வெகுஜன இஸ்லாம் (Popular Islam)

This entry is part [part not set] of 42 in the series 20060324_Issue

சூபி முகமது


1. எனது புனித முகமூடிகள் கட்டுரைக்கான எதிர்வினையை திண்ணையில் வாசித்தேன். பதட்டம் நிறைந்த வகாபியின் வார்த்தைகள் அனைத்தும் வரலாற்றுக்கும், உண்மைக்கும் மாறு செய்வதாகவே இருந்தது. வகாபிய சுரண்டலின் உதாரணத்திற்காக தமிழகத்தின் பிரபல வகாபி இயக்கத் தலைவர் மற்றும் அவரது டிரஸ்டின் பெருமுதலாளித்துவ வளர்ச்சியையும், வர்க்க நலனையும், அது எவ்வாறு வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களின் மீதான உழைப்புச் சுரண்டலால் உருவாக்கம் பெற்றுள்ளது என்பதையும் கூறியிருந்தேன். இது நடைமுறை ரீதியாக முஸ்லிம்கள் ஓரளவு தெரிந்த உண்மையாகும். இதனை எழுதுவது வஹாபி மிரட்டியிருப்பதைப்போல உணர்ச்சி லையிலோ, இழிவுப்படுத்தும் வார்த்தையிலோ திண்ணையின் கட்டுப்பாட்டை மீறியது ஆகாது. அனைத்தும் அறிவுபூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் முன்வைக்கப்படுபவை ஆகும். ‘உண்மைசுடும் ‘ என்பதாலேயே வகாபிக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்துள்ளது.

2. கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்துக் கொண்டிருக்கும் வகாபி போன்றோர் இன்னும் குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஓட்ட முயற்சிக்கிறார்கள். இஸ்லாம் உலக மக்களின் மார்க்கம் என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். உலகம் பலமொழி, பல இன, பல நிற பன்மைக்கலாச்சாரப் பின்னணியைக் கொண்டுள்ள மனிதகுலமாகவே இருக்கிறது. இதில் முஸ்லிம்களின் அல்குர்ஆன் அரபுமொழி சார்ந்தது. ஹஜ் கடமைகளான ஸபாமாவா குன்றுகளை வலம் வருதல், ஷைத்தானை கல்லெறிதல், ஆடு, ஒட்டகம் பலிகொடுத்தல், தலை முடி களைந்து மொட்டை போடுதல் அனைத்தும் அரபுக் கலாச்சாரச் சூழலைச் சார்ந்தது. இஸ்லாம் வலியுறுத்தும் ஆடைவிதிகள் (Dress Code) அரபுமொழியில் இறைவனைத் தொழுதல்கூட அரபு வகைப்பட்டது. இப்படி ஏராளம் சொல்லாம். எனவே உலக மக்களின் மார்க்கமாக இருந்தாலும் அரபு பிரதேச கலாச்சார அடிப்படையிலேயே மைய இஸ்லாம் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. அதேசமயம் இஸ்லாம் வலியுறுத்தும் அறநெறிக்கோட்பாடுகளான ஒற்றுமை, மனிதநேயம், சமத்துவம், விடுதலை உள்ளிட்ட பண்புகள் உலகு தழுவிய பார்வையைக் கொண்டவை. இந்த அடிப்படையான வித்தியாசத்தை வகாபி போன்றோர் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

3. சவூதி அரேபிய ஆட்சி வகாபிய சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் மன்னராட்சி ஆகும். இந்த அரசும், சவுதி அரபு முதலாளிகளும் வருடந்தோறும் நாற்பது லட்சம் ஹஜ் பயகள் மூலம் சம்பாதிக்கும், அந்நியசெலவாணி, மற்றும் வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் லாப பண மதிப்பீடு குறித்தும் பேசவேண்டியுள்ளது. இந்திய தமிழக பெருமுதலாளிய ஹஜ் நிறுவனங்கள் பல்கிப் பெருகி சம்பாதிக்கும் வருமானம் குறித்தும் யாரும் இதுகாறும் வாய்திறக்காததின் மர்மம் என்ன ? தர்கா உண்டியல்களை விமர்சிக்கும் வகாபி போன்றோர் ஏகாதிபத்திய ஏகத்துவ ஹஜ் உண்டியல்கள் குறித்து மெளனம் சாதிப்பது ஏன் ? நனைத்து அடித்தால் நாலாப்பக்கமும் தெறிக்கும் என்பதை வகாபிபோன்றோர் உணர்ந்து விவாதிக்க முன்வரவேண்டும்.

