விவாதம்:சூபிசம் – வகாபிசம் -உள்ளும் புறமும்

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

ஹெச்.ஜி.ரசூல்


எனது வஹாபிசம் கட்டுரை மற்றும் எதிர்வினைகளுக்கான பதிலொன்றை ஜெ.தீன் திண்ணையில் எழுதியுள்ளார். ஜனநாயக பூர்வமான விவாதங்களை வரவேற்கும் அதேசமயத்தில் அதில் குறைந்தபட்சம் ஒரு நேர்மை இருக்க வேண்டும். தீனின் கட்டுரையில் நான் எழுதியதாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் மேற்கோள்கள் எவ்வளவு உள்நோக்கத்தோடு, சிதைத்து மாற்றப்பட்டுள்ளது என்பதை சொல்லவேண்டும்.

1. தீனின் மேற்கோள்

மணக்கொடையை பெண்களுக்கு கொடுப்பதால் அவர்களுக்கு சொத்துரிமை கிடையாது என்று இசுலாம் சொல்லவில்லை. மாறாக ஹெச்.ஜி.ரசூல் அவ்வாறு மொழிகின்றார்.

எனது வரிகள்

திருமணத்தின்போது தந்தை வழி குடும்பத்தின் எந்தவித சொத்துக்கும் உரிமையற்றவளாக ஒன்றுமற்ற ஒரு வெற்று நுகர்வு பண்டம்போல் பெண் மாற்றப்படுகிறாள். பெண் பெறவேண்டிய சொத்துரிமையின் மீது இது மறைமுகத்தாக்குதலைத் தொடுக்கிறது. குடும்பஅமைப்பில் மகன், மணமகன், தந்தை எனவும் அடிமைச்சமுதாய திருமண முறைகளில் ஒன்றாக பணம் கொடுத்து பெண்ணை விலைக்கு வாங்குவது போ ன்றதொரு நிலையும் உருவாக்கப்பட்டு உறுதி செய்யப்படுகிறது.

2. தீனின் மேற்கோள்

கூட்டாகவும் குழுவாகவும் தொழுவது முதலாளியத்திற்கு துணை போகிறது.. . . . . ஹெச்.ஜி.ரசூல் முதலாளியத்திற்கு வால் பிடிக்கவென்று இவ்வாறு கூறுகிறார்.

எனது வரிகள்

ஒரேநேர கூட்டுத்தொழுகை என்கின்ற வடிவத்தைமாற்றி தனித்தனி நபர்களாகவோ அல்லது சிறுசிறு ஜமாஅத்துகளாகவோ தேவைப்பட்ட நேரத்தில் தொழுது கொள்ளலாம். தொழுகையின் பின் இணைப்பான கூட்டுத் துஆ உள்ளிட்ட பிரார்த்தனைகளை நீக்கி தொழுகை நேரத்தை குறைத்துக் கொள்ளலாம். ரமலான் மாத நோன்பின்போது இரவு தராவீஹ் தொழுகையை மரபுரீதியாக இரு பத்தி ரெண்டு ரக்அத்துகளாக தொழுவதை விட்டு விட்டு எட்டு ரக்அத்துகளாக சுருக்கிக் கொள்ளலாம் என்பதான தனிநபர் நலன்சார்ந்து வணக்க வழிபாடுகள் நெகிழ்த்தப்படுகின்றன. (இது வகாபிசத்தின் குணங்களாக கட்டுரையில் சொல்லப்பட்டவை.)

மேற்சுட்டப்பட்டவாறு முதலாளித்துவத்துக்கு ஆதரவாக தலைகீழாக திரிக்கப்பட்ட எனது வரிகளுக்கு நியாயமற்ற முறையில் தீன் கூறியுள்ள விளக்கங்கள் எள்ளளவும் பொருந்தாது. எனவே இப்பகுதிகளை மொத்தகமாக நிராகரிப்பதே சரியாகும்.

