‘விளக்கு ‘ குறித்து சில விளக்கங்கள்

This entry is part [part not set] of 32 in the series 20060407_Issue

மு. சுந்தரமூர்த்தி


மார்ச் 16, 2006 தேதியிட்ட திண்ணை இதழில் பி.கே. சிவகுமார் எழுதியுள்ள கடிதத்தில் விவாதப் பொருளுக்கு சம்பந்தமில்லாத வகையில் ‘விளக்கு ‘ அமைப்பின் பெயரை பயன்படுத்தியுள்ளார். இக்கடிதம் திண்ணையின் ஆசிரியர் குழுவில் உள்ள கோ. ராஜாராமின் பார்வைக்கு வந்ததா, அல்லது வேறொரு ஆசிரியர் பரிசீலித்து வெளியிடப்பட்ட பிறகாவது இதைப் படித்தாரா என்று தெரியவில்லை. ஆகவே சிவகுமார் விளக்கின் பெயரைக் குறிப்பிட்டு எழுதிய இரு விஷயங்களையும் அமைப்பின் செயலாளர் என்ற முறையில் தெளிவுபடுத்தவேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.

சிவகுமார் எழுதியுள்ளதாவது:

“மலர் மன்னன் திண்ணைக்கு வந்தபோது நான் கடிதம் எழுதியதால், அவர் எழுதுகிறவற்றுக்கெல்லாம் நான் பதில் எழுத வேண்டும் என்பதே ஓர் அபத்தமான வாதம். உதாரணமாக சுந்தர மூர்த்தியை எடுத்துக் கொள்வோம். அவர் பொறுப்பாளர்களில் ஒருவராகப் பணிபுரியும் விளக்கு அமைப்பு வருடம்தோறும் எழுத்தாளர்களுக்குப் பரிசு தருகிறது. அந்தப் பரிசு வாங்கிய எழுத்தாளர்கள் சொல்கிற கருத்துகளுக்கெல்லாம் சுந்தரமூர்த்தி பதில் எழுத வேண்டும் என்றால் சிரிப்பீர்களா மாட்டார்களா ? நானாவது மலர் மன்னன் கொள்கைகளுடன் உடன்பாடில்லை என்றாலும் அவர் எழுதுவதை ஆர்வத்துடன் படித்து வருகிறேன் என்று மட்டும்தான் சொன்னேன். விளக்கு அமைப்பு எழுத்தாளர்களைப் பாராட்டி விருதே வழங்குகிறதே. வார்த்தை வரவேற்பைவிட விருது பெரியது. அதனால், இனிமேல் அந்த எழுத்தாளர்கள் சொல்கிற கருத்துகளுக்குச் சுந்தரமூர்த்தி பதில் எழுத வேண்டும் என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் மலர் மன்னனை நான் வரவேற்றதாகவே வைத்துக் கொண்டாலும் மலர் மன்னன் எழுதுவதற்கெல்லாம் நான் பதில் எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் ‘

