செங்கடலை தாண்டி- வஜ்ரா ஷங்கர் அறிய

This entry is part [part not set] of 39 in the series 20060825_Issue

எச்.பீர்முஹம்மது



1

கடந்த ஆறாண்டுகளாக நான் திண்ணை.காமை கவனித்து வரும் நிலையில் பல பெயர்கள், பல இமெயில் முகவரிகள் போன்றவற்றை வைத்துக் கொண்டு ஒரே நபரே இவற்றை பயன்படுத்தி எழுதுவது நடந்து கொண்டிருக்கிறது. நான் அவர்களை சிலசமயம் அடையாளம் கண்ட கணத்தில் அவற்றை மறந்தும் இருக்கிறேன். இவர் தன்னை அடையாளம் கண்டிருக்கிறார் என்ற திருப்தியில் இதை எழுதுகிறேன்.

பாலஸ்தீன்/இஸ்ரேல் பற்றி நான் எழுதிய கட்டுரையை உள்வாங்கி எனக்கு அவர் மறுப்பு எழுதியதில் சந்தோஷமும், வருத்தமும் உண்டு. என் கட்டுரையின் இரண்டாம் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு அதன் மூலம் எனக்கு யூத வரலாறு குறித்து எதுவுமே தெரியாது என்ற திடீர் முடிவுக்கு வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக மத்தியகிழக்கில் இருக்கும் எனக்கு அதை பற்றி அறியாமலிருப்பது என்னை நானே ஏமாற்றிக் கொள்வதாகும். நான் அந்த அளவுக்கு ஒருவிஷயத்தைப்பற்றி அறியாமல், படிக்காமல் எழுதுபவனல்ல. தமிழில் வெறும் புத்தகத்தின் முன்னுரையை படித்து விட்டு கட்டுரைகள் எழுதுவோர் ஏராளம். சில சர்வதேச தரம் வாய்ந்த பத்திரிகைகள் அவர்களுக்காக இருக்கின்றன. பெரும் அறிவு ஜீவிகளாக அவர்கள் தன்னை வெளிப்படுத்துவது தான் இதில் பெரும் கொடுமை. மத்திய கிழக்கு என இப்போது அறியப்படும் பகுதியானது சுமேரிய, அசிரிய, பாபிலோனிய, அகெமிய போன்ற பல்வேறு இனக்குழுக்களை உள்ளடக்கியிருந்தது. யூதர்களின் தந்தையான ஆபிரகாம் இந்த பாபிலோனிய இனக்குழுவுக்கு உட்பட்டவர் தான். இனக்குழுவுக்கான இறையியல் அவரிடமிருந்தது. அவருக்குப் பின் வந்த மோசே அதற்கு செயல் வடிவம் கொடுத்தார். பரோயா (பிர் அவ்ன்) என்ற அரசனின் கொடுமையிலிருந்து அவர்களை காப்பாற்றுவதற்காக அவர்களை அழைத்து கொண்டு செங்கடலை தாண்டி சென்றார். அதன் பின்னர் அவர்களில் சிறுகூட்டம் மத்தியகிழக்கின் செங்கடலை தாண்டிய பல்வேறு பகுதிகளுக்கு நகர்ந்தது.(தற்போதைய இஸ்ரேலில் மட்டும் அல்ல) மற்றவர்கள் பிற இடங்களுக்கு நகர்ந்தார்கள். யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய பிரதிகளில் இந்த தொன்மம் காண கிடைக்கிறது. இதற்கு வெளியே மத்திய கிழக்கின் வரலாற்றை எழுதிய பலர் மேற்கண்ட விஷயத்தை பதிவு செய்திருக்கிறார்கள். அதன் பின்னர் யூதர்கள் தனக்கான அரசை நிறுவினார்கள். இது பல்வேறு இனக்குழுக்களை உள்ளடக்கியிருந்தது. வரலாறு கிரேக்க அலெக்சாண்டரின் படையெடுப்பு பற்றி அதிகமாகவே பேசுகிறது. அவர் ஆக்கிரமித்த பகுதியானது ஆசியா முழுக்கவே இருந்தது. ரோமானியர்கள் ஐரோப்பிய கண்டத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து அங்கு செய்த கொடூரங்கள் காலத்தின் போக்கில் தங்கி நிற்கின்றன. அந்நிய படையெடுப்பின் மூலம் அவர்கள் துரத்தப்பட்டனர் என்பதை விட அவர்கள் வெளியேறினர் அல்லது நகர்ந்தனர் என்பதே சரியாகும். இனக்குழு வரலாற்றை எழுதியவர்கள் இனக்குழுக்கள் எவ்வாறு நகர்தலை கடைபிடிக்கிறது என்பதை பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். பேசில் டேவிட்சனின் ” History of Tribes” இதற்கு உதாரணம். வரலாற்றின் முன்நிகழ்வில் அரசு என்ற நிறுவனம் கொடூரத்தின் சின்னமாகவே இருந்து வந்துள்ளது. யூத சிற்றரசுகள் தோற்கடிக்கப்பட்டதும் அதன் மூலமாக அவர்கள் ஒடுக்கப்பட்டதும் பரவலான நிகழ்வு. இந்திய சூழலில், தமிழில் இம்மாதிரியான நிகழ்வுகள் நிறையவே நடந்துள்ளன.(சமண-சைவ மோதல்கள்) யூத வரலாற்றைப் பற்றி பேசும் பலர் யூத அரசுகள் புராதன வரலாற்றில் செய்த இனக்குழு ஒடுக்கு முறையைப் பற்றி பேசுவதே இல்லை. அவர்களுக்கு அதை சுருட்டி மறைப்பது சாதாரணமாக இருக்கிறது. இஸ்ரேலின் பாலஸ்தீன் ஆக்கிரமிப்பைப் பற்றி சொல்ல வந்த நான் யூதர்களின் தோற்றம் பற்றி, அவர்களின் நகர்வு பற்றி என் கட்டுரையின் இரண்டாம் பகுதியில் சில தொன்ம தரவுகளை கொடுத்தேன். அதற்கு மேல் கட்டுரையின் போக்கு திசை மாறி விடும் என்பதால் தவிர்த்தேன். யூத அரசுகள், அவர்களின் தகிடுதத்தங்கள் பற்றிய கணிசமான விவரங்கள் என்னிடமுள்ளன. அவற்றைப் பற்றி விரிவாகவே விவாதிக்கலாம்.

