கற்புக் கனல் அன்னை மர்யம்

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

மஹ்மூத் அல்ஹஸன்


இம்மாதம் 27 ஆம் நாள் திண்ணை இதழில் வஹ்ஹாபிக்கு மறுப்புத் தெரிவிப்பதற்காக ஸூஃபி முஹம்மத் எனும் பெயரில் வெளியான கடிதத்தின் சொற்றொடர்கள் அல்லாஹ்வின் தூய மறையுடன் மோதும் அல்லது அல்லாஹ்வின் மறையை ஐயுறும் வண்ணம் அமைந்துள்ளன.
//திருக்குர்ஆன் ‘முழுமை’ பெற்றுவிட்டது எனில் நூற்றுக்கணக்கில் குர்ஆனுக்கான விளக்கங்கள் தப்சீர்கள், தர்ஜுமாக்கள் ஏன் எழுதப்பட்டன? எழுதப்படுகின்றன…?// எனக் கேட்டுள்ளார் ஸூஃபிக் கொழுந்து.
ஸூஃபிகள் என்று தம்மை அழைத்துக் கொள்வோர் குர் ஆனைப் புறக்கணித்து அல்லது குர் ஆனைக் கற்காமல் வாழ்ந்தவர்கள் /வாழ்பவர்கள் என்ற் உண்மையை மீண்டும் ஸூஃபியின் கடிதம் உறுதிப் படுத்துகின்றது.
குர் ஆன் இருபத்துமூன்றாண்டுகளாக முஹம்மத் நபி அவர்களுக்கு அருளப் பட்டு முழுமை அடைந்து விட்டது என்பதில் முஸ்லிம்களுக்கு ஐயமில்லை.ஆனால் குர் ஆனுக்கான விளக்கங்கள் அகிலம் உள்ள மட்டும் வந்து கொண்டே இருக்கும் என்பதிலும் முஸ்லிம்கள் முழுமையான நம்பிக்கை கொண்டே உள்ளனர். ஏனெனில்,” கடல் நீர் முழுதுமே மையாக இருந்து என் இறைவனின் சொற்றொடர்களை எழுதத் தொடங்கினாலும் அவற்றை எழுதி முடிக்கும் முன்பே அது வற்றி விடும்- அதைப் போல் இன்னொரு கடலைக் கொண்டு வந்தாலும் (எழுதி மாளாது) என்ற இறை வசனத்தில் -(அல்குர் ஆன் அத்:- 18 வச:- 109) முழு நம்பிக்கை வைத்துள்ளதால் குர் ஆனுக்கான விளக்கங்களும் தஃப்ஸீர்களும் வந்து கொண்டே இருக்கின்றன; இனியும் வரும் என்பதில் அதீத ஆர்வமும் கொண்டுள்ளனர்.எனவே குர் ஆனுக்கான விளக்க உரை நூற்களைக் குறித்து ஸூஃபி கவலைப் பட வேண்டாம்.
ஸூஃபி தம் கடிதத்தின் இறுதியில் ,, இஸ்லாம் அனுமதிக்காத, முறையற்ற வழியில் உறவு கொண்டு அப்பன் பேர் தெரியாத குழந்தையைப் பெற்று அதைப் பெருமையாகப் பறைசாற்றுகின்ற- ஸூஃபி உச்சிமேல் வைத்து மெச்சிக் கொள்ளும் அதி நவீனத்துவ பெண்ணிய வாதியை, ஒழுக்கத்தின் உறைவிடமாக, கற்புக் கடம் பூண்ட பொற்புடைக் கன்னியாக அல்லாஹ் அறிமுகப் படுத்தும் அன்னையான – ஓர் இறைத் தூதரைப் பெற்றதாயான மர்யம் அவர்களுடன் ஒப்பிட்டிருப்பது கடிதம் எழுதியவரின் அறியாமையையே காட்டுகிறது. அவர் முஸ்லிமாக இருப்பின் குர் ஆனைக் கற்காத- தம் பெயருக்கேற்ற் ஸூஃபிதாம்.
அவருக்காக இல்லையென்றாலும் திண்ணை வாசகர்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டி அன்னை மர்யமைப் பற்றிய அல்லாஹ்வின் சிறு அறிமுகம் கீழே:-
” மர்யமே! அல்லாஹ் உம்மைத் தேர்வு செய்து தூய்மையாக்கி அகிலத்துப் பெண்கள் அனைவரையும் விட உம்மைச் சிறப்பித்தான்” என்று வானவர்கள் கூரியதை நினைஊட்டுவீராக!( அல் குரான் அத்:3 – வச: 42)
தமது கற்பைக் காத்துக் கொண்ட பெண்ணிடம் நமக்குரிய உயிரை ஊதினோம்.அவரையும் அவரது புதல்வரையும் அகிலத்தாருக்குச் சான்றாக்கினோம்.!( அல் குரான் அத்:21 – வச: 91)
இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் கற்புடைய பெண்களுக்கு முன்னுதாரணமாகக் கூறுகிறான்) அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார்;அவரிடம் நமது உயிரை ஊதினோம்…!( அல் குரான் அத்:66 – வச:12)..
வஹ்ஹாபி கூறும் கருத்துக்களுக்கு தக்க மறுப்பைக் கொடுத்துத் தம் கருத்தை நிலை நாட்ட ஸூஃபிக்கு உரிமை உண்டு. ஆனால் அனைத்தும் அறிந்த பாவனையில் அல்லாஹ்வின் மறையுடன் மோதி அதைத் தம் உயிரினும் மேலாகக் கருதி வாழும் உண்மை முஸ்லிம்களை வம்புக்கிழுக்க வேண்டாம்.
—————————————-
mahmoodalhasan@gmail.com
மஹ்மூத் அல்ஹஸன்

Series Navigation

மஹ்மூத் அல்ஹஸன்

மஹ்மூத் அல்ஹஸன்