கடிதம்

This entry is part of 48 in the series 20060203_Issue

பெருந்தேவி


கோ. ராஜாராம் அவர்களின் சண்டைக்கோழி படவிவகாரம் பற்றிய ‘பிறவழிப்பாதைகள் ‘ குறிப்புகளின் கடிதம் வாசித்தேன். எஸ். ராமகிருஷ்ணனின் ‘நோக்கம் ‘ வலைப்பக்கங்களிலும், தனிப்பட்ட நண்பர் குழாங்களிலும் தொடர்ந்து பேச்சுப்பொருளாகியிருக்கிறது.

ஆனால், இந்த நோக்கம் எனப்படுவதை எப்படி நான் பார்க்கிறேன் என்பதைப் பகிர்ந்துகொள்ள சைப்படுகிறேன், ஒரு சின்ன காட்சியை விரித்து. யாரோ ஒருவர் தெருவில் நடக்கும் போது, ஏதோ நினைப்பில் தன் கையை வேகமாக வீசிவிடுகிறார். உடனே இன்னொருத்தர் சண்டைக்கு வருகிறார்; கை அவர் மேல் பட்டிருக்கலாம்; படாமலேயே பட்டதாக அவர் நம்பியிருக்கலாம்; உண்மையிலேயே படாமல் கூட, பட்டதாக அவர் வீண் குற்றம் சாற்றலாம்; அல்லது அவ்வாறு குற்றஞ்சாட்டச் சொல்லி இன்னொரு வழிப்போக்கர் தூண்டியும் விடலாம்; கை வீசியவர் கூட வேண்டுமென்று செய்யாமல் இருந்திருக்கலாம்; அல்லது அவ்வாறு அதைச் செய்துவிட்டு இல்லை என்று சொல்லிவிடலாம்; அல்லது வேண்டுமென்றே செய்யவில்லை என்று தனக்குத் தெரிந்தும், ‘ஆமாம், அப்படித்தான் ‘ என்று ஒரு கர்வமுற்ற மனோநிலையில் தன்மேல் விழும் குற்றச்சாட்டிலிருந்து சரியாகத் தற்காத்துக் கொள்ளக்கூட யத்தனிக்காமலிருக்கலாம். நோக்கம் இருபக்கத்திலும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அதை எப்படியும் நம்மால் நம்பும் வகையில் நிரூபிக்க முடியாது.

ஆனால், ‘உன் கை பட்டதால், எனக்கு வலிக்கிறது ‘ என்று ஒருவர் சொல்லும்போது, கைவீசியவரின் மன்னிப்பு கோருகிற சொல் வலிக்கு மருந்தாக இருக்கும் என அவர் நம்புகிறபோது, அதைச் சொன்னால்தானென்ன ? நிறைய சமயங்களில், நாம் நடக்கும்போது, அடுத்தவர் மீது நம் கை/கால் பட்டிருக்கும் என்ற எண்ணம் முளைவிடும்போதே மன்னிப்பு கேட்டு விடுவதில்லையா என்ன ? உண்மை/பொய் என்பதை விட ஒருவகை நாகரீகம் சார்ந்த விஷயமாகத்தான் இதை நான் பார்க்க நினைக்கிறேன்.

நாகரீகம் ஒருவருக்குத் தெரியாமல் இருக்கிறதாகத் தோன்றும்போது, நாகரீகத்தைக் கற்றுக்கொடுத்தே தீர்வோம் என்கிற உறுதி கூட அநாகரீகமாகவே இருக்கிறது.

பெருந்தேவி

sperundevi@yahoo.com

Series Navigation