கடிதம்

This entry is part of 28 in the series 20070315_Issue

மலர் மன்னன்


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

திண்ணையில் எனக்குக் கிடைத்துள்ள இடத்தை எவர் மீதும் அபாண்டமாகப் பழி சுமத்துவதற்கான வாய்ப்பாக ஒருபோதும் பயன் படுத்திக்கொள்ள மாட்டேன்.

மூப்பனார் பற்றிய எனது கட்டுரையில்,

எப்போதும் ராஜீவ் காந்தியை மொய்த்துக்கொண்டு தாங்கள்தாம் ராஜீவுக்கு மிகவும் நெருக்கம் என்று தமக்குள் போட்டி போடுபவர்கள் மே 21 ந்தேதி மட்டும் அவரை அம்போ என்று தனியாக விட்டு விட்டது ஏன் என்று யோசிக்கத் தெரியாதவரா மூப்பனார்?

என்றுதான் குறிப்பிட்டிருந்தேன். இது மூப்பனார் மீதே குற்றம் சாட்டுவதுபோன்ற எண்ணத்தைச் சிலருக்குத் தோற்றுவிக்கும் என்று நினைக்கவில்லை. மூப்பனார் என்றுமே தம்மை முன்னிலைப் படுத்திக்கொள்ளாமல் எப்போதும் பின்னணியிலேயே இருந்து, அமைப்பைக் கட்டமைக்கும் சாதனையாளர் என்பதை நன்கு அறிவேன். காமராஜர் மறைந்ததும் நன்கு கட்டமைக்கப் பட்டிரு ந்த ஸ்தாபன காங்கிரசை இந்திரா காங்கிரசுடன் அவர் உடனடியாக இணைத்து விட்டதால்தான் இன்று அது தனது பாரம்பரியப் பெருமையை இழந்து தமிழ் நாட்டில் ஒரு துணைக் கட்சியாக இயங்க வேண்டியதாயிற்று என்கிற வருத்தந்தான் எனக்கு உண்டே யன்றி அவர் மீது பழி சுமத்தும் எண்ணம் சிறிதும் இல்லை. சுய லாபத்திற்காக மூப்பனார் இணைப்பினைச் செய்தார் என்று எவராலும் கருதவும் இயலாது.

மேலும், ராஜீவ் படுகொலை தொடர்பாக உறுதிபடச் சில நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டிருக்க முடியும், ஆனால் அதற்கான துணிவு அவருக்கு இல்லாமல் போய்விட்டது என்பதைத்தான் சுட்டியிருந்தேன். அந்தப் பாராவில் தொடர்ந்து வரும் எனது வரிகள் இதைத்தான் குறிப்பால் உணர்த்துவதாக இப்போதும் நம்புகிறேன். இது பற்றி இதற்கு மேலும் விவாதித்தால் ரசாபாசமாகிவிடும். கட்டுரைக்கு எதிர்வினை செய்த அன்பர் கோவிந்த ராஜனே ஒரு நபரின் பெயரைக் குறிப்பிட்டு விட்டதே போதுமானதாக இருக்கும்.

முந்தைய ஸ்தாபன மற்றும் இந்திரா காங்கிரசில் இன்று பிரபலமாக விளங்கும் பலரை அவர்களின் தொடக்க காலத்திலிருந்தே நன்கு அறிவேன். அந்த வகையில்தான் குமரி அனந்தனை நினைவூட்டியமைக்காக மிகவும் மகிழ்ச்சியடைந்து சில வரிகள் எழுத நேர்ந்தது. சாதியடிப்படையில் அவர் காமராஜர் நிலைப்பாட்டை ஆதரித்தது போன்ற கருத்ததைத் தோற்றுவித்தமையால்தான் அதுபற்றியும் குறிப்பிட நேர்ந்தது. மற்றபடி தனிப்பட்ட நட்பையும் அரசியலையும் சேர்த்துக் குழப்பிக் கொள்வதில்லை.

இந்திரா காங்கிரஸ் மட்டுமின்றி, தி மு க, அண்ணா தி மு க கம்யூனிஸ்ட் எனப் பல கட்சிகளிலும் எனக்கு நன்கு அறிமுகமான முந்தைய தலைமுறையினர் பலர் இன்றும் இருக்கத்தான் செய்கின்றனர். எனது கோட்பாடுகளை அவர்கள் நன்கு அறிந்துள்ள போதிலும் அவர்களுடனான நட்புக்கு எவ்வித ஊறும் நேராமல் இருப்பது அரசியலைத் தனியாகப் பிரித்து வைக்கத் தெரிந்திருப்பதால்தான்.

கடந்த பிரவரி மாதம் 19 ந் தேதி உ. வே. சா. அவர்களின் பிறந்த நாளையொட்டி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அவர் நினைவைப் போற்றும் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது கூட, இன்று தமிழக நிதியமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் மரியாதைக்குரிய க. அன்பழகன் அவர்கள் மிகவும் அன்பு ததும்ப விசாரித்துத் தம் தந்தையார் மறைந்த கலியாண சுந்தரனாருக்கு என்மீது இருந்த அன்பை நினைவு கூரத் தவறவில்லை. அரசியலையும் நட்பையும் இருவேறு அம்சங்களாக அடையாளங் காண்பதால்தான் இவை போன்ற சம்பவங்கள் சாத்தியமாகின்றன.

கடைசியாக ஒன்று: கிட்டத்தட்ட சேரியைப் போன்ற பகுதியில்தான் தற்போது நான் இரண்டே அறையுள்ள சிறு குடித்தனப் பகுதியில் மிகுந்த மன நிறைவோடும் விருப்பத்தின் பேரிலும் வசித்து வருகிறேன். அடுக்கு மாடி உச்சி எதிலும் வாசம் செய்யவில்லை.

அன்புடன்,
மலர் மன்னன்


malarmannan79@rediffmail.com

Series Navigation