“இஸ்லாம் ஏற்றுக்கொள்ளும் புதுமைகள்” என்ற இப்னு பஷீர் கட்டுரை

This entry is part [part not set] of 35 in the series 20061102_Issue

பாபுஜி


“இஸ்லாம் ஏற்றுக்கொள்ளும் புதுமைகள்” என்ற கட்டுரை இப்னு பஷீர் கடந்த வாரத் திண்ணையில் சிறப்பாகவே எழுதியிருக்கிறார்.

மறுமை நன்மையை நாடி, இறைவணக்கம் என்ற அளவில் செய்யப்படுகிற காரியங்களில்; இறைஅருளை எதிர்பார்த்துச் செய்யப்படுகிற அமல்களில், அவை இறைவனின், தூதரின் அங்கீகாரத்தில் உள்ளதா என்று பார்ப்பதும் அதுவல்லாத உலகாதாயக் காரியங்களில் இறைவனின், தூதரின் தடை இல்லாதிருக்கிறதா என்று பார்ப்பதும் தான் முஸ்லிம்களின் கடமை.

இறையருள் என்கிற ‘பரக்கத்’ கிடைக்கும் என்று நம்பி இறைவனோ, தூதரோ ‘வணக்கமாக’ அங்கீகரிக்காத பிற மனிதர் எழுதிய அரேபியக் கவிதைகளை ‘பயபக்தி’யுடன் பாடுவது நிச்சயம் இஸ்லாமியக் கொள்கைக்கு எதிரானதே. இதையெல்லாம் எடுத்துச் சொல்லப்படாததால் தான் ஒரு காலத்தில் ‘மவ்லீது’ ஓத வருகிறவர்கள் குர்ஆனைப் படிக்க வராதிருந்தார்கள். அதே நேரம் முரண்பாடில்லாத கவிதைகளையோ, கலையையோ ‘வணக்கமாக’ கருதாமல் வெற்று இன்பத்துக்காக பாடினால், அதில் தவறில்லை.

நபிகளின் காலத்தில் ‘இணையம்’ இல்லை. எனவே, இணையம் பாவிப்பது அனுமதிக்கப்படாத புதுமை (பித்-அத்) என்று குலாம்கள் கூப்பாடு போடுவது வியப்பையே அளிக்கின்றது. ‘பார்வை’ என்ற அளவில் அனுமதிக்கப்பட்டவற்றை இணையத்தில் பார்த்தாலும் நேரில் பார்த்தாலும் ஒன்று தான். இங்கு, நன்மையும் தீமையும் பொருளைப் பொறுத்ததல்ல; பயன்பாட்டைப்பொறுத்ததே என்பதை குலாம்களும், ‘சூபி’களும் உணரவேண்டும்.

இந்த விடயத்தை சூபி முகமது என்ற பெயரில் எழுதுபவரும், குலாம் ரசூலும் ஏன் குழப்புகிறார்கள் என்பது தான் புரியவில்லை. உலகாதாயக் காரியத்திலும் பிற மனிதருக்கு துன்பம் விளைவிக்காமல், இறைக் கோட்பாடுகளுக்கு இன்னல் அளிக்காமல், மகிழ்வையே தருகிற காரியம், இறைவணக்கத்திற்குரிய மதிப்பை பெறுவதும் நியாயம் தானே.


babuto@gmail.com

Series Navigation

பாபுஜி

பாபுஜி