திரு.சீ.இராமச்சந்திரன் அவர்களின் ஆய்வுக்கட்டுரை குறித்து: ஆகாயக்கடலும், லிங்கமும்

This entry is part [part not set] of 41 in the series 20060421_Issue

அரவிந்தன் நீலகண்டன்



திரு.சீ.இராமச்சந்திரனின் ‘கழகக் கந்தனும் பரிஷத் முருகனும்’ எனும் கட்டுரை அடிக்குறிப்பில் “வைதிக சமயத்தின் தத்துவத் தலைவனாக அல்லது வேதகாலத்து ஞான காண்ட முதல்வனாகக் கருதத்தக்க வருணனின் செல்வ வளத்தன்மை பாற்கடலாக உருவகிக்கப் பட்டிருக்க வேண்டும். வருணனின் இரு தொடைகள் க்ஷ¡ர, க்ஷ£ர, உததிகள் (உப்புக்கடல், பாற்கடல்) என்ற கருத்தோட்டம் அதர்வண வேதத்தில் காணப்படுகிறது.” எனக் கூறியுள்ளார்.

வருணனின் செல்வ வளத்தன்மை குறித்த குறிப்புகள் ரிக்வேதத்திலும் காணப்படுகின்றன. ரிக்வேதப்பாடல் ஒன்று (1.47.6) தெய்வங்களிடத்தில் வானிலிருந்தும் சமுத்திரத்திலிருந்துமான செல்வங்களை வேண்டுகிறது. செல்வவளம்-சமுத்திரம்-அதற்கு இணையாக வான் எனும் பார்வையினை இங்கு காண்கிறோம். வானை பெரும் கடலாகவும், அதிலுள்ள தாரகைகளை மீன்களாகவும் காணும் பண்பினை ஹரப்பா நாகரிகத்தில் அறிஞர்கள் (குறிப்பாக அஸ்கோ பர்போலா) கண்டறிந்துள்ளனர். ஹரப்பா நாகரிகத்தில் கிட்டிய பல பானைத்துண்டுகளின் தீட்டப்பட்டுள்ள சித்திரங்களிலும் சரி முத்திரைகளில் காணப்படும் சித்திர எழுத்து-வடிவங்களிலும் சரி இந்த ஒத்துருவாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இதே தன்மை பல நூற்றாண்டுகளாக சிற்ப வடிவங்களிலும் வழங்கப்பட்டே வருகின்றது. உதாரணமாக, நம் மாநிலத்திலும், பாரதத்தின் பல பகுதிகளிலும் புனித யாத்திரை செல்வோருக்காகவும் இதர வழிப்பிரயாணிகளுக்காகவும் வழிபாதை மண்டபங்கள் (வழி அம்பலம்) அமைக்கப்பட்டிருப்பதை நாம் கண்டிருப்போம். அந்த மண்டபங்களின் உட்கூரைகளில் மீன்கள் பொறிக்கப்பட்டிருப்பதை சிறிது கவனித்தால் காணலாம். அத்தகைய மீன்களினைக் குறித்து சீ.இராமச்சந்திரன் அவர்கள் இம்மீன்கள் வானமாகிய சமுத்திரத்தில் நீந்திக்கொண்டிருக்கும் விண்மீன்கள் என்பதனை சுட்டிக்காட்டினார்கள். ரிக்வேதம் சமுத்திரங்களில் முதன்மையானதாக விண்ணின் சமுத்திரத்தை பேசுகிறது (‘சமுத்திர ஜ்யேஷ்தா’ ரிக்: 7.49) மட்டுமின்றி ஓடும் நீரினையும், தோண்டப்பட்டு கிடைக்கும் நிலத்தடி நீரையும், தன்னியல்பாக ஓடும் நீரினையும் கூறுகிறது. இம்மண்ணுலக நீர்களின் இலக்கு சமுத்திரமாகும் என்றும் அதுவே வருணனின் இல்லம் என்றும் கூடுகிறது (ரிக். 7.49: 2-4) ஆக, ரிக்வேதம் விண்ணின் கடலையும் மண்ணின் கடலையும் வேறுபடுத்திக் கூறுவதுடன், சமுத்திர உருவகத்தை விண்ணிற்கு நீட்டிப் பேசுகிறது. விண்ணின் தாரகைகளை மீன்களாக உருவகப்படுத்துவதும் விண்ணை சமுத்திரமாக சித்திகரிப்பதுமான இத்தகைய போக்குகள் திரைகடலோடி திரவியம் தேடும் பண்பாடுகளான (பிற்கால) கிரேக்க, மெசபடோமிய பண்பாடுகளிலும் காணப்படுவதாகும். ஹோமர் சூரியனும் விண்மீன்களும் சமுத்திரத்தில் வாழ்வதாகவே ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். ஆனால் ஆரிய படையெடுப்பு வாதிகளின் கோட்பாட்டின்படி நிலம் மட்டுமே சூழ்ந்த மத்திய ஆசியாவிலிருந்து படையெடுத்த/புலம்பெயர்ந்த மக்கள் குழுக்களான வேதகால ‘ஆரியர்’ கடலையே அறியாதவர்கள் ஆவர். எனில் கடல் சார்ந்த வாழ்க்கை முறையினை அறிந்த சமுதாயங்களில் உருவாகும் உருவகம் எவ்விதம் வேத இலக்கியம் முழுவதிலும் காணப்படுகிறது? மட்டுமின்றி, (விண்ணின்) பாற்கடல் – (மண்ணுலகுகின்) உப்புக்கடல் எனும் உருவகத்துடன் தொடர்புடைய விண்மீன்-கடல்மீன் உருவக சித்திரங்கள் எவ்வாறு ஹரப்பா நாகரிகம் தொடங்கி இந்நாட்டின் தென்கோடி மண்டபங்கள் வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளையும் மைல்கல்களையும் தாண்டி பரவிக் காணப்படுகின்றன? ஆரிய-படையெடுப்பு வாதத்தை மட்டுமின்றி, ஆரிய/வடவர்- தமிழ்/ திராவிட நாகரிகங்கள் வெவ்வேறானவை எனும் அண்மைக்கால அரசியல் காரணங்களுக்காக ஏற்பட்ட கருதுகோளையும் தவறென நிரூபிக்கும் பல்வேறு ஆதாரங்களில் இதுவும் ஒன்றாகிறது.

