தன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு

This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue

கார்கில் ஜெய்


தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
திரு தமிழநம்பி அவர்களுக்கு,
சிறுபாசனம் என்று திருத்தியமைக்கு என் மனப்பூர்வமான நன்றி. ‘அனுபவ’த்துக்கும் இணையான, சுளுவாக பயன் படக்கூடிய சொல்லையும் நீங்கள் சொல்லியிருந்தால் மேலும் ஒரு சொல்லை அறிந்திருப்பேன். நிற்க. ஜோதிர்லதா கிரிஜாவின் தமிழ்ப்பற்றை புடம் போட நீங்கள் இதைப்படிக்கவும் : http://www.thinnai.com/?module=displaystory&story_id=20308222&format=html இனி நீங்கள் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு என் பதில்:
தமிழ் நம் இருவர்க்கும் கண்களைப் போன்றது. தமிழ்ப் பற்று என் இமைகளைப் போன்றது. அவை என் கண்களுக்கு நல்ல தமிழைப் படிக்கத் திறந்தும், ஒய்வெடுக்க மூடியும் உதவுகின்றன. ஆனால் உங்கள் இமைகளோ அழுத்தமாக மூடிக்கொண்டு நல்ல தமிழ், கெட்ட தமிழ், சுத்தத் தமிழ், தூய தமிழ், பார்ப்பனத் தமிழ், தலித்தியத் தமிழ் எனத் தமிழில் சாதி வேறுபாடுகளை உருவாக்கும் வடிகட்டியாகி உள்ளன. உங்கள் இமைகள் சில சம்ஸ்கிருத எழுத்துக்கள் சேர்ந்த தமிழை உங்கள் பார்வைக்குத் தீண்டத் தகாதவையாகவும் ஆக்கியுள்ளன. ஆக்கிரமிப்பு வடிகட்டியாகச் செயல்படும், தமிழரையே பிரித்துத் துண்டாடும் இமைகளை கண்மேல் பற்றுள்ளவை என சொல்வது ஏற்புடையதாக இல்லை.
உங்கள் வாதங்கள் எனக்கு ‘தமிழ் நெறியில் வளர்ந்தோர் இப்படியும் கூட எழுதுவார்களா?’ என ஆச்சர்யத்தையும், கவலையையும் அளிக்கின்றன. உதாரணத்துக்கு, ஒரு மருத்துவர் ‘தோழமையுடன் பழகுவதால் எய்ட்ஸ் வந்துவிடும் – என்ற பயம் தேவையற்றது’ என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உடனே நீங்கள் ‘ஐயோ..தோழமையுடன் பழகுவதால் எய்ட்ஸ் வந்துவிடும் – என்று டாக்டர் சொல்கிறாரே’ என்று கத்திக் கலகம் செய்வீர்களா? இப்படித்தான் இருக்கிறது ஜோதிர்லதா கிரிஜா சொன்னதாக நீங்கள் எழுதியது. ஜோதிர்லதா கிரிஜா எழுதியது இதுதான்: //அண்மைக்காலமாகத் தமிழ்ப் பற்று மிக்கவர்களால் ஒரு கவலை மீண்டும் மீண்டும் வெளியிடப்பட்டு வருகிறது. அதாவது, தமிழ் மெல்ல மெல்லத் தனது தனித்தன்மையை இழந்து வருகிறதோ, பிறமொழிச் சொற்களின் – குறிப்பாக ஆங்கிலச் சொற்களின் – நீக்குப் போக்கற்ற பயன்பாட்டால் அது மிகவும் கலப்படப்பட்டு, ஒரு நாள் கிட்டத்தட்ட அழிந்தே போய்விடக்கூடிய அபாயம் உள்ளதோ என்கிற கவலையே அது. // ( http://www.thinnai.com/?module=displaystory&story_id=20804032&format=html)
அதாவது, தமிழ் அழியாது, ஒரிரு ஆங்கிலச் சொற்கலப்பால் ‘தமிழ் அழிந்து போகுமோ?’ என்ற மிகையான பயம் தனித்தமிழ்ப் பற்றாளர்களிடம் உள்ளது என்றுதான் கூறியுள்ளார். ஆனால் நீங்களோ அதை தனித்தமிழில் துளியும் நேர்மைக் கலப்பின்றி, ‘தமிழ் அழிந்து போகும்’ என்று அவர் ஆணவத்துடன் சொன்னதாக நேரெதிராக மாற்றியுள்ளீர்கள். ( http://www.thinnai.com/?module=displaystory&story_id=80804244&format=html )
இப்போது நன்றாக ஆழ்ந்து சுவாசித்துவிட்டு, ‘தமிழ் அழிந்து போகும்’ அவர் எழுதியதாக நீங்கள் பொய்சொன்னது நியாயமா, சொன்னது உண்மையா எனச் சிந்தித்துப் பாருங்கள். உங்களை உண்மை சுட்டால், உங்களிடம் உள்ளது தமிழ்ப் பற்று.