1. ‘விளக்கு ‘ பற்றிய பொறுப்பாளர்களின் கருத்துக்கள்

விளக்கின் செயல்பாடுகளைத் தவிர்த்து அமைப்பின் பெயரை வேறெந்த விவாதத்திலும் இதுவரை எந்த நிர்வாகியோ அல்லது உறுப்பினரோ பயன்படுத்தியதில்லை. வெளியிலிருந்து அமைப்பைக் குறித்து வரும் எதிர்மறையான கருத்துகளுக்கும், விமர்சனங்களுக்கும் கூட விளக்கு நிர்வாகிகள் பதிலளிப்பதில்லை. இதற்கு முன் திண்ணையிலேயே வைக்கப்பட்ட விமர்சனைத்தினையொட்டி இக்கொள்கை விளக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு விருது பற்றிய அறிவிப்பை வெளியிட்டபோது என் வலைப்பதிவில் ஒரு வாசகர் எழுப்பிய கேள்விக்கும், அவரே தன் வலைப்பதிவில் வைத்த விமர்சனத்துக்கும் கூட நானோ வேறெந்த விளக்கு நிர்வாகியோ கருத்து தெரிவிக்கவில்லை. இப்பின்னணியில் விளக்கு விருதுபெற்ற எழுத்தாளர்களைக் குறித்து கருத்து தெரிவிக்கச் சொல்லி கேட்டாலும் ஏற்றுக்கொண்ட மரபுப்படி கருத்து தெரிவிக்கமாட்டேன். விருதுக்குரியவரை தேர்ந்தெடுப்பது அதற்கெனெ நியமிக்கப்பட்டுள்ள சுதந்திரமான நடுவர் குழு. அவர்களின் பரிந்துரைகளை ஏற்று விருது வழங்குவது மட்டுமே விளக்கு செய்வது. ஆண்டுதோறும் விருது பற்றி அறிவிப்பு வெளியிடப்படும்போதும் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளரின் தகுதிகளையும், பங்களிப்புகளையும் குறித்து நடுவர் குழுவினர் வழங்கிய கருத்துக்களே பயன்படுத்தப்படுகின்றன. உறுப்பினர்களுக்கு மட்டுமான செய்திமடலில் கூட அமைப்புக்கு வெளியே உள்ள எழுத்தாளர்கள், வாசகர்கள் வைத்த கருத்துக்கள் மட்டுமே வெளியிடப்படுகின்றன. மற்றபடி நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பொதுவில் கருத்து தெரிவிக்கக்கூடாது என்ற கொள்கையை அனைவரும் கடைபிடிக்கவேண்டும். அதேபோல் அமைப்பின் செயல்பாடுகளுக்கு தொடர்பில்லாத விவாதங்களில் எக்காரணத்தை முன்னிட்டும் விளக்கின் பெயரை பயன்படுத்தவும் கூடாது. இந்த மரபினை புது உறுப்பினர்களும் புரிந்துகொண்டு சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்படவேண்டும்.

சிவகுமார் எழுதியுள்ளதாவது:

“டோண்டு அவர்கள் என் நண்பர் என்று சாயம் பூச முயற்சிக்கிற சுந்தரமூர்த்தி பணியாற்றுகிற , கோபால் ராஜாராம் தொடங்கி வைத்த விளக்கு அமைப்பில் நானும் தற்போது இணைந்திருக்கிறேன். சுந்தரமூர்த்தியுடனான இத்தகைய தொடர்பால் – அவர் வார்த்தையில் சொல்வதென்றால் நட்பால் – எனக்கு மற்றவர்கள் என்னென்ன சாயம் பூசுவார்களோ என்று சுந்தரமூர்த்தியின் லாஜிக்கை வைத்துப் பார்க்கும்போது பயமாக இருக்கிறது. :-)”

2. ‘விளக்கு ‘ அமைப்பின் வரலாறு

நான் 1990 ஆம் ஆண்டு அமெரிக்கா வந்தபோது நா. கோபால்சாமியின் தொடர்பு கிடைத்தது. நாங்கள் இருவரும் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் மாணவர்களாக இருந்தவர்கள். அங்கு இயங்கிய தமிழ்ப் பேரவைக்கு தலைவர்களாக இருந்திருக்கிறோம். கோபால்சாமி பணிபுரிந்துக் கொண்டிருந்த மேரிலாந்து பல்கலைக்கழகத்திற்கே நானும் புதிதாக வந்து சேர்ந்தேன். நான் பெங்களூரில் இருந்த காலத்தில் , தமிழவன், கோ. ராஜாராம், படிகள் ‘ ராமசாமி, ‘காவ்யா ‘ சண்முகசுந்தரம், ப. கிருஷ்ணசாமி, மகாலிங்கம், பாவண்ணன், ‘இன்னும் பல இலக்கியவாதிகளின் நெருங்கிய தொடர்பு இருந்தது ( ‘பெங்களூர் நண்பர்கள் வட்டம் ‘ என்ற பெயரில் மாதா மாதம் சந்தித்து வந்தோம்). அதே போல கோபால்சாமிக்கும் அவர் பெங்களூரில் இருந்த காலத்தில் தமிழவன், ராமசாமி, புலவர் கிழார் போன்றவர்களோடு பழக்கம் இருந்திருக்கிறது. இப்பொதுப் பின்னணிகளாலும், இருவருக்கும் இருந்த பொது நண்பர்களாலும் இத்தொடர்பு நெருங்கிய நட்பாக பரிணமித்தது. 1991 ஆம் ஆண்டு கோபால்சாமி வாஷிங்டன் நகரத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்தபோது சங்கத்தின் ‘தென்றல் ‘ இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றும் வாய்ப்பினையும் எனக்குக் கொடுத்தார்.

