புதிய நளபாகம் – மும்பாதேவிக்கு

This entry is part [part not set] of 37 in the series 20070830_Issue

மும்பையன்


.

மும்பாதேவியின் கடிதமும் கற்பனையும் சரிதான். திண்ணைப்பேச்சோடு செய்த அன்னபூர்ணா சப்பாத்தி நன்றாகவே வந்திருக்குமென நம்புகிறேன். உங்களின் கைவண்ணம் அப்படி. உங்களின் கடிதம் பார்த்து, கற்பனை செய்து வயிறு வலித்தது உண்மை. நிற்க..
வலித்தது சிரிப்பால் அல்ல.. யதார்த்தின் சூடால்.. [ஆகா. கவிதை.. கவிதை.. ? ]

முதலமைச்சர்களையும், So called எதிர்கட்சி தலைவர்களையும் கவுண்டமணி செந்தில் ரேஞ்சுக்கு வைத்துபார்க்கிற கற்பனை எப்படி நம்முள் சர்வசாதரணமாய் எழுகிறது என்பது தான் ஆச்சரியமான விடயம். அதுவும் எழுத்தாளர்கள், சிந்தானாவாதிகள், புத்தகம் போடுபவர்கள், அரசியல், சமூகத்தை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்துவதற்கு, அதன் பாரங்களை முடிச்சுகளை நம் தோளில் சுமப்பவர்கள் எனப்படுகிற (என்று நினைத்து கொண்டுருக்கிற) எலைட் குருப்பாகிய நமக்கே இவர்களது சண்டை கவுண்டமணி,
செந்தில் சண்டையாகிவிட்டது, வலிக்காத அளவில் புற்றுநோய் பரவிவிட்டதற்கான அறிகுறியல்லவா. இப்படி நினைப்பதை தவிர வேறென்னதான் செய்யச்சொல்கிறாய் படவா என்று நீங்கள் உரிமையோடு கேட்டாலும் என்னிடம் விடையில்லை. ஏன் இப்படியானோம் என்று சிந்திப்பதைத்தவிர நம் கையாலாவது வேறொன்றுமில்லையென அறிவோம் பராபரமே..

ஒவ்வொரு முறையும் அரசியல் பேச்சில் ஈடுபடும்போதும், தேர்தல் வரும்போதும் இந்த முறை எந்த நடிகர் முதலமைச்சராகிறார் என்ற நக்கலான கேள்வி – பழக்கப்பட்ட வடக்கத்திய நண்பர்களிடமிருந்து வருவதும், அதை சமாளிக்க தமிழக அரசியலின் மகாம்மியத்தை சொல்வதும் நம்மில் பலருக்கு பழக்கப்பட்டுபோன ஒன்றாகயிருக்கலாம். அதுவும் இந்த வங்காளிகளின் குசும்பு கொஞ்சநஞ்சமல்ல. அவனோடு மலையாளியும் சேர்ந்து வறுக்க ஆரம்பித்தால் சட்டி சுட்டுவிடுகிறது அளவுக்கதிகமாகவே. என்ன செய்ய, கொண்டை உள்ளவள் அள்ளி முடிந்துகொள்ளட்டும். என் போனிடெயில் .. ஆட்டுக்கு வாலை அளந்துதான் வைத்துவிட்டானோ..

இது பேசிபேசிப்பழகிப்போன விசயமாகியிருக்கலாம். திருத்தமுடியாத தண்ணி தெளித்துவிட்ட கேசாயிருக்கலாம்.. இதெல்லாமாடா எழுதுவாங்க டுபுக்கு…. வேறு விசயமேயில்லையாடா.. என்று வடிவேலு வேசத்தில் யாரும் வினா எழுப்பலாம்.

மிகப்பிரமாதமான பந்தி சாப்பாடு என நினைத்து போனால் 40 ஆண்டுகளாய் சாப்பிட்டது அஜூரணம் ஆனபிறகுதானே தெரிகிறது, கருப்பு இலையில் விழுந்தது புழுத்துப்போன அரிசியும், நாறிப்போன சாம்பாரும் என்று. சரி எல்லாவீ¢ட்டு இலைகளும் கடந்த 60 ஆண்டுகளாக அப்படி இப்படித்தான் என்று மனச்சாந்தி கொண்டு கிடைத்ததை உள்ளே தள்ளலாமென்றால், போகப்போக இலையில் நரகலும் விழுந்துவிடுமென்றல்லவா பயப்படவேண்டியிருக்கிறது. அவ்வப்போது புதுப்புது சமையல்காரர்கள் வருகிறார்கள் பழைய கம்பெனியிலிருந்து பிரிந்து. பின் எல்லாருமே ஒரு குட்டையின் மட்டையாகிவிடுகிறார்கள் என்பது வயிற்றுவலி வந்த பலரின் வாக்குமூலம். இப்படியெல்லாம் நம்ப வீட்டு பெரிசு சொன்னப்ப, பெரிசு தோத்த வலியில புலம்பாதப்பா.. என்று ஏளனமல்லவா செய்தோம்.

