கடிதம்

This entry is part of 24 in the series 20070412_Issue

மலர்மன்னன்


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

திண்ணையின் ஏப்ரல் 05, 2007 இதழில் பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் என்ற தொடரின் 13 வது அத்தியாயத்தில் அண்ணா தமிழர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் அண்ணாவும் அடிப்படையில் தமிழர் அல்லாத, தெலுங்கு பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். அவருடைய தாயாரின் பெயர் பங்காரம்மா என்பதுதான். அண்ணா தம் சித்தியைத் தொத்தா என்றுதான் அழைப்பார். அண்ணாவின் மனைவியார் ராணி அம்மாகூடத் தங்களுடைய பரம்பரை தெலுங்கு பேசும் குடும்பம் என்று கூறுவார். எனினும் அண்ணாவுக்குத் தெலுங்கில் எழுதவோ படிக்கவோ தெரியாது. மொழிப் பயிற்சி, பண்பாடு, பழக்க வழக்கம் சுற்றுச் சூழல் ஆகிய எல்லா அம்சங்களிலும் அவர் ஒரு தமிழனாகவே இருந்தார். இதையொட்டி அவரை ஒரு தமிழர் என்று கூறுவது பொருத்தம்தான் என்றாலும், அவரது பூர்வீகம் என்னவோ தெலுங்குதான். தமிழிலான அண்ணா என்ற சொல் தெலுங்கில் அன்னா என்றுதான் உச்சரிக்கப்படுகிறது. அதேபோல் துரை என்று தமிழில் வழங்கும் சொல் தெலுங்கில் தொர என்று வழங்கப்படும். எனவே அண்ணாதுரை என்கிற தமிழ்ப் பெயருங்கூடத் தெலுங்கிற்கும் ஏற்புடையதுதான்.

அண்ணா அவர்கள் சிறுவனாக இருக்கையில் அழகாகச் சீவிப் பின்னலிட்ட குடுமியுடன், நெற்றியில் நீளமாக ஸ்ரீசூரணம் இட்டுக்கொண்டு பள்ளிகூடம் போவாராம். மிகவும் அடக்கமான, அமைதியான பிள்ளை. அவருடைய முன்னோர்கள் விஷ்ணு காஞ்சி எனப்படும் சின்ன காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள வரதராஜப் பெருமாளுக்குச் சேவகம் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள். திருமால் மீது பக்தி தோய்ந்த பரம்பரை அண்ணாவின் பரம்பரை. இளம் பிராயத்தில் பக்தி சிரத்தையுடன் வரதராஜப் பெருமாளை சேவித்து வந்தவர்தான், அண்ணா.

காஞ்சி நகரைப் பொருத்தவரை இளம் பிராய முதலே அனைவரையும் நேசிப்பவராகவும் அனைவராலும் நேசிக்கப்படுபவராகவும்தான் அண்ணா இருந்து வந்திருக்கிறார். துவேஷப் பிரசாரத்தை முழு மூச்சாகக் கொண்டு இயங்கிய ஒரு கட்சியின் தளபதியாக அறியப்பட்ட காலத்தில்கூட காஞ்சியில் அவர் எவரையும் வெறுத்ததில்லை, வெறுக்கப்பட்டதுமில்லை!

1957ல் தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக அண்ணா அவர்கள் காஞ்சியில் போட்டியிட்ட போது, காமராஜர் டாக்டர் ஸ்ரீ னிவாசன் அவர்களைக் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தினார்.