உங்களை உண்மை சுடவில்லையெனில் உங்களிடம் உள்ளது தமிழ் பற்று அன்று; வேறேதோவொன்று; அது தமிழ்வெறியாகவும் இருக்கலாம். உண்மை சுடவில்லையெனில் இதற்கு மேல் நீங்கள் நான் எழுதுவதைப் படித்தாலும் பயனிருக்காது என்பதால், நீங்கள் இந்தக் கடிதத்தை மேற்கொண்டு படிக்க வேண்டாம். உங்கள் எழுத்து திண்ணையேறிய அந்தஸ்தில் நீங்கள் இருப்பதனால்தான் உங்களுக்கு நான் பதில் சொல்ல நேர்ந்துவிட்டது. மற்றபடி பதில் சொல்லவேண்டிய அளவுக்கு உங்கள் எழுத்துக்கு தகுதியுள்ளாதா என்பதை வாசகர்கள் முடிவுசெய்யட்டும். இந்தக் கடிதத்துடன் சரி; இனி உங்களுக்கு பதில் சொல்லி நம்மிருவரின் பொழுதையும் வீணடிக்க மாட்டேன். நாமிருவரும் ஒரே சமயத்தில் கலந்துரையாடினால் சிவபெருமான் தருமிக்கு சொன்னது போல் பளிச்,பளிச் சென்று பதில் சொல்லலாம். ஆனால் இப்போது நீங்கள் கேட்ட கேள்வியையும் எழுதி, அதை என்ன சந்தர்ப்பத்தில் எவ்வாறு கையாண்டு இருக்கிறீர்கள் எனவும் விளக்கி ஆதாரமாக சுட்டிகளை எடுத்துக் கோர்த்து… மணிக்கணக்கில்…(it is not worth it man..). மேலும் ஒரு தமிழ் விரும்பியைச் சாடி எழுதுதல் எனக்கு மிகவும் சோர்வும், மனவருத்தமும் அளிக்கக் கூடிய செயலாகும்.
நீங்கள் ஜோதிர்லதா கிரிஜாவின் மற்றும் ரவிசங்கரின் சொற்களை மாற்றிச் சமைத்தாவது பிறரை குறை சொல்ல வேண்டும் என உங்களுக்குள் தூண்டுதலை ஏற்படுத்தியது உண்மையின் கண்களை மறைக்கும் வேறேதோவொன்றே. அந்த வேறேதோவொன்றினால் நீங்கள் என்னவெல்லாம் மேலும் எழுதியுள்ளீர்கள் என உங்கள் கவனத்துக்கே கொண்டுவருகிறேன்:
நான் ‘வேதாத்ரி மகரிஷி’ என்று சொன்னதை ‘யாரோ’ என்று எழுதியுள்ளீர்கள். பெயர் சொல்லக்கூடாத அளவுக்கு என்ன விரோதம்? சத்தியமாக நான் அவர் சொன்னதை பொருள் மாறாமல்தான் சொன்னேன். அவர் சொன்னபோது நூற்றுக் கணக்காணோர் அங்கு இருந்தனர். வேதாத்ரி மகரிஷியை ‘யாரோ’ என துச்சமாக சொல்லுதல் ஆணவமில்லையா என நீங்களே சிந்தியுங்கள்.
நான் பெயரில் கார்கிலைக் கொண்டிருந்தால் என்ன தவறு? ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று இரண்டாயிரம் ஆண்டுகளாக நெகிழ்ந்தவர்கள் இல்லையா நாம்?ஒருவேளை ‘கராச்சி ஜெய்’ என பெயர் கொண்டிருந்தால் மகிழ்வுற்றிருபீர்களா? ஏன் உங்களுக்கு கார்கில் மேல் எரிச்சல்? கார்கில் உங்களுக்கு எந்த வரலாறையும் நினைவு படுத்தவில்லையா? தேசப்பற்று மிக்க தமிழ் வீரர்கள் கூட அங்கு அமரராயினரே ? பெருஞ்சித்திரனார் கார்கில் வீரர்களுக்கு எழுத மறந்தாரா? உங்களின் முகவுரையே வியப்பளித்தது. நான் எதற்கு உங்களுக்கு உவகையூட்டும்படி எழுதுதவேண்டும்? நான் எழுதியது ‘ஒரு அலசல்’. ஒரு பக்கம் சார்ந்த எழுத்து அல்ல.
இலயோலாக் கல்லூரி மாணவர் மகிழ்வுற்றனர் என்று நான் கூறியதாக ஏன் மாற்றி எழுதுகிறீர்கள்? அர்த்தம் புரியாததனால் கோபப்படவில்லை என்ற உண்மையைத்தானே நகைச்சுவையாக எழுதினேன்?
