விசய் (Vijay) தொலைக்காட்சியில் ‘நீயா? நானா?’ – பாராட்டு! நெஞ்சார்ந்த பாராட்டு!

This entry is part [part not set] of 33 in the series 20080710_Issue

தமிழநம்பி



பொதுவாக, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கும் பழக்கமில்லாதவன் நான். இன்று (8-7-2008) இரவு பத்தரை மணியளவில் விசய் (Vijay) தொலைக்காட்சியில் ‘நீயா? நானா?’ என்ற நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன்.

இதற்கு முன்னும் இத்தலைப்பில் நடந்த சில நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். இன்று நடந்த நிகழ்ச்சியில், அணமையில் நடைபெற்ற பள்ளி இறுதித் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணாக்கரை அவர்தம் பெற்றோருடன் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து சிறப்பித்தனர்.

இதில் போற்றத்தக்க சிறப்பு இருந்தது. பொருளியல் நிலையில் மிகமிகக் குறைந்த நிலையில் இருந்தபோதும் முயன்று படித்துப் பல்வேறு பாடங்களில் முதன்மையான மதிப்பெண்களைப் பெற்ற பையன்களையும் பெண்களையும் தேடிக் கண்டுபிடித்து, அவர்களைப் பெற்றோருடன் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது அத்தொலைக்காட்சி! அம்மாணாக்கர்க்குப் பொருள் உதவியும் அத்தொலைக்காட்சி செய்தது. கணிப்பொறிக் கடவைகள்(courses) படிக்க உதவியும் பெற்றுத் தந்துள்ளது.

நாட்கூலிக்காரர், உணவுவிடுதிப் பரிமாறுநர், வீட்டுவேலை செய்யும் பெண், ‘புரியப்பம் (பரோட்டா) உருவாக்குநர் போன்றோரே அம்மாணாக்கரின் பெற்றோராயிருந்தனர்.

அவர்கள் தம் பிள்ளைகளைப் படிக்க வைக்கப் பெரும்பாடு பட்டதையும் அப்பிள்ளைகள் நன்கு படித்துச் சிறந்தபோது பெற்ற மகிழ்ச்சியையும் உணர்வுப் பெருக்கில் கண்கலங்கி பேச்சுவரா நிலையில் தம் உணர்வுகளை ஒருவாறு ஒருநிலைப் படுத்திக் கொண்டு எடுத்துக் கூறினர். அவற்றைத் தொலைக்காட்சியில் கண்ணுற்றவரும் செவிமடுத்தரும் கண்கலங்கினர்!

இக்காட்சி, பலருக்கு ஊக்கமளிக்கும். பலருக்கு உதவி கிடைக்க வழி செய்யும். மாந்த நேயத்தோடும் குமுகாய முன்னேற்ற அக்கறையோடும் இந்நிகழ்ச்சி அமைக்கப் பட்டிருந்ததெனில், மிகையுரை அன்று.

‘விசய்’ தொலைக்காட்சிக்குப் பாராட்டு! நெஞ்சார்ந்த பாராட்டு!


thamizhanambi44@gmail.com

Series Navigation

தமிழநம்பி

தமிழநம்பி