2

நூறாண்டு கால மத்திய கிழக்கின் வரலாற்றை திருப்பி அடிப்பது பேரீத்த பழங்களை காலால் மிதிப்பது போன்றதாகும். இருபதாம் நூற்றாண்டின் முப்பது, நாற்பதுகளில் மத்திய கிழக்கில் யூதர்களின் ஆக்கிரமிப்பு பற்றிய ஆவணங்கள் நிறையவே இருக்கின்றன. “இஸ்ரேல் தோற்றத்தால் பாலஸ்தீனர்களை விரட்ட எண்ணியது யூத சியோனிஸ்ட்கள் அல்ல. அதையும் அவர் லாவகமாக மறைத்து விட்டார்.பாலஸ்தீன அகதிகள் பிரச்சினை உருவாக முக்கிய காரணம் அரபு தேசத்தின் படைகளே.. அவர்கள் இஸ்ரேல் உருவான உடன் தொடுத்த போரின் போது அரபுகள் இஸ்ரேலை அழித்து விடுவோம் என்று ஆசை காட்டி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க பாலஸ்தீனியர்கள் தங்கள் வீட்டை விட்டுச் சென்றனர். துரதிஷ்டவசமாக போரில் இஸ்ரேல் வெற்றி பெற்று விட்டது. இன்று பாலஸ்தீனியர்கள் அகதிகளாக வாழ்கின்றனர்.” என்கிறார் வஜ்ரா ஷங்கர். பெருங்கதையாடல்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதற்கு இது ஓர் உதாரணம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாலஸ்தீனில் இருந்த யூதர்களின் எண்ணிக்கை அதன் பிறகு இருமடங்கானது. இது வெறுமனே ரியல் எஸ்டேட் வியபாரிகள் வழி வந்ததல்ல. மாறாக ஐரோப்பிய சூழலின் நிர்பந்தம் மற்றும் சியோனிச ஊட்டல் வழியாக வந்தது. ஏற்கனவே அங்கு இருந்து வந்த யூதர்கள் தங்களின் மற்ற சகோதரர்களின் இருப்பிட வசதிக்காக பாலைவனத்தை புரோக்கர்களிடமிருந்து விலைக்கு வாங்கி அதில் குடியேறினர். வளைகுடா நாடுகளில் கூட யூதர்களுக்கான நிலம், மற்றும் சொத்துக்கள் உண்டு. ஆனால் முக்கிய பிரச்சினையே இஸ்ரேல் உருவாக்கமும், அதன் பிறகான ஆக்கிரமிப்பும் தான். சியோனிற்கு திரும்புதல் அல்லது சொந்த நாட்டை உருவாக்குதல் என்ற உணர்வு 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட “anti semitism” உணர்வினால் மட்டுமே ஏற்பட்டதல்ல. மாறாக ஜெர்மனியில் ஹிட்லர் பதவிக்கு வந்த பின் அறிவிக்கபட்ட இனத்தூய்மை மூலம் வந்ததாகும். ஹிட்லர் சொன்னார் ” ஜெர்மனிக்கு இது தக்க தருணம் என்று அவர்களிடம் கூறுங்கள். என்னை பொருத்தமானவன் என்று கருதியே அவர்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளனர். நம் இனத்தை நிறுவுவது தவிர வேறு எதுவும் இந்நேரத்தில் செய்ய முடியாது.” ஹிட்லர் யூதர்களை அழித்ததும், அதன் மூலம் இனவாதத்தை முன் வைத்ததும் பரவலாக அறியப்பட்ட ஒன்று. 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட பல புரட்சிகள் யூதர்களை உள்ளடக்கியே நடந்தன. இதை விட முக்கியமாக இருபதாம் நூற்றாண்டில் ரஷ்யாவில் ஏற்பட்ட அக்டோபர் புரட்சியானது பெரும்பான்மை யூதர்களை உள்ளடக்கியே இருந்தது. அங்கு யூத தொழிலாளர்களுக்கென்றே “பண்ட்” என்ற தனி அமைப்பு கூட இருந்தது. ரஷ்ய புரட்சியின் போது பிரிந்து போன பின்லாந்து நாட்டில் யூதர்களே பெரும்பான்மையாக இருந்தனர். ஆனால் தியோடர் ஹெர்ஸ் இவை எல்லாம் நிகழ்வதற்கு முன்பே சியோனிசத்தை முன்வைத்து விட்டார். இதனை மத ரீதியாக இருப்பிடத்தை நிர்ணயித்தல் என்பதாகவே பார்க்க வேண்டும். அரபு- இஸ்ரேலிய துவக்க போரின் போது அரபுகள்