மேலும் தீன் எனது கட்டுரையை அரைகுறையாக வாசித்துவிட்டு பதில் எழுத துவங்கியுள்ளார். அவரது கேள்விக்கு எனது கட்டுரை (ம) விளக்கத்திலேயே பதில் இருக்கிறது.

3. தீன் கேள்வி பல்கலைக்கழங்களில், ஆய்வுத்தளங்களில் உள்ள அனைத்து துறைகளையும் தன் வாதத்துக்கு ஆதரவு தேடி கூவி அழைக்கும் ஹெச்.ஜி.ரசூல் ஆன்மீகம் வேறு பண்பாடு வேறு என்பதைக்கூட அறியாதவரா… ?

எனது தெளகீது பிராமணியம் விளக்க பகுதியில் : என்னை பொறுத்தவரையில் ஆன்மீக இஸ்லாம். அரசியல் இஸ்லாம். சூபி இஸ்லாம் என இஸ்லாமை குறிப்பது இஸ்லாத்தின் உள்ளடக்க ரீதியான பன்முக அடையாளங்களை வெளிப்படுத்தும் நோக்கில் அமைந்ததாகும். இதுபோன்றே காலத்தின் அடிப்படையிலான வகைப்படுத்தலில் பூர்வீக இஸ்லாம், நவீன இஸ்லாம், பின்நவீன இஸ்லாம் என்பதான சொல்லாடல்களும் பயன்படுத்தப்படுகின்றன.

இவை தவிர புதிதாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கான பதில் விளக்கத்தை இனி நாம் விவாதிக்கலாம்.

4. தீனின் கேள்வி : பொருள் உற்பத்தி உறவுகளில் பெண்களின் பங்களிப்பை மறுதலிக்கும் இவ்வாணாதிக்க சமுதாயம் மூடப்பழக்கவழக்கங்களிலும் அவர்கள் ஈடுபட உற்சாகப்படுத்துவது அவர்களை சுரண்டுவதற்கான ஒரு வழிமுறையே ஆகும். இதற்கான உரிமையைத்தான் ஹெச்.ஜி.ரசூல் கோருகிறாரா ?

பதில் : எது மூடப்பழக்கம் என்பது ஒரு ஒப்பீட்டு தன்மைமிக்க சொல்லாடலாகும். ஒரு இந்துவுக்கும் இயேசு உயிர்த்தெழுந்தார் என்பது மூட நம்பிக்கை / ஒரு பெளத்தவாதிக்கு இராமனை வணங்குவது மூடநம்பிக்கை / இறைவனுக்கு உருவமில்லை எனும் முஸ்லிம்களின் கூற்று ஒரு இந்துவுக்கு மூடநம்பிக்கை / தர்கா மரபுகள் வகாபிக்கு மூடநம்பிக்கை / ஹதீஸ் குறித்த வகாபிகளின் நம்பிக்கை அஹ்லே குர்ஆன்களின் பார்வையில் மூடநம்பிக்கை / நபிகள் நாயகம் இறுதி தூதர் என்று கூறுவது காதியானிகளின் பார்வையில் மூடநம்பிக்கை/ ஒருநாத்திகவாதிக்கு கடவுள் நம்பிக்கையே மூடநம்பிக்கை. இப்படி நீட்டிக் கொண்டே போகலாம். நம்பிக்கை x மூடநம்பிக்கை என்கிற எதிர்வுகள் அறிவொளிக்கால அணுகுமுறை. இதில் எதையும் யாரும் எளிதில் மறுத்துவிடலாம். இங்கு எல்லாமே நம்பிக்கைகள் தான். இஸ்லாமும் இறைவன் மீது நம்பிக்கை (ஈமான்) கொள்ளத்தான் சொல்கிறது. இறைவனை அவனது தூதர்களை திருக்குர்ஆனை, வானவர்களை, மறுமையை, சொர்க்கத்தை நரகத்தை எந்த கேள்வியுமின்றி ஏற்றுக் கொள்ளச் சொல்கிறது. இஸ்லாமிய அடிப்படைகளில் அறிவை விலக்கி வைக்க பரிந்துரைக்கிறது. பிறகெப்படி நாம் இதைத் தவிர பிற நம்பிக்கைகள் எல்லாவற்றையும் மூடநம்பிக்கை என்று முத்திரை குத்துவது. லக்கும்தீனுக்கும் வலியதீன் உங்கள் மார்க்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கென்ற வழியில் எல்லாவித மக்களின் உண்மைத் தேடலுக்கும் ஜனநாயக வாய்ப்பளிக்க வேண்டியதும், பிறரின் உணர்வுகளை புரிந்து கொள்ள வே