மேலும் “சிவலிங்கம் என்று சைவர்களால் குறிப்பிடப்படும் வடிவம் சங்ககாலத்தில் கந்து அல்லது கந்தழி என குறிப்பிடப்பட்டது. இலங்கையின் பழமையான வரலாற்று நூலான மகாவம்சத்தில் தமிழகத்தில் லிங்க வழிபாடு வழக்கிலிருந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இக் குறிப்புகள் கந்து வழிபாட்டையே குறிப்பிடுகின்றன என்பதில் ஐயமில்லை. கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் எழுதப்பட்ட பட்டினப்பாலையில் (வரி 249) பூம்புகார் நகரிலிருந்த “கந்துடைப் பொதியில்” குறிப்பிடப்பட்டுள்ளது. திருமுருகாற்றுப்படை (வரி 226) முருகன் உறைகின்ற இடங்களாக மன்றம், பொதியில், கந்துடை நிலை கியவற்றைக் குறிப்பிடுகிறது. முருகனை ஸ்கந்தன் என அழைக்கின்ற சமஸ்கிருத மரபு கந்து வழிபாட்டு தொடர்பில் உருவான மரபாகலாம்.” என அவர் குறிப்பிடுகிறார்.

ஸ்டெல்லா க்ராம்ரிஸ்ச் வேத மரபின் ருத்ரனுக்கும், லிங்க வழிபாட்டிற்குமான தொடர்பு குறித்து குறிப்பிடுகையில், “ஸ்தாணு – (வேர் சொல் ஸ்த – நிற்பது) -ஒரு கம்பம்- ருத்ரனின் குறியீடாகும். அது மேல்நோக்கி நிற்பதென்பது பிரபஞ்சத்தினூடே ருத்ரன் நெகிழ்வற்று நிற்பதைக் குறிப்பதுடன் விந்துவினை மேல்நோக்கி செலுத்துவதனையும் குறிப்பதாகும். ஸ்தாணு எனும் கம்பம் எனும் இந்த சித்திர உருவாக்கம், விறைப்படைந்த ஆண்குறியினை எதிர்மறையாக விலக்கிடும் (negation) முரணான (paradox) உருவாக்கமாகும்….ஸ்தாணுவின் செங்குத்தான தன்மை ருத்ர-சிவனின் யோகித்துவத்தின் குறியீட்டாகும். இந்த குறியீட்டு உருவக கம்பம் உயிரினை உருவாக்கும் விசைக்கும் அதனை விலக்கிக் கட்டுப்படுத்துவதற்கும் இடையிலான விறைப்பினைக் குறிப்பதாகும்.” என்கிறார். (க்ராம்ரிஸ்ச், The Presence of Siva,1981, பக்.119)