இதனால் நாங்கள் அடிக்கடி சந்திக்கும் வேளைகளில் பழைய அனுபவங்களை பகிர்ந்துகொள்வதோடு தமிழ் சிற்றிதழ் சார்ந்த இலக்கியத்தை அமெரிக்க தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தவும், தாய்நாட்டில் இலக்கிய வளர்ச்சிக்கு ஏதாவது உதவமுடியுமா என்று பேசுவதும் வழக்கம். எனக்கு மகாலிங்கம், பாவண்ணன் (சிலமுறை தமிழவன், ராஜாராம்) இவர்களோடு கடிதம், தொலைபேசி தொடர்பிருந்ததால் பெங்களூர் நண்பர்கள் வட்டச் செயல்பாடுகளைப் பற்றி தொடர்ந்து அறிய முடிந்தது. அதே போல இங்கு வாஷிங்டன் வட்டார தமிழ் அமைப்புகளில் எனக்கு கிடைத்த அனுபங்களையும் அவர்களுடன் பகிர்ந்துக் கொண்டதுண்டு. அக்காலகட்டத்தில் ப. கிருஷ்ணசாமி தொகுத்து வெளியிட்ட ‘க.நா.சு. இலக்கியத் தடம் ‘ நூல் பதிப்பைத் தொடர்ந்து ஆரம்பித்த ‘வாசகர் பதிப்பு திட்டத்திற்கு ‘ ஆதரவு திரட்டியது (போதிய ஆதரவு கிடைக்காததால் இத்திட்டம் பிறகு கைவிடப்பட்டது), பெங்களூர் நண்பர்கள் வட்டம் மதுரைப் பல்கழகத் தமிழியல் துறையோடு சேர்ந்து நடத்திய ‘எண்பதுகளில் கலை இலக்கியம் ‘ கருத்தரங்கத்திற்கு சிறிய அளவில் பொருளுதவி செய்தது, பெங்களூர் நண்பர்கள் விவாதித்து ராஜாராம் தொகுத்து வரைந்த ‘சிறுபத்திரிகை இயக்கம்: ஒரு கண்ணோட்டம் ‘ கட்டுரையைப் பெற்று கோபால்சாமியின் உதவியுடன் அமெரிக்கக் கூட்டுத் தமிழ்ச் சங்கத்தின் 1991 ஆம் ஆண்டுவிழா மலரில் பதிப்பித்தது போன்றவை இவற்றில் அடங்கும் (இக்கட்டுரையின் சுருக்கிய ஆங்கில வடிவத்தை alt.culture.tamil இலும் வெளியிட்டேன்). தொடர்ந்து ஒரு சிறுபத்திரிகை ஆரம்பிக்கவும், தேர்ந்தெடுத்த நூல்களை வெளியிடவும் பெங்களூர் நண்பர்களுக்கு உதவுவது பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம்.

