கடிதம்

This entry is part of 31 in the series 20051118_Issue

மலர் மன்னன்


‘அவுரங்கசீப்பின் உயில், ‘ கூண்டில் ஏற்றப்பட்ட குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் போல் மிகத் துல்லியமாய் வெளிப்பட்டிருக்கிறது. பெற்ற தகப்பனுக்குத் தான் இழைத்த கொடுமைகளும், நியாயப்படி ஆட்சிக்கு வரவேண்டிய தன் மூத்த சகோதரன் தாரா ஷன்க்கோவைச் சித்ரவதை செய்துகொன்றதும், உடனிருந்த சகோதரனையே கவிழ்த்துவிட்டதும் அந்திமக் காலத்தில் அவுரங்கசீப்பை வெகுவாகவே பாதித்திருக்கவேண்டும். சாத்வீகமான முறையில் வீதியில்படுத்து மறியல்செய்த ஆயிரக்கணக்கான நிராயுதபாணி மக்கள் மீது சிறிதும் ஈவிரக்கமின்றி யானை மீது சவாரிசெய்துகொண்டுபோய் மண்ணை ரத்தச் சேறாக்கியதும், சிவாஜி மகராஜைப் பேச்சு வார்த்தைக்கென அழைத்துவிட்டுச் சிறைப்படுத்தியதுமான முறைகேடுகளுங்கூட நினைவுக்கு வந்து துன்புறுத்தியிருக்கலாம். எனவேதான் தன்னைப் பாவியென்று உணர்ந்து வருந்த முடிந்திருக்கிறது.

ஹிந்துஸ்தானம் முழுமைக்கும் சக்ரவர்த்தியென்று தன்னைப் பிரகடனம் செய்து கொண்ட போதிலும், தன் சொந்தப் பணத்தில் செய்யும் இனிப்புச் சோற்றை முகமதிய ஏழைகளுக்கு மாத்திரமே வழங்கவேண்டுமென விதித்த நிபந்தனை அவுரங் கசீப்பின் தீவிர மதப்பற்றை வெளிப்படுத்தி நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

இத்தகைய தீவிர மதாபிமானம் ஹிந்து மன்னர்களுக்கும் இருந்திருக்குமானால் பாரதத்தின் சரித்திரமே வேறாக இருந்திருக்குமே!

இவ்வாறாக, அவுரங்கசீப்பின் குண இயல்புகளைத் திடாரென்று தெரிந்துகொள்ள வாய்ப்பளித்த ரூமி பாராட்டுக் குரியவர்.

அவுரங்கசீப்பின் பிறந்த நாளோ, இறந்த நாளோ வரப்போகிறதா என்பதை யாராவது தெரிவித்தால் நலம். ஏனென்றால் அம்மாதிரியான தருணங்களில் மட்டுமே சம்பத்தப் பட்டவர்களை நினைவுகூர்வது நம்மவர் சம்பிரதாயம்.

மலர் மன்னன்

Series Navigation