வகாபிகளின் நவீன தீண்டாமை

This entry is part [part not set] of 32 in the series 20060407_Issue

சூபிமுகம்மது


வகாபியின் கடிதம் வாசித்தேன். தன் போதாமையை நையாண்டிமூலம் நிரப்ப அக்கடிதம் முயற்சித்திருந்தது. மல்லாக்க படுத்து கிடந்து எச்சில் துப்புவதுபோல அதன் முறைமை அமைந்திருந்தது. வேறுயாருக்கோ அவர் சொன்ன அறிவுரையைக்கூட எனக்காகவும் அவர் அள்ளி வழங்கியிருக்கிறாராம்.

‘ ‘ஒரு கருப்பொருளைப் பற்றி பேசும்போது முழுஅறிவு வேண்டும். இல்லையெனில் அது குறித்து அடிப்படை அறிவாவது இருக்க வேண்டும். இவ்விரண்டும் என்னிடம் இல்லையென ‘அறிவுக்கொழுந்து ‘ வகாபி கதைக்கிறார். எப்போதுமே இந்த வகாபியர்களின் மனோபாவம் என்பது தாங்கள் அறிவுள்ளவர்கள் தங்களைத் தவிர பிறர் அனைவரும் அறிவற்றவர்கள் அதாவது முட்டாள்கள் என்பதாகவே கட்டமைக் கப்பட்டுள்ளது. இந்த நவீனதீண்டாமையை கருத்துநிலையிலும், சமூக அளவிலும் தொடர்ந்து செயல்படுத்துகிறார்கள்.

ஒற்றைப்படுத்தப்பட்ட இவர்கள் பாவனை செய்து கொள்ளும் முழு அறிவு இயல்பாகவே அதிகாரத்தோடு இணைந்து செயல்படுகிறது. அறிவும் அதிகாரமும் சேர்ந்து பிறவற்றை மேல் / கீழென ஒடுக்குமுறை செய்கின்ற சித்தாந்தத்தின் பரிசுத்த விளைவே வகாபியின் மேற்கண்ட கூற்று.

எது முழு அறிவு… ?

அது என்ன முழுஅறிவு ? அல்லா இறக்கிய வேதங்கள்கூட முழு அறிவு பெற்றவையாக இல்லையென்பால்தான் காலத்திற்கு ஏற்ப அவ்வேதங்கள் அல்லாவால் மாற்றப்பட்டுள்ளது. மூசாநபிக்கு இப்ரானி மொழியில் தெளராத் வேதம், தாவூத் நபிக்கு யூனானி மொழியில் சபூர்வேதம், ஈசாநபிக்கு சூர்யானி மொழியில் இஞ்சில் வேதம் முகம்மது நபிக்கு அரபு மொழியில் குர்ஆன் வேதம் என்பது இதனையே சுட்டிக்காட்டுகிறது. இதனை வகாபி மறுக்க முடியுமா ?

திருக்குர்ஆனில் கூட பலவசனங்கள் மக்காவில் சொல்லப்பட்ட வசனங்கள் பல மதிநாவில் மாறுபாடடைந்து வெளிப்பட்டுள்ளது. மன்சூக், நாஸிக் என அவ்வசனங்களை குர்ஆன் கலை வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். அதுபோல் ஒரு வசனத்திற்கு பல்வித அர்த்தங்களாய் விளக்கப்படுத்தும் தப்சீர்கள், முன்நவீன, நவீன, பின்நவீன விளக்கங்கள் என நீண்டுச் செல்லும் முறையியல் எதையும் முழுமைப்படுத்தப்பட்ட ஒன்றாக நடைமுறையில் சொல்லவில்லை.

விவாத நேர்மையை வேண்டும் கேள்விகள்

1. அல்குர்ஆன் என்ற இறைவேதம் அராபியருக்கோ ஏனைய முஸ்லிம்களுக்கோ மட்டுமான தனிச்சொத்தன்று என்பதைக்கூட அறியாமல் முஸ்லிம்களின் அல்குர்ஆன் அரபுமொழிசார்ந்தது என்று எழுதித் தம் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுதல் சூபிக்கு தேவைத்தானா ? இது வகாபியின் கேள்வி

எனது முந்திய கடித விளக்கம் :

முஸ்லிம்களின் அல்குர்ஆன் அரபுமொழி சார்ந்தது. ஹஜ் கடமைகளான ஸபாமர்வா குன்றுகளை வலம் வருதல், ஷைத்தானை கல்லெறிதல், ஆடு ஒட்டகம் பலிகொடுத்தல், தலை முடி களைந்து மொட்டை போடுதல் அனைத்தும் அரபுக் கலாச்சார சூழலைச் சார்ந்தது. இஸ்லாம் வலியுறுத்தும் ஆடைவிதிகள் (Dress code) மற்றும் அரபு மொழியில் இறைவனைத் தொழுதல் கூட அரபு வகைப்பட்டது. இப்படி ஏராளம் சொல்லலாம். எனவே உலக மக்களின் மார்க்கமாக இருந்தாலும் அரபு பிரதேச கலாச்சார அடிப்படையிலேயே நிறுவன மைய இஸ்லாம் தன்னை நிலை நிறுத்தியுள்ளது. அதே சமயம் இஸ்லாம் வலியுறுத்தும் அறநெறிக்கோட்பாடுகளான ஒற்றுமை, மனித நேயம், சமத்துவம் விடுதலை உள்ளிட்ட பண்புகள் உலகு தழுவிய பார்வையைக் கொண்டவை.