சும்மாவிடுவோமா.. ஜனநாயக மக்கள்னா என்ன விளையாட்டா. சமையக்காரர்களுக்கு மாத்திக்கிட்டேதானயிருந்தோம். சமையல்காரர்களுக்கு மாற்றி மாற்றி ஆர்டர் கொடுத்தாலும் அடுத்தமுறை நமக்கெங்கே கிடைக்கப்போகிறது என்கிற (அ)தைரியத்திலும் பழகிப்போன கைநீளம் மற்றும் பக்குவத்தினாலும் அவர்களால் நாம் வயிற்றைபதம் பார்க்கமுடிகிறது. என்ன செய்ய, வேறு சமையல்காரர்களை வைத்துக்கொள்ள நமக்கு வக்கும், தைரியமுமில்லை, தனித்தளிகை வேண்டுமேன அடம்பிடித்தவர்கள்தானே நாம். ஆனாலும் வயிறு முழுவதும் கெட்டுப்போவதற்குமுன் இந்தத்தெருக்களையெல்லாம் தாண்டி நகரத்தில் சில சமையக்காரர்கள் உண்டு. அவர்களை அணுகவேண்டியது அவசியமானதா, தேவையானதா என்று கூட
நம்மால் சிலரால் சிந்திக்கமுடியவில்லை. சிலர் நாடு முழுவதும் சமைப்பதில் கை-தேர்ந்தவர்கள், சிலரின் தாமரையிலை சாப்பாடு சுத்தமானது. சிலரின் சாப்பாடு கொஞ்சம் சிவப்பான காரமானதென்றாலும் பொய்புரட்டில்லாதது. நம் தெருக்களிலே தீடீர் திடீரென நாட்டியக்காரர்களும் சமையல்காரர்களாக வந்து விடுகிறார்கள். நாட்டியமாடிய கைகளின் ருசி கொஞ்ச நாளுக்காவது நல்லாயிருக்காதா என்கிற ஏக்கம் சாதாரண மனிதனுக்கு வருவதில் தப்பில்லை என்பதாகத்தான் யதார்த்த தளத்தில்
யோசித்தால்படுகிறது. என்ன செய்ய, எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்பதாகத்தானிருக்கிறோம். சில புதிய சமையல்காரர்கள் எங்கள் தெருவிலே வந்துவிட்டார்கள். ‘எல்லாம் புதுசுப்பா.. போகப்போக கட்டுபடியாகணுமில்ல.. ‘ என்று பழைய சமையல்காரர்களின் முணுமுணுத்தாலும் கொஞ்சநாளுக்குள் அந்த சமையக்காரர் கிட்டத்தட்ட எட்டு வீட்டுகளுக்கு காண்ட்ராக்ட் வாங்கிவிட்டார். எத்தனை நாளுக்கு இந்த பவிசோ தெரியவில்லை. அதுவும் உண்மையாகத்தானிருக்கு போலிருக்கிறது.

சமையல்காரர்கள் எந்த ஊரிலிருந்து புறப்பட்டு வந்தார்கள்.. ஏன் திசைமாறிப்போனார்கள்.. அவர்களின் ஊற்று கலப்பிடமா, அதிலிருந்து அதிகமாக எதிர்பார்த்தது எங்களின் குற்றமா.. எது உண்மையோ எங்களுக்கு நல்ல சாப்பாடு கிடைக்கவில்லை என்பதே உண்மை.