நான் ஒன்றும் ஜோதிர்லதா கிரிஜாவின் பரம ரசிகன் அல்லன். அவர் எழுதிய ‘தீவிர மதச்சார்பின்மை’க் கருத்துக்கள் சிலவும் எனக்கு ஏற்பானவை அல்ல. ஆனால், பால்யத்தில் நான் வாசித்த அவர் கதைகள் மனமகிழ்வுக் கதைகளாக இல்லாமல், அறம், கொடை, மாட்சி என வித்தியாசப் படுத்திக் கொண்டன. சிறுவயதில் மனமகிழ்வுக்கு பல கதைகள் படித்திருந்தாலும், அவரின் கதைகள் மலரும் நினைவுகளில் தாய்ப்பால் மணத்தை நினைவுறுத்துகின்றன; நிச்சயம் அவரின் சமுதாய, பிற்கால குடிமக்களை பற்றிய அக்கறையை பறைசாற்றுகின்றன. ஆகவே, மிகை நாடி மிக்க கொண்டு அவரைப் புகழுதலையே பண்பாகக் கருதுகிறேன். நான் அவரை புகழ்வதில் உங்களுக்கு அப்படி என்ன வருத்தம் என புரியவில்லை. நீங்கள் யாரையுமே புகழாத, துதிக்காத வணங்காமுடியா? யாரையுமே வணங்கக் கூடாதென்றால் அதுவும் ஆணவம் ஆகாதா? நீங்களே சிந்தியுங்கள் .
திரு. ரவிசங்கர் ‘செத்தமொழி’ என்று குறிப்பிடப்பட்டமைக்கு, ‘ஆணவம்’ என்று தமிழ்ச்சான்றோர் எதைக் குறிப்பிட்டார்களோ, அதை யே நான் சுட்டிக்காட்டினேன். நீங்களோ ‘அது ஆணவம் என்றால், இது என்ன?’ என ஜோதிர்லதா கிரிஜா எழுதாததை எழுதியதுபோல் சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள். வாசகர்களுக்கு ‘ஒருவேளை ஜோதிர்லதா கிரிஜாதான் முதலில் ஆணவமாக இவ்வாறெல்லாம் கூறினாரோ?’ என்று பொருள்படும் வண்ணம் அவர் சொல்லாததையெல்லாம் சொன்னதாக எழுதியுள்ளீர்கள். ஜோதிர்லதா கிரிஜாவா முதலில் எழுதினார்? அவர் எழுதுவதற்கு ஒருமாதம் முன்பே நீங்கள் ‘செத்தமொழி’ எழுதிய ஒரு துதியைப் பார்ப்போம்:
//தன்னேரில்லாப் பெரும்பாவலர்! தூயதமிழைப் பரவலாகப் பலருக்கும் உணர்த்தி ஊன்றிய அரிய தமிழ் மீட்பர்! மூத்த தமிழை முழுமையாய்க் காத்து நின்ற கேடயம்! செத்தமொழி தாங்கிகளின் சித்தம் கலங்கடித்த போர்வாள்! ஒப்பற்ற தமிழறிஞர்! உயர்ந்த ஆய்வாளர்! அரிய மெய்யறிவுச் சிந்தனையாளர்! சொல்லுக்கும் செயலுக்கும் மாறுபாடு வேறுபாடு இல்லாத மெய்வாழ்வர்! ஈடற்ற செழுந்தமிழ்ச் சொற்பொழிவாளர்! தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய மூன்று இதழ்களைச் சிறப்புற நடத்திய ஈடெடுப்பற்ற இதழாளர்! சிறந்த இலக்கியப் புலமையாளர்! நல்ல ஓவியர்! திறஞ்சான்ற அச்சுத்தொழில் வல்லார்! தமிழ்இன இழிவு நீக்கத்திற்கும் தமிழ்நாட்டு விடுதலைக்குமாக அயராது பொருது நின்ற போராளி! மூன்றுமுறை தமிழகவிடுதலை மாநாடுகளை நடத்திய துணிவாற்றல் சான்ற வினையாண்மையர்! தமிழ்மொழி தமிழ்மக்கள் தமிழ்நாட்டு நலன்களுக்காக முப்பத்தைந்து முறைகளுக்கும் மேல் சிறைசென்ற அஞ்சாநெஞ்சர்!//
இகழ்தல் இல்லாமல் உங்களால் புகழ்தல் கூட முடியாதா?
திரு. ரவிசங்கர் பதினான்குக்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்டு இவற்றுக்கு பதில் இருக்காது என்று சொல்லியிருந்தார். ஆனால் நீங்கள் அவர் குறிப்பிட்டது கடைசி மூன்று கேள்விகளுக்கு மட்டும் என விளக்கம் கூறியிருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதுபோல், இந்த மூன்று கேள்விகளுக்கு மட்டும் பதில் இருக்காது என்று அவர் நினைத்தால், மற்ற கேள்விகளுக்கு பதில் உண்டு என அவர் ஒப்புக்கொண்டதாக வைத்துக்கொள்ளலாமா? நீங்கள் சொல்வதுபோல் வைத்துக்கொண்டாலும் அவரின் கடைசி மூன்று கேள்விகள் மிகவும் வேடிக்கையானவை. அவற்றுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அந்த மட்டும் கேள்விகள்கூட தனித்தனியானவை அல்ல. ஒரே கேள்வியாகக் கேட்டால் பதில் சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில் புதிது புதிதாக கேள்விகளைச் சேர்த்து பதில்வெளியினை குறுக்கும் (narrowing the scope of answer) தப்பிப்பு முயற்சியே.
