நண்பர் ஷேக் தாவூதுக்கு பதில்

This entry is part [part not set] of 39 in the series 20090716_Issue

சின்னக்கருப்பன்


மக்களிடையே மனிதநேயம் வளர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் ஷேக் தாவூது விபச்சாரிகளிடமும் திருடர்களிடமும் மனித நேயம் பார்க்கமுடியவில்லை என்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. எல்லா விபச்சாரிகளும் விபச்சாரத்தை விரும்பி எடுத்துக்கொள்வதில்லை. திருடர்களும் திருடுவதற்காகவே திருடுவதில்லை. அவர்களுக்கு வயிற்றில் கனலும் நெருப்பு அவர்களை திருடவோ அல்லது உடலை விற்றுப் பிழைக்கவோ வைக்கிறது. பசி வந்திட பத்தும் பறந்துபோகும் என்பது இந்த நிலத்தின் பழமொழிதான். இதனால்தான் விபச்சாரிகளையும், திருடர்களையும் கூட கனிவுடனே பார்க்க பழக்கப்பட்டிருக்கிறேன். எழுத்தாளர் ஜெயகாந்தன் வீட்டில் தேங்காய் திருட வந்தவனிடம், அப்படியே எனக்கும் கொஞ்சம் தேங்காய் பறித்து போட்டுவிட்டு போ என்று சொன்னதை படிக்கும்போது அவரது புரிந்துணர்வும், மனித நேயமும் தெரிகிறதுதானே? ஜெயகாந்தன் காந்தி விவேகானந்தர் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் போன்றோர்கள் விபச்சாரிகளை வெறுத்தா ஒதுக்கினார்கள்?

பசியினாலோ சூழ்நிலையினாலோ விபச்சாரிகளும் திருடர்களும் தோன்றலாம். ஓரளவுக்கு அவர்களது சுய தேர்வும் கூட. பசி போய்விட்டாலோ, அல்லது சூழ்நிலை மாறிவிட்டாலோ அவர்கள் திருடுவதையோ அல்லது விபச்சாரத்தையோ விட்டுவிட்டு தங்கள் மனத்துக்கு உகந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம்.

திருடனையும் விபச்சாரியையும் தண்டிப்பதற்கு முன்னர் வறுமை மிகுந்த இந்த சமூகத்தைத்தானே அதற்கு குற்றம் சொல்லவேண்டும்? இது வெறும் விதண்டாவாதம் இல்லை. சமூகவியலாளர்கள், அரசியல்வாதிகள் பொருளாதார நிபுணர்கள் எல்லோருமே வறுமையும் வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்தால் குற்றங்களும் அதிகரிக்கின்றன என்பதை கூறியுள்ளார்கள்.

வேலைக்கான வாய்ப்பை இந்த சமூகம் தரும்போது அந்த தொழிலும் மாறத்தானே செய்யும்?

பசியினால் திருடிவிட்ட ஒருவனது கையை வெட்டவா முடியும்? அப்படி வெட்டிவிட்டால், அவன் பசி போனதும் எப்படி உழைத்து பிழைக்கமுடியும்? நிரந்தர பிச்சையில்தானே அவனது வாழ்வு முடியும்? ஆகவே அவர்களிடமே கனிவுடன் இருக்கவேண்டும் என்று மனிதநேய மனது கூறும்போது, பிறப்பிலேயே மரபணு சிக்கலால் ஆண் மனதோ பெண்ணுடலோ அல்லது பெண் மனமோ ஆண் உடலோ கொண்டு பிறந்துவிட்டவர்களிடம் மனிதநேயம் பார்க்கக்கூடாதா?

இது கால் ஊனமாக பிறப்பது போன்ற ஒரு பிறவிக்குணம். ஒரு மனிதன் பிறக்கும்போதே கால் ஊனமாக பிறந்துவிட்டால், அதற்காக அவனை தண்டிப்பது முறையாகுமா? கால் ஊனமாக பிறந்தவர்களை கொல்லுங்கள் என்று ஒரு கடவுள் சொன்னால், ஏன் அப்படி பிறக்க வைத்தாய் என்று கடவுளை கேட்பது தவறாகுமா? பிறக்கவைத்து கொல்லும் கடவுள் என்ன கடவுள் என்று கேள்வி வராதா?

நட்புடன்
சின்னக்கருப்பன்

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்