வெளியில் தெரியாத மிகப்பெரிய வீழ்ச்சியின் அடிவேர் எது. அதன் நிலைதானென்ன ? அடித்தளமில்லாத, உணர்ச்சிமயமான,
வெறுப்புணர்வான, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தொடர் சங்கலியாய், அறிவியக்கத்தை வழிநடத்தி செல்லத்தேவையான மூலச்சரக்கும், நிறுவனபலமுமற்ற பலமிழந்த வேரிலிருந்து வெடித்து கிளம்பிய புரதமற்ற மரத்தின் நிலைதான் அது. விதையே பிரச்சினை. அதன் அதிவேக அசுர வளர்ச்சி, மாற்றான் தோட்டத்திலிருந்து கற்றுக்கொள்ள அவகாசமற்ற நிலை அடுத்த பிரச்சனை. தொடர்ந்த, சவாலே விடப்படாத வெற்றி அதன் தலையாய பிரச்சனை. தோல்விகளிலிருந்து பாடம் கற்று தங்களை திருத்திகொண்டு முன்னேறும் வாய்ப்பில்லாத ஒரு தொடர் ஓட்டம். ஓடினார்கள்.. ஓடினார்கள்.. வெற்றியைநோக்கி மட்டும் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள்.

[மும்பாதேவியின் புரிதலுக்காக:
பில்டிங் ஸ்டாருங்கு.. பவுண்டேசன் வீக்கு.. (வடிவேலுவின் குரலில் கற்பனை செய்துகொள்க)]

பக்கத்து மாநில கேரளத்திலோ, கர்நாடாகவிலோ இல்லாத தனிநபர் ஆளுமை, ஏன் வலதுசாரிகளின் பரிசோதனை என்று பட்டம்
சாட்டப்படுகிற குஜராத்திலோ ஏன் இந்த தனிநபர் ஆளுமை, சினிமா போன்ற வெகுஜன ஊடகங்களின் பாதிப்பில்லாத மக்கள் கூட்டம்.. எப்படி வளர்க்கப்பட்டது.. அல்லது வளர்ந்தது.

ஏனெனில் திராவிட அரசியல் கருத்துமையத்தின் வெற்றி என்பதே ஒரு நல்ல ஜனநாயகமான அரசியலின் தோல்வியாய்
போனதென்பதுதான் துரதிருஸ்டம். தனிநாடு கேட்டு அதை மறந்து, நாத்திகக் கொள்கைகளை கொஞ்சம் அனுசருத்து, காலத்திற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளுதல் வளர்ச்சி என்று எடுத்துக்கொண்டாலும், திரும்பிவரமுடியாத வெற்றி முனையில் நிற்கிற திராவிட கட்சிகள் தங்களின் வளர்ச்சிக்காக தங்களின் கொள்கைகளையே பலி கொடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை, ஒரு 40 ஆண்டுகால
வளர்ச்சியை தடுத்தார்கள் என்று சொல்லமுடியாவிட்டாலும், மட்டுப்படுத்தி திசை திருப்பினார்கள் என்று எந்த தமிழக காங்கிரசுக்காரர்
சொன்னாலும் அதை முற்றிலுமாய் மறுதலித்துவிடமுடியாது.

மாற்றுக்கருத்துக்களுக்கு இடம் கொடாமை, தனிநபர் ஆளுமை, பெரிய வித்தியாசப்படுத்துதலின்றி கொள்கை வேறுபாடற்று, உதிர்ந்த போன மயிராய் சில உதிரிக்கட்சிகள் என வெறும் நாற்பது ஆண்டுகளில் வெலவெலத்துப்போனது நல்லதில்லை என்றாலும், தேசிய நீரோட்ட அரசியலுக்கு இவைகளின் நீர்த்ததன்மை இன்றிமையாததொன்று.

சுருங்கக்கூறின், இந்த சமையல்காரர்களால் நம்மிருவரின் வயிறும் பாழாய்போனதுதான் மிச்சம். அடுத்ததெரு சமையல்காரர்களிடம் கொஞ்சம் சாப்பிட்டு பார்த்தால்தானென்ன.. ?

அன்னபூர்ணா ஆட்டா மாவு நல்ல பிராண்டுதான். அதற்காக கெட்டுபோன மாவை எவ்வளவுதான் பிடிக்குமென்றாலும் உபயோகப்படுத்தக்கூடாது என்பதை நான் சொல்லத்தேவையில்லை. குஜராத்திலிருந்து அமுல் என்கிற வெண்ணெய் கம்பெனி புதிதாய் ஆட்டாமாவை சந்தைக்கு அறிமுகப்படுத்தப்போகிறதாய் அறிந்தேன். வந்தால், உபயோகப்படுத்தித்தான் பாருங்களேன்.


mani@techopt.com

Series Navigation

மும்பையன்

மும்பையன்