பாலஸ்தீனியர்களை கேட்டுகொண்டது போர் பாதுகாப்பு நடவடிக்கையே. சமீபத்தில் இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகளுடனான போரில் தமிழர் பகுதியில் பலரை கொன்றதும் அதன் விளைவாக இலங்கை தமிழர்கள் தம் இருப்பிடத்தை விட்டு தமிழ்நாடு உட்பட பல பகுதிகளுக்கும் அகதிகளாக நகர்ந்து வருவதையும் நாம் கவனித்து வருகிறோம். இதே மாதிரியான சூழலே அன்றைக்கு இருந்தது. இஸ்ரேல் உருவாவதற்கு முன்னர் சியோனிச தலைவர்கள் விடுதலைப்படை அமைத்து அரபுகளுடன் மோதலில் ஈடுபட்டதும், பின்னர் அதுவே அரசு இயந்திரமாக உருவானதையும் என்னுடைய கட்டுரையில் விரிவாகவே எழுதியிருந்தேன். இலங்கை மோதலில் அகதிகளாக வெளிவந்த பலர் அங்கு இயல்பு நிலை உருவான பிறகு தங்களுடைய இருப்பிடத்திற்கு திரும்ப முடிந்தது. ஆனால் பாலஸ்தீனியர்கள் அகதிகளாக வெளிவந்த பிறகு சுய-இருப்பிடமற்று நிற்கிறார்கள். பாலஸ்தீன் தொல்குடிகளான பதூயீன்களின் நிலைமை மிகவும் விசனகரமானது. இவர்களை பற்றி பலர் தங்கள் நூல்களில் பதிவு செய்திருக்கிறார்கள். குறிப்பாக எட்வர்ட் செய்த் தன்னுடைய ” Question of Palestine” என்ற நூலில் விரிவாகவே எழுதியிருக்கிறார். பாலஸ்தீனில் பிறந்த எட்வர்த் செய்த் தன்னுடைய குடும்பம் எவ்வாறு? எச்சூழலில் பாலஸ்தீனை விட்டு எகிப்திற்கு செல்ல நேர்ந்தது என்பதை பற்றி விரிவாக விளக்குகிறார். ஒர் இனம் தன்னை நிறுவுவதற்கு அடையாளமாக தேசியவாதத்தை முன்வைக்கிறது. தன்னுடைய “Culture and Imperialism” என்ற நூலில் ஏகாதிபத்தியத்திற்கும் தேசியவாதத்திற்கும் இடையேயான உறவை ஆராய்கிறார். தேசிய வாதம் எல்லா வித்தியாசப்படுத்த முடியாத இனங்களை வகைப்படுத்துகிறது. அது வரலாற்றின் கீழ் இருக்கும் மக்களின் மதம், மொழி, இனம் ஆகியவற்றை அந்நியப்படுத்தி, ஆக்கிரமிப்பு செய்வதன் வழியாக தன்னை நிறுவிக் கொள்கிறது.பாலஸ்தீனிற்கு எதிரான யூதர்களின் ஆக்கிரமிப்பு இதனோடு நன்றாகவே பொருந்துகிறது. மேலும் எட்வர்த் செய்த்தின் நேர்காணல்களில் யூத குடியேற்றம் பற்றி தெளிவாகவே விவரித்திருக்கிறார். “power, politics, culture” என்ற நூலில் இதை காணமுடிகிறது. 1948 லிருந்து 1967 வரை இஸ்ரேல் செய்த கொடூரங்கள் ஐ.நா பாதுகாப்பு சபையின் ஆவணங்களில் தெளிவாக காணக்கிடைக்கிறது. அது கீழ்கண்டவாறு பட்டியலிடுகிறது