வகாபியின் அர்த்தமற்ற கேள்விக்கும், ஏற்கனவே தெளிவாக வரையறுத்து சொல்லப்பட்ட எனது பதிலுக்கும் இடையிலான இடைவெளியை வாசகர்கள் ஆழ்ந்து பரிசீலிக்கவேண்டும். இந்த பதிலைக்கூட வகாபியால் புரிய முடியவில்லை எனில் என்ன செய்வது ?

மேலும் என் கேள்விகள் சில:

1. இஸ்லாத்தின் அரபு கலாச்சார பின்னணியை வலியுறுத்தும் நடைமுறைகளில் சில மேற்கண்டவாறு என்னால் விளக்கப்பட்டுள்ளது. இதில் வகாபி எதையாவது தர்க்க ரீதியாகவேனும் மறுத்துள்ளாரா…. ? இல்லை தோற்றக் காலத்திலும், இன்றைய நடைமுறையிலும் அரபுக் கலாச்சார பின்னணியில் இஸ்லாம் இல்லை என்பதற்கான தரவுகளை எதையேனும் அளித்துள்ளரா ? ஏன் அவரால் குறிப்பாக விவாதிக்க முடியவில்லை… ?

தமிழில் தொழுகை நடத்த தயாரா ?

2. அல்குர்ஆன் அரபு மொழி சார்ந்தது இல்லை என்று கூறி எவ்வளவு அப்பட்டமாக வாசகர்களை வகாபி குழப்பப் பார்க்கிறார். இதற்காகவே அவருக்கு மற்றுமொரு கேள்வி. இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் பாங்கு சொல்லி ஐந்து நேரமும் தொழுகை நடத்துகிறார்கள். தமிழகத்திலும், தமிழ் தெரிந்த முஸ்லிம்களிடத்திலும் அரபியில் அல்லாமல் தமிழில் இத்தொழுகையை நடத்த வகாபியோ அல்லது அவரது இயக்கத்தைச் சார்ந்தவரோ தயாரா ? சாக்குபோக்கு சொல்லாமல் நேரடியாக கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.

பல இஸ்லாம்கள் இல்லை என விவாதிக்க தயாரா ?

கூடுதலாக சில இஸ்லாம்களை வகாபியின் பார்வைக்கு கொண்டு வர விரும்புகிறேன். காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகளில் உள்ள முஸ்லிம் அறிஞர்கள் முன்வைக்கும் கருத்தாக்கங்களில் ஒன்று பின்காலனிய இஸ்லாம் (Post Colonical Islam). உலக அளவில் அமெரிக்கமயப்படுத்தப்பட்ட பாசிச ஆக்ரமிப்புக்கு எதிராக முன்வைக்கும் அரசியல்ரீதியான அணிதிரட்டல் – அரசியல் இஸ்லாம் (Political Islam). இது வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக கட்டமைக்கப்படுகிறது.இதுபோல் சூபி இஸ்லாமும் பாரசீக, இந்திய வகைப்பட்ட வெகுஜன முஸ்லிம்களின் கலாச்சார வாழ்வியல் சார்ந்தும் வெளிப்படுகிறது.

இதுபோன்றே எனது முந்திய கட்டுரையில் கூறப்பட்ட நிறுவன இஸ்லாம், வெகுஜன இஸ்லாம், நாட்டார் இஸ்லாம் உள்ளிட்ட சொல்லாடல்களும் முன்வைக்கப்படுகின்றன. அரபு வகைப்பட்ட வகாபிய இஸ்லாத்திற்கு மாற்றாக இவை உலக அளவில் இஸ்லாத்தின் பன்முக கலாச்சாரக் கூறுகளை அடையாளப்படுத்தும் சொல்லாடல்களாக வெளிப்பட்டுள்ளன.

இந்த விதமாக விஷயங்களை பேசிக் கொண்டிருக்கும்போது மறுபுறத்தில் குஷ்பு இஸ்லாம், மும்தாஜ் இஸ்லாம் என அறிமுகப்படுத்துமாறு நக்கல் செய்து வகாபி வேண்டுகோள் விடுக்கிறாா. அறிவுக்கொழுந்து வகாபியின் மூளையிலும், மனசிலும் என்ன இருக்கிறது என்பதை இவ்வரிகள் அப்பட்டமாக படம் பிடித்து காட்டிவிட்டன.

‘கற்பு புகழ் குஷ்பு ‘ – என்று வகாபி கிண்டல் செய்வது ஆணாதிக்கமும், அகங்காரமும் கொண்ட மனோநிலையின் வெளிப்பாடு. ஒரே நேரத்தில் நான்கு பேர் வரை திருமணம் செய்து கொள்ளலாம், நினைத்த நேரத்தில் முத்தலாக் சொல்லி பெண்ணை ஒடுக்குமுறை செய்யலாம், சொத்தில் சம பங்கு கிடையாது என்பதான காலங்கடந்த ஆணாதிக்க சிந்தனைகளை கட்டியழும் வகாபி போன்றோருக்கு ‘கற்பு ‘ பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை என்றே கருதுகிறேன். இவ்வேளையில் வெர்ஜினியா பேராசிரியை ஆமினா வதூத், கனடாவின் இர்ஷத் மஞ்சி, அமெரிக்க பெண் எழுத்தாளர் ஆஸ்ரா நொமானி, பாத்திமா மெர்னிஸா உள்ளிட்டோர் பேசும் பெண்ணிய இஸ்லாம் (Feminist Islam) குறித்தும், திண்ணை வாசகாகள் கவனத்தை செலுத்த வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்.

—-

tamilsufi@yahoo.com

Series Navigation

சூபிமுகம்மது

சூபிமுகம்மது