ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு

This entry is part of 28 in the series 20070315_Issue

ஸ்ரீனி


சுகேது மேத்தா (authour of maximum city,which talks about mumbai and new york) அபிப்பராயப்படி,90களில் இருந்த அளவு “டான் கம்பெனிகள்” இன்று நம் இளைஞர்களை ஈர்ப்பதில்லை.இன்று இவர்களை ஈர்ப்பது தீவிரவாதம்.அதாவது கம்பெனியின் பெயர்,தொழில்,தலைமை மாறி விட்டது!எதுவாக இருந்தாலும் வேலையில்லாத இளைஞனுக்குத் தேவை பணம்.அது இன்று தீவிரவாத கம்பெனி மூலம் சுலபமாகக் கிடைக்கிறது என்கிறார்.அவர் கூற்றுப்படி இன்று ‘முக்கால்வாசி கம்பெனிகள்’ தீவிரவாதி தலைவர்களிடம்.பழைய தொழில் கம்பெனிகளின் நெட் வொர்க் ஆயுதம்,ஹவாலா சமாச்சாரங்களுக்கு சுலபமாக கை கொடுக்கிறது.

அமெரிக்கா செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு தாவூத்தை க்ளொபல் டெர்ரரிஸ்ட் என்று அறிவித்து,தாவூத்தின் வங்கிக் கணக்குகளையும் நிதிகளையும் முடக்குவதாகக் கூறியது.தாவூத்துக்கும் தாலிபானுக்கும்,அல்கொய்தாவுக்கும் மற்ற தீவிரவாத இயக்கங்களுக்கும் இடையே உள்ள ‘நிதிக் கூட்டணி’ உறவு பற்றி விளக்கிக் கூறிய அமெரிக்க அரசு,எவ்வாறு இந்த இயக்கங்கள் தாவூத் கம்பெனியின் நெட்வொர்க் மூலம் நிதி மற்றும் ஆயுத போக்குவரத்தை கையாள்கிறது என்பதையும் விளக்கியது.ஆக தாவூத்தை உலகளாவிய தீவிரவாதியாக அமெரிக்கா டிக்ளேர் செய்துள்ளதிலிருந்து தெரியலாம்,கம்பெனிகளின் வியாபார மாற்றம் பற்றி. அமெரிக்கா நினைத்தால் ‘பாக்’கில் பதுங்கியிருக்கும் 93 குண்டு வெடிப்பு கதாநாயகர்(களை) வெளிக் கொணர உதவ முடியாதா.சுகேதுவின் கூற்றுப்படி அந்த நாயகர்கள் வெளி வர முடியாது.வந்தால் கக்கி விடுவார்கள்.அது ‘பாக்’யையும் அதற்கு கைங்கர்ய சேவை செய்து வரும் நாட்டையும் சங்கடப்படுத்தி விடும்.ஆகையினால் அவர்கள் அங்கேயே “சமாப்தி” ஆவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்கிறார்.

புதிய கம்பெனிகளால் ஜிஹாத்தின் உண்மையான அர்த்தம் மறைக்கப்பட்டு அது தீவிரவாத சொல்லாக மாறி விட்டது.தீவிரவாதமோ நக்ஸல் இயக்கமோ அழிவது நமது இளைஞர்கள்.பொருளாதார ஏற்றத் தாழ்வுகளில் அடிபட்டு வேலையும் கிட்டாமல் ஒருவித தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கும் இவர்களை புது பிராண்ட் கம்பெனிகள் உடனடியாக ஈர்க்கின்றன!

நம் நாட்டின் பொருளாதாரம் அவ்வளவு மோசமா என்ன?
வாங்கும் திறன் பன் மடங்கு கூடி விட்டது.அதன் அடையாளம் பெருகி விட்ட வாகனப் போக்குவரத்து.இன்று பன்னாட்டு வாகன தயாரிப்பாளர்கள் தங்களது உயர் விலை வாகனங்களுக்கு நம் நாட்டை குறி வைக்கிறர்கள்.FMCG,white goods எனப்படும் பொருட்களுக்கு அதிக வர்த்தகம் நம் நாட்டில்.இவற்றின் விளம்பர பட்ஜெட் தலை சுற்ற வைக்கிறது.நமது பொறியியலாளர்களின் திறமை எவருக்கும் குறைந்தது அல்ல. பொருளாதாரம்,தகவல் தொழில் நுட்பம்,பொறியியல் என்று நல்ல வளர்ச்சி.

வளர்ச்சியின் பலன் பரவலாக போய்ச் சேரவில்லை என்பதுதான் நிஜம்.சமூகப் பொருளாதார ஏற்றத் தாழ்வு என்பது மிகவும் ஆபத்தானது,நாட்டிற்கு.ஆனால் ஓட்டிற்கும்,அதிகார ஊழலுக்கும் அது மிகவும் அத்தியாவசியமானது.அதன் பலனாகத்தான் விவசாயத்தை தொழிலாகவும் இல்லாது சேவையிலும் சேர்க்காது எலிக் கறி சாப்பிட வைத்து விட்டோம்.உணவு கொடுக்கும் விவசாயத் துறையில் அரசியல் நுழைந்ததின் விளைவே தற்கொலைகள்!விவசாயத்துக்கு அரசு கொடுக்கும் மான்யங்கள்,கடன்கள்,அவற்றின் தள்ளுபடிகள் சாதாரண விவசாயிக்கு போய் சேருகிறதா என்பது சந்தேகம்.தற்கொலை ரேங்கில் டி.வி நடிகைகளுடன் விவசாயியும் போட்டி போடுவது,வெறும் சோகமல்ல,வெட்கக்கேடு!

