கடிதம்

This entry is part of 35 in the series 20060127_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


திண்ணை ஆசிரியருக்கு

திண்ணையில் வெளியான, கொற்றவை நூல் விமர்சனத்தில் குமரிக் கண்டம் இருந்தது என்று பொருள் தரும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது.(1) குமரிக் கண்டம், லெமுரியா போன்றவை புனைவுகள், கற்பனைகள். விக்டோரியா காலத்து அறிவியலாளர்கள் சிலர் முன் வைத்த கருது கோள்கள், அனுமானங்களின் அடிப்படையில் அவை எழுதப்பட்டன. பண்டைய இலக்கியங்களிலிருந்து சான்றுகள் தரப்பட்டன, வரைபடங்கள் கூட உருவாக்கப்பட்டன. ஆனால் அந்த கருது கோள்கள், அனுமானங்கள் அறிவியலால் நிராகரிக்கப்பட்டு விட்டன. புனைவுகள்,கற்பனைகள் இன்றும் உண்மை என்று சிலரால் கூறப்படுகின்றன. எக்காலத்திலும் இருந்திராத குமரிக்கண்டத்தினை அடிப்படையாகக் கொண்டு ஒரு புனைவியலக்கியத்தினை உருவாக்கலாம். ஆனால், குமரிக்கண்டம் இருந்ததாக நம்பப்படுகிறது, அதற்கு அறிவியல் ரீதியாக சான்றுகள் இல்லை என்பதையாவது விமர்சகர் அறிவாரா. மேலும் விமர்சகர் தமிழ்ப் பேராசிரியர் என்று தினமணியில் வெளியான நூல் விமர்சனத்தில் குறிப்பிடப்படுகிறது. தமிழ்ப் பேராசிரியர்கள் இன்னுமா குமரிக்கண்ட கற்பனைகளை உண்மை என்று நம்பி மாணவர்களுக்கு கற்பிக்கிறார்கள் ?.

விமர்சகர் இந்த நூல் விமர்சனத்தில் சிலவற்றை குறிப்பிட்டிருக்கிறார். நூலினை வாசிக்காத நான் அவை இவர் வாசிப்பில் முன் வைக்கும் கருத்துக்களா அல்லது நூலாசிரியரின் கருத்துக்களா என்பதையறியேன். எனினும் அவை சர்ச்சைக்குரியவை என்றே கருத வேண்டியுள்ளது. உதாரணமாக, அன்னை,தாய்மை குறித்த சொல்லாடல்களை பெண்ணியவாதிகளும், பிறரும் விவாதித்துள்ளனர். Biology is not destiny என்பது பெண்ணியவாதிகள் வலியுறுத்தும் ஒரு வி ?யம். இனப்பெருக்கம், தாய்மை இவற்றில் தொழில்நுட்பங்கள் கொண்டுவந்துள்ள சாத்தியப்பாடுகள், தெரிவுகள், மாற்றங்கள் ஆகியவையும் விவாதிக்கப்பட்டு ஆராயப்பட்டுள்ளன, ஆராயப்படுகின்றன. அடையாளம், பாலினம், பால் நிலை குறித்த விவாதங்கள், கருத்துக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அன்னையர் என்ற சொல்லே கருத்தியல் சார்ந்த ஒன்று. பெண் தாயாவதன் மூலம்தான் முழுமை பெறுகிறாள் போன்ற கருத்துக்களை பெண்ணியவாதிகள் விமர்சித்துள்ளனர். தாய்மை என்பதை தெரிவு செய்ய மறுக்கும் பெண்களும் இருக்கிறார்கள், உடல் ரீதியாக கருத்தரிக்க இயலாத பெண்களும் இருக்கிறார்கள். வேறு பல காரணங்களுக்காக குடும்ப வாழ்க்கை, கருத்தரித்தல், பிள்ளை(கள்) பெறுதல் ஆகியவற்றை நிராகரிக்கும் பெண்களும் இருக்கிறார்கள். எனவே விமர்சகர் கூறும் ‘தாய்மையினால் வென்று மேற்செல்கிற தெய்வநிலை ‘, ‘அன்னையர் பிறக்க, அன்னையர் மறைய தாய்மை மட்டும் அழியாமல் வாழ்கிறது ‘ சர்சிக்க்ப்பட வேண்டியவையாகும். விமர்சகர் ‘தெய்வக் குழப்பம் கொண்ட மாற்று மரபுகளுக்கு ‘ என்று குறிப்பிடுகிறார். அவை எவை, எதற்கு அல்லது எவற்றிற்க்கு அவை மாற்று மரபுகள் என்பதை அவர் விளக்கியிருக்கலாம். முன்னோர் வழிபாடு, மூதாதையர் வழிபாடு போன்றவை உலகின் பல பகுதிகளில் நடைமுறையில் பல்வேறு விதங்களில் உள்ளன. தெய்வ வழிபாட்டிலும் சிறு தெய்வங்கள், பெருந் தெய்வங்கள் என்ற வேறுபாடு உள்ளது. பொதுவாக பகுத்தறிவாளர்கள் கேள்விக்குட்படுத்துவது கடவுள், உலகை படைத்தது கடவுள், கடவுள் மனித உருவில் தோன்றி அழியா உண்மைகளை வெளிப்படுத்தினார், இறை தூதர்(கள்) மூலம் உண்மைகளை வெளிப்படுத்தினார், புனித நூற்களை அளித்தார் போன்றவற்றை. விமர்சகர் மூதாதையர் வழிப்பாட்டினையும் இதையும் குழப்புவதாக கருதும் வகையில் நூல் விமர்சனம் அமைந்துள்ளது. குழப்பம் யாருக்கு என்றும் கேட்கத் தோன்றுகிறது.

சமூக அறிவியல் நிராகரித்த ஏங்கெல் ?ின் ஆதி தாய் வழிச் சமூகம் குறித்த கருத்து இங்கு பெற்றுள்ள செல்வாக்கு, குமரிக் கண்டம் உண்மை என்று இன்னும் நம்பிக்கொண்டிருப்பது – இவற்றை வைத்துப் பார்த்தால் அறிவியலும், சமூக அறிவியலும் புறந் தள்ளி, குப்பைத் தொட்டியில் போட்ட கோட்பாடுகள் இறுதியாக புகலிடம் பெறும் இடம் தமிழ் நாடு, தமிழ் அறிவுச்சூழல் தானா என்றுக் கேட்கத் தோன்றுகிறது.

K.ரவி ஸ்ரீநிவாஸ்

(1) http://www.thinnai.com/ar0120067.html

ravisrinivas@rediffmail.com

Series Navigation