ரவிசங்கர் எழுதியது இதுதான் : //இது போல் புது எழுத்துக்களைப் பெற்று பரவலான உலக மொழிகள் எத்தனை? அவை யாவை? அவற்றில் எத்தனை மொழிகள் தமிழுக்கு நிகரான தொன்மையும் செம்மொழித் தகுதியும் வாய்ந்தவை? புது எழுத்துக்களைப் பெற்றதால் மட்டுமே அவை பரவின் என்பதற்கு என்ன சான்று?// யதார்த்தமாக வாதிட்டால் அவர் கேட்க வேண்டியது இதுவே: ‘தமிழுக்கு ஏன் இது அவசியம்? உச்சரிப்புக் குறியீடுகளால் வேறு எந்தெந்த மொழிகள் குறிப்பிடும்படியாக வளர்ந்துள்ளன?’
அதையே அவர் கேட்கும் லட்சணம் இது :
1) புது எழுத்துக்களைப் பெற்று பரவலான உலக மொழிகள் எத்தனை? 2) அவை யாவை?
(பிற மொழிகள் மற்றும் மொழியியல் வரலாறெல்லாம் தெரியாதவர்கள் தமிழ் வளர்ச்சி பற்றி சிந்திக்கவே கூடாதா?)
3) அவற்றில் எத்தனை மொழிகள் தமிழுக்கு நிகரான தொன்மையும் செம்மொழித் தகுதியும் வாய்ந்தவை?
( விட்டால் அதில் எத்தனை மொழியை தமிழர் பேசுகிறார்கள்? அதில் எத்தனையில் ‘ழ’கரம் உள்ளது ? அதில் எத்தனை மொழிகள் பெரியார் திருத்தம் செய்த பெருமையைக் கொண்டவை? என்பவற்றையும் சேர்த்துக் கொள்வார் போலுள்ளது. மேலும் ஒரு மொழி பழமையான செம்மொழி என்பதாலேயே அது வளரக் கூடாதா? தவறாகத்தான் அதை உச்சரிக்க வேண்டுமா )
4) புது எழுத்துக்களைப் பெற்றதால் மட்டுமே அவை பரவின் என்பதற்கு என்ன சான்று?
( அது எப்படிங்க ஒரு மொழி புது எழுத்தை சேர்த்தால் ‘மட்டுமே’ வளரும்? ஜோதிர்லதா கிரிஜா அவங்க கட்டுரையில் எப்ப ‘புது உச்சரிப்பு ‘மட்டுமே’ தமிழை வளர்க்கும், மத்த எதுவுமே வளர்க்காது’- அப்படீன்னு எப்ப சொன்னாங்க? அப்படி சொல்லியிருந்தால் தானே நீங்கள் இந்த கேள்வியை கேட்கணும்?)
மேலும் மொத்த கேள்வியுமே தவறானது. ஏனென்றால், மறுபடியும், மறுபடியும் சொல்கிறேன்: ஜோதிர்லதா கிரிஜா புது எழுத்துக்களை சேர்க்கச் சொல்லவேயில்லை. உச்சரிப்புக்கான நிமித்தங்களை மட்டுமே சேர்க்கச் சொன்னார். இதை செய்தால் மட்டுமே தமிழ் வளரும் எனச் சொல்லவும் இல்லை!
இந்தக் கேள்விகளின் மற்றும் உங்களின் கடிதத்தில் ஒரே விதமான படிவம் (format/pattern) உள்ளது. அந்தப் படிவம் இதுதான் : புதிதாகப் படிப்பவர்களுக்கு, ஒருவரால் சொல்லப்படாததை அவர் சொல்லியதாய்ப் படும்படியான பொய்த்தோற்றத்தை உருவாக்குதல். வாசகர்களை தவறான கண்ணோட்டத்துக்கு அழைத்துச் செல்வதன் மூலம் ஹிந்து மதத்தின் மேல் காழ்ப்புணர்ச்சியை உருவாக்குவது.
நீங்கள் மாற்றிய மற்றொன்று : ‘அபத்தமான உச்சரிப்புக்கு அடிகோலக்கூடிய’, ‘தனித் தமிழில் எழுதுகிறேன் பேர்வழி என்று அபத்த மாற்றங்களில் ஈடுபட்டு, இனிய தமிழைச் சிதைக்காமல் இருப்பதோடு’ என்றுதான் ஜோதிர்லதா கிரிஜா எழுதினார். ஆனால் நீங்களோ அதை . ‘தனித்தமிழில் எழுதுவது அபத்தம்’ என்று அவர் ஆணவத்துடன் சொன்னதாக மாற்றியுள்ளீர்கள். அதாவது ‘தனித்தமிழில் எழுதவேண்டும் என்பதற்காக, அபத்தமான பொருள்படும் படி எழுதக் கூடாது’ என்று அவர் சொன்னதை ‘தனித்தமிழில் எழுதுவதே அபத்தம்’ என்றதாக பொய் சொல்லியிருக்கிறீர்கள். உங்களால்தான் தமிழுக்கும், பாவலர் பெருஞ்சித்திரனாருக்கும் இழுக்கு.
பொய் சொல்லாமல் தமிழை வாழவைக்க உங்களால் முடியாதா? திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்:
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்