ஆனால் பிரமிக்க வைப்பது நம் தெருவோர அரசியல் வாதிகளின் நிதி நிலைமை!அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளில் நாட்டின் பட்ஜெட்டே அடங்கி விடுகிறது! எங்கிருந்து எவரிடமிருந்து இவ்வளவு பணம் வருகிறது?
நமது அதிகார வர்க்கமோ கேட்கவே வேண்டாம்.அரசு ஊழியர் என்போர் மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்குபவர் public servants என்று யாராவது அசட்டுத்தனமாக நினைத்தால் அவர்களா பொறுப்பு!
கை நிறயக் காசு,பை நிறைய நோட்டு!’93 குண்டு வெடிப்பு வழக்கின் தீர்ப்பு 13 ஆண்டுகளுக்குப் பிறகு வந்து கொண்டிருக்கிறது.குண்டு உள்ளே வர உதவிய நம் லஞ்ச லாவண்யங்களை கழுவில் ஏற்ற வேண்டாமா?

லஞ்சத்துக்கு அடுத்தபடி இட ஒதுக்கீடு பிரச்சினை இல்லாத
வளர்கின்ற தொழில் பிச்சையெடுப்பது!அங்கிங்கெனாதபடி எங்கும் பிரவாகமாய் பரவி,சாதி,மத,இன வயது பேதங்களை
கடந்து நாளும் வளரும் தொழில் இது.நாட்டின் பெரிய நகரங்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது
அதிகம்.அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள்.நெஞ்சைக் கனக்க வைக்கும் விஷயம் இது.பேருந்தில்,ரெயிலில்,ரோட்டில்,கோவில் வாசலில் என்று பல இடங்களில் இந்தக் குழந்தைகளைக் காணும் போது பட்டென்று மனதில்
தைப்பது அவர்கள் எதிர்காலம்.ஆண் குழந்தை பத்து வருடம் கழித்து அதிர்ஷ்டம் இருந்தால் “தாதா”வாகி குரு திசையில் ‘டானா’கி விடுவான்!ஆனால் பெண் குழந்தை? இன்று கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் பெண் குழந்தை பத்து வருடம் கழித்து நிற்கப் போகும் வாசல் எது?தெரிந்த உண்மை குத்தும் போது கண்ணீருடன் நம் கையாலாகத்தனத்தின் வெளிப்பாடாக நம்மீதே கோபம் வருகிறது.சுதந்திரத்தில் நாம் போட்ட பட்ஜெட், ஐந்தாண்டுத்
திட்டங்கள் எல்லாம் இவர்களின் அளவை ஏன் குறைக்கவில்லை?நாட்டின்எதிர்காலத்தை பாதிக்கப் போகும் பெரிய சமூக பொருளாதாரப் பிரச்சினை இது.கருத்து சுதந்திரக் கூப்பாடு போடும் கப்ஸாக்களும்,வின்யாச புகழ் அறிவு ஜீவிகளும் இது பற்றி ‘ம்’கூட சொல்லுவதில்லை.

எங்கு தவறினோம்?யார் காரணம்?சமூகத்தின் பேரில் நாம் காட்டும் பொறுப்பற்ற தன்மையே மிகப் பெரிய காரணம்.வீட்டைச் சுத்தம் செய்து தெருவில் குப்பை கொட்டுவதுதான்
நமது கலாச்சாரம்.இந்த குப்பையிலிருந்துதான் சிக்குன் குனியாவும்,தாவூத்களும் உருவாகுகிறார்கள்.ஒழுங்கீனம் என்பது பெருமையாகி விட்டது.விதிகளை மீறினால் ஹீரோ என்பது இலக்கணமாகி விட்டது!எல்லோரும் இன்னாட்டு மன்னரல்லவா!ஒழுங்கீனத்தை ஓஹோ என்று நடத்தும் அரசியல்வாதியும்,அதிகார வர்க்கமும் சமூகத்தின் ஒரு அங்கம்தானே.அவர்களிடம் வேறு என்ன எதிர் பார்ப்பது!சர்ச்சில் கூறியபோது மட்டும் கோபம் மட்டும் வந்தது!

உன்னைச் சுற்றியுள்ள மக்கள்தான் தேசம்;அவர்களுக்கு உதவுவதுதான் தேச சேவை என்பது எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்!இதில் ஜாதியேதுமதமேது!இதை உணருவதற்கு அறிவுஜீவிகள் தேவையில்லையே!

ஸ்ரீனி

Series Navigation