மலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கிய மாநாடு

This entry is part [part not set] of 31 in the series 20051118_Issue

அறிவிப்பு


மலேசியா சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளின் தமிழ் இலக்கியங்கள் ஒரே வரலாற்றின் இரு கிளைகளாக இன்று வரை இருந்துள்ளன. ஆனால் இவற்றின் எதிர்காலமும் ஒன்று போல இருக்குமா அல்லது வேறு படுமா என்பது முக்கிய கேள்வியாக இருக்கிறது. இந்தக் கேள்வியை முன்னிறுத்தி இந்த நாடுகளின் இன்று நேற்று நாளை என்னும் நிலைகளை அலச நவம்பர் 26, 27இல் குவால லும்பூரில் நடைபெறவிருக்கும் மலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கிய மாநாடு முக்கியமான களம் அமைத்துக் கொடுக்கும் என மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரெ.கார்த்திகேசு கூறினார்.

இந்நாடுகளின் தமிழ் இலக்கிய வரலாறுகள் ஏற்கனவே ஆராயப்பட்டு நூலாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவை அனைத்தும் வடிவம் சார்ந்த நூல்கள் ஆகும். டாக்டர் ஆ.ரா.சிவகுமாரனின் சிங்கப்பூர் கவிதைகள் பற்றிய ஆய்வு, டாக்டர் சபாபதியின் மலேசிய நாவல்கள் பற்றிய ஆய்வு, டாக்டர் முரசு நெடுமாறனின் மலேசியக் கவிதைகள் பற்றிய ஆய்வு, நா. பாஸ்கரனின் மலேசியச் சிறுகதைகள் பற்றிய ஆய்வு ஆகியவையும் பிறவும் அரிய ஆவணங்கள் ஆவும்.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு மலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தை மேலும் முழுமையாகப் பார்த்து அவற்றைப் பற்றிய தீர்க்கமான வரலாறு ஒன்று எழுதும் தேவை நமக்கு உண்டு. மேற்கூறிய இலக்கிய வடிவங்கள் சார்ந்த ஆய்வுகள் மட்டுமில்லாமல் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு இயக்கங்கள் ஆற்றியுள்ள பங்கு, பத்திரிகைகள் ஆற்றியுள்ள பங்கு, தனிப்பட்ட இலக்கியவாதிகள் ஆற்றியுள்ள பங்கு ஆகியவையும் வெளிக்கொணரப்பட்டு விவாதிக்கப் படும். இந்த விவாதங்களில் பேராளர்கள் கலந்துகொண்டு கட்டுரைகளில் குறைபடும் தகவல்களை நிரப்பி பேசப்படும் தலைப்புக்கள் செழுமை பெற உதவலாம். இவற்றின் இறுதிப் பயனாக வரும் ஓரிரு ஆண்டுகளுக்குள் மலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் பற்றிய முழுமையான வரலாற்று நூல் உருவாக்கம் பெற வேண்டும் என்பது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திட்டம் என அதன் தலைவர் பெ. இராஜேந்திரன் கூறுகிறார். இப்படி ஒரு முயற்சி இந்தத் தலைமுறையில் செய்யப்படாவிட்டால் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இந்தச் செய்திகள் எட்டாமல் போகலாம் என்ற பயம் உண்டு என்றும் அவர் கூறினார்.

இரு நாடுகளிலும் பல்கலைக் கழகங்களிலும், உயர்கல்வி நிலையங்களிலும் உள்நாட்டுத் தமிழ்ப் புத்திலக்கியம் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. எனினும் அந்த ஆய்வேடுகள் பொதுவான தமிழ் இலக்கிய வாசகர்களை எட்டுவதில்லை. இந்த மாநாடு அவ்வகை ஆய்வு முயற்சிகள் பற்றிப் பேசவிருக்கிறது. மலேசியாவின் ஆய்வு முயற்சிகள் பற்றி இணைப் பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணன் மணியமும், சிங்கப்பூரின் ஆய்வு முயற்சிகள் பற்றி துணைப்பேராசிரியர் டாக்டர் ஆ.ரா.சிவகுமாரனும் தொகுப்புக்களை வழங்குவார்கள். மேலும் மலேசிய ஆய்வு மாணவர்கள் மூவரும், சிங்கப்பூர் ஆய்வு மாணவர்கள் மூவரும் தங்கள் ஆய்வின் சுருக்கங்களையும் சமர்ப்பிப்பார்கள்.

மலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் அதன் தனி இருப்பில் மட்டும் காணப்படாமல் இந்த நாடுகளின் பல்லின இலக்கியச் சூழ்நிலையில் காணப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் மலாய், சீன, ஆங்கில இலக்கிய படைப்பு முயற்சிகளின் பின்னணியில் வைத்தும் ஒப்பிட்டுப் பேசப்படவிருக்கிறது. இந்த உட்பொருளைக் கொண்டு சிங்கப்பூரின் தேசியக் கல்விக் கழகத்தின் தமிழ் மொழி பண்பாட்டுத் துறைத் தலைவர் துணைப் பேராசிரியர் டாக்டர் சீதாலட்சுமியும், மலாயாப் பலகலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறைத் தலைவர் இணைப் பேராசிரியர் டாக்டர் சபாபதியும் கருப்பொருளுரை ஆற்றுகிறார்கள்.

இந்தக் கருப்பொருளை இன்னொரு கோணத்தில் ஆராயும் அங்கமாக ‘உலகத் தமிழ்ப் புத்திலக்கியத்தில் மலேசிய சிங்கப்பூர் இலக்கியங்களின் நிலை ‘ என்ற தலைப்பில் இரண்டு மலேசிய இலக்கியவாதிகளும் இரண்டு சிங்கப்பூர் இலக்கியவாதிகளும் பங்கு பெறுவார்கள். அவர்கள் மலேசியா: டாக்டர் மா. சண்முகசிவா, டாக்டர் ரெ.கார்த்திகேசு. சிங்கப்பூர்: திரு ஜே. எம். சாலி, திரு செ. ப. ப ?ன்னீர்செல்வம் ஆகியோர்.

இயக்கங்கள் ஆற்றியுள்ள பங்கு பற்றி டாக்டர் முரசு நெடுமாறனும் (மலேசியா), இணைப் பேராசிரியர் டாக்டர் வனிதாமணி சரவணனும் (சிங்கப்பூர்) பேசுகிறார்கள். பத்திரிகைகளும் ஊடகங்களும் ஆற்றியுள்ள பங்கு பற்றி இணைப்பேராசிரியர் டாக்டர் முல்லை இராமையாவும் (மலேசியா), திரு எம்.கே நாராயணனும் (சிங்கப்பூர்) பேசுகிறார்கள். இலக்கியவாதிகள் ஆற்றியுள்ள பங்கு பற்றி திரு நா. பச்சைபாலனும் (மலேசியா) திரு. ஏ.ஆர். அஞ்சப்பனும் (சிங்கப்பூர்) பேசுகிறார்கள்.

மாநாட்டின் ஒரு முக்கிய அங்கமாக புதிய தகவல் தொழில் நுட்பத்தை இந்த நாடுகளின் தமிழ் இலக்கியவாதிகள் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பற்றிய சிறப்பு உரைகள் இடம் பெறுகின்றன. ‘தமிழால் முடியுமா ? ‘ என்ற தலைப்பில் முரசு தொடர்பு நிறுவனத் தலைமைச் செயலதிகாரி திரு முத்து நெடுமாறன் அவர்களும், ‘இணையத்தில் தமிழ் ‘ என்னும் தலைப்பில் சிங்கப்பூர் கொள்கை ஆய்வுக் கழகத் துணை இயக்குநர் திரு அருண் மகிழ்நன் அவர்களும் பேசுவார்கள்.

மலேசியா சிங்கப்பூர் நாடுகளின் தமிழ் இலக்கிய எதிர்காலத்திற்கு முக்கிய தடம் அமைக்கவிருக்கும் இந்த மாநாட்டின் உரைகளைச் செவி மடுக்கவும் அவை பற்றிக் கருத்துரைக்கவும் இலக்கியவாதிகளும் ஆர்வலர்களும் திரளாகப் பங்கு பெற வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்ளுகிறார்கள்.

—-

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு