வஹி – ஒரு விளக்கம்

This entry is part [part not set] of 41 in the series 20061109_Issue

ஹமீது ஜா·பர்


கடந்த அக்டோபர் திங்கள் 12 தேதி திண்ணையில் திரு H.G.ரசூல் எழுதிய “திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்” என்ற தலைப்பில் வந்த கட்டுரை, மறு வாரம் நண்பர் இபுனு பஷீரின் மறுப்பும் அதை தொடர்ந்து சென்ற வாரத்திற்கு முதல் வாரம் H.G.ரசூலின் ·பத்வா, சென்ற வாரம்(3-11-2006) தன்னுடைய கூற்றை நிலை நாட்ட சில முயற்சிகளை எடுத்துக்கொண்டிருகிறார். கட்டுரை வரம்பு மீறி இருப்பதோடு மட்டுமல்லாமல் உண்மைக்குப் புறம்பாகவும் இருக்கிறது.

அவரது கட்டுரை இஸ்லாத்தைப் பற்றி ஓரளவு புரிந்துவைத்திருக்கிற முஸ்லிமுக்கும், புரியாமல் இருக்கிற மாற்று மதத்தவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறதே தவிர வேறு ஒரு காரியத்தையும் செய்யவில்லை.

முதலாவதாக, “புனிதம் சார்ந்த கற்பிதம்” என்றாலே குர்ஆன் உண்மையற்றது; கற்பனையானது என்று பொருள் கொள்ளவேண்டியுள்ளது. கற்பிதம் என்றால் கற்பனையானது; that which is fictitious என்று பொருள் (ஆதாரம்: கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி). எனவே குர்ஆன் கற்பனை நிறைந்த நூல் என்பது அவரது முடிவு.

இரண்டாவதாக, அதனை இரண்டுவிதமாகப் புரிந்துக்கொள்ள முயற்சிக்கலாம். ஒன்று, வரலாறு சார்ந்த அறிவு ரீதீயாக அணுகுதல், மற்றொன்று மூடநம்பிக்கையுடன் அணுகுவது.

அறிவு வரலாறு சார்ந்ததாக இருக்கவேண்டும் என்பது அவரைப் பொருத்தது என்றாலும் மூடநம்பிக்கை என்று எதை குறிப்பிடுகிறார் என்பதற்கு அவரே விளக்கம் அளிக்கவேண்டும். இஸ்லாத்தில் “ஆமன்துபில்லாஹி வ மலாயிகத்ஹி வ குத்துபிஹி……” –“அல்லாஹ்வையும், அவன் மலக்குகளையும், அவன் வேதங்களையும், அவனது சந்திப்பையும், அவனது தூதர்களையும், மரணத்திற்குப் பின்னால் எழுப்பப்படுவதையும் நம்புகிறேன்” என்று ஈமான் கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின்மீதும் விதிக்கப்பட்டக் கடமை. அப்படி இல்லை என்றாலோ, அதில் சந்தேகம் வந்தாலோ அவன் முஸ்லிம் அல்ல என்பது சட்டம். யாரும் அல்லாஹ்வையும் பார்த்ததில்லை அவனது மலக்குகளையும் பார்த்ததில்லை. அப்படி இருந்தும் ஈமான் கொண்டிருப்பதால் அது மூடநம்பிக்கையா? ரசூல்ஜி, அல்லாஹ்வையும் மலக்குகளையும் பார்த்துதான் ஈமான் கொண்டுள்ளாரோ என்னவோ?

“பி ·கைர ச்சுவன்ச்சரா, இத்திபா கர்னா,” இத்திபா கர்னா என்றால் பின் பற்றுவது என்று பொருள். ஏன் எவ்விடம் என்று கேட்காமல் பின்பற்றவேண்டும். தகுதியும் அறிவும் இருந்தான் காலம் உனக்கு விளக்கும், இதுதான் இஸ்லாம். ராணுவத்தில், அதிகாரிகளிடமிருந்து வரும் உத்திரவை அப்படியே ஏற்றுகொள்ள வேண்டும். ஏன் என்ற கேள்விக்கே இடமில்லை; YES ஐ தவிர NO என்ற பேச்சுக்கே இடமில்லை. இதே கொள்கைத்தான் இஸ்லாத்தில் ஈமான் கொள்வதிலும்.

மூன்றாவதாக, நபிகள் நாயகத்திற்கு இறக்கப்பட்ட வசனங்கள் ஒலி வடிவானவை, பின்னரே எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டது. ஒலிவடிவம் எழுத்துவடிவமாகும்போதே ஒரு மாற்றத்துக்குள்ளாகிறது என்பது முதல் உண்மை?

வஹி மட்டுமல்ல எந்த மொழியும் பேசும்போது ஒலிவடிவமும் படிப்பதற்காகப் பதியப்படும்போது எழுத்துவடிவமும் பெறுகிறது இதையெல்லாம் மாற்றம் என்றால் இதற்கு மேலாக கம்ப்யூட்டரிலும் டேப் ரிக்கார்டரிலும் பதியப்படும்போது மூன்றாவதாக ஒரு வடிவம் பெறுகிறதே அதை எந்த மாற்றத்தில் சேர்ப்பது?

இப்போது ஜபல் அல் நூர் என்று அழக்கப்படும் ஹிரா குகையில் தனிமையில் இறைவணக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு முதல் வஹி வருகிறது, ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் தோன்றி ‘இக்ரஉ’ – “ஓதுவீராக” என்று கூறுகிறார்கள். அதற்கு பெருமானார் அவர்கள் ‘மா அன காரியீன்’ – “எனக்கு ஓத தெரியாதே” என்கிறார்கள். ஜிப்ரயீல்(அலை) பெருமானாரைக் கட்டி அணைத்து மீண்டும் ஓதுவீராக என்று சொன்னபோது மீண்டும் அதே பதிலையே சொல்கிறார்கள். இவ்வாறாக மூன்று முறை கட்டி அணைத்து ஓதுவீராக என்று சொன்னபோது ஓதினார்கள். 96 ம் அதிகாரத்திலுள்ள முதல் ஐந்து வசனங்கள் முதலாவதாக இறங்குகின்றன.

இங்கே ஒன்றை கவனிக்கவேண்டும். கட்டி அணைத்தார்கள் என்றால் ஜிப்ரயீல்(அலை) மனித உருவில் அல்லது அதற்கும் மேலான ஓர் உருவில் தோன்றி இருக்கவேண்டும். நிச்சயமாக ஒளி வடிவில் இருக்கமுடியாது. அடுத்து “இக்ரஉ” என்று சொல்லும்போது அங்கு எதோ ஒன்றில் எழுதப்பட்டிருக்கவேண்டும். அப்படி இல்லையென்றால் “குல்” (சொல்வீராக, கூறுவீராக) என்று சொல்லியிருந்தால் உள் மனத்திலிருந்து வந்தது என்று சொல்வதற்கு வாய்ப்புண்டு. ஆனால் அப்படி இல்லை. (நான் படிப்பறிவற்றவனாயிற்றே எனவே)எனக்கு ஓத தெரியாதே என்று கூறியுள்ளார்கள்.

எல்லோராலும் மதிக்கப்படுகிற “King James Version” ல் இப்படி குறிப்பிடப் பட்டுள்ளது: “AND THE BOOK IS DELIVERED TO HIM THAT IS NOT LEARNED, SAYING, READ THIS, I PRAY THEE: AND HE SAITH, I AM NOT LEARNED.” (THE HOLY BIBLE, Isaiah 29:12.)

புனிதக்குர்ஆன் ஜிப்ரீல்(அலை) அவர்கள் வழியாக நபிகளாருக்கு இறக்கப்பட்டது என்பது முதல் கருத்துமட்டுமல்ல முடிவான கருத்தும்கூட, மாற்றமுடியாத ஒரே கருத்தும் ஆகும். அல்லாஹ்வின் அருளால் நபிகளாரின் உள்மனத்தூண்டல் மூலமாக வெளிப்பட்டது என்பதும், குர்ஆன் நபிகளாரின் வார்த்தை; ஹதீஸ் நபிகளார் பற்றிய பிற அறிஞர்களின் வாய்மொழி தொகுப்பு என்பதெல்லாம் கருத்தல்ல; பேத்தல்கள், பிதற்றல்கள். அது யார் சொன்னாலும் சரி! அவர் கொய்ன்ராட் எல்ஸ்ட்டாக இருந்தாலும் சரி, சர் சையத் அஹமத் கானாக இருந்தாலும் சரி, குலாம் அஹமது பர்வேஸாக இருந்தாலு சரி, H.G.ரசூலாக இருந்தாலும் சரி இல்லை அவரைச் சார்ந்தவர்கள் வேறு யாராக இருந்தாலும் சரி.