இறந்த மொழியானதெல்லாம் இழிந்த மொழியாவதுவும் இல்லை:
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்

-கார்கில் ஜெய்
kargil_jay@yahoo.com

(பின் குறிப்பு : இதைப் படிக்கும் வாசகர்கள், ‘தமிழ் தமிழ்’ கூறும் அனைவருமே நேர்மையற்றவர்கள் என எண்ண வேண்டாம். பெரும்பாலானோர் இப்படி தமிழ்ப் பற்றுள்ளதாக நடிப்பவர்களே ஆயினும், பல மாணிக்கங்களும் உண்டு. நடிப்பவர்களின் உள்நோக்கம் வேறானது. தமிழ் பற்று உள்ளதாக நடிப்பவர்களின், பொய்களையும், சீற்றத்தையும் உணருபவர்கள் தமிழ் பற்றுள்ளவர்களாக இருந்தாலும் கூட வெறுப்புணர்ச்சியுடன் விலக ஆரம்பிப்பார்களே தவிர, பொய்யால், இழித்துப் பேசுவதால், இதுபோன்ற ஆரோக்கியமற்ற வாதங்களால் தமிழ் வளரவே வளராது. பகையே வளரும். நான் இவ்வாறு எழுதியதை வைத்துக்கொண்டு தமிழ் பற்று நடிகர்கள் பிற்காலத்தில் நான் ‘தமிழ் வளரவே வளராது’ என்றதாக எழுதி கலகம் செய்யவும் கூடும். )

Series Navigation

கார்கில் ஜெய்

கார்கில் ஜெய்