கடிதம்

This entry is part of 46 in the series 20060331_Issue

வஹ்ஹாபி


திண்ணையின் முஸ்லிம் வாசகர்களுக்குச் சென்ற வாரம் அடித்தது யோகம்!

பல இஸ்லாம்கள் அறிமுகப் படுத்தப் படுவது முஸ்லிம்களுக்கு யோகமில்லாமல் வேறென்ன ?

வெகுஜன இஸ்லாம் (Popular Islam) என்ற தலைப்பில் http://www.thinnai.com/le0324061.html ஸூபி முகமது என்பார் சில புதிய இஸ்லாம்களை அறிமுகப் படுத்தியுள்ளார். அவற்றுள்:

நிறுவன இஸ்லாம் (Institutional Islam)

வெகுஜன இஸ்லாம் (Popular Islam)

நாட்டார் இஸ்லாம் (Folk Islam)

முக்கியமானவை.

அடுத்து, எச்.முஜீப் ரஹ்மான் என்பார், பின் நவீன இஸ்லாம் (POST MODERN ISLAM) என்ற தலைப்பில் http://www.thinnai.com/pl0324064.html தம் பங்குக்கு:

மாற்று இஸ்லாம் (Alternetive Islam)

தாராளவாத இஸ்லாம் (Liberal Islam)

மதநீக்க இஸ்லாம் (Seculer Islam)

போன்ற இஸ்லாம்களை அறிமுகப் படுத்தி, இருவரும் ஒரே தொழில் செய்பவர்கள்தாம் என்பதை ‘இஸ்லாம்கள் வாங்கலியோ இஸ்லாம்கள் ‘ என்று ஒரே குரலில் கூவி மெய்ப்படுத்தி இருக்கின்றனர்.

ஒன்று மட்டும் தெளுவு. இரு கட்டுரைகளும் பொன்னீல எழுத்துகளால் பொறிக்கப் பட்டவைதாம் என்பதே அது.

‘ஒரு கருப்பொருளைப் பற்றிய சொல்லாடலுக்குள் புகுமுன் அதைப் பற்றிய முழு அறிவு இல்லாவிடினும் அது குறித்த அடிப்படை அறிவாவது கட்டாயம் இருக்க வேண்டும் ‘ என்று வேறொருவருக்கு நான் எழுதியது ஸூபிக்கும் பொருந்தும். அல்குர்ஆன் என்ற இறைவேதம், அரபியருக்கோ ஏனைய முஸ்லிம்களுக்கோ மட்டுமான தனிச் சொத்தன்று (081:027) என்பதைக்கூட அறியாமல், ‘முஸ்லிம்களின் அல்குர்ஆன் அரபுமொழி சார்ந்தது ‘ என்று எழுதித் தம் அறியாமையை வெளுச்சம் போட்டுக் காட்டுதல் ஸூபிக்குத் தேவைதானா ?

வரலாற்றிலும் புகுந்து விளையாடுகிறார் ஸூபி. ஹஜ்ஜின்போது நிறைவேற்றப் படும் கடமைச் செயற்பாடுகள் அனைத்தும் அண்ணல் இபுறாஹீம் மற்றும் அவர்தம் குடும்பத்தவரின் தியாகங்களை அடியொற்றி வந்தவை என்பது பிறமத நண்பர்களும் அறிந்து வைத்திருக்கும் அடிப்படை வரலாறாகும்.

அண்ணல் இபுறாஹீமும் அவர்தம் குடும்பத்தினரும் அரபியரா ? ‘சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றால் ‘ உண்மை இப்படித்தான் சுடும்.

சரி, உண்டியலுக்கு வருவோம்.

இஸ்லாமிய ஆட்சி என்பது ‘கிலாஃபத் ‘ – பின்தோன்றல் முறைதான். பின்தோன்றுபவன் தமையானாகவோ தம்பியாகவோ மகனாகவோ பொதுமக்களுள் ஒருவனாகவோ இருக்கலாம். யாருக்குப் பிறந்தான் ? என்று வஹ்ஹாபின் சித்தாந்தம் கேள்வி எழுப்பாது; மாறாக, வஹ்ஹாபின் அறிவுரையின்படி ஆட்சி நடக்கிறதா ? என்றுதான் பார்க்கும். முஸ்லிம்கள் ஆள்வதால் அது இஸ்லாமிய ஆட்சி என்ற மூடநம்பிக்கைக்கு ஸூபி பலியாக வேண்டாம்.

ஹாஜிகளிடமிருந்து பெறப்படும் அன்னியச் செலவாணி, அவர்களுக்கு வசதிகளை அதிகப் படுத்திக் கொடுப்பதற்காகச் செலவு செய்யப் படுவதாக சவூதி அரசின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன; ஹஜ்ஜுக்குச் சென்று வருபவர்களும் கூறுகின்றனர். ஹஜ்ஜுக்கு அனுப்பும் நிறுவனங்கள், விமானப் போக்குவரத்து, தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவம் ஆகிய அனைத்திற்கும் பொறுப்பேற்கின்றனர். இவ்வாறுதான் தர்ஹா உண்டியலில் கொழுத்த சாபுகள், அவர்களின் பகற்கொள்ளையில் கிடைத்ததை ‘பக்தர் ‘களுக்குச் செலவு செய்கிறார்களாக்கும் ? மொட்டைத் தலைக்கும் முழங்கலுக்கும் முடிச்சுப் போட்டு ஸூபி அடித்த அடி, நாலு பக்கமும் தெறிக்க வில்லையே ? ‘நனைத்து அடித்தல் ‘ இதுவல்ல என்று நாமும் நம்புவோம்.