டாக்டர் ஸ்ரீ னிவாசன் வைணவ பிராமணர். அரசியலில் தீவிரமாக இயங்கியவர் அல்ல. காஞ்சியில் மிகுதியாக உள்ள வைணவ பிராமணர்கள் கட்டுப்பாடாக அவருக்கு வாக்களித்துவிடுவார்கள் என்றும், வழக்கமான காங்கிரஸ் வாக்குகளுடன் அந்த வாக்குகளும் சேர்ந்து, காங்கிரஸ் வேட்பாளரான ஸ்ரீனிவாசன் எளிதாக ஜயித்துவிடுவார் என்று காமராஜர் கணக்குப் போட்டார். காஞ்சிபுரத்து பிராமணர்களுக்கு அண்ணா மீது வெறுப்பு இல்லை என்பதை அவர் அறிந்திருக்க வில்லை. மேலும், அண்ணாவைப் படு தோல்வியடையச் செய்யவேண்டும் எனக் கங்கணம் கட்டிக் கொண்டு காஞ்சியில் முகாமிட்ட ஈ வே ரா, தெருத் தெருவாகச் சென்று மிகவும் இழிவான முறையில் அண்ணாவைப் பழித்துப் பேசத் தொடங்கியதும் அண்ணா மீது அனைவருக்கும் அனுதாபத்தைத் தோற்றுவித்து, குறிப்பாக பிராமணரிடையே அண்ணாவுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்கிற ஆவேசத்தைக் கிளப்பிவிட்டது!

அண்ணாதுரை என்னிடம் நாற்பது ஆண்டுகள் வேலை செய்தார். ஆதலால் அவரைப் பற்றி எனக்குத்தான் நன்றாகத் தெரியும்; அண்ணாதுரையின் எஜமானனாக இருந்தவன் என்கிற முறையில் சொல்கிறேன், அவர் நம்பிக்கைக்கு உகந்தவர் அல்ல என்றெல்லாம் அவருக்கே உரித்தான பாணியில் மிகவும் அனாகரிகமாகப் பிரசாரம் செய்தார், ஈ வே ரா. ஆனால் அதற்குப் பதில் சொல்லும் விதமாக ஒரு வார்த்தைகூட அண்ணா பேசவில்லை. ஈ வேரா வின் அபாண்டமான பழிச் சொற்கள் எல்லை மீறிப் போகவும், ஒரேயொருமுறை மட்டும் பொறுமையிழந்தவராய், இதுவரை நான் அவருக்குக் கடமைப் பட்டவனாயிருந்தேன். இனி அவர் எனக்குக் கடமைப்பட்டவராவார் என்று மனம் நொந்து சொன்னார்.

காஞ்சிபுரத்தில் அண்ணாவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய வந்த நகைச் சுவை நடிகர் என் எஸ் கிருஷ்ணன் அவருக்கே உரிய நகைச் சுவை உணர்வுடன், அண்ணா அவர்கள் திராவிடர் கழகத்தவராக இருந்தவராயிற்றே என்று எங்கே பிராமணர்கள் அவருக்கு வாக்களித்துவிடாமல் இருந்துவிடுவார்களோ என்றுதான் ஈவேரா இப்படியெல்லாம் பேசி அண்ணா மீது அனுதாபம் அதிகரிக்கச் செய்வதோடு, தம்மீது பிராமணர்களுக்கு உள்ள கோபம் அண்ணாவுக்குச் சாதகமாகத் திரும்பவும் வழி செய்கிறார்; என்ன இருந்தாலும் தந்தைப் பாசம் இல்லாமல் போகுமா என்றார்.

என் எஸ் கிருஷ்ணன் நகைச் சுவையுடன் இன்னொரு விஷயமும் சொன்னார்.

டாக்டர் ஸ்ரீனிவாசன் கைராசியான டாக்டர். மனிதாபிமானம் மிக்கவர். அதிகம் பீஸ் வாங்காமல் அருமையாகச் சிகிச்சை செய்பவர். இப்படிப்பட்ட டாக்டரின் சேவை காஞ்சிபுரத்து மக்களுக்கு எந்நேரமும் அவசியம். அவரை எம் எல் ஏ யாக்கிவிட்டால் அடிக்கடி சென்னைக்குப் போய் டேரா அடித்துவிடுவார். அவசரத்துக்குக் கிடைக்க மாட்டார். ஆகையால் அவரைக் காஞ்சிபுரத்து மக்கள் காஞ்சியிலேயே பிடித்துவைத்துக்கொள்ள வேண்டும். பேசுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாத அண்ணாவைப் பேசுவதற்கென்றே இருக்கிற சட்டசபைக்கு அனுப்பிவிட வேண்டும் என்றார், என் எஸ் கே.

இதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த டாக்டர் ஸ்ரீனிவாசன், என் எஸ் கிருஷ்ணன் சொல்வது சரிதானே, உண்மையில் என்னைவிட சி என் ஏ சட்டசபைக்குப் போவதுதான் பொருத்தம் என்றார்.

தேர்தலில் அண்ணா வெற்றி பெற்று, ஓராண்டு கழித்துத் தொகுதி நலத் திட்டங்களுக்காகத் தண்டலம் என்கிற இடத்தில் முதலமைச்சர் காமராஜரையும் பிறரையும் அழைத்து ஆய்வுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் பங்கேற்ற டாகடர் ஸ்ரீனிவாசன், காஞ்சிபுரம் தொகுதியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்ற முற்றிலும் தகுதி வாய்ந்தவர் அண்ணாதான் என்பது நிரூபணமாகிவிட்டது என்று மனமாரப் பாராட்டினார்.

தமிழ் நாட்டில் பரம்பரை பரம்பரையாகத் தெலுங்கு பேசும் பல்வேறு வகுப்பார் குடியேறித் தமிழகத்தைத் தமது தாயகமாகக் கொண்டுள்ளனர். இவர்களில் பலர் இன்றளவும் வீட்டில் தெலுங்கர்களாகவும் வெளியில் தமிழர்களாகவும் உள்ளனர். வீட்டில் இவர்கள் பேசும் தெலுங்கு தமிழ் மொழியின் தாக்கத்தால் ஆந்திர தேசத்தவரால் அடையாளங் காண வியலாத அளவுக்கு மிகவும் சிதைந்துவிட்டிருக்கிறது. இவர்களையும் தமிழர்களாகக் கருதுவதுதான் முறை என்றாலும், வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் பதிவு செய்ய
வேண்டிய வாழ்க்கைக் குறிப்புக்குரியவர்களைப் பற்றித் தகவல் தருகையில் இதுபோன்ற அடிப்படை உண்மைகளைத் தெரிவிப்பது அவசியமாகிறது. மற்றபடி, அண்ணாவைப் பற்றி இத்தகவலைத் தருவது அண்ணாவைத் தமிழர்களிடமிருந்து அந்நியப்படுத்துவதாகாது. பாரத தேசத்து மக்கள் யாவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளேயாவர் என்கிற உணர்வு இருக்கும்வரை, மொழியால் அவர்களிடையே பேதம் பார்க்கத் தோன்றாது.

தமிழ் நாட்டில் வீட்டிலே தெலுங்கு பேசுவோரைப் போலவே கன்னடம், மராட்டி, சௌராஷ்டிரம் குஜராத்தி, மார்வாரி எனப் பல்வேறு மொழியினர் பல நூற்றாண்டுகளாகத் தமிழ் கலாசாரத்துடன் ஒன்றி, எல்லா அம்சங்களிலும் தமிழர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். தமிழ் நாட்டின் நலன் கருதுபவர்களாகவும் தமிழ் மொழி வளம் பெறுவதில் நாட்டம் உள்ளவர்களாகவும் இவர்கள் உள்ளனர் என்பதிலும் ஐயமில்லை.

அண்ணா தி மு க தொடங்கப்பட்ட கால கட்டத்தில் புதுவை மாநிலத்தில் தேர்தல் வந்தபோது மலையாளப் பகுதியைச் சேர்ந்த, ஆனால் புதுவை மாநிலத்திற்குட்பட்ட மாஹேயில் தேர்தல் பிரசாரம் செய்வதற்குச் சென்ற எம் ஜி ஆர் மலையாளத்தில் சரியாகப் பேசமுடியாமல் தட்டுத் தடுமாறுகிற அளவுக்குத் தமிழராகவே மாறிப்போய்விட்டிருந்ததும் அவர் பேசிய மலையாளம் தமிழைப் போலத்தான் இருந்தது என்பதும் நினைவுக்கு வருகிறது.

அன்புடன்,
மலர்மன்னன்


Series Navigation