இவர்களெல்லாம் யார்? தன் வாழ்நாள் முழுவதையும் குர்ஆனுக்காக அர்பணித்து வார்த்தைக்கு வார்த்தை விளக்கம் அளித்த முபஸ்ஸிரீன்களா? அல்லது, இந்த உலக வாழ்க்கையில் ஒன்றுமில்லை, இறைஞானமாகிய இர்·பான் என்ற கடலில் மூழ்கி முத்துக் குளித்த இறைநேசர்களா? குர்ஆனுடைய அறிவைக்கொண்டு தங்களின் அறிவை உரசிப் பார்த்திருக்கவேண்டும். மாறாக தங்களுடைய உலகக் கல்வியைக்கொண்டு குர்ஆனை உரசிப் பார்த்திருக்கிறார்கள், நிச்சயமாக தெளிவைத் தராது.

இப்படிப்பட்டவர்கள் இந்த காலத்தில்மட்டுமல்ல பெருமானார் அவர்கள் காலத்திலும் இருந்தார்கள். இது கவிஞனுடைய கூற்று என்று கூறினர்; பேய் பிடித்தவனின் பிதற்றல் என்றனர்; கற்பனை வெளியீடு என்றெல்லாம் கூறினர்.

ஆகவே அல்லாஹ்வே இதற்கு பதில் சொல்கிறான். “மேலும், நம் அடியார் (முஹம்மது ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களின்) மீது நாம் இறக்கிவைத்த (வேதத்)தில் நீங்கள் சந்தேகத்திலிருந்தால், (அவர் தம் புறத்திலிருந்தே இதனைக் கூறுகிறார் என்பதில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதைப் போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் நீங்கள் கொண்டுவாருங்கள்;” (அல் குர்ஆன் 2:23)

மேலும் கூறுகிறான், “(எதையும் தம்) மன விருப்பப்படி அவர் பேசுவதுமில்லை, அது (அவருக்கு) அறிவிக்கப்படும் வஹியே தவிர வேறில்லை, வல்லமை மிக்க(ஜிப்ரயீலான)வர் (அவருக்கு) அதனைக் கற்றுக்கொடுத்தார். (அவர்)உறுதியானவர்; பின்னர் அவர் (தம் இயற்கை உருவில் நம் ரசூல் முன்)நேராக வந்து நின்றார்.” (அல் குர்ஆன் 53:2-6)

உள்மனத்தூண்டல் – இல்ஹாம்
“மன் அமில பிமா அலிம, அல்லமஹ¤ல்லாஹ¤ மாலம் ய·லம்” ஒருவன் உள்ள அறிவை வைத்துக்கொண்டு செயல்பட்டால் (அது தொடர்பான)புரியாத அறிவுகளையும் அல்லாஹ் சொல்லிக்கொடுப்பான். இது நபிகளாரின் வாக்கு.

ஒருவன் எதைப்பற்றி சிந்திக்கிறானோ, அந்த சிந்தனை அடிமனத்தில் இறங்கி அவனுக்குத் தேவையான செய்தியை தேடிக்கொண்டிருக்கும். எப்போது accurate thought ஏற்படுகிறதோ அப்போது divine force அங்கு கலக்கும், அப்படி கலந்த பிறகு எதற்கான விடையைத் தேடிக்கொண்டிருக்கிறானோ அந்த விடை அவன் உள்ளத்திலிருந்து வெளிவரும். இதற்கு “இல்ஹாம்” – இறை உதிப்பு என்று பெயர். அவன் எந்த மொழியில் சிந்திக்கிறானோ அந்த மொழியிலேயே வரும், மாறுபட்ட மொழியில் வராது. எதைப் பற்றி சிந்திக்கிறானோ அதைப் பற்றிய செய்தி வரும். அதற்கு மாறுபட்ட வேறொன்று வராது.

உதாரணமாக ஒருவன் ஒரு பொருளை எங்கோ வைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கிறான், வைத்த இடத்தை மறந்துவிட்டான், பொருள் மிக முக்கியமானது. எங்கெல்லாமோ தேடுகிறான்; தேடாத இடமில்லை, அண்ணன் தம்பி என்று யார் யாரிடமோ கேட்கிறான்; கேட்காத ஆளுமில்லை. களைத்துப்போய் உட்கார்ந்துவிடுகிறான், கவனம் வேறு பக்கம் திரும்பிவிடுகிறது. சற்று நேரத்தில் திடீரென்று “இந்த இடத்தில் வைத்தோம்” என்று தோன்றுகிறது. அந்த ஒரு வினாடி, உலகமே திரண்டுவந்து “£இங்கே வைக்கவில்லை” என்று சொன்னால் அவன் நம்பமாட்டான், அங்கேதான் வைத்தேன் என்று ஆணித்தரமாகச் சொல்லி அதை எடுத்துக்கொண்டும் வருவான். அந்த தோன்றலுக்கு; அந்த மன உதிப்புக்கு இல்ஹாம் என்று பெயர். நீங்கள் படித்தவர்களாயிற்றே என்ன சொல்வீர்கள்? STRIKE ஆனது என்பீர்கள்.