அந்நிலையில், நான் வந்து சுமார் ஓராண்டுக்கு பிறகு, ராஜாராம் அமெரிக்கா வந்து சேர்ந்தார். ராஜாராமையும், கோபால்சாமியையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி வைத்தேன். அதன் பிறகு மூவரும் ஏற்கனவே பேசிக்கொண்டிருந்தவற்றை புதிய உற்சாகத்துடன் தொலைபேசி உரையாடல்கள், கடிதங்கள், நேர் சந்திப்புகள் மூலமாக பேசத் தலைப்பட்டோம். பத்திரிகை ஆரம்பித்தல், அதிகம் கவனிக்கப்படாத சில குறிப்பிட்ட (தலித்தியம், பெண்ணியம், அறிவியல் போன்ற) துறைகளில் புத்தகங்கள் பதிப்பித்தல், தமிழக நூலகங்களுக்கு நூல்கள் வாங்கி வழங்குதல், பல்வேறு எழுத்துத் துறைகளுக்கு பரிசுகள் ஏற்படுத்தி ஆண்டுதோறும் வழங்குதல் போன்ற சாத்தியப்பாடுகளைப் பற்றி விவாதித்தோம். இவ்விவாதங்களில் நாங்கள் மூவரும் மட்டுமின்றி பெங்களூரிலிருந்து தமிழவன், மகாலிங்கம், பாவண்ணன் போன்றவர்களும் பங்களித்தனர். முதலில் இவற்றை அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தில் கோபால்சாமிக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி செயல்படுத்த முடியுமா என்று பார்த்தோம். தொடர்ந்து தமிழ் அமைப்புகளின் அங்கமாக செயல்படாமல் தன்னிச்சையாக நண்பர்கள் மட்டும் இணைந்து முயற்சிப்பது என்று முடிவு செய்தோம். அதன்படி அப்போது கிடைத்த ஆதரவை வைத்து முதலில் இந்திய சாகித்ய அகாடமி பரிசு, தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் ‘ராஜராஜன் விருது ‘ போன்ற அரசு நிறுவன விருதுகளுக்கு மாற்றாக ஒரு விருது ஏற்படுத்தி இதுவரை அரசு விருதுகளால் அங்கீகரிக்கப்படாத சீரிய எழுத்தாளர்களின் வாழ்நாள் பங்களிப்பை கெளரவிக்கலாம் என்று முடிவெடுத்து ஓர் அமைப்பை உருவாக்கினோம். சிறுவிவாதத்திற்கு பிறகு அமைப்புக்கு ‘விளக்கு ‘ என்ற பெயரையும், விருதுக்கு ‘புதுமைப்பித்தன் விருது ‘ எனவும் பெயரிட முடிவு செய்யப்பட்டது. இணையாக உறுப்பினர்கள் சேர்க்கும் பணியும் தொடர்ந்தது. ஆரம்பகால உறுப்பினர்கள் அனைவருமே தமிழ்ச்சங்கங்கள் மூலம் கிடைத்த நண்பர்கள், அப்போது தமிழுக்கென இருந்த ஒரே இணைய விவாதகளமான soc.culture.tamil மூலம் அறிமுகமான நண்பர்கள், IIScயில் உடன் படித்த பழைய நண்பர்கள் போன்றோர் ஆவர். இந்தியாவில் விளக்கு அமைப்பின் செயல்பாடுகளை கவனித்துக்கொள்ள ஒருங்கிணைப்பாளராக விவாதங்களில் பங்குகொண்ட தமிழவனை நியமிக்கலாம் என்று நினைத்திருந்தாலும், அவர் பெங்களூரிலிருந்து செயல்படுவதில் இருந்த சிக்கல்களைக் கருத்தில் கொண்டு ‘வெளி ‘ ரங்கராஜன் நியமிக்கப்பட்டார். ஆக மொத்தத்தில் அமெரிக்காவில் இருக்கும் பல்வேறு பின்னணிகளைக் கொண்ட ஆனால் தமிழ் மொழி, பண்பாடு, இலக்கியம் குறித்து அக்கறையும், ஆர்வமும் கொண்ட நண்பர்களின் ஆதரவால் 1994 வாக்கில் விளக்கு துவக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட முதல் விருதுக்கு அமரர் சி.சு.செல்லப்பா அவர்கள் தமிழவன் உள்ளிட்ட நடுவர் குழுவினால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவரை தன் இலக்கியப்பணிக்காக யாரிடமும் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி விருதுப்பணத்தை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார். பிறகு அவருடைய பதிப்பிக்கப்படாத எழுத்துக்களை நூலாக பதிப்பிக்க ஒப்புக்கொண்டு அப்படியே செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த பத்தாண்டுகளாக இந்த செயல்பாடு தொய்வில்லாமல் நடந்து வருகிறது.