1. ஐ.நா மத்தியஸ்தர் போல்கே பெர்னாடெவை கொன்றது

2. பாலஸ்தீனிய கிராம மக்களை அங்கிருந்து வெளியேற்றியது

3. பாலஸ்தீனிய கிராம மக்கள் மீது தாக்குதல் தொடுத்து, அவர்களின் வீடுகளை அழித்தது.

4. கிபியாவை கொன்றது

5. போர்நிவாரண குழுவில் இருந்த மருத்துவர் ஒருவரை பெத்லேகம்- ஹெப்ரான் சாலையில் அவர் காரில் சென்று கொண்டிருந்த போது காரிலிருந்து இழுத்து வந்து அவர் கண்களில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது

6. சிரிய கிராமத்தில் வசித்த பாலஸ்தீனிய மக்களை கொன்றது

7.பதூயீன்களை அழித்தது

இன்னும் நிறையவே இருக்கிறது. பிரிட்டிஷ் அரசின் ஆவணங்களிலும் இது காண கிடைக்கிறது. பிரிட்டிஷ் பொதுச்சபையில் 1948ல் அதன் உறுப்பினர்கள் ஆற்றிய உரைகள் இஸ்ரேல் பாலைவனத்தின் பிரதிபலிப்பாக இருக்கின்றன. யூதர்கள் இஸ்ரேலில் குடியேறிய பிறகு அங்கு பொருளாதார, சமூக நிலையில் ஏற்பட்ட மாற்றம் அமெரிக்கா மூளையின் பிரதிபலிப்பே. பாலைவனத்தை சீராக்க எங்கிருந்தெல்லாம் மண் கொண்டுவரப்பட்டது என்பது வரலாற்று தெளிவு.

