்றாகும். (ஆனால் இந்து மதத்தில் என்று சொல்வதற்கில்லை) . ஆனால் பெரும்பான்மை சூஃபிகளால் வலியுறுத்தப்படும் சூஃபியிசம் இஸ்லாம் வலியுறுத்தும் இறைக்கொள்கையை முற்றிலுமாக உள்வாங்கியது. அவர்களின் “திக்ரு” எனும் இறைச்சிந்தனை, “முரக்காபா” எனும் தியானம், ஆகியவைகள் அனைத்தும் இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்டது. இறைவனின் பண்பு, செயல், செயல்களின் வெளிப்பாடுகள் அனைத்தும் இஸ்லாமிய ஆதார நூல்களின் வேறூண்றியவை. ஆனால் மறுதலையாக சில சூஃபிக்கள் இஸ்லாமிய இறைக்கொள்கைக்கு மாறான கொள்கையையும் கொண்டிருந்தார்கள். ஆனால் அவைகள் பெரும்பான்மையான சூஃபி தரீக்காக்களால் கொண்டாடப்படுவதில்லை. ஹெச் ஜி ரசூலின் சூஃபியிசம் வேண்டுமானால் இந்து மதத்துடன் நெறுங்கியத் தொடர்பு உடையது எனக் கூறலாம். உண்மையான சூஃபியிசம் என்பது அதிகப் படியான இறைச்சிந்தனை (“திக்ரு”), வணக்கம் முதலியவைகளாலும், ஆசை மற்றும் சாத்தானின் சூழ்ச்சிகளிலிருந்து மனதினையும் உடலினையும் பாதுகாத்து இறைவனுக்குப் பிடித்தமானவனாகி, காரியங்களின் காரணங்களின் இறைவனின் செயல்பாட்டின் பங்கினை அறிந்து அவனை மெச்சி, நமது செயல்பாட்டினை அவன் விரும்பும் திசையில் செய்ய நமது ஆசையினை பணித்து, அதன் மூலம் அவனது திருப்பொருத்தத்தினைப் பெற்று, அவனுக்கு மேலும் வழிபடுதல் ஆகும்.

இப்போது வஹ்ஹாபியிடம் நான் கேட்கும் கேள்விகள்

1. பாலுறவு பெண்ணடிமைகள் பயன்படுத்துவதை நபி அவர்களால் அனுமதிக்கப் பட்ட வழிமுறை எனப் போற்றுகிறீர்களா ? ஏனெனின் நீங்கள் பெரிதும் மதிக்கும் ஹதீஸ் நூல்களில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.

2. பாலுறவு அடிமைகள் விற்கப்பட்டதை நிராகரித்து ஒரு கட்டுரையில் எழுதியிருந்தீர்கள். அது உண்மையா ? ஏனென்றால் புஹாரி ஹதீஸ் அதற்கு மாற்றமாக உள்ளதே !!

3. நாகூர் ரூமி அவரது வலைத்தளத்தில் வினவியது போலவே, நானும் கேட்கின்றேன். பாலியல் குற்றவாளிகள் கல்லால் அடித்து கொல்லப்படுவதை அமோதிக்கிறீர்களா ? ஆனால் இந்த குற்றம் மற்றும் தண்டனையின் வீரியத்தன்மை விவாகரத்து மற்றும் சொத்துப் பிரச்சனை போன்றவைகளைவிட அதிக முக்கியத்துவம் இருந்தும் குர்ஆனில் இறைவனின் சட்டமாக இடம் பெறாது ஏன் ?

வஹ்ஹாபி அவர்கள் இவைகளுக்கு பதில் கூறுவதன் மூலம் தனது இறை நம்பிக்கை பாழ்பட்டுவிடுமென்று பயந்தாலோ, அல்லது இஸ்லாத்திற்கு அவப் பெயர் ஏற்பட்டுவிடும் என்று பயந்தாலோ, அல்லது தான் ‘வஹ்ஹாபி’ எனும் நிலையிருந்து இறங்கி வரவேண்டும் என தயங்கினாலோ பதில் சொல்லவேண்டியத் தேவையில்லை.

உண்மையில் நேசக்குமாரது கட்டுரைகளால் பயன்கள் உள்ளன. நேசக்குமாரின் கட்டுரைகள் ஒருவிதப் பயன்பாட்டினை எதிர்பார்த்து அவரால் எழுதப்படுகின்றன. அப்பயன்பாட்டினைப் பாவித்து பலராலும் மெச்சப்படுகின்றன மற்றும் பலரால் தூற்றப்படுகின்றன. ஆனால் நான் காணும் பயன் ஏதெனில், அது பலராலும் பேசாப் பொருள் பேசப்படுவதற்கு உதவுகிறது. பல முஸ்லீம்களின் இறைநம்பிக்கை வலுவடைவதற்கும், போலியான வஹ்ஹாபிய கட்டமைப்பிலிருந்து வெளியேறி, இறை சார்ந்த காரணிகளில் நம்பிக்கை வேரூன்ற ஏது செய்கிறது.

*
mohdameenblr@gmail.com

Series Navigation

முகம்மது அமீன்

முகம்மது அமீன்