(பிற்கால) கிரேக்க புராணங்களிலும் பிரபஞ்சங்களின் ஊடாக நிற்கும் ஒளிமயமான த £ஜுவாலைகளாலான கம்பத்தினைக் குறித்து கூறப்படுகிறது. எர் எனும் புராணவீரன் அவனது சிதை எரியூட்டப்படுதற்கு சற்று முன்னர் உயிரளிக்கப்பட்டு வேறு சிலருடன் பிற உலகங்களுக்கு செல்கிறான். அப்பாதையில் அவனும் அவன் கூட்டத்தாரும் “ஒரு செங்குத்தான ஒளிமயமான கம்பம் போன்ற ஒன்று விண் உலகங்களையும் மண்ணுலகையும் இணைத்து சுழலவைப்பதாக” கண்டனர். (Book of the Republic, 10 ஆம் பாடல்) ஆனால் இந்த உருவாக்கங்கள், ரிப்பளிக்கில் ஏறுவதற்கு ஆயிரமாண்டுகளுக்கு முன்னதான பழமையான பழங்குடி இலக்கியங்களிலிருந்து பெறப்பட்டிருக்க வேண்டுமென அறிஞர்கள் கருதுகின்றனர். இந்த பழம் இலக்கியங்களில் இந்த அச்சானது சுற்றிச்சுழலும் ஒரு அரைப்பு இயந்திரத்தின் அச்சாகும். பின்லாந்திய சிருஷ்டி குறித்த தொன்மப்பாடலான கலேவாலப் (kaleval) பாடலில் இது ஸம்போ (Sampo) என அழைக்கப்படுகிறது. ஸம்போ முவ்வேர்களை பூமியிலும், ஆகாயத்திலும், சமுத்திரத்திலும் கொண்டதாகும். இது அதர்வண வேதத்தில் கூறப்படும் பிரபஞ்ச அச்சுக்கம்பமான ஸ்கம்பத்துடன் தொடர்புடையதாகும். அதர்வண வேதம் ஸ்கம்பத்தினை பூமியையும், ஆகாயத்தையும் ஆதாரமாக கூறப்படுகிறது.
(கியார்ஜியோ டி சாண்டிலானா மற்றும் ஹெர்த்தா வான் திசெண்ட், Hamlet’s Mill, 1992 பக். 233-234) புராணக்கதையான புராணக்கதையான சமுத்திர மந்தனம் எனும் பாலாழி கடைதல் கூட இத்துடன் தொடர்புடையதென்பதைக் கூறவேண்டியதில்லை.

ஒரு சிறந்த அறிஞரை எவ்வாறு ஒரு சமுதாயம் நடத்தக்கூடாது என்பதற்கான மிகச்சிறந்த உதாரணமாக, திரு.சீ.இராமச்சந்திரன் அவர்களை தமிழ்நாடு நடத்துவதை குறிப்பிடலாம். எவ்வித சமாதானங்களையும் நேர்மையுடனும் தாம் உண்மை என கருதுபவையுடனும் செய்து கொள்ளாதவர். அதன் விளைவாகவே தரங்கெட்டுவிட்டவர்களை தலையில் தூக்கி ஆடும் நமது அறிவு-ஜீவி நிறுவனங்களால் உதாசீனப்படுத்தப்படுபவர் அவர். இன்றைய தேதியில் தமிழ்நாட்டின் கல்வெட்டுக்கள், அதனுடன் தொடர்பான பழமையான இலக்கியங்களிலுள்ள செய்திகள், நாட்டார் வழக்குகளிலுள்ள செய்திகள், வானவியல் ஆகிய அனைத்தையும் இணைத்து எந்த ஒரு வரலாற்று செய்தியையும் அதன் முழுமையினை அணுகிடும் பார்வையில் (an approximation to totality) கையில் எவ்விதக் குறிப்புமின்றி மடை திறந்த வெள்ளமெனக் கூறும் திறன் கொண்ட ஒருவர் உண்டென்றால் நானறிந்த அளவில் அது திரு.இராமச்சந்திரன் அவர்கள்தான். அவரது இந்த மேதமைக்கு ஈடான ஒரே விஷயம் அவரது தமிழ்ப் பற்றுதான். தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல்வியாதிகளும், அரைகுறை அறிவுஜீவிகளும் கொண்ட நாட்டில், தமிழின் மீது உண்மை மதிப்பும் சர்வதேச ஆராய்ச்சித் தரம் வாய்ந்த ஆக்கங்களை குறிப்புகள் ஏதுமின்றி வாய்மொழியாகவே உரையாடலில் கூட கூறும் திறமும் வாய்ந்த இராமச்சந்திரன் போன்ற ஒருவர் திண்ணையை தம் கட்டுரைகளை வெளியிடத் தேர்ந்தெடுத்திருப்பது திண்ணைக்கும் திண்ணை வாசகர்களுக்கும் நிச்சயமாக பெருமை சேர்க்கும் ஒரு விசயமாகும். திண்ணை எந்த அளவு எதிர்பார்ப்புகளை தமிழ் மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது என்பதற்கான ஒரு சிறந்த சான்றாதாரம் இது. திண்ணை வாசகன் என்னும் முறையில் திண்ணைக்கு இதற்காக நன்றி கூறிக்கொள்கிறேன்.
——————————-
அரவிந்தன் நீலகண்டன்

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்