ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு

This entry is part of 35 in the series 20060922_Issue

ஸ்ரீனி


இஸ்ரேலிய,இஸ்லாமிய,யூத வின்யாசங்கள் திண்ணையில் அளவுக்கு அதிகமாக வருவதால் இந்தக் கட்டுரை.உலகளாவிய தீவிரவாதம் யூதர்களாலா அல்லது இஸ்லாமியர்களாலா என்று வேறு வாதப் பிரதிவாதங்கள்.நான் முன்பே சொன்னது போல இதில் நம்ப ஊர் சாதிகளையும் வறுத்து விடுகிறார்கள்.ஐரோப்பாவில் யூதர்களை ஹிட்லருக்கு முன்பே விரட்டுவது தொடங்கி விட்டது. ஸ்பெயின் யுத்தம் பிரசித்தி பெற்றது.இன்றும் ஐரோப்பாவில் யூத வெறுப்புணர்வு கண்கூடு.ஏன்?அங்கே இஸ்லாமியர் எத்தனை விழுக்காடு உள்ளனர்!

ஸ்விஸ்ஸில் எடுத்துக் கொண்டால்,அங்கே எத்தனை யூத வங்கிகள் உள்ளன.அங்கே நடப்பது இஸ்லாமியர் ஆட்சியா என்ன!ஸ்விஸ் வங்கிகளில் உள்ள நம் நாட்டு கருப்பை இங்கே கொண்டு வர முடிந்தால்,இன்னும் எட்டு-பத்து ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு பட்ஜெட் பற்றாக்குறை இருக்காது என்பது ஒரு செய்தியாக வந்தது.உண்மையா?

ஹிட்லர் ஜெர்மனியில் முன்பே பரவலாக இருந்த யூத வெறுப்பை ஊதி ஊதி உபயோகித்தார்! பாலஸ்தீனியர் யூதர்களை வெறுக்க ஒரு காரணம்,பாலஸ்தீன நிலங்களை ஏப்பம் விட்டு யூத நாடு உருவாகியதால்.சரி,மற்ற சகோதர வளைகுடா நாடுகள் ஏன் மௌனம்?எல்லா இஸ்லாமிய நாடுகளும் சேர்ந்து சவுண்ட் விடலாமே! இஸ்ரேலை ஓட்டலாமே!என்னய்யா பிரச்சினை?

சவுண்ட் விட்டால் வளைகுடாப் பிரபுக்களின் வர்த்தகம் படுத்து விடும்.பெரிய அண்ணன் கை முறுக்கு வேலையை காட்டி விடுவாரே!பெட்ரோ பணத்தை இங்கேயே செலவழிக்கவும் என்று சகல சல்லாப வசதிகளுடன் கில்லாடி அண்ணன் போர்டு போட்டல்லவா பிஸினஸ் செய்கிறார்!

சகோதரர்களுக்கு மறைமுக உதவி என்று கூறிக் கொள்ளலாம்.அப்படி எவ்வளவு உதவி செய்ய முடியும்.தெரிந்தால் ஆபத்து! அமெரிக்க ஆதரவு இல்லாவிட்டால் எல்லா இஸ்லாமிய நாடுகளும் தன்னைக் குதறி விடும் என்பது இஸ்ரேலுக்கும் தெரியும்.மூத்த அண்ணனின் பிரித்தாளும் ராஜ தந்திரம் தன் நாட்டுப் பொருளாதாரப் பற்றில் வந்தது. மெச்சத்தகுந்தது!

இயேசுவை சிலுவையில் அறைந்த யூதர்களுடன் இன்று so called கிரித்துவ நாடுகள் எல்லாமே நட்புடன்!ஆனால் இஸ்லாமோ எதிர்ப் பாசரையில்! யோசித்துப் பார்த்தால் புரியும் “அண்ணா”வின் சாதுர்யம்!ரெண்டு பக்கமும் லாவணி பாடுவதில் “அவர்” ரொம்பவே கெட்டி!

தாஜ் அவர்கள் எழுதியதைப் போல,மத அழுத்தம் மிக்கவர்கள் எல்லா மதத்திலும் உள்ளனர்.பிரச்சனையே இந்த அழுத்தங்கள்தான்.இதற்கு அரசியல் தூபங்களும் துணை.எப்படி குஜராத்தில் “அஹிம்சை”ஆடுகிறதோ,அதேபோல் நம்ப ஊரில் “லுங்கி கட்டாத”டயலாக் புண்யவான்கள்.சாதாரண பொதுஜனத்திற்கு யூத வின்யாசமும் தெரியாது,இஸ்லாமிய விரோதமும் கிடையாது.அவர்கள், “இங்கயும் தண்ணி மேலேர்ந்துதானே விழுது” என்ற நிலையில் உள்ள யதார்த்த வாதிகள்.பிழைப்பைத் தேடி நாளும் குண்டு வெடிக்குமோ என்ற பயத்தில் ஓடுபவருக்கு எந்த “இஸம்”களும்”த்துவா”க்களும் தெரியாது;தேவையும் இல்லை. வெறுப்பது நம் பக்கத்து நாட்டார் இந்த நாட்டிற்குள் மதத்தின் பெயரால் நடத்தும் அட்டூழியங்களை.ஏனெனில் விளைவுகளின் அடி அவர்கள் தலையில்,வயிற்றில் தானே விழுகிறது.

ஸ்ரீனி

kmnsri@rediffmail.com

Series Navigation