ஆரம்பத்தில் முறைசாரா அமைப்பாக இயங்கி வந்த விளக்கு அமைப்பிற்கு முறையாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். தலைவராக நா. கோபால்சாமி, துணைத்தலைவராக கோ. ராஜாராம், செயலாளராக மு.சுந்தரமூர்த்தி, நிர்வாகக் குழு உறுப்பினர்களாக சொ. சங்கரபாண்டி, செ. வெள்ளைச்சாமி, ராம் ம ?ாலிங்கம், எம். சுவாமிநாதன் ஆகியோர் பொறுப்பிலமர்த்தப்பட்டு வருமான வரி விலக்கு பெற்ற லாப நோக்கமற்ற நிறுவனமாக விளக்கு பதிவு செய்யப்பட்டது. கோபால்சாமி ஒருவரின் முழுமுயற்சியால் செயல்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கையால் மேலும் சில உறுப்பினர்களைச் சேர்க்க முடிந்தது.

கடந்த பத்தாண்டுகளில் சி.சு. செல்லப்பா (1996), பிரமிள் (1997), கோவை ஞானி (1998), நகுலன் (1999), பூமணி (2000), ெ ?ப்சிபா ஜேசுதாசன் (2001), சி. மணி (2002), சே. ராமாநுஜம் (2003), ஞானக்கூத்தன் (2004) ஆகிய ஒன்பது மூத்த எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கி விளக்கு தன்னை கெளரவித்துக்கொண்டுள்ளது. அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவு அடைந்ததையொட்டி கடந்த ஆண்டு அதை மேலும் வளர்த்து அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்த என்னென்ன செய்யலாம் என நிர்வாகக்குழுவுக்குள் மின்னஞ்சல்கள் மூலம் விவாதம் நடத்தப்பட்டது. பரிசுத்தொகையை இருபத்தைந்தாயிரத்தில் இருந்து நாற்பதாயிரமாக உயர்த்தவேண்டும் என்று கோபால்சாமி முன்மொழிந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. சந்தா தொகை செலுத்தும் உறுப்பினர்களுக்கு பரிசு பெற்ற எழுத்தாளர்களின் கையொப்பமிட்ட அவர்களின் நூல்களை வழங்கலாம் என்றும், நிதிநிலை மேம்படும்வரையில் நிர்வாகிகளே யாராவது அன்பளிப்பாக வழங்கலாம் என்று நானும், வெள்ளைச்சாமியும் முன்மொழிந்து அதன்படி நான் சி.மணியின் நூல்களையும், வெள்ளைச்சாமி பேராசிரியர் சே. ராமாநுஜம் எழுதிய நூல்களையும் கடந்த இரண்டாண்டுகள் வழங்கினோம். இவ்வாண்டு ஞானக்கூத்தனின் நூல்களை கோபால்சாமி வழங்கவிருக்கிறார். அதேபோல உறுப்பினர்களுக்கு மட்டுமான அரையாண்டு செய்திமடலை தயாரித்து அனுப்பும் பொறுப்பை நானும், சங்கரபாண்டியும் ஏற்றுக்கொண்டு இரண்டு இதழ்களை அனுப்பியுள்ளோம். இவ்வாண்டின் ‘வசந்தகால இதழ் ‘ விரைவில் அனுப்பப்படும். எல்லாவற்றையும் விட முக்கியமாக நிர்வாகிகள் புதிதாக உறுப்பினர்களை சேர்க்க முயற்சிக்கவேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. அவரவர் இதற்கான முயற்சிகள் எடுத்துக்கொண்டிருந்த வேளையில், அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் இலக்கிய ஆர்வலர்கள் அதிகமாக இருப்பதையும், அவர்கள் அடிக்கடி சந்தித்து கலை, இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபடுவதையும் சுட்டிக்காட்டி தனக்குள்ள உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி ராஜாராம் புதிய உறுப்பினர்களை சேர்க்க முயலவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினேன். கடைசியாக பி.கே. சிவகுமாரின் பெயரைக் குறிப்பிட்டு அவரையும் விளக்கு உறுப்பினராக்க ராஜாராம் முயற்சி எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். சில நாட்களுக்குப் பிறகு சிவகுமாரும், அவருடைய நண்பர்கள் சிலரும் சேரப்போவதாக ராஜாராம் தெரிவித்தார்.