ண்டியதும் அவசியமான ஒன்றே ஆகும். இந்தக் கண்ணோட்டம் உருவாகத காரணத்தால்தான் இந்து அடிப்படைவாதம் / இஸ்லாமிய அடிப்படை வாதம் / கிறிஸ்தவ அடிப்படை வாதங்கள் உருவாகின்றன. இங்கு அடிப்படைவாதம் என்பது ஒரு கொள்கை மற்றொன்றை ஒழித்துக் கட்டும் தீவிரத்தன்மையைக் கொண்டதாகும்.

தர்கா நடவடிக்கையில் ஈடுபடும் பெண்ணைப் பற்றி ஜெ.தீன் கவலைப்படுகிறார். முதலில் இஸ்லாமிய பெண்ணின் மீதான சுரண்டலை குடும்ப அமைப்பின் சூழல்களிலிருந்தே விடுபட வைக்க வேண்டியுள்ளது. தந்தை வழிச்சமூகம், கணவனின் அதிகாரம் மரபுகள் மொழி உட்பட நுண்ணிய தளங்களிலிருந்து இது கவனிக்கப்பட வேண்டியுள்ளது. இஸ்லாத்திற்குள் ஆணாதிக்க கருத்தியல் நிறுவனங்களாக செயல்படும் பலதாரமணம் / தலாகு (ஒரே சமயத்தில் மூன்று தடவையோ அல்லது மூன்று தவணைகளிலோ) / நிர்ப்பந்திக்கப்பட்ட ஆடை விதிகள் (Dress code) / ஆணே பெண்ணை நிர்வகிக்க வேண்டும் / தலைமைத்துவ தகுதி பெண்ணுக்கு இல்லை / மனைவியை அடிப்பதற்கு கணவனுக்கான உரிமை / ஆணுக்கு இருபங்கு பெண்ணுக்கு ஒரு பங்குமே பாகப்பிரிவினை சொத்தில் உரிமை / சுத்தம் x அசுத்தம் கோட்பாட்டின்படி மாதவிடாய் உடல் தீட்டை முன்னிறுத்தி திருக்குர்ஆனை தொடுதல், மற்றும் தொழுகை வணக்க வழிபாடுகளிலிருந்து விலக்கி வைக்கப்படுதல் / உள்ளிட்ட கருத்தாக்கங்களில் இருந்து பெண்ணை விடுபட செய்திட இஸ்லாமிய நிலைபாடுகளில் நின்றே மறு விவாதம் செய்ய வேண்டியிருக்கிறது.

ஜெ. தீன் :உருவ வழிபாடு, அடக்கத்தல வழிபாடு (தர்கா வழிபாடும் சோந்தே) ஆகிய அனைத்துமே இந்த ஏகத்துவத்திற்கு எதிரானது.

தர்கா வழிபாடு, அடக்கத்தல வழிபாடு ஜியாரத் அனைத்துமே இறைவனுக்கு இணைவைக்கும் செயலே அதை எவர் செய்யவும் இஸ்லாத்தில் இடமில்லை.