3. திருக்குர்ஆன் வசனங்களை, ஹதீஸ்களை மேற்கோள் காட்டுவது, மறுதரப்பாரின் கட்டுரை வரிகளுக்கு முன்னும் பின்னும் அடைப்புக் குறிக்குள் சில வார்த்தைகளை எழுதி வாசிக்கச் சொல்வது உள்ளிட்ட காலாவதியாகிப் போன அணுகுமுறைகளே வகாபியிடம் மிஞ்சியிருக்கிறது. குர்ஆனில், ஹதீஸில் ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கும் தர்க்க அடிப்படையிலான ஆய்வு முறை இன்று வலுவிழந்துள்ளது. எதற்கெடுத்தாலும் திருக்குர்ஆனில் ஆதாரம் கேட்கும் வகாபிகள் முகமது நபிகள் எந்த இடத்தில், எந்த நாளில், எத்தனை மணியில் பிறந்துள்ளார்கள் என்பதற்காக சிறுகுறிப்பையேனும் திருக்குர்ஆனிலோ, ஹதீஸிலா ஆதாரமாக காட்ட முடியுமா ? இதற்கு நாம் பிற சமூக வரலாற்றையே நாடவேண்டியுள்ளது.

மேலும் எழுதப்பட்ட ஆதாரங்கள் கூட அந்தந்த சமூக பண்பாட்டு அரசியலில் அதிகாரத்தை செலுத்திக் கொண்டிருந்த ஆதிக்க சக்திகளின் நலன்களுக்கு ஏற்பவே உருவாக்கப்படுகிறது. நபிகள் நாயகத்திற்கு பிறகான கலிபாக்கள் படுகொலை செய்யப்பட்டது, நபிகளாரின் மனைவியான ஆயிஷா நாயகிக்கும், மருமகனான இமாம் அலிக்கும் நடைபெற்ற ஒட்டகப்போர் உள்ளிட்ட வரலாற்றை மீளாய்வு செய்வதின் மூலமாக விலக்கப்பட்ட வரலாறுகளிலிருந்து உண்மைகளை மறு தேடல் செய்ய வேண்டியுள்ளது.

4. இதன் அடிப்படையிலேயே நிறுவன இஸ்லாம் (Institutional Islam) வெகுஜன இஸ்லாம் (Popular Islam) நாட்டார் இஸ்லாம் (Folk Islam) குறித்து நுட்பமாக ஆய்விட வேண்டியுள்ளது. கந்தூரியில் கூட்டமில்லை, தர்காக்களுக்கு வறட்சி நிலை ஏற்பட்டுவிட்டதென தனக்குள்ளே புலம்பித்தீர்க்கும் வகாபி வாரநாட்களில் வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமை இரவுகளில் திருநெல்வேலி ஆத்தரங்கரைதாயி பள்ளிக்கோ, திருவனந்தபுரம் பீமாத்தய் பள்ளிக்கோ மதுரை கோரிப்பாளையம் தர்காவிற்கோ, ஏர்வாடி தர்காவிற்கோ அல்லது தமிழகத்தின் வடபகுதி தர்காக்களுக்கோ ஒரு ஜியாரத் பயணம் செய்துவிட்டு, அங்கு திரளும் முஸ்லிம் மக்களின் கூட்டத்தைப் பார்த்து விட்டு பிறகு பேச வேண்டும்.

அஜ்மீர் தர்கா உள்ளிட்ட இந்தியாவில் பிரபலமடைந்த சூபி ஞானிகளின் தர்காக்களில் உரூஸ் என்னும் கந்தூரி விழாக்களில் கூடும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் பங்கேற்பை தகவல் ஊடகம் வழியாக எல்லா மக்களும் தெளிவாக அறிந்தே வைத்துள்ளார்கள். எனவே தான் கூறுகிறேன். இந்திய வகைப்பட்ட தமிழ் வழி வெகுஜன இஸ்லாத்தின் அடையாளத்தையும் செல்வாக்கையும் ஆத்திரப்படாமல் வகாபி நிதானமாக பரிசீலிக்க வேண்டும்.

—-

Series Navigation

சூபிமுகமது

சூபிமுகமது