இதுவே எனக்கு தெரிந்த, சுமார் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் விதை தூவப்பட்டதிலிருந்து மூன்று மாதங்களுக்கு முன் சிவகுமார் உறுப்பினராக சேர்ந்தது வரையிலான விளக்கின் வரலாறு. ஆக, இவ்வமைப்பு எந்த ஒரு தனிப்பட்ட நபரோ, பத்திரிகையோ, வணிக நிறுவனமோ, கலாச்சார அமைப்போ தொடங்கி நடத்தும் அறக்கட்டளையல்ல. இது வெவ்வேறு அளவில் கருத்து, பொருள், நேரம், உழைப்பு ஆகியவற்றை நல்கி பல அன்பர்கள் சேர்ந்து நடத்தும் கூட்டு முயற்சி.

இது தொடர்பாக இணையத்தில் கிடைக்கும் தகவல்கள்:

1. ‘சிறுபத்திரிகை இயக்கம் ‘ கட்டுரையின் சுருக்கிய ஆங்கில வடிவம்: பகுதி 1; பகுதி 2

2. soc.culture.tamil இல் கோபால்சாமியின் அறிவிப்பும், சிறு விவாதமும்

3. திண்ணையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு 1; அறிவிப்பு 2

பின்குறிப்பு: இவ்விளக்கங்கள் விளக்கு அமைப்பின் தலைவர் கோபால்சாமியால் பரிசீலிக்கப்பட்டு, அவருடைய அனுமதியுடன் அனுப்பப்படுகிறது. இதன் மின் நகல் நிர்வாகக்குழுவின் உறுப்பினர்களான கோ. ராஜாராம், சொ. சங்கரபாண்டி, ராம். மகாலிங்கம், செ. வெள்ளைச்சாமி, எம். சுவாமிநாதன் ஆகியோருக்கும் அனுப்பப்படுகிறது. இது என்னுடைய வலைப்பதிவிலும் பதிவு செய்யப்படும்.

msundaramoorthy@bellsouth.net

(விளக்கு அமைப்பின் விவரமான வரலாற்றுப் பின்னணி பற்றி எழுதிய சுந்தரமூர்த்திக்கு நன்றி. பி கே சிவகுமாரின் கடிதத்தில் விளக்கு பற்றிய குறிப்பு, ஓர் அமைப்பில் இருப்பவர்கள் எல்லோரும் எல்லாக் கருத்துகளிலும் உடன்படவேண்டிய அவசியமில்லை என்பது எமது புரிவு – திண்ணை குழு)

Series Navigation

மு. சுந்தரமூர்த்தி

மு. சுந்தரமூர்த்தி