***

இது நிற்க,

சந்தடி சாக்கில், ‘முகமதியரின் மறைப் புத்தகத்தில் உள்ள வன்முறை உணர்வை விதைக்கக் கூடிய வாசகங்களை அவை எந்தக் காரணத்திற்காக இடம்பெற்றிருந்தாலும் அவற்றின் அவசியத்தைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாத இளஞ் சிறுவர்கள் பயிலும் மதரஸாக்களில் கற்பிக்கலாகாது என முடிவெடுக்க முகமதிய மார்க்க அறிஞர்கள் முன்வர வேண்டும் ‘ என்று ‘முகமதி ‘யர்களுக்கும்

‘தமக்குக் கிட்டியுள்ள இசை ஞானத்தை ‘சரஸ்வதி மா கீ தயா ‘ (சரஸ்வதி அன்னையின் அருள்) என்று சொல்லும் திரை இசை இயக்குநர் நவ்ஷத், வாணியை மனதால் வணங்கிய பின்னரே பாடத் தொடங்குவதாகப் பல ஆண்டுகளுக்குமுன் பாபுராவ் பட்டேலின் மதர் இந்தியா பத்திரிகைக்குப் பகிரங்கமாகப் பேட்டி அளித்த ஹிந்தி பின்னணிப் பாடகர் தலத் மஹமத், காளிதேவியின் பூமிக்கு வந்து இசை நிகழ்ச்சியளிக்கும் அருள் கிடைத்ததால் தமது நிகழ்ச்சியினைக் காளிமாதாவின் பாத கமலங்களில் அர்ப்பணிப்பதாகக் கூறி மெய் சிலிர்க்க வைத்த சாஸ்த்ரிய சங்கீதப் பாடகர்களான அலி சகோதரர்கள், கங்கையைத் தம் மாதா எனக் கூறும் ஷெனாய் விற்பன்னர் பிஸ்மில்லாகான், இசையின் மூலம் இறைவனை வழிபடுவதாகக் கூறிய நூர்ஜஹான் போன்றோரின் எண்ணிக்கை பெருகுவதற்கான வழிமுறைகளில் ஹிந்துக்களின் கவனம் செல்லவேண்டும் ‘ என்று இந்துக்களுக்கும் பழம் பெறும் எழுத்தாளர் மலர் மன்னன் திண்ணையில் http://www.thinnai.com/pl0324061.html அறிவுரை கூறியிருந்தார்.

மட்டுமின்றி, மேற்காணும் முகமதியருக்கு இடுகாட்டில் இடம் கிடைக்காது என்றும் முகமதியர் பகிரங்கமாக அவ்வாறு அறிவித்துவிட்டு வெளுயே நடமாட முடியுமா என்பதே சந்தேகம் என்றும் ‘நடமாடிக் கொண்டிருப்பவர்களை ‘க் குறித்து ம.ம. கவலை தெரிவித்திருந்தார்.

ஒருவருடைய ஒரே கட்டுரைக்குள் ஒரே கருத்துக்குள் அவரே முரண்படுவதை விளக்கிக் கொண்டிருப்பது எனது நோக்கமில்லை. அதை, க.வி. பார்த்துக் கொள்ளட்டும்.

பின் நான் ஏன் அதை எடுத்தாள வேண்டும் ? மேற்காணும் ‘பெருங்கதையாடலில் ‘ ஸூபிக்குச் சரக்கிருக்கிறது. சங்கீத முகமதியரை ஒன்று திரட்டி, ‘சங்கீத இஸ்லாம் ‘ என்றும் பிரபல முகமதிய நடிகைகளான ‘கற்பு புகழ் ‘ குஷ்பு, நக்மா, மும்தாஜ் மற்றும் முகமதிய நடிகர்களான சல்மான்கான், ஷாருக்கான், ஆமிர்கான், அம்ஜத்கான் போன்றோரை வைத்து ‘நட்சத்திர இஸ்லாம் ‘ ஆகிய இஸ்லாம்களை அறிமுகப் படுத்தலாம்.

யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கடை விரிக்கலாம். கொள்வார்…. ?

நல்லவேளை, ஸூபிக்கான என்னுடைய முதல் கடிதம் இன்றுவரை திண்ணையில் படிக்கக் கிடைக்கிறது http://www.thinnai.com/le0224069.html இல்லையெனில் மிரண்டுபோய் பதட்டத்துடன் ஆத்திரத்தில் புலம்புவது யாரென்று வாசகர்களுக்கு அடையாளம் தெரியாமல் போய்விடும்.

ஃஃஃ

to.wahhabi@gmail.com

Series Navigation