பெருமானார் அவர்கள் சிந்திச்சுக் கிந்திச்சுக்கொண்டல்லாம் இருந்ததில்லை. தங்களது தோழர்களுடன் பேசிக்கொண்டிருப்பார்கள், வஹி வரும், அப்போது அவர்களது நிலை மாறும் அதாவது அவர்களது நெற்றி வியர்க்கும், உடம்பு கனக்கும். அது அவர்களுக்கு மணி ஓசைப்போல் கேட்கும்; சில சமயங்களில் ஜிப்ரயீல்(அலை) தன் சுயத்தில் தோன்றுவார்கள்; சில நேரங்களில் மனித உருவில் பெரும்பாலும் திஹியத்துல் கல்பி என்ற நபித் தோழர் உருவத்தில் தோன்றி வஹியை அளிப்பார்கள். அதை அப்படியே மனதில் ஏற்றி தம் தோழர்களிடம் சொல்லி இந்த வசனத்தை இன்ன இடத்தில் எழுதிக்கொள்ளுங்கள் என்று வரிசைப் படுத்துவார்கள்.

ஒரு சமயம் பெருமானார் அவர்கள் ஒட்டகத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது வஹி வந்தது. அப்போது ஒட்டகம் சுமையின் காரணமாக நடக்கமுடியாமல் அமர்ந்துவிட்டது. வஹி ஒரு பொருள் என்றால் அதன் கனத்தை ஒட்டகத்தினால் சுமக்க முடியவில்லை; வஹி ஒரு நெருப்பு என்றால் அதன் உஷ்ணத்தை பெருமானார் அவர்களால் மட்டுமே தாங்கிக் கொள்ளமுடிந்தது. உள்மனத்தூண்டல் என்றால் தூல உடம்பில் மாற்றங்கள் ஏற்படாது.

ஆரம்பத்தில் ஜிப்ரயீல்(அலை) வஹியைச் சொல்லச் சொல்ல கூடவே பெருமானார் அவர்களும் சொன்னதால் இறைவனிடமிருந்து எச்சரிக்கை வந்தது. “(நபியே! ஜிப்ரயீல் வஹியை ஓதிக்காட்டும்போது நீர் அவசரப்பட்டு, அதனை ஓத நீர் நாவை அசைக்காதீர். ஏனென்றால் அதனை ஒன்று சேர்த்து (நீர்) ஓதும்படி செய்வது நிச்சயமாக நம் மீதுள்ள கடமையாகும். ஆகவே, (ஜிப்ரயீல் மூலம்) அதனை நாம் (உமக்கு) ஓதிக் காண்பித்தால், (அவர் ஓதி முடித்த பின்னர்) அவ்வாறே அதனை நீர் பின் தொடர்ந்து ஓதும்.” (அல் குர்ஆன் 75:16-18)

உள்மனத்தூண்டல் என்றால் இப்படி நாவை சுழற்றவேண்டிய அவசியமில்லை.உள்மனம் வெளிமனத்துக்குச் சொல்கிறது. அதை வார்த்தைகளாக வடிப்பதில் என்ன சிரமம் ஏற்படப் போகிறது? ஒரு கட்டத்தில் சில கிறுஸ்துவர்கள் “அஸ்ஹாபுல் கஹ்·ப்” – குகை மனிதர்களைப் பற்றி பெருமானார் அவர்களிடம் கேள்வி கேட்டபோது அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஏன் அப்போது அவர்களின் உள்மனம் உறங்கிக்கொண்டிருந்ததா?