பதில் : அ) ஏகத்துவம் என்பது லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் – இஸ்லாமிய அடிப்படைச் சிந்தனையான வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் என்ற கலிமாவாகும். இதிலிருந்து மாறுபட்டு வணக்கத்துக்குரியவர் ஒலியுல்லா (சமாதியில் அடங்கப்பட்டிருக்கும் ஞானி) என்று எவரும் ஈமான் கொள்வதில்லை.

ஆ) இறைவனை வணங்குதல் என்பது ஐந்து வேளையும் இறைவனைத் தொழும் கடமையிலிருந்து எழுவதாகும். இணைவைத்தலின் அடிப்படையில் எவரும் அவுலியாக்களை ஐவேளையும் தொழுது வணங்குவதில்லை. மாறாக தர்காக்களுக்கு பக்கத்திலே அமைக்கப்பட்ட பள்ளி வாசல்களில் தான் இறைவனுக்காக தொழுகையே நடத்துகிறார்கள். தர்காக்கள் – பள்ளிவாசல்கள் இரண்டையும் தெளிவாக புரிந்தே பிரித்து வைத்திருக்கிறார்கள்.

(i) நபிகள் நாயகத்தின் மகள் ருகையா மரணத்தின்போது நபிகள் நாயகம் பத்ரு யுத்தத்தில் இருந்தார்கள். மதிநாவந்தவுடன் பாத்திமாவை அழைத்துக் கொண்டு ஜன்னத்துல் பகீவுக்கு சென்று ஜியாரத் செய்தார்கள். அதே நேரத்தில் பாத்திமா அவர்கள் கண்ணீர் விட்டார்கள். (நூல் : ஜஸ்புல் குலூப்)

(ii) உஹது யுத்தத்தில் ஷஹ்தான 72 ஷுஹதாக்கள் அடக்கப்பட்ட கபருக்கு சென்று அவர்களுக்காக பாத்துமாநாயகி கண்ணீர் சொரிந்த வண்ணம் துஆ செய்வார்கள். (நூல் : ஜியாரத்துல் குபூர்)

(iii) நபிகள் நாயகம் மரணித்த பின்பு ஆயிஷா நாயகி அவர்கள் திறந்த முகத்துடன் பெருமானார் அவர்களையும், வேறு இடத்தில் அடக்கமாயிருந்த தங்களது சகோதரர் அப்துல்ரஹ்மான் அவர்களையும் ஜியாரத் செய்து ஸலாம் கூறி வந்திருக்கிறார்கள். அருமைத்தந்தை அபூபக்கர் சித்தீக் அவர்கள் மறைவுக்கு பின்பும் திறந்த முகத்துடனேயே ஜியாரத் செய்வது வழக்கம். கலீபா உமர் அவர்கள் மெளத்தாகி நபிகள் நாயகத்தின் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது முதல் அன்னை ஆயிஷா நாயகி அவர்கள் கருமையான துப்பட்டியை போர்த்துக் கொண்டு ஜியாரத் செய்து வரலானார்கள். (நூல் : மிஷ்காத் (ம) ஜாஅல்ஹக்)

மேற்கண்ட இஸ்லாமிய வரலாற்று ஹதீஸ் ஆதாரங்களிலிருந்துகூட இறைநேசர்கள் அடங்கப்பட்டிருக்கும் தர்காவின் கபருகளுக்கு சென்று ஜியாரத் செய்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். ஜெ.தீனின் வகாபிய பார்வையில் இதனை பார்த்தால் நபிகள் நாயகம் அவர்கள். பாத்திமா நாயகி, ஆயிசா நாயகி எல்லோருமே ஜியாரத் செய்தது மூலம் இணை வைக்கும் செயலை செய்துள்ளார்கள் என்றே அர்த்தம். எனவே வகாபிசம் என்பது இஸ்லாம் அல்ல என்பதை இப்போதேனும் வகாபிகள் புரிந்து கொள்ளட்டும்.

—-

mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்