3
அடிப்படைவாதம்-பாலஸ்தீன் என்ற இருமை நிலையை நான் வித்தியாசப்படுத்தியே பார்த்து வந்திருக்கிறேன். யாசர் அரபாத்தின் பாலஸ்தீன் விடுதலை இயக்கம் லெளகீகமாகவே இருந்தது.1982 ல் அது பெய்ரூட்டில் சந்தித்த தோல்விக்கு பிறகு அடிப்படைவாதத்துடன் கரைந்து விட்டது. யாசர் அரபாத்தின் கனவு யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அடங்கிய சுதந்திர பாலஸ்தீனாகவே இருந்தது.(இவற்றை பற்றி என் முந்தைய பல கட்டுரைகளில் குறிப்பிட்டு இருக்கிறேன்).மத்திய கிழக்கில் குர்து இனத்தவரின் நிலைமை பரிதாபகரமானது.அவர்கள் சுய இருப்பிடமற்று தப்பி அலைகிறார்கள். அவர்களை பற்றி உலகளாவிய விவாதம் வராததற்கு காரணம் அவர்களில் பெரும்பான்மையோர் முஸ்லிம்கள் என்பதே. சொந்த நாட்டிற்கு திரும்புதல் என்பதை எடுத்துக்கொண்டால் ஸ்பெயினின் வரலாற்றுக்கு தான் நாம் திரும்ப வேண்டும். ஸ்பெயினின் முஸ்லிம் ஆட்சிகாலம் யூதர்களின் பொற்காலம் என்று யூதர்களாலே அழைக்கப்பட்டது. முஸ்லிம் அரசர்கள் அங்கு ஸ்தாபித்த பல்வேறு கட்டுமானங்கள், சிற்பங்கள் இன்றும் நம் முன் நிற்கின்றன.அல்-அந்தலூசியா நமக்கு அதை சொல்கிறது. ஐ.நாவால் அன்றைக்கு உருவாக்கப்பட்ட இஸ்ரேலின் வரைபடத்திற்கும் இன்றைய வரைபடத்திற்கும் மிகுந்த வித்தியாசம் இருக்கிறது. எவ்வளவு தூரம் தன்னை ஸ¤மிங் செய்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை யூத அறிவுஜீவிகள் கூட ஒத்துக் கொள்வதில்லை. பெர்டிணான்ட் ரஸ்ஸல், அனா அரந்த், ஹெபர்மாஸ், தெரிதா ஆகியோரை குறிப்பிடலாம்.(சில பின் நவீனத்துவ அறிவுஜீவிகளின் இஸ்ரேல் ஆதரவு நிலைபாடு பற்றியும், அதற்கான காரணங்கள் பற்றியும் எட்வர்ட் செய்த் தன்னுடைய நூல்களில் விரிவாகவே பதிவு செய்திருக்கிறார்.) இஸ்ரேல் உருவானவுடன் யூத தலைவர்கள் ஐன்ஸ்டீனை இஸ்ரேல் ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் படி கேட்டுக்கொண்டதையும் அதை ஐன்ஸ்டீன் மறுத்ததையும் இதனோடு நாம் ஒப்பிட்டு பார்க்க முடியும்.அமெரிக்க மூளை எவ்வாறு இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்காகஇயங்கியதையும், இஸ்ரேல் ராணுவ நிதிஒதுக்கீட்டிற்காக அமெரிக்காவின் வருடாந்திர மானியத்தையும் நாம் விரிவாகவே விவாதிக்கலாம். உலக ஊடகங்கள் இஸ்லாமிய பயங்கரவாதத்தை குவியப்படுத்தும் நிலையில் யூத இனவாதத்தை குழியப்படுத்துகின்றன.இந்திய சூழலில் இந்துத்வா அமைப்புகள் இன்று இஸ்ரேலின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துகின்றன. அவர்களின் ஹிட்லர் ஆதரவு நிலைபாடு எவ்வாறு எதிர்மாறலாக உருவானது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.வஜ்ரா ஷங்கர் மற்றும் உலகளாவிய இஸ்ரேல் ஆதரவாளர்கள் முன் நான் வைக்கும் கேள்விகள் இவை தான்.

1. இன அடையாளத்தை முழுமுதல் நிலையில் முன்வைக்கமுடியுமா?

2. இட்லர்-யூதர்- யூத- அரபு- சிங்கள- தமிழ்-புத்த-திபெத்-அயர்லாந்து-ஸ்காட்லாந்து-இங்கிலாந்து-போஸ்னியா-செர்பியா- எல்லா இனங்களும் தன்னை பிரதேச தகர்ப்பு செய்ய முடியுமா?

3. தேசியம் ஒரு கற்பிதம் என்ற எரிக் ப்ரோமின் கருத்தியல் பற்றி உங்கள் பார்வை என்ன?

4.பாலஸ்தீன பதூயீன்களின் வாழ்வாதார நிலை?

5. எல்லாவித இனப்படுகொலைகளும் சித்தாந்த ரீதியில் வரலாற்று அறிவாதாரத்தை முன்வைத்தே நிகழ்ந்துள்ளன. இவை உங்களுக்கு ஏற்புடையதா?

நான் இஸ்ரேல் மீது சேற்றை வாரி இறைக்கிறேன் என்பதல்ல. அது ஏற்கனவே சேறுகளாலும், மணற்புழுதிகளாலுமானது.

peer8@rediffmail.com

Series Navigation

எச்.பீர்முஹம்மது

எச்.பீர்முஹம்மது