நடந்தது இப்படி – பெருமானார் அவர்கள் தம் தோழர்களுடன் இருக்கும்போது சில கிறுஸ்துவர்கள் வந்தார்கள். ‘முஹம்மதே! குகை மனிதர்களைப் பற்றி எங்கள் பைபிளிள் முன்னூறு வருடங்கள் தங்கி இருந்ததாகக் கூறுகிறது. ஆனால் உங்கள் குர்ஆனில் முன்னூறு வருடமும் பின் ஒன்பது வருடமும் ஆக மூன்னூற்றி ஒன்பது வருடங்கள் தங்கி இருந்ததாகக் கூறுகிறது. எங்களிடமுள்ள பைபிளும் அல்லாஹ் கொடுத்ததுதானே, எங்களிடம் ஒருமாதிரியும் உங்களிடம் ஒருமாதிரியும் அல்லாஹ் சொல்கிறானே! அது எப்படி சொல்லலாம்? அப்பொ நீங்கள் சொல்லும் இஸ்லாம் எப்படி உண்மையாக இருக்கமுடியும்?’ என்று கேட்க ரசூல்(ஸல்) அவர்களுக்கு பதில் கிடைக்கவில்லை, பதில் தெரியவில்லை; வஹி வந்தால்தானே சொல்வார்கள், வஹி வரவில்லை. பக்கத்திலிருந்த ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் பெருமானார் அவர்களிடம் அனுமதிப் பெற்றுகொண்டு சொன்னார்கள்: ‘சூரியனைப் படைத்தவனும் அவன்தான், சந்திரனைப் படைத்தவனும் அவன்தான்; உங்களுக்கு சூரியக் கணக்குப்படி சொன்னான், எங்களுக்கு சந்திரக் கணக்குப்படி சொன்னான் ஆண்டவன்’ என்றார்கள்.

எந்த வகையில் பார்த்தாலும் குர்ஆன் அல்லாஹ்வின் அருள் நபிகளாருக்கு உள்மனத்தூண்டலால் வெளிப்பட்டது என்பதற்கு குர்ஆனில்கூட ஆதரமில்லை. ஜிப்ரயீல்(அலை) அவர்கள் மூலமாக இறக்கப்பட்டது என்பதுதான் உறுதியானது; ஆதாரப்பூர்வமானது.

ஹதீஸ்
நான்காவதாக ஹதீஸ்கள் நபிமுகமது பற்றிய பிற அறிஞர்களின் வாய்மொழி வரலாற்று தொகுப்பாகும் என்ற மூன்றாவது கருத்து. இப்போது புத்தகங்களாக கிடைக்கின்றனவே அதற்குப் பொருந்தும்; “சஹி சித்த” என்ற ஆறு ஹதீஸ் தொகுப்புக்கள் இருக்கின்றனவே அவற்றிற்குப் பொருந்தும். அதல்லாமல் வேறு எதற்கும் பொருந்தாது.

ஹதீஸ் என்றால் என்ன? நாயகம்(ஸல்) அவர்கள் சொன்னது; செய்தது; இது இரண்டிலுமில்லாமல் பிற நபித்தோழர்கள் செய்ததை அங்கிகரித்தது. இவை மூன்றும் நபி வழி ஆகும்.

ஏன் அவர்கள் காலத்தில் இவை எழுதப்படவில்லை? எழுதியிருந்தால் குர்ஆனும் ஹதீஸ¤ம் இரண்டரக் கலந்து குர்ஆன், தன் தனித்தன்மை இழந்துவிடும் என்பதால் “வஹியை எழுதிக்கொள்ளுங்கள், நான் சொல்வதை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள்.” என்று பெருமானார் அவர்களே சொல்லியிருக்கிறார்கள். “லா தக்தூப அன்னி” என்னைத் தொட்டும் எதையும் எழுதாதீர்கள் என்று நவின்றுள்ளார்கள். ஆனால் குர்ஆன் நிறைவுபெற்ற பிறகு கடைசி காலத்தில் தாம் சொல்வதை குறித்துக்கொள்ள அனுமதித்துள்ளார்கள்.

திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதம்……..? அடுத்துப் பார்ப்போம்.

அருஞ் சொற்கள்:
மலக்குகள்: வானவர்கள்; தேரர்கள்.
ஈமான்: உறுதியான விசுவாசம்; நம்பிக்கை (Dynamic Belief)
வஹி: இறை அறிவிப்பு
இல்ஹாம்: இறை உதிப்பு
ஜிப்ரயீல்: வானவத் தலைவர்
முபஸ்ஸிரீன்: குர்ஆன் விரிவுரையாளர்கள்
(ஸல்): ஸல்லல்லாஹ¤ அலைஹி வ ஸல்லம்
(சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)
(அலை): அலைஹிஸ்ஸலாம் (சாந்தி உண்டாவதாக)
(ரலி): ரலியல்லாஹ¤ அன்ஹ¤ (இறைவன் பொருத்திக்கொள்வானாக)

email: maricar@eim.ae

Series Navigation